இராமச்சந்திரக் கவிராயர் என்பவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நல்ல கவிஞர். பெரும்பான்மையான தமிழ்க்கவிஞர்களை வறுமை தாலாட்டுவது இயல்பே. அதுபோல இவரையும் வறுமை தாலாட்டியது. அந்த வறுமைத் தாலாட்டிடையேயும் சுவையான நல்ல கவிதைகளை தந்திருக்கிறார். வறுமையின் கொடுமையில் இருந்து விடுபட சிதம்பரத்தில் கோயில் கொண்டிருக்கும் தில்லை நடராசனை வணங்குவதற்காகச் சென்றார். போகும் வழியில் ஒரு பெரும் பணக்காரனின் மாளிகை அவரின் கண்ணெதிரே தெரிந்தது. அந்தப் பெரிய மாளிகையைக் கண்டதும் அந்த மாளிகையைப் போல அதில் வாழ்பவனின் மனமும் மிகப் பெரிதாக இருக்கும் என்பதைக் கண்டுகொண்டார்.
சிதம்பரத்திற்குப் போவதையும் மறந்தார். தில்லை நடராசனையும் மறந்தார். அந்த மாளிகையை நோக்கி நடந்தார். அந்த மாளிகையின் காவலாளியிடம் ‘தன் வறுமையைப் போக்கச் செல்வந்தனைக் காணவேண்டும், என்றார். அவனும் மகிழ்ச்சியோடு அவரை செல்வந்தனிடம் அழைத்துச் சென்றான்.
இவரைக் கண்ட செல்வந்தன், ‘வாரும்!’ என்று வரவேற்றான். ‘நீ யார்? என்று கேட்டான். அதற்கு இவர் ‘வித்துவான்’ என்று கூறி தன்னை அறிமுகம் செய்து கொண்டார். இவர் ‘வித்துவான்’ என்று சொன்னதும் ‘வித்துவானிடம் எப்படிக் கதைப்பது? தன் அறிவுக்கு மோசம் வந்துவிட்டது’, என்றெண்ண அவனின் சொற்கள் தடுமாறி உடலும் நடுங்க “நீர் வந்த காரியம் ஏது?” என்று அவரைக் கேட்டான்
அதற்கு அவர்
“சீர் உலாவிய காமதேனுவே தாருவே
சிந்தா மணிக்கு நிகரே
செப்பு வசனத்து அரிச்சந்திரனே”
என்று அவனைப் புகழ்ந்து பாடினாராம். அதாவது தேவ உலத்தில் இருக்கும் செல்வம் நிறைந்த காமதேனுவைப் போன்றவனே! கற்பகதரு போன்றவனே! மணிகளில் சிறந்த சிந்தாமணிக்கு நிகரானவனே! - சொன்ன சொல் தவறாமைக்கு அரிச்சந்திரன் போன்றவனே! என்று பாடினாராம்.
ஒருவர் காமதேனுவின் அருகில் நின்று தமக்கு விருப்பமானதைக் கேட்டால் அவர் கேட்பதை அது கொடுக்கும். அதே போல கற்பகதருவின் நிழலில் இருந்து கேட்பதை அது கொடுக்கும். ஒருவர் நினைப்பதைக் கொடுப்பது சிந்தாமணி. [ஒருவர் நினைப்பதைக் கொடுப்பது சிந்தாமணி. சிந்தாமணி என்பது எமது சிந்தை மணி - நாம் சரியாகச் சிந்தை செய்தால் அவை எமக்கு கிடைக்கும் என்பதையே சிந்தாமணி நினைப்பதைக் கொடுக்கும் என்பர்]. அரிச்சந்திரன் பொய் பேசாதவன். இப்படியெல்லாம் மிக உயர்வாக முன்பின் அறிமுகம் இல்லாத செல்வந்தனை வியந்து பாடினார். இவரின் புகழ்ச்சியைக் கேட்ட அந்த செல்வந்தர் என்ன செய்தார் என்பதை இராமச்சந்திரக் கவிராயர் ஓடோடிச் சென்று தில்லை நடராசருக்குச் சொன்னதை நாமும் கொஞ்சம் பார்ப்போமா?
“வாரும்! நீர் யார்? என்ன, வித்துவான் என்னவும்
மதிமோசம் வந்தது என்றே
வாய் குழறி மெய் எலாம் நடுக்குற்று நீர்
வந்த காரியம் ஏது? எனச்
சீர் உலாவிய காமதேனுவே தாருவே
சிந்தா மணிக்கு நிகரே
செப்பு வசனத்து அரிச்சந்திரனே எனலும்
சினந்து இரு கண்ணும் சிவந்தே
யாரை நீ மாடு கல் மரம் என்று சொன்னதும்
அலால் அரிச்சந்திரன் என்றே
அடாத சொல் சொன்னையே யார்க்கு அடிமையாகினேன்
ஆர்கையில் பெண்டு விற்றேன்
தீருமோ இந்த வசை! என்று உரைசெய் வெகுகொடிய
தீயரைப் பாடி நொந்தேன்
திருமன்றுள் நடுநின்று நடம் ஒன்று புரிகின்ற
தில்லை வாழ் நடராசனே!
காமதேனுவே! கற்பகதருவே! சிந்தாமணியே! அரிச்சந்திரனே! என்று சொன்னதும் அதைக்கேட்ட செல்வந்தன் கோபம் கொண்டு இரண்டு கண்ணும் சிவக்க ‘யாரைப் பார்த்து நீ மாடு[கமதேனு], கல்[சிந்தாமணி], மரம்[கற்பகதரு] என்று சொன்னது மல்லாமல் அரிச்சந்திரன் என்று சொல்லக்கூடாத சொல்லையும் சொன்னாயே! அரிச்சந்திரனைப்போல நான் யாருக்கு அடிமையானேன்? யாருக்கு மனைவியை விற்றேன்? நீ! இப்படிப்பாடிய இந்த வசை அழியுமோ![தீருமோ!]’ எனச் சொல்லும் மிகக் கொடிய கெட்டவரைப் பாடி நொந்து போனேன். அழகிய மன்றத்தின் நடுவே நின்று நடனம் புரிகின்ற தில்லைவாழ் நடராசனே! என்னைப் பார்!! என்று கதறியுள்ளார்.
இனிதே,
தமிழரசி.
தமிழரசி.
சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
ReplyDeletehttps://plus.google.com/u/0/communities/110989462720435185590