Photo Courtesy: S Rajam
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவர் ஐயடிகள் காடவர்கோன் நாயனார். அரசனாக அரச போகத்தில் வாழ்ந்தவர். எனினும் சைவசமயத்தவர் பலருக்கு அவரையும் அவரது பாடல்களையும் தெரியாது. பல்லவ அரச பரம்பரையைச் சேர்ந்தோரை காடவர் என்பர். பல்லவ அரசனான பரமேசுவரவர்மனே ‘ஐயடிகள் காடவர்கோன் நாயனார்’ என்பது வரலாற்று ஆய்வாளர் பலரின் கருத்தாகும். அதனால் கிபி 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பர். அவர் அரச போகத்தை வெறுத்து துறவு பூண்டவர். அவர் இயற்றிய பாடல்களில் அழிந்தவை போக இருபத்திதிநான்கு பாடல்களே கிடைத்துள்ளன. அப்பாடல்களில் தமிழை அவர் கையாண்டுள்ள தன்மை அவரது தமிழின் ஆற்றலை எடுத்துக் காட்டுகின்றது. அவை பதினொராம் திருமுறையில் இருக்கின்றன.
“ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்பும் குறுகிற்று - நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்”
- (ப.திருமுறை: 11: 5: 1)
மேலெழுந்தவாரியாக இந்த வெண்பாவைப் பார்ப்போமேயானால் 'நல்ல மனமே! ஓடுகின்ற தன்மை முடிந்ததும் உறவினரும் மனம் கோனுகின்றனர். முதுமையும் கிட்டவந்துவிட்டது. மனம் நாடுகின்ற நல்லச் சிற்றம்பலத்திற்குப் போகமுன் தில்லைச் சிற்றம்பலத்திற்குப் போய்ச் சேர்' எனச் சொல்வதாகத் தோன்றும்.
ஆனால் அவரோ ‘நல்லச்சிற்றம்பலமே’ என்ற சொல்லை வைத்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மிக மென்மையாக வாழ்க்கையின் நிலையாமையை இப்பாடலில் சித்தரிக்கிறார். எனவே இவ்வெண்பாவின் சொற்களைக் கொஞ்சம் பிரித்துப் படித்துக் கருத்தைப் பார்ப்போம்.
ஓடித்திரிந்த[ஓடுகின்ற] தன்மை[நீர்மை] முடிந்ததும் [ஒழிதலுமே] உற்றாரும்
மாறுகின்றார்[கோடுகின்றார்] மூப்பும் நெருங்கியது[குறுகிற்று] - விரும்புகின்ற[நாடுகின்ற]
நல்ல உடல்[நல் அச்சு] நலிந்து[இற்று] மயானம்[அம்பலமே] போகமுன்[நண்ணாமுன்] நல் நெஞ்சே
தில்லைச் சிற்றம்பலமே சேர்.
ஐயடிகள் காடவர்கோன் நாயனார் “நல்ல நெஞ்சமே! வாழ்நாள் முழுவதும் ஆடி ஓடித் திரிவதால், காலம் ஓட ஓட அந்த ஓட்டமும் மெல்ல மெல்ல ஓய்கிறது. எமக்கு உற்ற துணையென எண்ணி இருந்த கணவன், மனைவி, மக்கள், சுற்றம், நண்பர் என்கின்ற உற்றார் யாவரும் தமக்குச் சுமையென எண்ணி மனம் மாறி வெறுகின்றனர். இளமை போய் முதுமையும் நெருங்கிவிட்டது. [நல்லச்சிற்றம்பலமே = நல் + அச்சு + இற்று + அம்பலமே] நம்மால் விரும்பப்படுகின்ற நல்ல அச்சாகிய உடம்பு இற்றுப்போய் மயானத்திற்குப் போகமுன்னர் தில்லைச் சிற்றம்பலமாகிய சிதம்பர நடராசனைச் சேர்” என்று தனது மனதிற்குச் சொல்கிறார்.
உடல் எனும் வண்டி இம்மண்னில் நாம் பிறந்த நேரம் முதற்கொண்டு ஓடுகின்றதல்லவா! வண்டியை இழுத்துச் செல்வதற்கு அச்சு மிகமிக வேண்டிய ஒன்றாகும். அச்சு இற்று முறிந்து போனால் வண்டி ஓடாது. நம் உடலாகிய வண்டியின் அச்சாக இருந்த உயிர் இற்றுப்போனால் மயானத்திற்கு எடுத்துச்செல்வர். “நல்லச்சிற்றம்பலமே நண்ணாமுன்” என்று ‘நன்றாக இருந்த மனித உடல் நோயால் - முதுமையால் உயிர் இற்று இறந்ததும் மயானத்திற்கும் போகும் என்பதை மிக நேர்த்தியாகச் சொல்லியிருக்கும் பாங்கு நயக்கத்தக்கதாகும்.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment