புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கம்
இயற்கை என்னும் கடலலை ஓயாது இசைபாடும் புகழ்மிக்க அரங்கே எங்கள் புங்குடுதீவு. அந்த அரங்கு ஆடல் அரங்கனாம் அம்பலவாணனின் கலைகளுக்கு ஓர் அரங்கை அம்பலவாணர் சகோதரர்களின் பெயரில் 1977ல் கட்டி மகிழ்ந்தது. அவ்வரங்கு நம் நாட்டின் சூழ்நிலைக்காரணியால் செயல் இழந்து கிடக்கிறது. அதனை மீளக்கட்டி எழுப்புதற்காக உலகநாடுகளில் உள்ள புங்குடுதீவு மக்களை ஒருங்கிணைக்க ஒன்றுகூடல்கள் நடைபெற இருப்பதை முன்னரே அறிந்திருந்தேன். இன்று[03/06/2016] எனது facebook timeline உள்ளே சுவிஸ் - புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய வலைத்தளத்தைப் பகிர்ந்து கொண்டதால் இதனை எழுதுகிறேன். இல்லையேல் புங்குடுதீவு வாணர் தாம்போதியும் அம்பலவாணர் அரங்கும் பற்றிய தரவுகளை - எமது முன்னோர் பற்றிய தரவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை எனக்கு வந்திருக்காது. அதற்காக எனது வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது புங்குடுதீவு இராமாயணம், கந்தபுராணம் போன்ற நூல்களில் கிரௌஞ்சத்தீவு என்றே அழைக்கப்படுகிறது. திருப்பாற்கடல் கடைந்த மேருமலையையே பாற்கடலினுள் போட்ட பெரும் வீரர்களாக கிரௌஞ்சத்தீவில் வாழ்ந்தோரை இராமாயணம் கூறுகிறது. அத்தகைய வீரர்களை ஒல்லாந்த, ஆங்கிலேயப் படைகளுக்கும் புங்குடுதீவு கொடுத்திருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் ‘துப்பாக்கியர்’ என்பவர் தரைப்படைத் தளபதியாக இருந்திருக்கிறார். துப்பாக்கியர் நயினாதீவில் திருமணம் செய்தவர். அவரின் இயற்பெயர் என்னதென்று தெரியவில்லை. அவரின் உறவுவழி வந்த ‘முத்தையா’ என்பவர் ஆங்கிலேயர் காலத்தில் கடற்படை Captain ஆக இருந்திருக்கிறார். ஆங்கிலேயர் அவருக்கு அளித்த மதிப்பை பறைசாற்றிக் கொண்டு ‘முத்தையா ரோட்’ கொழும்பு - 7ல் அவரது பெயரோடு இன்றும் இருக்கிறது. அவரது பெற்றோர் புங்குடுதீவையும் மானிப்பாயையும் பிறப்பிடமாகாக் கொண்டோரே.
Captain முத்தையா அவர்களின் சகோதரி தெய்வானைப்பிள்ளையை Dr கனகசபை என்பவர் திருமணம் செய்தார். இவரது தந்தையார் மானிப்பாயைச் சேர்ந்த உலகநாதர் மாதர் பரம்பரையைச் சேர்ந்தவர். தாய் ஆரியா புங்குடுதீவு வீராமலையைச் சேர்ந்தவர். Dr கனகசபை ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் இருந்த புகழ் பெற்ற ஐந்து டாக்டர்களில் ஒருவராக இருந்த பெருமைக்குரியவர். 1939ல் கூட கொழும்பு Sulaiman’s Hospitalல் Surgeon ஆக இருந்தவர். மிகப்பெரிய கொடையாளியும் ஆன்மீகவாதியும் முருகபக்தனும் ஆவார். தானே பூசை செய்து கும்பிடுவதற்காக நெலுந்தெனியவில் மலையைக் குடைந்து வேல் பதித்த ஒரு முருகன் கோயிலைக் கட்டியிருந்தார்.
மானிப்பாய் பிள்ளையார் கோயில், நல்லூர் கந்தசுவாமி கோயில், அநுராதபுரம் கதிரேசன் கோயில், முனீஸ்வரம் சிவன் கோயில், கொழும்பு ஜிந்திப்பிட்டி சிவன் கோவில், கதிர்காமம் போன்ற பல கோயில்களுக்கு நன்கொடை வழங்கியவர். கதிர்காமத்தில் 'Dr கனகசபை' மடம் என ஒரு மடத்தை தனது ஏழு பிள்ளைகளும் தங்கிச்செல்வதற்காக ஏழு அறைகளுடன் தனித்தனியே சமையலறை, குளியலறை வசதிகளுடன் கட்டியிருந்தார். அதன் பின்னரே செல்லப்பாசுவாமி மடம் அங்கு கட்டப்பட்டது. இலங்கை குடியரசாக மாறிய பின்னர் அங்கே தமிழர் கட்டியிருந்த மடங்கள் யாவும் அழித்து ஒழிக்கப்பட்டு புனிதநகராய் கதிர்காமம் விளங்குகிறது.
Dr கனகசபையே முதன்முதலில் கேகாலையில் ‘இரப்பர் மரங்களை’ அறிமுகப்படுத்தியவர். இன்று நெலுந்தனிய எனக்கூறப்படும் இடம் அவரது Rabber Estate ஆக இருந்தது. அதில் அவர் கட்டியிருந்த மருத்துவமனை [கண்ணாடி மாளிகை - கண்ணாடி மாளிகாவ] மகிந்தவின் ஆட்சியில் வீதியை அகலமாக்குவதற்காக இடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு தனது பிள்ளைகள் ஏழு பேருக்கும் வீடுகளைக் கட்டிக் கொடுத்தார். அவற்றில் ஒரு சில வீடுகள் இன்றும் இக்கின்றன. அந்த வீடுகளில் ஒன்றில் வாழும் விஜயசுபசிங்க என்பவர் தானிருக்கும் வீட்டை Dr கனகசபை 1891ல் கட்டியிருக்கிறார் என்று கடந்த வருடம் நான் அங்கு சென்றபோது சொன்னார்.
புங்குடுதீவின் முதுபெரும் தாயார்
படம் - தினக்குரல்
Dr கனகசபை தனது கடைசி மகள் இராசமணி அம்மாளுக்கு அந்தவீட்டை சீர்தனமாய்க் கொடுத்திருந்தார். போனவருடம் August 17ல் தனது நூற்றி ஐந்து வயதைக் [105] கொண்டாடிய இராசமணியம்மாள் அவர்கள் பம்பலப்பிட்டியில் வாழ்ந்து வருகிறார். 'புங்குடுதீவின் முதுபெரும் தாயார் என இவரைச் சொல்லலாம்'. வேலணைக்கும் புங்குடுதீவுக்கும் இடையே படுகைப்பாலம் போடுவதற்கு Dr கனகசபை அவர்கள் வழங்கிய கொடை பற்றிய விபரத்தை புங்குடுதீவு நலன்புரிச்சங்கம் - பிரித்தானியா கிளை முதன்முதல் இலண்டனில் தொடங்கிய போதே எழுதியிருந்தேன்.
‘ஒசரிய’ [osaria]
Dr கனகசபையின் தம்பி நமசிவாயமுதலியார் கண்டி, களுத்துறை நீதிமன்றங்களில் முதலியாராக இருந்தவர். அவர் தமிழ், சிங்கள, சமஸ்கிருத பண்டிதர் ஆவார். அதனால் பஞ்சதந்திரக் கதைகள் போன்ற தமிழ், சமஸ்கிருத நூல்களை சிங்களத்தில் மொழிபெயர்த்தார். அந்நாளைய [19ம் நூற்றாண்டின் இறுதியில்] கண்டிப் பெண்கள் சட்டையும் இடையில் துண்டும் [யட்ட கத்த] அணிவதைக் கண்டு, சட்டைக்கு மேல் இன்னொரு துண்டை வலதுபக்கத் தோளால் தாவணியாகப் போட்டு சுற்றிக்கட்டும் - ‘ஒசரிய’ [osaria] கட்டும் வழக்கத்தை ஏற்படுத்தியவர். அவரால் வடிவமைக்கப்பட்ட ‘ஒசரிய’ இன்று கண்டியன் சாறியாக வளர்ச்சியடைந்துள்ளது.
அவர் கண்டிச் சிங்களவரின் வழிகாட்டியாக விளங்கியதால் கண்டிப்பெரஹராவின் போது அவரின் படத்தை யானையின் உப்பரியில் வைத்து எடுத்துச் சென்றனர். 1960களில் நான் அதனைப் பார்த்திருக்கிறேன். அவரைப்பற்றி பேசியும் இருக்கிறேன். அவர் மானிப்பாயில் திருமணம் செய்தவர். அவரது மகன்மாரில் ஒருவர் மாமனெல்லையில் வழக்கறிஞராக இருந்தார். எனது தாயின் தந்தையார் 1973ல் இறந்த போது மரணவீட்டிற்கு வந்திருந்த தியாகராஜாவை கதிரவேல் அப்பாவே [புரொக்டர் கதிரவேல்] எனக்கு முதலில் அறிமுகம் செய்து வைத்தார். மேலே நான் குறிப்பிட்டவர்கள் கதிரவேல் அப்பாவுக்கும் உறவினர்களே.
வாணர் தாம்போதி
Captain முத்தையாவின் முன்னோர்களில் ஒருவர் 1870ம் ஆண்டளவில் புங்குடுதீவில் இருந்து வேலைக்காக பர்மாவுக்கு [இன்றைய மியான்மார்] சென்றார். அங்கே ரங்கூனில் திருமணம் செய்துகொண்டார். எனினும் தனது மகளை புங்குடுத்திவில் வாழ்ந்த தன் உறவினர்க்கே திருமணம் செய்து கொடுத்தார். அவர்களுக்கு ஒரு மகளிருந்தாள். அவள் பெயர் பெரியநாயகி. 1920ம் ஆண்டளவில் அக்குடும்பத்தார் வள்ளத்தில் யாழ்ப்பாணம் சென்றபோது வள்ளம் கவிழ்ந்து பெரியநாயகியின் தந்தை இறந்து போனார். தாய், பெரிய நாயகியுடன் நீந்திக் கரையேறினார்.
உயிர் தப்பிய பெரியநாயகியின் தாய் [ரங்கூன்காரியின் மகள்] புங்குடுதீவுக்கு கடல்வழிப்பாதை இருந்தால் அந்த விபத்து நடந்திருக்காது என்பதை Dr கனகசபைக்குக் கூறினார். பாதை போடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் தான் அதற்கு உதவுவதாகவும் சொல்லி பெரியநாயகியுடன் ரங்கூன் சென்றார். [அந்தக் குடும்பம் பின்னாளில் பெரியநாயகி குடும்பம் என அழைக்கப்பட்டது]. அவரது விருப்பத்தை நிறைவேற்ற Captain முத்தையா, Dr கனகசபை, நமசிவாயமுதலியார் மூவரும் பதுகைப்பாலம் அமைக்க பெருந்தொகைப் பணத்தை முதலிட்டனர் என்பதை நான் அறிவேன். பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே இலங்கையில் புகழ்மிக்கவர்களாக இருந்த இந்த மூவரின் தாய்மாரும் புங்குடுதீவாக இருந்தும் அவர்களை நாம் மறந்தது வியப்பைத் தரவில்லையா!!!
பெரியவாணர்
அப்போது யாழ்ப்பாணத்தின் அரசாங்க அதிபராக[GA] இருந்த Constantine உடன் பேசிய, Dr கனகசபையும் Captain முத்தையாவும் ‘கடல்வழிப்பாதை இன்றி தீவுப்பகுதி மக்கள் இறப்பதை எடுத்துக்காட்டி, புங்குடுதீவு மக்களே பாதையைப் போட்டுக் கொள்வதாகக் கூறி பாதை போடுவதற்கான அனுமதியைப் பெற்றனர். அப்பேச்சு வார்த்தையின் போது பெரியவாணர் இருந்தாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இந்தியா, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து பேன்ற இடங்களிலும் இலங்கையிலும் வாழ்ந்த புங்குடுதீவு செல்வந்தர்களிடம் இருந்து பாதை அமைக்க தேவையான பணத்தைப் பெறும் பொறுப்பை பெரியவாணர் மேற்கொண்டார். பெரியவாணர் என் தாயின் தகப்பனுக்கு மைத்துனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரும் பொழுதும், போகும் பொழுதும் எங்களது அநுராதபுர வீட்டில் தங்கிச் செல்வார்களாம். பெரியவாணரின் மகளே புங்குடுதீவுப் பெண்களில் முதல்முதல் கார் ஓட்டியவர் என்று எனது அம்மா தமது மச்சாளைப்பற்றிக் கூறுவார்.
எனது அம்மம்மாவைப் பார்த்து ‘உங்க அப்பனும் [Dr கனகசபை], மாமனும் [Captain முத்தையா] ஊருக்குப் பாலம் கட்ட Constantineஐ கையெழுத்துப் போடவைத்து நாட்டைவிட்டே சொல்லாமல் ஓடவைத்தார்களே என்று கூறி அம்மாவின் தகப்பன் கேலி செய்வார். அப்படி அவர் கேலி செய்தபோது நான் கேட்டதற்கே பெரியநாயகியின் குடும்பக்கதையை எனக்குக் கூறினார். யாழ்ப்பாண GA ஆக இருந்த Constantine எப்போது நாட்டைவிட்டு சொல்லாமல் சென்றார் என்பதை அறிந்தால் எந்த வருடத்தில் நம்மூருக்கு பாலம் போடத்தொடங்கினர் என்பதை அறியமுடியும்.
நான் சிறுவயதில் புங்குடுதீவுக்கு காரில் சென்ற பொழுது கார் சென்ற பாதைக்கு இணையாக [parallel] ஒரு பாதை சில இடங்களில் கடலினுள் மூழ்கியும் சில இடங்களில் கடல் மட்டத்திற்கு மேலேயும் தெரிந்தது. மேலே தெரிந்த பாதையின் கீழே தென்னை மட்டைகளும் தெரிந்தன. என்னைப்போல் உங்களில் பலரும் அப்பாதையைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ‘தென்னை மட்டைபோட்டு பாதை போடலாமா?’ என்று என் தந்தையைக் கேட்டேன். உன் அம்மாவின் சொந்தங்களே அந்தப்பாதையைப் போட்டவர்கள். அம்மாவின் தகப்பனைக் கேள் என்றார். அம்மாவின் தகப்பன் வேலையில் ஓய்வு பெற்றிருந்ததால் அவருக்கும் வேலை இருக்கவில்லை. எனக்கும் வேலை இருக்கவில்லை. அவர் கதை சொல்ல நான் கேட்பேன். சின்னவாணரும் தனது சித்தப்பாவும் [பாய்க்கடை இளையதம்பியும்] அப்பாதையைப் போட்ட கதையைச் சொன்னார்.
படுகைப்பாதை
Constantine அனுமதி அளித்த படுகைப்பாதையைப் [தாம்போதி - நீரால் பிரிக்கப்பட்ட இரண்டு நிலங்களை இணைக்கும் கற்பாதை] போடும் ஒப்பந்ததார்களாக [Contractors] சின்னவாணரும் அவரது மாமன் முறையான பாய்க்கடை இளையதம்பியும் இருந்தனர். இவர்கள் கடலுக்குள் கல்லையும் மண்ணையும் இட்டு அதற்குமேல் தென்னைமட்டை, தென்னை ஓலை போட்டு அதற்குமேல் கல்லும் மண்ணும் என மாறிமாறிப் போட்டு பாதையைப் போட்டனர். இப்படியான பாதையை முழுவதும் போட்டனரா இல்லையா என்பது தெரியவில்லை. தென்னை ஓலை, தென்னைமட்டை என்பன கடல் நீரின் உப்பால் உக்கிக் கரைந்து போகப் போக பாதை கடலில் மூழ்கியது. ஊராரிடம் சென்று மீண்டும் பணம் பெறமுடியாததலால் அரசாங்கத்தைக் கேட்க வேண்டிய பொறுப்பு, பாதையைப் போட முனைந்தோருக்கு ஏற்பட்டது.
‘ஊரார் போட்ட பாதை கடல் பெருக்கால் அழிந்துவிட்டது’ எனக்கூறியதால் புங்குடுதீவிற்குப் பாலமமைக்க முன்னுரிமை வழங்கப்பட்டது. இருக்கும் பாதையைத் திருத்தும் நோக்கில் அந்த முன்னுரிமை வழங்கப்பட்டது. முதலில் பாதையைப் போட்ட சின்னவாணருக்கும் பாய்க்கடை இளையதம்பியருக்கும் கடலினுள் பாதை போட்ட அநுபவம் இருந்ததால் அவர்களுக்கே அந்த ஒப்பந்தம் மீண்டும் கிடைத்தது. அவர்களும் தாம்விட்ட பிழையை உணர்ந்து படுகைப்பாதையை [தாம்போதியை] உறுதியானதாகாக் கட்டினர்.
உண்மையில் புங்குடுதீவுக்கும் வேலணைக்கும் இடையே படுகைப்பாதையை [தாம்போதியை] போடச்சொல்லி அதற்காக முதலில் பணத்தைக் கொடுத்தவர் பெரியநாயகியின் தாயான ரங்கூன்காரியின் மகளே. அவருக்கே அந்தப் பெருமை சேரவேண்டியது. அவரின் பெயர் என்ன என்று தெரியாமலே நாம் இன்று வாழ்கிறோம். அப்படி கைமாறு கருதாது எத்தனையோ நல்லவிடையங்களை செய்தோரை காலஓட்டத்தில் கரைய விடுவதே மனித வாழ்வின் வேடிக்கையாகும். அதனாலேயே உண்மையான வரலாறுகள் சிதைக்கப்படுகின்றன.
அம்பலவாணர் அரங்கு
நான் இராமநாதன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம். ஒரு நாள் வித்துவான் மாமா [வித்துவான் சி ஆறுமுகம்] எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். புங்குடுதீவு விடயம் என்றாலும், எங்கள் குடும்ப[நீலயனார்] விடயம் என்றாலும் வித்துவான் மாமாவிடம் இருந்து என் தந்தைக்கு கடிதம் வரும் அல்லது மாமா வருவார். அன்றும் வழமைபோல வந்திருந்தார். எனது தந்தையும் மாமாவும் நானும் மேசையில் சாப்பிட்டபடி கதைத்தோம். “சின்னவாணருக்கு வயதாகிவிட்டது, அவரை நாங்கள் கௌரவிக்க வேண்டும்” என்று மாமா தன் மனக்கிடைக்கையைச் சொன்னார். “என்ன செய்ய வேண்டும்?” என்று என் தந்தை கேட்டார். அரங்கு கட்ட வேண்டும். அதற்கு காசு சேர்க்க வேண்டும் என்றார். நீங்கள் போனால் பெரும் தொகையைப் பிரட்டமுடியும் என்றார். பொன் சுந்தரலிங்க அண்ணனும் மு இராமலிங்கம் அவர்களும் வருவார்கள் என்றார். ‘அவர்கள் இருவரும் போனால் கொடுக்கமாட்டார்களா?’ என்று கேட்டேன். ‘கொடுப்பார்கள் கிள்ளிக் கொடுப்பார்கள். என் ஆசான் போனால் அள்ளிக்கொடுப்பார்கள்’ என்றார்.
மாமா சொல்லிச் சென்றது போல பொன் சுந்தரலிங்க அண்ணனும் இராமலிங்கம் அவர்களும் இரண்டு மூன்று முறை வீட்டிற்கு வந்தார்கள். முதல்முதல் அவர்கள் வந்த போது கிளிநொச்சியில் ஒரு சிறு தொகை கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் வந்தார்கள் போலும். ‘கிளிநொச்சியில் எவ்வளவு தொகையை எதிர்பார்க்கிறீர்கள்’ என என் தந்தை கேட்டார். அவர்களும் ஒரு தொகையைச் சொன்னார்கள். உடனே கிளிநொச்சி எட்டாம் வாய்க்காலில் வாழ்ந்த நாகரத்தினம் என்பவர் வீட்டிற்கு இருவரையும் அழைத்துச் சென்றார். அவர் வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாது கொடுக்கும் ஒரு பெருங் கொடையாளி. அம்பலவாணர் அரங்கு கட்ட காசுக்கு வந்திருக்கிறார்கள் என்று என் தந்தை சொன்னதும். இவர்கள் கிளிநொச்சியில் எதிர்பார்த்து வந்த தொகையைவிட பெருமடங்கு தொகையைக் கொடுத்ததோடு அம்பலவாணர் அரங்கு திறக்கும் நேரம் நெல்லும் தருவதாகக் கூறி, சொன்னபடி செய்தார். அவர்கள் நினைத்து வந்த காசைவிட கூடிய காசு கிடைத்ததால் வந்த வேலை முடிந்தது என்ற மகிழ்ச்சியில் இருவரும் கிளிநொச்சி கடைத்தெருவுக்கும் போகாது யாழ்ப்பாணம் சென்றனர்.
அடுத்த முறை இருவரும் வந்தபோது கிளிநொச்சி கண்டி வீதியில் இருந்த சிவாஸ் கபே, மகாலிங்கம் ஸ்ரோஸ், ஞானம் மில், பரமன் கபே, குமரகுரு ஸ்ரோஸ் என புங்குடுதீவைச் சேர்ந்தோரின் கடைகள் எல்லாவற்றுக்கும் அழைத்துச் சென்று காசுகிடைக்க வழிசெய்தார். மூன்றாம் முறை வந்தபோது இருவரையும் இலங்கையின் பலபகுதிகளுக்கும் அழைத்துச் சென்று பணத்தைத் திரட்டவைத்தார். இலங்கை எங்கும் வாழ்ந்த புங்குடுதீவு மக்கள் வழங்கிய பணத்தில் கட்டப்பட்டதே அம்பலவாணர் அரங்கு. அதுமட்டுமல்ல அது ஒரு திறந்தவெளி அரங்காகவே கட்டப்பட்டது.
அந்த அரங்கின் திறப்புவிழாவில் பேசுவதற்கு எனக்கு அழைப்பு வந்திருந்தது. வித்துவான் மாமா தனிப்பட்ட முறையில் என்னை அழைத்தாரா! அல்லது என் தாய்வழிச் சொந்தங்கள் தாம்போதியைக் கட்டியதால் அழைத்தார்களா! எனக்குத் தெரியாது. நானும் ‘அம்பலவாணர்கள் பாலம் காட்டினார்கள், நாமும் அம்பலவாணர்க்கு அரங்கு கட்டினோம்’ என்ற தலைப்பில் பேசினேன். நான் அம்பலவாணர் அரங்கத் திறப்புவிழாவில் பேசியனேன் என்ற உண்மையை பேராசிரியர் கா குகபாலன் அவர்கள் எனது தந்தையின் நூற்றாண்டு மலருக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கட்டுரையை கீழே உள்ள linkஐ அழுத்திப் பார்க்கவும்.
பாலங்கட்டியோரும் அரங்குகட்டியோரும் என் இரத்த உவுறவுகளே என்பதை மேலே நான் சொன்னவற்றில் இருந்து அறிந்திருப்பீர்கள். அவர்களின் பரம்பரைக் காரணிகள் [DNA] எனது உடலிலும் இருக்கும். மு இராமலிங்கம் அவர்களும் என் திருமணத்தின் பின்னர் உறவானவர். அவர் எனது கணவரின் சிறிய தந்தை. ஊர்கூடிக்கட்டிய அம்பலவாணர் அரங்கு இன்று போரின் தாக்கத்தால் செயல் இழந்து கிடக்கிறது. அதனை மீண்டும் கட்டி எழுப்பி செயல்பட வைக்க ஒன்று கூடல்கள் நடக்கின்றன. அது பாராட்டப்படவேண்டிய நல்ல செயலே. அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
அம்பலவாணர் அரங்கைவிட நம் முன்னோர் மகிழ்ந்து குலாவி இருந்த புங்குடுத்தீவு எனும் செல்வச்சீமாட்டி சீர் அழிந்து கிடக்கின்றாள். கடந்த இரண்டு வருடங்களாக அங்கு சென்று நிலைமையை நேரே பார்த்ததால் எழுதுகிறேன். காற்றுவழிக் கிராமம் என்ற கவிஞனின் வாக்கு சற்றே மாறி காற்றுவெளிக் கிராமமாக நிற்கிறது. பசுமை அற்றுப் போனதால் புங்குடுதீவு எனும் பேரழகுச் சீமாட்டி இப்போது பரட்டைத் தலையும், ஒட்டிய உடலும், குழிவிழுந்த கண்களுடன், பற்களும் இழந்து பொக்கைவாய்ச் சிரிப்புடன் காட்சிதருகிறாள். இப்படி காட்சி அளிக்கும் அவளது உடலிலே ஆங்காங்கே கோயில்கள் என்ற இரத்தினங்களை சிலர் பதித்துள்ளார்கள். அவர்கள் பதித்த இரத்தினங்களால் புங்குடுதீவாம் அழகு சீமாட்டியின் இளமை திரும்பியதா? இல்லையே!!!!
புங்குடுதீவு எனும் அச்சீமாட்டியை இயல்பு நிலைக்கு மாற்றி, பசுமையாம் பச்சையாடை உடுக்கவைத்து அம்பலவாணர் அரங்கென்ன எந்த அரங்கையும் நாம் மீளக்கட்டிக் கொள்ளலாம். அம்பலவாணர் அரங்கை மீளக்கட்ட இருக்கும் வீதியில் வித்துவான் மாமா வீட்டடியில் இருந்து கணேசவித்தியாலயம் வரையும் எத்தனை வீடுகள்? அம்பலவாணர் அரங்கின் பக்கத்துத் தெருவில் எத்தனை வீடுகள்? பாழ் அடைந்து கிடக்கின்றன? பாழடைந்த வீடுகளுக்கு இடையேயா கலையரங்கம்? சிந்தியுங்கள்! செயற்படுங்கள்!! அரங்கம் பற்றிய எனது முழுக்கருத்தையும் தொடர்ந்து தரும்வரை…
இனிதே
தமிழரசி.
வணக்கம் தமிழரசி சிவா
ReplyDeleteமேலே நீங்கள் குறிப்பிட்ட டொக்டர் கனகசபை எனது முப்பாட்டனார்.அதாவது அவரது மூத்தமகன் எனது பாட்டன்,அவரது இரண்டாவது மகன் இரத்தினசபாபதியின் மகன் நான்.நீங்கள் எந்த வகையில் அவருக்கு உறவினர் எனபதை அறியத்தரமுடியுமா?
நட்புடன்
இரத்தினசீலன்
டொக்டர் கனகசபையின் மகள் பசுபதியம்மமா. அவவின் மூத்த மகள் என்னுடைய தாய். அதாவது உங்கள் அப்பப்பா பாலவிநாயகத்தின் தங்கை எனது அம்மம்மா.
Deleteதகவலுக்கு நன்றிகள். நான் கடந்த வாரம் கொழும்பு சென்றிருந்தேன் ராசமணி அம்மாவை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது .அவரது கடைசிமகள் அவுஸ்ரெலியாவில் இருக்கின்றார்.அவரது கணவர் எனது சித்தப்பா அதாவது பாலவினாயகத்தின் கடைசி மகன். அவரிடமிருந்து தான் நான் சில தகவல்களை பெற்றுகொண்டேன்.அப்பப்பாவின் வீட்டுக்கும் கோவிலுக்கும் சிறு வயதில் போயிருக்கின்றேன் ..
ReplyDeleteநன்றியுடன்
இ.இரத்தினசீலன்