பிறந்த பொழுதுக்கும் இறக்கப்போகும் பொழுதுக்கும் இடையே எத்தனை விதமான பொழுதுகள். இந்தப் பொழுதுகளே எம்மை இயக்கிச் செல்கிறன என்பதை நாம் உணர்வதில்லை. ஒவ்வொரு மனிதரின் வாழ்வையும் வகை வகையாக மாற்றிச் செல்வதும் இப்பொழுதுகளே.
இந்த நீள் தரையில் பிறந்த பொழுது தாய் அடைந்த துன்பத்தையும் நாமடைந்த துன்பத்தையும் அறியோம். நாம் ஒரு குழந்தைக்குத் தாயாய், தந்தையாய் ஆகும் பொழுது, நம் தாயும் எவ்வளவு வேதனைப்பட்டு எம்மைப் பெற்றிருப்பாள் என நினைக்கும் பொழுது, கண்ணில் நீர் கசியுமே அந்தப் பொழுதுக்கு எந்தப் பொழுதும் ஈடாகாது. பிறந்த எம்மைப் பார்த்து பெற்றாரும் உற்றாரும் ஊராரும் சேர்ந்து சிரித்து மகிழ்ந்த பொழுதுகள் எமக்குத் தெரியாது.
பிறந்த பொழுதிலிருந்து மூன்றுவயது அடைந்த பொழுதுவரை எமக்கு என்ன நடந்தது, என்ன செய்தோம் என்பதையும் அறியமாட்டோம். அந்தப் பொழுதுகளை எம்முடன் சேர்ந்து இருந்தோர் சொன்னதால் அறிந்து கொள்கிறோம். அது கூட சிலருக்குக் கிடைப்பதில்லை. பிறந்த பொழுதே தாயால், தந்தையால் கைவிடப்பட்ட குழந்தைகள், களவாடிச் செல்லப்பட்ட குழந்தைகள், மற்றவர் தத்து எடுத்த குழந்தைகள், போரால், இயற்கையால் பொறாமையால் யாருமற்றவராய் ஆக்கப்பட்ட பசிளம் குழந்தைகள் அறிவார்களா அந்தப் பொழுதுகளை?
முதன்முதல் தாய் எம்மை அணைத்து எடுத்த அந்தப் பொழுது எமக்குத் தெரியுமா? தாய் முலைப் பாலைச் சுவைத்த பொழுது அதன் சுவையை அறிந்த பொழுதை யாரால் நினைத்துப் பார்க்க முடியும்? தவழ்ந்த பொழுது, தபுதபு என நடந்த பொழுது, குதழை மொழி பேசிய பொழுது, தாயும் தந்தையும் எமைப்பார்த்து ரசித்த பொழுது இப்படி எத்தனை எத்தனை பொழுதை அறியாதே வாழ்கிறோம். தாய் தந்தையர் மட்டுமா! பாட்டன், பாட்டி, மாமா, மாமி, அண்ணன், அக்கா என்ற உறவெல்லாம் நம் குழந்தைப் பருவத்தில் ஆசையோடும் பாசத்தோடும் அரவணைத்து கொஞ்சி மகிழ்ந்த பொழுகள், சினந்த பொழுதுகள், வாரி அணைத்த பொழுதுகள், அடித்த பொழுதுகள், திட்டிய பொழுதுகள், உணவு ஊட்டிய பொழுதுகள் இவற்றில் எந்தப் பொழுதுகள் எவர் நெஞ்சில் நிழல் ஆடுகின்றன?
‘என் தாய் என்னை முதன்முதல் முத்தமுட்டு மடியிருத்தி தாய்முலைப் பால் ஊட்டிய அந்தப் பொழுதை இன்றும் மறக்காது இருக்கிறேன்’ என்று சொல்ல எவரால் முடியும்? இப்படி நம் வாழ்நாளில் நாம் அறியாமல் தொலைத்த பொழுதுகள் எத்தனை எத்தனை? இவைமட்டுமா! எம்மோடு அன்பாக ஆசையாக மரியாதையுடன் கதைக்கிறார் என நாம் நினைப்போரே செந்தமிழால் வையவும் வருவர். அப்படி ஒரு பொழுது வரும் என்று கனவிலும் நாம் கருதாப் பொழுதாக எம்மைத்தேடி அந்தப் பொழுது ஓடோடி வரும். இப்படி நாம் எதிர்பாராமல் வேலை செய்யும் இடங்களில், பயணங்களில், விழாக்களில் மனிதரால் மட்டுமல்ல இயற்கையால், விலங்குகளால், வாகனங்களால் நாம் அறியாப் பொழுதுகள் பல வந்து எமக்கு இடர் செய்யும். இவைபோல் அறிவையும், ஆற்றலையும், பண்பையும், அன்பையும், புகழையும் பெருக்கவும் நம்மை நாடி நாம் அறியாப் பல பொழுதுகள் வந்து எமக்கு மகிழ்ச்சியைத் தந்து கொண்டுதான் இருக்கின்றன. அறிந்த பொழுதுகளை விட அறியாப் பொழுதுகளே இன்ப அதிர்ச்சி தந்து வாழ்வை இனிமை ஆக்குகின்றன.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment