Saturday, 14 May 2016

பாவையர் போற்றிய பாடல்கள் - 1

முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத

மானுட வாழ்வின் தொடக்கத்தில் பெண்கள் காட்டிலும் மேட்டிலும்  அலைந்து உணவு தேடித்திரிந்தனர். அப்படித் திரிந்த போது இயற்கையிடமிருந்து இசையைக் கற்றனர். தாம் கற்றதை தம் குழந்தைகட்கும் கற்றுக்கொடுத்த பெருமை பெண்களையே சாரும். இயற்கையிடம் இருந்து இசையை மனிதன் கற்றான் என்பதை தெள்ளத் தெளிவாக சங்க இலக்கியப் பாடல்கள்  சில காட்டுகின்றன. இன்றைய இசையின் கூர்ப்பை - பரிணாமவளர்ச்சியை சங்ககாலப் புலவோர் பதிவு செய்திருக்கும் பாங்கு போற்றுதற்கு உரியதாகும்.

இடிமுழக்கம் இசையாவதை
திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப, பண் அமைத்து
திண் வார் விசித்த முழவோடு”
                                                     - (மலைபடுகடாம்: 1 - 3)
என மலைபடுகாடாம் எனும் சங்க இலக்கியம் முதல் இருவரியிலேயே சொல்கிறது. பொருளை[திரு] உண்டாக்கும் மழையைப் பொழியும் இருள் நிறமான மேகத்தினது [விசும்பின்] விண்ணை அதிரச் செய்யும்[விண் அதிர்] ஒலி[இமிழ்] இசையைப் போல[கடுப்ப] பண் அமைத்து திண்மையான வாரல்[திண்வார்] கடப்பட்ட[விசித்த] முழவோடு’ என்கிறது. அதாவது ‘சங்ககாலக் கூத்தர் மழையைத் தரும் மேகத்தின் இடிமுழக்க இசை போல இடக்கண் இளிச்சுரமாக வலக்கண் குரல்சுரமாக சுருதி கூட்டி [பண் அமைத்து] வலிய வாரால் கட்டப்பட்ட முழவோடு மற்ற இசைக்கருவிகள் இசைத்தனர்’ எனச் சொல்கிறது.

பரிபாடலில்
“விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப
முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத
யாணர் வண்டினம் யாழ் இசை பிறக்க
பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப
ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்
இரங்கு முரசினான் குன்று”
                                                     - (பரிபாடல்: 21: 33 - 38)
நல்லச்சுதனார் ‘வெற்றி முரசு கொட்டும் முருகனின் திருப்பரம் குன்றில் விரலால் துளைகளை அழுத்தியும்[செறி] விடுத்தும் இசைக்கும் மூங்கிற்குழலின்[தூம்பு] இசையைப் போல முரலும் தும்பிகள் விரிந்த மலர்களில் ஊத, அழகிய[யாணர்] வண்டினம் யாழ் இசையை உண்டாக்க, தாளத்தோடு சேர்ந்த முழவின் இசையை அருவி நீர் ததும்பச் செய்ய, இவை ஒன்றாகச் சேர்ந்து[ஒருங்கே] பரந்து எல்லாம் ஒலிக்கும்' என்கிறார்.
மறம்புகல் மழகளிறு உறங்கும்

இப்படி இயற்கையிடம் இருந்து தாம் கற்ற இசையைப் பெண்கள் பாடித்திருந்ததையும் சங்க இலக்கியத்தில் பதிவுசெய்து வைத்துள்ளனர். கொடிச்சி ஒருத்தி[குறிஞ்சிநிலப் பெண் - மலைநாட்டுப் பெண்] குறிஞ்சிப் பண்ணைப் பாட, யானை உறங்கிற்றாம் என்கிறது அகநானூறு. 
“உளைமான் துப்பின் ஓங்குதினைப் பெரும்புனத்துக்
கழுதில் கானவன் பிழிமகிழ்ந்து வதிந்தென
உரைத்த சந்தின் ஊரல் இருங்கதுப்பு
ஐதுவரல் அசைவளி ஆற்றக் கைபெயரா
ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி
பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக்
குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற் றெய்யென
மறம்புகல் மழகளிறு உறங்கும்”              
                                                  - (அகநானூறு: 102)
பெரிய மலைப்பாங்கான பகுதியிலிருந்த [பெருவரை மருங்கு] ஓங்கிவளர்ந்திருந்த தினைப்புனத்துப் பரணில்[கழுதில்] கானவன் கள்[பிழி] உண்டு மகிழ்ந்திருந்தான். அவனது மனைவியின்[கொடிச்சி] உரைத்தசந்தனச் சாந்து[ஊரல்] பூசியகரிய கூந்தலை[இருங்கதுப்பு] மெதுவாய்வீசும்[ஐதுவரல்] காற்று[அசைவளி] உலர்த்த[ஆற்ற], அவள் தன் கையால் தழைத்த[ஒலியல்] ஈரமானகூந்தலைக்[வார்மயிர்] கோதிக் கொண்டு[உளரினள்] குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள். தினையை[குரல்] கொய்யாது உண்ணாது[கொள்ளாது], தான் நின்ற நிலையில் இருந்தும்[நிலையினும்] அசையாது[பெயராது] மூடாத பசுமையான கண்ணை[பைங்கண்] மூடிப் பாட்டைக் கேட்ட[பாடுபெற்று], வலிமைமிக்க[மறம்புகல்] இளங்களிறு [மழகளிறு] விரைவாக [ஒய்யென] உறங்கியதாம்.

சங்ககாலக் குறிஞ்சிப் பண் இன்று சங்கராபரண இராகமாக பெயர் பூண்டு எம்முன்னே வலம் வருகிறது. கட்டுத் தறியில் கட்டிவைத்த யானை அயையாது நிற்பதைப் பார்த்திருப்பீர்களா? யானை தன் காதை, தலையை, துதிக்கையை, காலை என எந்நேரமும் உடலை அசைத்தபடியே நிற்கும். அத்தகைய யானையை தினைப்புனம் காத்த மலைநாட்டு பெண்ணின் சங்கராபரண இராகப் பாடல் தாலாட்டாய் உறங்க வைத்தது. அதற்கு அவளின் குரலா! அன்றேல் சுருதி சுத்தமான பண்ணா! அல்லது இரண்டுமா காரணம்? அன்றைய பெண்கள் இயற்கையின் ஆற்றாலை இசையால் வெல்லலாம் என அறிந்திருந்தனர் போலும்.

சங்ககாலத்திற்கு முன்பிருந்தே பெண்கள் தமது சமூகவாழ்வில் பலவகையான பாடல்களைப் பாடி மகிழ்ந்ததோடு மற்றைய உயிரினங்களை இசையால் மயக்கியதை இது காட்டுகிறது. அதனால் பாடல்களுக்கு ஏற்ப இசையமைக்கும் முறையையும் அறிந்திருந்தார்கள். இவ்வாறு பாவையர் போற்றிப் பாடிய பாடல்களை சங்ககால மகளிர் போற்றிய பாடல்கள் என்றும் அதற்குப் பிந்தியகால மகளிர் போற்றிய பாடல்கள் என்றும் பிரிக்கலாம்.

அ: சங்ககாலமகளிர் போற்றிய பாடல்கள்:
அகவன்மகளிர் பாடல், துணங்கைப் பாடல், இணைமகள் பாடல், தழிஞ்சிப் பாடல், விற்களப் பாடல் என இப்பட்டியல் நீண்டு செல்லும்.
சிறுகோல் அகவன்மகளிர்

அகவன் மகளிர் பாடிய பாடல்:
குறி [நிமித்தம்] சொல்லிப் பாடும் பெண்களை அகவன்மகளிர் என்பர். அகவன்மகளிர் பாடிப் பரிசு பெற்றதை
“வெண்கடைச் சிறுகோல் அகவன்மகளிர்
மடப்பிடி பரிசில் மான”              - (குறுந்தொகை: 298)
எனச் சங்கப்புலவரான பரணர் குறிப்பிடுகிறார். அகவன் மகளிர் கையில் வெண்ணிற அடியுடைய[வெண்கடை] சிறுகோல் இருப்பதால் குறிசொல்லிப் பாடும் பெண்களே அகவன்மகளிர் என்பது தெளிவாகிறது. 

குறிசொல்லிப் பாடி பெண்யானையைப்[மடப்பிடி] பரிசு பெறும் அளவிற்கு அவர்கள் பாடலும் குறியும் சிறப்புடையதாக இருந்திருக்கிறது. அகவன் மகளிர் குறிகூறத் துணையாக நாவில் வந்து இருக்குமாறு தெய்வங்களை வேண்டிப் பாடியிருக்கிறார்கள். இன்றும் திருச்செந்தூர், குற்றாலம் போன்ற இடங்களில் குறிகூறும் பெண்கள் இறையருளை வேண்டிப்பாடி குறிசொல்வதைக் காணலாம்.

சங்ககால அகவன்மகள் ஒருத்தி ஒரு மலைநாட்டைப் புகழ்ந்து பாடியவாறு தெருவில் நடந்து சென்றாள். தனது காதலனின் நாட்டைப் புகழ்ந்து அகவள் மகள் பாடுவதைக் கேட்ட காதலியொருத்தி ‘அகவன் மகளே!’ என அவளை அழைத்து, ‘அந்தப் பாட்டைப்பாடு, இன்னும் பாடு என்று கேட்கின்றாள். அதனை ஔவையார்,
“அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே!
இன்னும் பாடுக பாட்டே! அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!
- (குறுந்தொகை: 23)
எனப்பாடியிருப்பதால் அறியலாம். இதிலிருந்து அகவன் மகளிர் பாடலின் சிறப்பு இனிது விளங்கும்.

ஆ:  கடந்தகால மகளிர் போற்றிய பாடல்கள்:
இப்பாடல்களும் ஆரத்திப்பாடல், ஊஞ்சல்பாடல், கும்மிப்பாடல், குறத்திப்பாடல், தாலாட்டுப்பாடல் என நீண்டு செல்லும்.

 ஆரத்திப்பாடல்:
மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும்போது ஆரத்தி எடுத்துப் பாடல்பாடும் வழக்கம் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்றும் நடைபெறுகிறது. மஞ்சள் குஞ்குமத்தைக் கரைத்து அத்தட்டில் மங்கலவிளக்கேற்றி வைத்து மணமக்களுக்கு ஆரத்தி சுற்றிப்பாடும் பாடல் ஒன்றை படித்து இரசியுங்கள்.
“ஆலாத்தி ஆலாத்தி ஐந்நூறு ஆலாத்தி
முத்தாலே ஆலாத்தி முன்னூறு ஆலாத்தி
பாக்காலே ஆலாத்தி பலநூறு ஆலாத்தி
வெத்திலையாலே ஆலாத்தி வெகுநூறு ஆலாத்தி
குங்முமத்தாலே ஆலாத்தி கோடிகோடி ஆலாத்தி
மஞ்சலாலே ஆலாத்தி மங்கலமாய் ஆலாத்தி”
ஆரத்தி எடுக்கும் இருவரும் மனநிறைவுடன் இணைந்து பாடும் போது இப்பாடலின் இனிமை நன்கு புலப்படும்.
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
1999ம் ஆண்டு ‘கலசம்’ இதழுக்கு ‘சாலினி’ என்ற பெயரில் எழுதியது.

3 comments:

  1. ஆலாத்தி பாடல் நயமாக உள்ளது.

    ReplyDelete
  2. மெதுவாய்வீசும்[ஐதுவரல்] - அருமை, எளிய தமிழில் இனிய விளக்கம்

    ReplyDelete