காதல் மனையாள் கலங்குகினாள். தன் கருத்துக்கினிய கணவன் கருத்தழிந்து தந்திரங்களில் சிறந்து விளங்கும் சமண சமயத்தைத் தழுவி ஆதரிப்பதை எண்ணி. அவன் ஒரு தனிமனிதனா? இல்லையே ஒரு நாட்டின் தலைவன். சமுதாயத்தை நடத்திச் செல்ல வேண்டிய அரசன் அவன். ‘அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி அல்லவா?’ தன் கணவன் குடிமக்களை சமணர்களாக மாற்றுவதை பார்த்து இரத்தக் கண்ணீர் சொரிந்தாள். சோழப் பேரரசனின் மகளாகப்பிறந்த மங்கையற்கரசியார் பாண்டியன் மாமன்னனின் மனைவியாக வந்தவள்.
“மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைமட மானி
பங்கையற் செல்வி பாண்டிமாதேவி”
- (ப.தி.முறை: 3: 120: 1)
தான் பிறந்த குடியாகிய சோழப் பேரரசின் குடிப்பெருமையும் புகுந்த குடியாகிய பாண்டியப் பேரரசின் குடிப்பெருமையும் வாழ வழி செய்ய வேண்டியது அவள் கடமை. எனவே பாண்டியப் பேரரசின் மந்திரியாகிய குலச்சிறையாரை அழைத்து என்ன செய்வது என வினவினாள்.
அதற்கு குலச்சிறையார் சீர்காழியில் பிறந்து மூன்றுவயதில் தேவாரம் பாடி பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த திருஞானசம்பந்தரின் பெருமைகளைக் கூறினார். சமணர்களின் மந்திர தந்திரங்களுக்கு ஈடுகொடுக்கக் கூடியவர் சம்பந்தரே என உணர்ந்த மங்கையர்க்கரசியார் அவரை அழைத்து வரப்பணித்தார்.
குலச்சிறையாரும் திருமறைக்காட்டில் [வேதாரணியம்] இருந்த சம்பந்தரை அழைத்து வர ஏற்பாடு செய்தார். மதுரைக்கு சம்பந்தர் வந்ததை அறிந்த சமணர்கள் அரசனிடம் முறையிட்டார்கள். அவனும் நீங்கள் செய்வதைச் செய்யுங்கள் என்று கூறிவிட்டான். அதனால் மகிழ்ச்சி அடைந்த சமணர்கள்; சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு தீ வைத்தார்கள். மடம் தீப்பிடித்துப் பற்றி எரிவதைக் கண்ட சம்பந்தரும்
“செய்யனே திருவாலவாய் மேவிய அத்தனே
எனை அஞ்சல் என்று அருள்செய்
பொய்யராம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று பாண்டியற்காகவே”
- (ப.தி.முறை: 3: 51: 1)
எனத் தேவாரம் பாட மடத்தின் தீ அணைந்தது. சம்பந்தர் இத்தேவாரத்தில்
“பொய்யராம் அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே” என இறைவனிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அத்தீயின் வெம்மை பாண்டியனிடம் சென்று புகுந்தது. அவன் வெப்பு நோயால் அவதிப்பட்டான். சமணர்கள் வந்து மந்திரங்கள் சொல்லி மயிற்பீலியால் தடவியும் அவனின் நோய் மாறவில்லை.
மங்கையற்கரசியாரும் குலச்சிறையாரும் பாண்டியன் நெடுமாறனுக்கு சம்பந்தரைப் பற்றிக்கூறினார்கள். பாண்டியனும் சம்பந்தரை அழைத்து வரச்சொன்னான். சம்பந்தரும் வந்தார். அவர் சிறுபிள்ளையாக இருப்பதைக் கண்ட மங்கையற்கரசியார் வருந்தினார். அதனை உணர்ந்த சம்பந்தரும் அரசிமாதேவியைப் பார்த்து
“மானினேர்விழி மதராய் வழுதிக்கு மாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலன் ஈங்கிவன் என்றுநீ பரிவெய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய இடங்களில் பல அல்லல்சேர்
ஈனர்கட்கு எளியேன் அல்லேன் திருவாலவாய் அரனிற்கவே”
- (ப.தி.முறை: 3: 39: 1)
எனப் பதில் கூறினார். அரசி மகிழ்ந்தாள். பின்னர் அரசனின் விருப்பப்படி, வலப்பக்க நோயை சம்பந்தரும் இடப்பக்க நோயை சமணர்களும் நீக்குவதென்றும் யார் முதலில் நோயை நீக்குகிறார்களோ அவர்களது சமயத்தை அரசன் தழுவுவதாகவும் முடிவாயிற்று.
சம்பந்தர் “மந்திரமாவது நீறு” எனத் தேவாரம் பாடி அரசனின் வலப்பக்கத்திற்கு திருநீறு இட்டார். வலப்பக்கம் குளிர இடப்பக்க வெம்மை கூடியது. பாண்டியன், தனது இடப்பக்கத்து வெப்பு நோயையும் சம்பந்தரையே நீக்கச் சொன்னான். பாண்டியனின் வெப்பு நோய் நீங்கிற்று.
பாண்டியனும் சம்பந்தர் சிறு குழந்தை என்பதையும் பொருட்படுத்தாது திருஞானசம்பந்தரைத் தொழுது எழுந்தான். நெல்வேலி செருக்களத்து வென்ற பாண்டியனாக - கூன் பாண்டியனாக இருந்த நெடுமாறன் நிமிர்ந்து எழுந்தான். தன் கணவனின் மனக்கூனுடன் உடற்கூனும் நிமிர்ந்ததைப் பார்த்து வியந்தாள் பாண்டிமாதேவி. திருஞானசம்பந்தரின் ஆன்ம சக்தியால் வெப்பு நோயுடன் கூனும் போய் நின்ற சீர்நெடுமாறனாக அரசன் மாறியதைக் கண்டு மகிழ்ந்தார் மந்திரி குலச்சிறையார்.
பாண்டிய அரசனோ
“மண்ணெலா நிகழ மன்னனாய் மன்னு
மணிமுடிச் சோழன்றன் மகளாம்
பண்ணினேர் மொழியாள் பாண்டிமாதேவி”
- (ப.தி.முறை: 3: 120: 1)
எனத் தமிழ் விரகரால் [திருஞானசம்பந்தரால்] போற்றப்பட்ட மங்கையர்க்கரசியாரை மனைவியாகப் பெற்று அந்த அருளமுதத்தை மாந்தியதால் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவராக வரும் பெருமையும் பெற்றான்.
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
இக்கட்டுரை 1995ம் ஆண்டு 'கலசம்'இதழுக்காக 'சாலினி' என்ற பெயரில் எழுதியது.
குறிப்பு:
இக்கட்டுரை 1995ம் ஆண்டு 'கலசம்'இதழுக்காக 'சாலினி' என்ற பெயரில் எழுதியது.
No comments:
Post a Comment