கண்ணீரைத் தெளித்து வளர்க்க வேண்டிய அளவுக்கு தேற்றா மரத்திற்கு அப்படி என்ன பெருமை இருக்கிறது என வியக்கின்றீர்களா? வியப்படையும் நிலையிலேயே நாம் வாழ்கிறோம். தேற்றா மரம் சங்ககாலப் பழமை உடையது. அதிலும் இடைச்சங்ககால நூலான தொல்காப்பியத்தில் எடுத்துச் சொல்லப்பட்ட மரங்களில் ஒன்று. அதனை
“இல்ல மரப்பெயர் விசைமர இயற்றே”
- (தொல்: புள்ளிமயங்கியல்: 18)
என்று தொல்காப்பியர் கூறுவதால் அறியலாம். தேற்றா மரத்திற்கு இல்லம் என்ற பெயரும் உண்டு.
“முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ”
- (அகநானூறு: 4: 1 - 2)
முல்லைச் செடியில் கூரான அரும்புகள் தோன்ற, தேற்றா மரத்திலும் கொன்றை மரத்திலும் மொட்டுக்கள் கட்டவிழ்ந்து விரிய எனத் தோழி தலைவிக்குச் சொல்வதாக குறுங்குடி மருதனார் ஒரு காட்சியைக் காட்டுகிறார். சங்ககாலத்தில் இல்லம் என்ற பெயரில் தேற்றாமரம் அழைக்கப்பட்டதை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
சங்ககால ஆடவரும் மகளிரும் தேற்றா மலரை மாலையாகத் தொடுத்து தலையில் சூடினர். சங்ககாலக் காதலன் ஒருவன் முல்லை[குல்லை], காட்டுமல்லிகை[குளவி], கூதளம்[கூதாளி], குவளை, தேற்றா[இல்லம்] மலர்களைச் சேர்த்துக் கட்டிய மாலையை[கண்ணியை] தலையில் சூடியிருந்ததை
“குல்லை குளவி கூதளங் குவளை
இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன்”
- (நற்றிணை: 376: 5 - 6)
என நற்றிணையில் கபிலர் குறித்துள்ளார்.
தைலவருக்கம் என்னும் மருத்துவ நூலும் தைலங்காய்ச்சுவதற்கு தேற்றாங்கொட்டை சேர்ப்பதைக் கூறுமிடத்தில்
“இல்லமுறு அண்டங்கள் நூறுபலம்”
- (தைலவருக்கம்: 33)
என்கின்றது. சிறுநீரக நோய்களை நீக்க இத்தைலம் பயன்பட்டது. அண்டம் போன்ற வடிவில் இருந்த தாவர விதைகளை நம் முன்னோர் அண்டம் என்றனர். மற்ற விதைகளைப் போல அல்லாமல் தேற்றாங் கொட்டைகள் அண்டவடிவில் இருப்பதை கீழே உள்ள படத்தில் பாருங்கள்.
சங்ககாலப் புலவரான முடத்தாமக்கண்ணியார் தான் அரசனிடம் பெற்ற பரிசையும் அரசனின் தன்மையையும், சுறாமீன் திரியும் கடலோர நெய்தல் நிலத்து வழியில் கண்டகாட்சிகளையும் ஒரு பொருநருக்குச் சொல்கிறார். அதில் பறைவைகள், மலர்கள், மரங்கள் எனப் பலவற்றை மிக விரிவாக எடுத்துச் சொல்லும் போது
“நகு முல்லை உகு தேறு வீ” - (பொருநராற்றுப்படை: 200)
‘சிரித்தது[நகு] முல்லை சிந்தியது[உகு] தேற்றா[தேறு] வீ[மலர்]
‘சிரித்தது முல்லை, சிந்தியது தேற்றா மலர்’ எனத் தேற்றா மலர்கள் மரத்தில் இருந்து தேன் சிந்துவது போலச் சிந்தியது என்கிறார். தேன் நிறைந்த சிறிய மலர்கள்; அவை மரத்திலிருந்து சிந்துமே அல்லாமல் சிதறாது. அதனாலேயே பண்டைய தமிழர் அதனை எழில்மரமாக [ornamental tree] வளர்த்து தம் சுற்றுச் சூழலை எழிலாக்கினர்.
இல், இல்லம் என்பன வீட்டடைக் குறிக்கும். இல் + அம்[அழகு] = இல்லம். வீட்டிற்கு அழகைக் கொடுப்பது இல்லம். பண்டைய நம் முன்னோர் தேற்றா மரத்தைத் தமது இல்லத்தின் எழில் மரமாக [ornamentaltree] மட்டுமல்ல அதற்கும் மேலாகப் போற்றி வளர்த்தனர். ‘இல்லம் இல்லத்தில் இருக்க இல்லாதது இல்லை’ என்பதையும் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதையும் அறிந்திருந்தனர். தேற்றாமரம் அப்படி என்ன பெரும் பொருளை நம் முன்னோருக்குக் கொடுத்து?
காற்றும் நீரும் மனித வாழ்வுக்கு மிகமிகத் தேவையானவை. தீவுப்பகுதிகளிலும் கடற்கரை ஓரங்களிலும் உள்ள காற்றின் உவர்ப்புத் தன்மையை, தூசுக்களை, மாசுக்களை [மீன், வண்டல் மண் போன்ற மணங்களை] நீக்கி, சுத்தமான நல்ல காற்றை உயிர்களின் வாழ்வுக்கு அள்ளி வழங்கிய ஓர் அற்புதமான மரம் தேற்றாமரம்.. காற்றைச் சுத்தமாக்கி, சுவாசத்துக்கு உதவி மனிதர்களை நோய் இன்றி வாழவைத்தது. இன்று சிறுநீரகக் கல், கல்லீரல் கல் எனப் பல நோய்களால் தத்தளிக்கிறோமே அவற்றுக்கு ஒரு காரணம் நீரல்லவா? நிலத்தடி நீரை நன்னீராக்கும் தன்மை தேற்றாமர வேருக்கும், நெல்லிமர வேருக்கும் உண்டு. அதனால் நம் முன்னோர் கிணற்றுக்குச் சற்றுத் தள்ளி (இலைவிழாத தூரத்தில்) இம்மரங்களை நட்டனர்.
நிலம் பாலை வனமாக மாறுவதற்கு ஒரு காரணியாய் இருப்பது வலிமையான காற்றே. அத்தகைய வலிய காற்றையும் தடுத்து நிறுத்தி மற்ற உயிரினங்களைக் காத்த தேற்றாமரத்தை ஏன் அழித்தோம்??. இம்மரம் வாளால் வெட்டுவதற்கு கடினமானது. கமம் செய்வதற்குத் தேவையான கலப்பை, நுகம் போன்றவற்றை இம்மரத்தில் செய்தனர்.
தேற்றாங்கொட்டை
இவற்றைவிட நம் முன்னோரின் அரிய கண்டு பிடிப்பொன்றை கோடிட்டுக் காட்டுகிறது கலித்தொகையின் நெய்தற்கலி.
“கலஞ்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக்
கலங்கிய நீர்போல் தெளிந்து நலம்பெற்றாள்
நல்லெழில் மார்பனைச் சார்ந்து”
- (கலித்தொகை: 142: 64 -67)
‘குடத்தின்[கலத்தின்] உள்ளே தேற்றாவின்[இல்லம்] விதையால் தேய்க்கக் கலங்கிய நீர் தெளிந்தது போல தலைவனின் பிரிவால் கலங்கியிருந்த தலைவி, தலைவனைக்கூடி பழைய நலத்தைப் பெற்றாள்’ என்கிறார் நல்லந்துவனார். சங்ககால மக்கள் கலங்கிய நீரை எப்படித் தெளிந்த நீராக்கிக் குடித்தார்கள் என்பதைக் இச்சங்கப்பாடல் காட்டுகிறது. சங்ககாலத்தமிழர் ஆராய்ந்து அறிந்து பயன்படுத்திய ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு இது. தேற்றாங்கொட்டையைத் தேய்த்துத் தெளிந்த நீரை நானும் குடித்திருக்கிறேன்.
ஆம். அது 1964ம் ஆண்டு மார்கழி மாதம் நடந்தது. வடக்குக் கிழக்கு மாகாணத்தை இடுகாடாக்கிய பெரும் சூறாவளி வீசிய நேரம். வீடுகளையும் மரங்களையும் சிதைத்து சூறையாடியது அச்சூறாவளி. வெள்ளம் வீட்டினுள் புகுந்து மனித நேயத்தை, மர நேயத்தை என்னுள் புகுத்தியது. அற்காகத் தான் அங்கு வந்ததோ என்னவோ. மல்லாவியில் இருந்த பழைய கிராமத்தையே அது கொள்ளை கொண்டது. சூறாவளி என்ற பெயரில் இயற்கை ஆடிய கோரத் தாண்டவம் எனலாம். அதனை என் மனத்திரையில் அழியா ஒவியமாகப் படிந்திருக்கும் காட்சிகளில் கோரக் காட்சி என்பேன்.
அப்போது என் தந்தை மல்லாவியில் அதிபராக இருந்தார். நான் சிறுமியாயிருந்தேன். சூறாவளியால் வீடு இழந்தோரையும், வெள்ளத்தால் வீடு இழந்தோரையும் அழைத்து வந்து மல்லாவிப் பாடசாலையில் என் தந்தை தங்கவைத்திருந்தார். அவர்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் நீர் வேண்டாமா? வெள்ளத்தால் கிணற்று நீர் பாழாய்ப் போயிருந்தது. ‘அந்த நீரைக் குடித்தால் படிக்கும் மாணவர்கள் வாந்தி பேதியால் அவதிப்படுவார்கள்’ என்றார். மல்லாவியில் சலவைத் தொழில் செய்யும் ஒருவரை அழைத்தார். ‘தேற்றாங்கொட்டை இருக்கிறதா?’ என்று கேட்டார். ‘ஆம்’ என்று தலையாட்டியவர், ஒரு கடகம் நிறையத் தேற்றாங்கொட்டையைக் கொணர்ந்து கொடுத்தார். கிடாரங்களின் அடியில் தேற்றாங் கொட்டையைத் தேய்த்து நீரை ஊற்றி வைக்க தெளிந்த நீராகியது. துள்ளிக்குதித்தேன். அப்போது மேலேயுள்ள கலித்தொகை வரியை என் தந்தை எனக்குச் சொன்னார். அந்த நிகழ்வும் சங்கத்தமிழ் மீதும் சங்கத்தமிழர் மீதும் எனக்குப் பற்றுதல்வர ஒரு காரணமாயிற்று.
“சலவைத் தொழிலாளியிடம் தேற்றாங்கொட்டை இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனத் தந்தையிடம் கேட்டேன். வெளுத்து வந்திருந்த என் உடுப்பு ஒன்றை எடுத்து, அதன் கழுத்தில் இடப்பட்டிருந்த கடும் ஊதா நிறக்குறியீட்டைக் காட்டினார். சலவைத் தொழில் செய்வோர் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு குறியீடு வைத்திருப்பர். அக்குறியீட்டின் படியே அவ்வவ் வீடுகளுக்கு வெளுத்த உடைகளைக் கொடுப்பர். அந்த அழியாக் குறியீட்டை இடப்பாவித்த ‘மை’ தேற்றாப் பழத்தின் சாறு என்பதை என் தந்தை சொல்லி அறிந்தேன். எனவே இலங்கையின் எல்லா ஊர்களிலும் தேற்றாமரம் இருந்தது. சிகிரியா ஓவியங்களில் இருக்கும் கருநாவல் நிறத்திற்கும் தேற்றா மையே பயன்பட்டதாம். இயற்கையாகக் கிடைத்த அழியா மையைத் தரும் தேற்றாவை அழித்தது சரியா?
உங்களுக்குத் தெரியுமா மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடிப் பகுதியில் தேற்றாத்தீவு என்று ஒரு தீவு இருப்பது? என் தந்தை மட்டக்களப்பில் அதிபராக இருந்த காலத்தில் நான் அங்கு சென்றிருக்கிறேன். தேற்றாமரங்கள் நிறைந்து இருந்ததால் அத்தீவை தேற்றாத்தீவு என நம் முன்னோர் அழைத்தனர். முடத்தாமக்கண்ணியார் நெய்தல்[கடல் சார்ந்த] நிலத்தில் தேற்றாமலர்கள் சிந்தியதை மேலே உள்ள பாடலில் கூறுகிறார் அல்லவா! ஆதலால் தேற்றாமரம் தீவுகளில் பன்னெடுங்காலமாக வளர்ந்த மரம் என்பதை தீவுப்பகுதி மக்களாகிய நாம் உணரவேண்டும். மீண்டும் அதற்கு உயிர் கொடுப்போமா?
தேற்றாவின் பூ
நீங்கள் இளவேனிற் காலத்தில் தேற்றா மரத்தைப் பார்த்து இருக்கிறீர்களா? அதன் எழிலே தனியானது. கண்ணுக்கு குழுமையான அழகியதொரு பச்சை நிறத்தில் பளபளப்புடன் முதிர் இலைகள் காட்சிதர தளிர்களோ பச்சைநிறத்தில் எத்தனை வண்ணம் தெரியுமா? எனக் கட்டியம் கூறும். அந்த தளிர்களின் இடையே கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கும் மலர்களில் தேன் அருந்த தேனீக்கள் வட்டமிடும். காற்றில் அசைந்து சிந்திய மலர், கம்பளம் விரித்து நிலத்தைப் போர்த்தி குளிர்மையாய் வைத்திருக்கும். அவை மக்கி மண்ணோடு மண்ணாகி மண்ணை வளப்படுத்தும். சிறிய கொட்டப்பாக்கு அளவு உருண்டையான பச்சைக் காய்கள். பழுத்ததும் கருநாவல் நிறப்பழமாகக் காட்சி தரும். பாடசாலை செல்லும் சிறுவர் தேற்றாம் பழத்தைப் பறித்து உப்போடு உண்பர். தேற்றாமரக் கொம்பரில் இருந்து குயில் கூவ, பள்ளிச் சிறுவரும் உடன் கூவுவர்.
வசந்த காலத்தின் அந்த எழிலுக்கு எதிர்மாறாக இலையுதிர் காலத்தில் காட்சி தரும். சுல்லித்தலை விரித்து நிற்கும் தேற்றாமரக் கிளையில் காகங்கள் கூடு கட்டி, ஊரைக் கூட்டிக் கும்மாளம் போடும். அதுவும் ஒருவித அழகே. காக்கை இனம் இல்லை என்றால் நாம் குயிலின் குரலைக் கேட்க முடியுமா? இயற்கையே ஒன்றில் ஒன்று தங்கித்தானே சுழல்கிறது.
தேற்றாவின் பழம்/காய்
கனிந்த தேற்றாப்பழம், கொட்டை இரண்டும் விசக்கடிக்கு, அதிலும் பாம்புக்கடிக்கு மருந்தாகக்[andidotes] பயன்பட்டது. தேற்றாப்பழத்தை நஞ்சுக்குச் சிறந்த மருந்தாக வாகடங்கள் கூறுகின்றன. தேற்றாமரப்பட்டையைத் தூளாக்கி எலுமிச்சம் சாற்றுடன் வாந்தி பேதிக்குக் கொடுத்துக் குணமாக்கினர். இப்படி எத்தனையோ நோய்களை நீக்கியது. தேற்றாமரத்தின் பெருமையை அறிந்து அமெரிக்காவில் அதனை ஆய்வு செய்கின்றனர். அதனை அறியக் கீழேயுள்ள வலைத்தளத்தைப் பார்க்கவும்.
நம் முன்னோர் தேற்றாமரத்தை இல்லம் என்று பெயரிட்டு தம் இல்லத்தில் ஏன் வளர்த்தனர் என்பது புரிகிறதா? வீட்டையும் தேற்றா மரத்தையும் ‘இல்லம்’ என்ற பெயரில் அழைத்து தேற்றா மரத்தின் முதன்மையை எமக்குக் காட்டியும் நாம் கண்மூடி இருத்தல் தகுமா? இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக தமிழரின் வாழ்வோடும் வளத்தோடும் தொடர்ந்து வரும் தேற்றாமரத்தை கண்ணீரைத் தெளித்தேனும் வளர்ப்போமா!!!
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
இக்கட்டுரையை 1998ல் எழுதினேன். அந்த வருடம் நான் இந்தியா சென்றிருந்த போது டாக்டர் கலைக்கோவன் அவர்கள் எனக்குச் சில புத்தகங்களைத் தந்தார். வரலாறு 7, ஆய்விதழின் பக்கம் 22ல் ஒரு கட்டத்துள் 'நீர் தெளியக் காழ்' எனும் தலைப்பில் ஏழு வரிச் செய்தி இருந்தது. அதன் கடைசிவரியில் 'நீர் தெளியப் பயன்பட்ட அந்த விதையை இன்றெங்கே காணோம்?' என ஆதங்கத்துடன் எழுதப்பட்டிருந்தது. நான் அவருக்கு போன் செய்து எனது தந்தை 1964ல் நீரைத் தெளியவைத்த கதையைச் சொன்னேன். தேற்றா மரம் பற்றி நான் அறிந்ததை எழுதித்தரச் சொன்னார். டாக்டர் கலைக்கோவனுக்காக எழுதிய கட்டுரையையே இப்போது தூசி தட்டி இன்றைய புங்குடுதீவு இளைஞருக்காக கொஞ்சம் சேர்த்துத் தருகிறேன்.
அருமையான பகிர்வு
ReplyDeleteதங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
http://tebooks.friendhood.net/t1-topic
Let us all care for the trees and propagate them.
ReplyDelete