Monday, 18 April 2016

மக்களை மதித்து வாழ்மின்!

அருள்மிகு திருக்கோணேஸ்வர நாதர்
வணக்கப் பாமலர்
- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் - [எனது தந்தை]

நினைத்தபடி வாழநீர் விரும்பிடிற் கேளுங்கள்
           விண்ணவரை ஏவல் கொளலாம்
நீதிவடி வாகவொரு சோதியுளதா மன்பு
           நிறைந் துலக உயிர்கடோறும்
வானைநிக ராகப்பரந் துலகு முடிமுட்டி
           வளரமுத மழை பொழியுமாம்
வாழத்தெ ரிந்ததும் தெரியாததும் அதன்
           வளர்ப்புக் குழந்தை தானாம்
மானைத் தொடர்ந்த பெருமானைத் தவஞ்செய்ய
           வைத்துள நெருப்பு மலையின்
மாதவம் பேணுங்கள் நீதிவழி நில்லுங்கள்
           மக்களை மதித்து வாழ்மின்
சேனைக்கொர் தலைமையும் தேசத்தார் தலைமையும்
           தேகத்தர் தலைமையின் பின்
சேவகஞ் செய்யவொரு தேவன் நமக்குளன்
           தென்கயிலை மலை யண்ணலே!
இனிதே,
தமிழரசி.

2 comments:

  1. மானைத் தொடர்ந்த பெருமானைத் தவஞ்செய்ய-any story behind this

    ReplyDelete
    Replies
    1. திருமால் இராம அவதாரத்தில் மாரீசன் என்ற மானைத் தொடர்ந்து சென்றதையே "மானைத் தொடர்ந்த பெருமான்" என்கின்றார். சிவனை நோக்கித் தவம் செய்தே திருமால் சக்கர ஆயுதத்தைப் பெற்றர் என்பதை எங்கள் நாயன்மார்கள் பாடியிருப்பதால் அறியலாம். மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்திலும்
      "சங்கரன் எம்பிரான் சக்கரம் மாற்கருளியவா
      எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ" எனப் பாடியுள்ளார். சிவனை நோக்கி திருமால் தவம் செய்ததற்கு பல கதைகள் இருக்கின்றன.

      Delete