குறள்:
“இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்
துன்பம் உறுதல் இலன்” - 628
பொருள்:
இன்பத்தை விரும்பாமல் துன்பப்படுவது இயல்புதானே எனக்கூறுவன், எப்போதும் துன்பம் அடைவதில்லை.
விளக்கம்:
இத்திருக்குறள் ‘இடுக்கண் அழியாமை’ என்னும் அதிகாரத்தில் இருக்கின்றது. அதாவது துன்பத்தில் [இடுக்கண்] மனம் கலங்காதிருக்கும் தன்மைபற்றி இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுகிறார். துன்பம் வந்த போது மனக்கலங்குவதால் மனஅழுத்தம், மனவுளைச்சல் போன்ற பலவித நோய்களுக்கு அடிமையாகிறோம். அதனால் திருவள்ளுவர் இவ்அதிகாரத்தில் மனநோய்களில் இருந்து நாம் தப்புவதற்கு வழி சொல்கிறார் எனலாம்.
மனிதரிற் பலர் துன்பங்களில் துவளும் போது தத்தமது கொள்கைகளை குழிதோண்டிப் புதைத்து விடுவர். அவர்கட்கு உலக இன்பங்களின் மேல் இருக்கும் அளவிடமுடியாத ஆசையினாலேயே அப்படிச் செய்கின்றனர். மனிதரின் மனம் எவ்வளவு உறுதியாக அசையாது இருக்கிறதோ அவ்வளவுக்கு அவரது கொள்கையும் உறுதியுடன் எத்தகைய இன்பங்களைக் கண்டாலும் அசையாது இருக்கும். உலக இன்பங்களை விரும்பாதவரை இக்குறளில் இன்பம் விழையான் என்று சொல்கிறார். விழைதல் என்றால் விரும்புதலாகும். உலக இன்பத்தைப் பொருட்படுத்தாது, உலகவாழ்க்கையில் துன்பம் [இடும்பை] இயல்பாக வருவது என்று சொல்பவன் எப்போது எதனையும் எண்ணி துன்பம் அடையமாட்டான்.
துன்பம் இயல்பானது என்று கூறி, துன்பத்தைக் கண்டு வருந்தாதிருப்பதற்குக் காரணம் என்ன? உலக இயற்கை இரவும் பகலுமாகச் சுழன்று கொண்டிருப்பது போல மனித வாழ்வில் இன்பமும் துன்பமும் சுழன்று கொண்டே இருக்கும். அந்த உண்மையை உணர்ந்தோர், எத்தகைய துன்பம் வந்தாலும் துன்பம் அடையார். எமது வாழ்க்கையில் எப்படி துன்பம் வரும் என்பதை முன்னரே நாம் அறிந்து கொள்ளவதில்லை. அதுவே இயற்கை மனிதனுக்குத் தந்த கொடையாகும். துன்பம் வரும் பொழுது அதில் தோய்ந்து கரைந்து போகாதிருக்க, சரி எது, பிழை எது என அறியும் அறிவுத் தெளிவும், மனஉறுதியும் மிக மிக அவசியமாகும்.
அந்தத் தெளிவு திலீபனிடம் இருந்ததாலேயே இன்பங்களில் மூழ்கி இன்பம் காணும் வயதினனாக இருந்தும் இன்பங்களை விரும்பாது, பசித் துன்பம் என்பது எல்லோருக்கும் இயல்பாக உள்ள ஒன்று தானே என நினைந்து, உடல் வருந்தி உயிர் பிரியும் மாபெரும் துன்பத்திற்கும் துன்பப்படாதவனாக இத்திருக்குறளுக்கு இலக்கணமாய் தமிழாய் மலர்ந்தான்.
No comments:
Post a Comment