உழவர் திருநாளாம் தமிழர் திருநாளை உவகையோடு கொண்டாடும் தமிழ் நெஞ்சங்களை தமிழின் சுவையெனெ இன்பங்களைச் சுவைத்து வாழ வாழ்த்துகிறேன்! உங்கள் மனம் மகிழும் இந்த வேளையில் நானும் உங்களுக்கு ஒரு விடுகதை சொல்லலாம் என நினைக்கிறேன்.
அதிகாலை நேரம் மலைப்பாங்காண குறிஞ்சி நிலப்பக்கமாக சுந்தர கவிராயர் நடந்து சென்றார். கிழக்குத் திசையைப் பார்த்தார். மருத நில வயல்வெளியாய்த் தெரிந்தது. மெல்லச் சூரியன் உதயமாகி வந்தான். அந்த சூரிய உதயத்தைப் பார்த்து மகிழ்ந்தார். தான் பார்த்து மகிழ்ந்த சூரிய உதயத்தைப் பற்றிப் பாட்டெழுத குனிந்து அரையில் இருந்த ஓலையையும் எழுத்தாணியையும் எடுத்தார். மீண்டும் சூரியனைப் பார்க்கக் நிமிர்ந்தவர் கண்ணில் ஓர் அற்புதம் தெரிந்தது. அவரது வாழ்நாளில் அப்படிப்பட்ட ஒன்றை அவர் கண்டதே இல்லை. “இது என்ன குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்ததா? மருத நிலத்தைச் சேர்ந்ததா?” என்று அவருக்குச் சந்தேகம் வந்தது. கண்களைக் கசக்கிக் கசக்கி அந்த அற்புதத்தை மீண்டும் மீண்டும் விரும்பிப் பார்த்தார். ஒரே மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியில் சூரிய உதயத்தை எழுத எடுத்த ஓலையின் மேல் தான் பார்த்த புதுமையை, எப்படித் தெரிந்ததோ அப்படியே பாடலாக எழுதினார். அவர் எழுதிய பாடல் இதோ:
“பத்துக்கால் மூன்றுதலை பார்க்கும் கண்ஆறு முகம்
இத்தரையில் ஆறு வாய் ஈரிரண்டாம் இத்தனையும்
ஓரிடத்தில் கண்டேன் உகந்தேன் களிகூர்ந்தேன்
பாரிடத்தில் கண்டே பகர்”
அதாவது “இப்பூமியில் பத்துக்கால், மூன்று தலை, ஆறு கண், ஆறு முகம், நான்கு [ஈரிரண்டு] வாய் இவ்வளவையும் ஓரிடத்தில் கண்டேன். விரும்பினேன். மகிழ்ந்தேன். அதனை இவ்வுலகத்தில் தேடிப் பார்த்துச் சொல்” என்கிறார்.
சுந்தர கவிராயர் கண்ட அற்புதம் என்ன என்று தெரிந்ததா? இந்த உலகத்தில் அதனைத் தேடப் புறப்பட்டு விட்டீர்களா? ஏனெனில் நம்மால் புறக்கணிக்கப்படும் ஒன்றுதான் அது. இப்படியே போனால் இன்னும் ஐம்பது வருடத்துக்குள் நாம் அதனை பொருட்காட்சிச் சாலையிலும், ஓவியத்திலும், சிற்பத்திலும் பார்க்கும் நிலைமை வரும். இன்று என்ன நாள்? உழவர் திருநாளில் வரும் மாட்டுப் பொங்கல் அல்லவா? அந்த அற்புதம் என்ன? தெரியவில்லையா? மேலே உள்ள படத்தைப் பாருங்கள். கண்டுபிடித்து விட்டீர்களா?
கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு - மேலே படத்தில் என்ன தெரிகிறது? உழும் எருதுகள் இரண்டு, கலப்பை ஒன்று, இவற்றைக் கொண்டு வயலை உழும் மனிதர்.
இரண்டு எருது + ஒரு மனிதர் = 8 + 2 = 10 பத்துக்கால்
இரண்டு எருது + ஒரு மனிதர் = 2 + 1 = 3 மூன்றுதலை
இரண்டு எருது + ஒரு மனிதர் = 4 + 2 = 6 ஆறுகண்
இரண்டு எருது + ஒரு மனிதர் + கலப்பையிலுள்ள கெழுமுகம் = 2 + 1 + 3 = ஆறுமுகம் [கெழுமுகம் - 3]
இரண்டு எருது + ஒரு மனிதர் + கலப்பை வாய் = 2 + 1 + 1 = நான்குவாய் [கெழுவாய் - 1]
இப்போ பாடலை வாசித்துப்பாருங்கள். சுந்தர கவிராயர் போல் இவ்வளவையும் ஓரிடத்தில் [மேலே உள்ள படத்தில்] பார்த்து நீங்களும் மகிழலாம். அதிகாலையில் மலையில் நின்று உழவுக்காட்சியைக் கண்டு மகிழ்ந்தே, சுந்தர கவிராயர் இப்பாடலை எழுதியுள்ளார். அதிலும் விடுகதையாக எழுதியால் எம்மையும் உழவரின் மாட்டுத் திருநாளாம் இன்று உழவுக்காட்சியைக் கண்டு களிக்கவைத்த பாடல் இது.
குறிப்பு
இரண்டாயிரத்து ஐஞ்ஞூறு ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் விடுகதை போடுவதை தமிழ் இலக்கிய வரலாற்றால் அறியலாம். ஆனால் காலத்துக்குக் காலம் விடுகையின் பெயர் மாற்றம் அடைந்து வந்திருப்பதைக் காணலாம். விடுகையை தொல்காப்பியர் பிசி, நொடி என்று சொல்ல கம்பர் பிதிர் என்கிறார். கம்பர் சொன்ன ‘பிதிர்’ இன்று ‘புதிர்’ ஆக மாறி இருக்கிறது. என்ன புதிரா போடுகிறாய் என்று கேட்கும் வழக்கம் இருக்கிறதல்லவா? சில ஊர்களில் விடுகதை ‘வெடி’ என்றும் அழைக்கப்படும்.
ஒரு கருத்தை மறைத்து கேட்போர் புரிந்து கொள்ளாத வகையில் கற்பனையின் ஊற்றாகச் சொல்வதால் ‘பிசி’ என்றனர். [பிசிர் - ஊற்று நீர்; பிசின் - மரப்பிசின்; பிசி - பொய் (இவை யாவும் ஊற்றாய் வருபவை)] சொல்லும் விடயத்தில் மறைந்துள்ள கருத்தை கேட்பவர் உடனே புரிந்து கொள்ள முடியாதிருக்கச் சொல்லப்படுவதால் ‘புதிர்’ என்றனர். ஒரு கதையாகச் சொல்லப்படும் விடயத்தை விடை சொல்லி விடுவிப்பதால் ‘விடுகதை’ என்றனர். சொல்லப்படும் விடயத்தில் மறைந்துள்ள கருத்து எல்லோருக்கும் தெரிய வருவதால் ‘வெடி’ என்பர்.
[அந்த நாளில் பாவித்த கலப்பையால் உழும் படம் கிடைக்கவில்லை. எவரிடமாவது இருந்தால் தாருங்கள். மூன்று தலையும் ஆறுகண்னும் தெரிய, பழைய கலப்பையால் உழும் படம்.]
[அந்த நாளில் பாவித்த கலப்பையால் உழும் படம் கிடைக்கவில்லை. எவரிடமாவது இருந்தால் தாருங்கள். மூன்று தலையும் ஆறுகண்னும் தெரிய, பழைய கலப்பையால் உழும் படம்.]
இனிதே,
தமிழரசி.
இலக்கியச் சுவை சொட்டும்
ReplyDeleteஇனிய பதிவு இது!
தொடருங்கள்
மகிழ்ச்சி
Delete