Wednesday, 24 April 2013

அலைமோதும் வாழ்க்கை.




அலைமோதும் வாழ்க்கை மனிதனுக்கு கற்றுத்தந்த பாடங்கள் கோடானு கோடியாகும். இன்பமும் துன்பமும், சிரிப்பும் அழுகையும், பெருமையும் சிறுமையும், செல்வமும் வறுமையும் எனப் பல வகையான இரு கோடுகளுக்கிடையே மனித வாழ்க்கை அலை மோதுகின்றது. ஒன்று மேலே கொண்டு சென்றால் அக்கணமே இன்னொன்று கீழே இழுத்து வருகின்றது. இந்த அலை மோதுதல் இல்லாமல் எப்போதும் மனிதன் மேலே மேலே சென்றிருந்தால், அவன் அன்பை உணராது, அறிவைத் தேடாது என்றோ மமதையால் அழிந்து ஒழிந்திருப்பான். அலைமோதும் வாழ்க்கை மனிதர்களாகிய எம்மை வாட்டி வதைக்கின்றது என நினைப்பது தவறு. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அலை மோதல்கள் எம்மை செதுக்கி எடுக்கின்றன.

மனிதன் விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த காலத்தில் இருந்து இன்றுவரை எத்தனை எத்தனை கோடி இன்பதுன்ப அலைமோதல்களை சந்தித்திருப்பான். அந்த அலைமோதல்களை எல்லாம் பொருட்படுத்தாது துணிந்து எதிர் நீச்சல் போட்டு விலங்குகளை வென்றதோடு, இயற்கையையும் மெல்ல மெல்ல வெல்ல முயல்கின்றான். இயற்கையை வென்றதன் முதற்படி நிலைகளாக உணவை வேகவைத்து உண்ணத் தொடங்கியதையும், ஆடை அணியத் தொடங்கியதையும், தனக்கென வீடு கட்டும் பொறிமுறையை வகுத்துக் கொண்டதையும் கூறலாம்.

அலைமோதிய வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடங்களில் இருந்தே பண்டைய மனித இனக்குழுக்கள் தத்தமக்கு என பண்பாடுகளை வகுத்துக் கொண்டன. தாம் வகுத்த அந்த பண்பாடு எனும் வட்டத்துள் அவை வாழ்ந்தும் வந்தன. கால ஓட்டம் மனிதன் வகுத்த பண்பாடு எனும் வட்டத்தை மெல்லமெல்லத் தகர்த்து எறிந்தது. அது இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. மனித இனங்களின் பண்பாடுகள் மாறுபடினும் மனிதத்தன்மை என்றும் மாறுபடுவதில்லை. அது எந்த மனிதனுக்கும் பொதுவானதே. பல இனக்குழுக்களாக உலகெங்கும் பிரிந்து தத்தமது பண்பாடுகளுடன் வாழ்ந்த மனித இனம், இன்று உலகமயமாக்கலால் பின்னிப் பினைந்து ஒன்றோடு ஒன்று கலக்கின்றது.

அதற்கான காரணம் என்ன? தத்தம் பண்பாடு எனும் தனித்தன்மையோடு வாழ்ந்த மனித இனக்குழுக்களை இயற்கையின் சீற்றம் சீறிப்பாய்ந்து அழித்தது. அந்த அழிவுகளுக்கு தப்ப அவன் தானிருந்த இடம்விட்டு, இடம் பெயர்ந்து செல்லவேண்டி வந்தது. அப்படி நடந்த இடப்பெயர்வுகள் பண்பாட்டு மோதல்களாய் வெடித்து மனிதனை மேலும் சிதறிடித்தன. அறிவும் ஆற்றலும் உள்ளோர் பிழைத்துக் கொண்டனர். அவர்களையும் கயவர்கள் கொன்றொழித்தனர். அதனால் மனிதன் அலைமோதும் வாழ்க்கையில் தடுமாறி தத்தளித்து வாழக்கற்றுக் கொண்டான்.

இயற்கை மனிதனுக்கு கற்றுத் தந்த பாடங்களிலே மிக முக்கியமான பாடம் விழுவதும் எழுவதும். நம் குழந்தைப் பருவத்தில் எத்தனை முறை எழுந்தும் விழுந்தும், விழுந்தும் எழுந்தும் இருக்கிறோம். எழுந்தவன் விழுவதும், விழுந்தவன் எழுவதும் இயற்கை கற்றுத்தந்த பாடமல்லவா? அப்படி இருக்க அலைமோதும் மனித வாழ்க்கைப் போராட்டத்தில் நாம் துவண்டு போகலாமா?

இந்த அலைமோதும் வாழ்க்கைக்கிடையே பெரிய சுழிகளும், சூறாவளிகளும், எரிமலைகளும், பூகம்பங்களும் ஏன் ஆழிப்பேரலை கூட அடுத்தடுத்து கணத்துக்குக் கணம் வரலாம். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என திருவள்ளுவர் சொன்னது போல அவற்றை எல்லாம் சிரித்த முகத்துடன் எதிர்கொண்டு வாழ்வதே மனித வாழ்வாகும். 
இனிதே, 
தமிழரசி.

No comments:

Post a Comment