Tuesday, 16 April 2013

மேலை நாட்டுச் சைவர்கள்


மேலை நாட்டுச் சைவர் தம் மேன்மை சொல்வேன் கேட்டிடுவீர்!

சாலையோரம் எங்கனும் சைவக்கோயில் எழுப்பிடுவார்
மாலை போட்ட தம்படத்தால் மமதைதனை பறையறைவார்
நாளை உலகின் நாயகர் தாமென நாத்தழுபேற பேசிடுவார்
பாளம் பாளமாய் பணமிருந்தால் பல்லையிளித்து காட்டிடுவார்
கூழைக் கும்பிடு போட்டு குருக்களுக்கு பணமிறைப்பார்
ஏழை எளியரைக் கண்டிடின் ஏறெடுத்தும் பார்த்தறியார்.

                                      கோயிலினுள்
மூலை முடுக்கு எங்கணும் மூடைநாற்றம் வீசவைப்பார்
சேலை கொண்டு கொடுத்திடுவார் சேவிக்கத் தானறியார்
பாலை தேனை கலந்துடனே பாகுஞ்சேர்த்து படைத்திடென்பார்
காலை மாலை பூசையென்பார் காதலால் கசிந்துருகார்
வேளையாச்சு மூடிடென்று வக்கனையாக கதையளப்பார் 
கோயில் கோயில் என்றிடுவார் குருக்கள் காலில் விழுந்தெழுவார்

                                      ஆதலால்
சூத்திரர் சண்டாளர் என்றிங்கும் செப்பிடும் கூட்டத்தை பாரீரோ!
சாத்திரம் இங்கு சமைத்தவர் யார்? சைவரே! அதைச் செப்பிடுவீர்!
மானமிழந்து மதியிழந்து மண்ணில் வாழ்வதை வாழ்வெனலாமோ!
மோனத்திருந்தவன் மொய்கழலை மோகித்தே இதைக்                                                                                        கேட்கின்றேன்!
பானமினிக்குது என்றிங்கு நச்சு பானமதனைப் பருகிடலாமோ!
ஞானம் மிளிர் சைவத்தீர்! நியாயம் என்ன சொல்லிடுவீர்!

                                      அன்று
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றே உலகிற்கு
அன்றே பகர்ந்த கொள்கை பொன்றே போன விந்தை என்னே! 

                                    இன்று
மேன்மை கொள் சைவத்தின் 
          மேன்மையை மேலுறச் செய்வதற்கு
பான்மை கொள் சைவநீதி 
          பக்குவமாய்ச் சமைத்திடுவோம்.

                                   அதுவரை
நேத்திரம் மூன்றுடை நிர்மலனைத்
           தோத்திரம் செய்து தொழுவதற்கு
கோத்திரம் கேட்கும் கீழரை நீர்
            ஆத்திரம் தீர விழித்திடுவீர்
                       அவனியோர் மேல் ஆணையிட்டே!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment