Wednesday, 27 March 2013

பறந்த பாக்குவெட்டி

யாராவது இறகு முளைத்து பறந்த பாக்குவெட்டியைக் கண்டீர்களா!

தமிழர்கள் மங்கலப்பொருளாக கருதுவதில் பாக்கும் ஒன்று. பாக்கை வெற்றிலையோடு சேர்த்து உண்பார்கள். இனிப்பு, புளிப்பு, உறைப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என அறுசுவையுணவு உண்ணும் எம்மில் பலருக்கு, துவர்ப்பு சுவை எப்படி இருக்கும் என்பது தெரியாது. கொஞ்சம் சீவல் பாக்கை எடுத்து மென்று பாருங்கள். என்ன சுவையை நீங்கள் உணர்கிறீர்களோ அதுவே துவர்ப்புச் சுவையாகும். அதாவது பாக்கின் சுவை எதுவோ அதுவே துவர்ப்புச் சுவை. பாக்கை கத்தியால் வெட்டமுடியாது. பாக்கை வெட்டுவதற்கு பாக்குவெட்டியைப் பயன்படுத்துவார்கள். 

தமிழர் வீடுகளில் எல்லாம் பாக்குவெட்டி இருக்கும். பாக்குவெட்டியை இரும்பு, வெள்ளி, தங்கம் என அவரவர் வசதிப்படி வாங்கி வைத்திருப்பர். இராமச்சந்திர கவிராயர் என்ற தமிழ்க்கவிஞர் வீட்டிலும் ஒரு வெள்ளி பாக்குவெட்டி இருந்தது. அப்பாக்குவெட்டி ஒரு நாள் காணாமல் போய்விட்டது. அதைத் தேடித் தேடிக் களைத்துப் போனார். அப்பாக்குவெட்டி தனக்கு எப்படி எல்லாம் உதவியது என்பதை இராமச்சந்திர கவிராயர் ஒன்றொன்றாக நினைத்துப்பார்த்தார். அவரது கவிதை நெஞ்சில் கவிதை பிறந்தது. ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்தார்

“விறகு தறிக்க கறி நறுக்க வெண்சோற்று உப்புக்கு அடகு வைக்கப்
பிறகு பிளவுகிடைத்ததென்றால் நாலாறாகப் பிளந்து கொள்ளப்  
பறகு பறகென்று சொறிய பதமாய் இருந்த பாக்குவெட்டி
இறகு முளைத்து பறந்ததுண்டேல் எடுத்தீராயின் குடுப்பீரே”

என எழுதி அவரது வீட்டு திண்ணைவாசலில் தொங்கவிட்டார். தெருவால் போவோரும் வருவோரும் அக்கவிதையைப் படித்து சுவைத்து சிரித்து மகிழ்ந்தனர். அவருக்கு அந்த வெள்ளிப் பாக்குவெட்டி கிடைத்ததோ இல்லையோ எமக்கு ஒரு நல்ல கவிதை கிடைத்துள்ளது. 

‘வீட்டில்சமைப்பதற்கு வேண்டிய விறகைத் தறிக்கவும், சமைக்கத் தேவையான காய்கறிகளை நறுக்கவும், சோற்றுக்குப்போட உப்பு வாங்க காசு இல்லாத நேரம், நகை அடகுவைக்கும் கடையில் அடகு வைக்கவும், கொட்டப்பாக்கு [பிளவு] கிடைத்தால் நாலாறு துண்டுகளாக பிளந்து கொள்ளவும், முதுகு கடித்தால் பறகு பறகென்று (பாக்கு- வெட்டிக் காம்பால்) சொறியவும் உதவியாய் [பதமாய்] இருந்த பாக்குவெட்டி, திடீரென்று இறகு முளைத்து பறந்து போயிருந்தால் அதை எடுத்தீர்கள் ஆனால் தாருங்களேன்’ என்றுபாடியுள்ளார்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment