இந்த உலகத்தையும் அதில் நிறைந்து இருக்கும் உலகப் பொருட்கள் யாவற்றையும் உண்மை என நாம் நம்புகிறோம். எமது சிறுவயதில் ஆசை ஆசையாக அழுது வாங்கிய எத்தனையோ பொருட்கள் உண்மையானவையல்ல என்பதை வயது வந்ததும் அறிந்து கொள்கிறோம். அது போல் அவரவர் மனவளர்ச்சிக்கு தக்கபடி உண்மையல்லாதவற்றை உற்றுணர முயன்றோர் பலராவர். அத்தகையோர் தாம் கண்ட அநுபவ உண்மையை எமக்காகத் தந்து சென்றிருக்கிறார்கள்.
என்றென்றும் அழியாது நிலைத்து இருக்கும் பொருள் எது என்பதை மனிதராகிய நாம் உணர்வதில்லை.
“பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு” -(குறள்: 36: 1)
‘உண்மையாக நிலைத்து இருக்காத பொருட்களை (பொருளல்லவற்றை), உண்மையானவை (மெய்பொருள்) என்று நம்பும் (உணரும்) மயக்கத்தால் (மருளால்) நாம் துன்பம் அடைகிறோம்’ என்று திருவள்ளுவர் மிகச்சுருக்கமாக சொல்கிறார்.
அழியும் பொருட்கள் எவை? என்பதை அறிந்தால் தான் அழியாப்பொருட்கள் எவை என்பதையோ! எது என்பதையோ! அறியமுடியும். கம்பர் தாம் இயற்றிய சரஸ்வதி அந்தாதியில் அழிவன எவை? அழியாதது எது? என தான் அறிந்தை சொல்லிச் சென்றுள்ளார்.
வைக்கும் பொருளும் இல்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்
பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்
மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப்பொருளும்
உய்க்கும் பொருளும் கலைமான் உணர்த்தும் உரைப்பொருளே!
- சரஸ்வதி அந்தாதி - 26
‘சேர்த்து வைக்கும் பொருட்களும், இல்வாழ்க்கையால் வரும் பொருட்களும் மற்ற எல்லாவிதமான உலகப்பொருட்களும் பொய்யாய் அழிந்து போகும் பொருளேயன்றி என்றும் நிலத்து இருக்கும் பொருளல்ல. பூவுலகில் மெய்யான பொருளாயும், அழியாத பொருளாயும், மேன்மையான பொருளாயும், எம்மை உய்விக்கும் பொருளாயும் இருப்பது கலைமகளின் உரைப்பொருளே’ என்று கம்பர் கலைமகளின் பெருமை கூறுகிறார். கம்பரின் முடிவின் படி நாம் அழியும் வரை எம்முடன்ட என்றும் அழியாதிருப்பது கல்வியே ஆகும்.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment