Friday, 22 March 2013

குறள் அமுது - (59)


குறள்:
“நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் 
யாதுஒன்றும் கண்பாடு அரிது”                             - 1049

பொருள்:
எரியும் நெருப்பினுள் கிடந்து தூங்க முடியும். ஆனால் வறுமைக்குள் எந்தவகையாலும் தூங்குதல் அரிதாகும்.

விளக்கம்:
ஔவையார் ‘கொடிது கொடிது இளமையில் வறுமை’ என்றார்.  ஆனால் திருவள்ளுவரின் நல்குரவு அதாவது வறுமை எனும் அதிகாரம் இளமை என்ன? முதுமை என்ன? எக்காலத்திலும் வறுமை கொடிதே என்கின்றது. காரணம் வறுமை என்பது ஒருசிறு துன்பமல்ல. பலவகைப்பட்ட   துன்பங்களின் ஒட்டு மொத்த சேர்க்கையாகும். அடுத்து அடுத்து வரும் பல துன்பங்களால் நிரப்பப் படுவதால் வறுமைக்கு நிரப்பு என்ற பெயரும் தமிழில் உண்டு. நித்திரை கொள்வதை துஞ்சல் என்றும் கண்பாடு என்றும் அழைப்பர்.

வேள்வித்தீ போல் கனன்று நெருப்பு எரிந்தாலும் அந்நெருப்பினுள் நிம்மதியாகப் படுத்து தூங்க முடியுமாம். ஆனால் அடுக்கடுக்காக வந்த பல துன்பங்களால் நிரம்பி வழிகின்ற வறுமைக்குள் ஒருபொழுதுகூட கண்மூடித்தூங்குவது மிக அரியசெயலாகும். வன்னிப்போரின் போது நெருப்புக் குண்டுகள் இடையேயும் அவற்றைவிடக் கொடிய கொத்துக் குண்டுகளிடையேயும் தூங்கி எழுந்த நம் மக்கள் இன்று தூக்கம் இழந்து துடிப்பது ஏன்? 

வன்னிப்போர் நடந்த பின்னர் நாம் அறியாத எத்தனையோ விதவிதமான புதுப்புதுத் துன்பங்கள் அன்றாடம் அவர்களை நாடி வந்து சேர்கின்றன. எல்லா வளமும் நிறைந்து இருந்த மக்களிடம் இன்று நிற்க நிழல் இல்லை, குடிக்க நீரில்லை, படிக்க பள்ளி இல்லை, பல்கலைக்கழகம் என்ன, எங்கும் பேசும் சுதந்திரம் மறுக்கப்பட்டு வாழும் வறுமையெனும் நிரப்பினுள் எப்படித் தூங்க முடியும்? 

ஈழத்தில் வாழும் நம்மவர்களின் நிலையில் நின்றே திருவள்ளுவரும் ‘நெருப்பில் படுத்து உறங்கினாலும் உறங்க முடியும், வறுமைத் துன்பமாகிய நிரப்பினுள் எந்தவகையிலும் கண்மூடித் தூங்க முடியவில்லையே” எனத் தவிக்கும் குறள் இது.

No comments:

Post a Comment