Wednesday, 16 January 2013

திருக்கேதீஸ்வரத்தில் இருந்த நாட்டியப்பள்ளி


படம்: விக்கிப்பீடியா
குரு பத்மஶ்ரீ மணிமாதவ சாக்கையர்

சிலப்பதிகாரம் கூறும் வரிக்கூத்து இலங்கையில் போன நூற்றாண்டிலும் ஆடப்பட்டது என்பதற்கு  ஆதாரமாக இருக்கும் ஓர் நாட்டுபாடல் இது. பண்டைய தமிழ்ப் பண்பாடுகளின் கூறுகள் அவற்றின் தன்மை மாறாது ஈழத்தில் காக்கப்பட்டது என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டவும் இப்பாடல் வருங்காலத்தில் பயன்படலாம்.

திருக்கேதீஸ்வரத்தின் பழைய கோயில் கோபுர வாசலுக்கு அருகே ஓரு நாட்டியப்பள்ளி இருந்துள்ளது. அதில் நாட்டியம் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். நாட்டியம் கற்பிக்கும் இடங்களில் இசைக் கலைஞர்களும் கட்டாயம் இருப்பார்கள். அவர்கள் இசை ஆசிரியர்களாகவோ, அல்லது நாட்டியத்துக்கு மட்டும் வாசிக்கும் கலைஞர்களாகவோ இருப்பார்கள். அந்நாளில் திருக்கேதீஸ்வர நாட்டியப்பள்ளியில் இருந்த இசைக் கலைஞர்களில்  நாகணம் வாசிக்கும் கலைஞர் ஒருவரும் இருந்திருக்கிறார். அவர் காசுக்காகவோ, தனக்கு பேரும் புகழும் கிடைக்க வேண்டும் என்றோ எல்லா நிகழ்வுகளுக்கும் நாகணம் வாசித்திருக்கிறார். 

குற்றவாளிகளுக்கு கொடுக்கும் சாட்டை அடிக்கும், எல்லா நாட்டியக் கலைஞர்களாலும் ஆடமுடியாத சாக்கை கூத்துத்துக்கும், தவிலுக்கும், தாரை தப்பட்டைக்கும், கும்மாளக் கூத்துக்கும், கம்மாளக் காட்சிக்கும் (சிற்பக்காட்சி நடக்கும் இடங்களிலும்) நாகணம் வாசித்திருக்கிறார். அவரின் இந்த செயலாலோ, வேறு ஏதோ ஒரு காரணத்தாலோ இன்றைய வவுனியாவுக்கு அருகே இருக்கும் வரிக்கூத்தூரில் (இப்போ வரிகுத்தூர் என அழைக்கப்படுகிறது) வாழ்ந்த  வரிக்கூத்தாடிகளான செங்கைவராயன், செங்கமலம் இருவருக்கும் அவரைப் பிடிக்கவில்லை. அதற்கு காரணம் வித்துவக் காய்சலாகவும் இருக்கலாம். அதனால் திருக்கேதீஸ்வர நாட்டியப் பள்ளியின் நாகணகாரர் பற்றிக்கூறி நையாண்டிப்பாடல் பாடி வரிக்கூத்து ஆடி இருக்கிறார்கள்.


செங்கைவராயன்: நாட்டியப்பள்ளி நாகணமாம்
                              நகரம் எங்கும் தோரணமாம்
                              சாட்டை அடிக்கு நாகணமாம்
                              சாக்கை கூத்துக்கும் நாகணமாம்
                              நாகணமாம் நாகணமாம்
                              நாட்டியப்பள்ளி நாகணமாம்
                                             
                                              வேறு
                              கேட்டியோ செங்கமலம்!
                              கேதீச்சரத்தான் வாயில்
                              நாட்டியப்பள்ளி நாகணத்தான்
                              கதையை நீயும் கொஞ்சம்
                              கேட்டியோ செங்கமலம்!

செங்கமலம்:       கேட்டேன் செங்கவராயா!
                              கேதீச்சரத்தான் வாயில்    
                              நாட்டியப்பள்ளி நாகணத்தான்
                              கதையை நானும் கொஞ்சம்
                              கேட்டேன் செங்கவராயா!

                                               வேறு
                               தவிலுக்கும் நாகணம் ஊதுவாராம்
                               தப்பட்டம் தாரைக்கும் ஊதுவாராம்
                               கும்மாளக் கூத்துக்கும் ஊதுவாராம்
                               கம்மாளக் காட்சிக்கும் ஊதுவாராம்

செங்கைவராயனும் செங்கமலமும்:
                               நாட்டியப்பள்ளி நாகணமாம்
                               நகரம் எங்கும் தோரணமாம்
                               சாட்டை அடிக்கு நாகணமாம்
                               சாக்கை கூத்துக்கும் நாகணமாம்
                               நாகணமாம் நாகணமாம்
                               நாட்டியப்பள்ளி நாகணமாம்
                                     - நாட்டுப்பாடல் (மாந்தை/வரிக்கூத்தூர்)
                                                 - பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

சிலப்பதிகார உரை ஆசிரியரான அடியார்க்கு நல்லார் வரிக்கூத்துக்கான இலக்கணத்தை
“வரி எனப்படுவது வகுக்குங் காலைப்
பிறந்த நிலனும் சிறந்த தொழிலும்
அறியக் கூறி ஆற்றுழி வழங்கல்”                
                                        - (சிலம்பு: 3: 24, அடியார் மேற்கோள்)
என்ற ஒரு பழம் பாடலால் விளக்குகிறார். வரி என்று சொல்லப்படுவது பிறந்த இடத்தையும் தொழிலையும் தெரியும் படி கூறி (அறியக்கூறி) நடித்தலாகும். ஈழத்து நாட்டுப்பாடலான மேலேயுள்ள பாடலைப் பாடி வரிக்கூத்து ஆடிய செங்கைவராயன், செங்கமலம் இருவரும், திருக்கேதீச்சரம் என  இடத்தையும்,  நாகணம் ஊதுவாராம் எனத் தொழிலையும் மற்றவர்கள் அறியும்படி கூறியே  ஆடியிருக்கிறார்கள்.   

வரிக்கூத்துக்கு பாடப்படும் வரிப்பாடல் 
“அது தான் தெய்வம் சுட்டியும் மக்களைப் பழிச்சும் வரும்"
என்று அடியார்க்கு நல்லார் அவ்வுரையில் குறிப்பிட்டுள்ளார். அதுபோலவே இப்பாடல் நாகணகாரரைப் பழித்தே பாடப்பட்டுள்ளது.

குறிப்பு:
1.  அந்நாளில் ஈழத்து நாட்டுப்புற மக்கள் நாதசுரத்தை  ‘நாகணம்’ என்றும் ‘நாயணம்’ என்றும் கூறினர். சங்குக்கு நாகணம் என்ற ஒரு பெயரும் இருக்கிறது. சங்கு போல நாதத்தைத் தருவதால் சங்கின் பெயரால் ‘நாகணம்’ என்று அழைதிருக்கலாம். அன்றேல் ‘அணம்’ என்றால் மேல் வாய். வாயின் மேல்பகுதியில் வைத்து வாசிக்கப் படுவதால் ‘நாகணம்’ என அழைத்திருக்கலாம். ஏனெனில் நாக்கு + அணம் = நாக்கணம், அது நாகணம் ஆக மருவும். தமிழகத்தில் ‘நாயிணம்’ என்பர். நாயினம் (நாய்+இனம்) எனச்சொல்வது தவறு.

2.  1960 ஆண்டு சிவராத்திரிக்கு செட்டிகுளம் சிவன் கோயிலில் பேசுவதற்காக பண்டிதர் மு ஆறுமுகன் சென்றிருந்த பொழுது, வரிக்கூத்தூரில் இருந்து ஆடவந்திருந்த மிகவும் வயதான அம்மையார் ஒருவர் பாடக் கேட்டு,  எழுதிக்கொண்டது. அந்த அம்மையாரின் குரு பத்தொன்பதாம் நூற்றாண்டில் கற்றுக்கொடுத்த பாடல் இது.

3. இந்த நாட்டுப்பாடல் ஈழத்தவர் ஆடிய வரிக்கூத்தை மட்டும் சொல்லவில்லை, ஈழத்தில் அதுவும் திருக்கேதீஸ்வரத்தில் நாட்டியப்பள்ளி இருந்தையும், அங்கே நாகணகாரர் இருந்ததையும், அவரது நாகணத்துக்கு சாக்கை கூத்தர் சாக்கை கூத்தாடியதையும், தவில், தப்பட்டை, தாரை வாசித்ததையும், இவற்றுக்கு மேலாக ஈழத்தில் சிற்ப கண்காட்சி [கம்மாளக்காட்சி] நடந்ததையும் எடுத்துக் கூறுகிறது. ஈழத்தமிழரின் காலாச்சார விழுமியத்தை எடுத்துக்காட்டும் இந்நாட்டுப்பாடலை ஈழத்தமிழர்களாகிய நாம் கண்ணே போல் காக்கக் கடப்பாடுடையோம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment