Saturday, 15 December 2012

குறள் அமுது - (48)

குறள்:
“கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்”                          - 796

பொருள்:
கேடு வந்தால் அதிலும் ஒரு நிலையான நன்மை இருக்கிறது. உண்மையான நண்பரின் உள்ளத்தை நீட்டி அளக்கும்  அளவுகோலாக அந்தக்கேடே உதவும்.  

விளக்கம்:
இத்திருக்குறள் நட்பாராய்தல் என்னும் அதிகாரத்தில் வருகின்றது. நண்பர்களை கிளைஞர் என்று கூறுவர். எமக்குக் கேடு வந்த நேரத்திற்றான் நம் நண்பர்களில் எவர் உண்மையான நண்பர் என்பதை அளந்து அறியமுடியும். எமக்கு வரும் கேடு நண்பர்களை அளந்து அறிய உதவும் அளவுகோலாகும் என்பது திருவள்ளுவரின் முடிவாகும். 

கேடு என்றால் அழிவு. பணத்தை, பொருளை இழப்பது மட்டும் கேடாகாது. எமக்கு வரும்  கேடுகளுக்கு பணமே காரணம் என நினைப்பதும் தவறு. நோயாக, வசையாக, இழிவாக, வறுமையாக, போர்களால், இயற்கை அழிவுகளால், கை இழப்பது, கால் இழப்பது, உற்றார் பெற்றாரை இழப்பது எனப் பலவிதமாக வரும். அப்படி வரும் அழிவாலும் நன்மை இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

கேடுவந்ததும் ஒட்டி உறவாடி ஒன்றாய்ப் பழகிய நண்பர் சிலர் இருந்த இடமே தெரியாது பிரிந்த செல்வர். எனெனில் அவர்கள் பார்வையில் இன்பத்தைத் தரும் பொழுது போக்கே நட்பு. நண்பர்களுடன் களியாட்டங்களிலும் விருந்து வைபவங்களிலும் உண்டு, குடித்து, ஆடிப் பாடி மகிழ்தலே நட்பு என எண்ணுவோர் கேடுவந்து துன்பப்படுபவரோடு எப்படி தம் நட்பைப் பேணுவர்?

எனவே மனித வாழ்க்கையில் கேடு ஏதாவது ஓர் உருவத்தில் வரவேண்டும். கேடு வந்ததும் எவர் எவர் எம்மைக் கைவிட்டு செல்கின்றனர் என்பதை நன்றாக நீட்டி அளந்து பார்க்க முடியும். அழிவு வராவிட்டால் எவர் நல்லவர்? எவர் கெட்டவர்? என்பதை நாம் அளந்து பார்க்க முடியாது. எவர் உண்மையான நட்புடன் பழகுகிறார் என்பதை அளந்தறிய கேடே துணைபுரிகிறது. கேடு வராவிட்டால் யார் யார் எம்மைப்பற்றி ஏளனமாகச் சிரிக்கிறார்கள், யார் யார் கண்டும் காணாது இருக்கிறார்கள் என்பவற்றை நாம் அளந்து அறியமுடியுமா?

எனவே எமக்கு வரும் அழிவுகளாலும் நன்மை உண்டு. கேடே நண்பர்களை அளந்து பார்க்கும் அளவுகோலாகும்.  

No comments:

Post a Comment