குறள்:
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று” - 941
பொருள்:
திருக்குறளில் உள்ள 'மருந்து' என்னும் அதிகாரத்தின் முதலாவது குறள் இது. வாதம் பித்தம் கோழை (சிலேற்பனம்) என்று மருத்துவ நூலோர் எண்ணியச் சொல்லிய மூன்றும் கூடினாலும் குறைந்தாலும் நோயை உண்டாக்கும்.
விளக்கம்:
எமக்கு எதனால் நோய் வருகிறது என்ற காரணத்தை திருவள்ளுவர் இக்குறளில் கூறுகிறார். அக்காரணத்தையும் மருத்துவ நூலோர் சொன்னதாச் சொல்கிறார். இக்குறளில் நூலோர் எனப் பன்மையில் திருவள்ளுவர் குறிப்பது, அவர் காலத்திற்கு முன் மருத்துவ நூலை எழுதியோரையே. திருவள்ளுவர் காலத்தில் தமிழில் பல மருத்துவ நூல்கள் இருந்ததையும் இக்குறள் ஒரு வரலாற்றுப் பதிவாகச் சொல்கிறது.
இந்நாளில் வாத, பித்த, சிலேற்பனம் எனச் சொல்வதையே வளி முதலாக எண்ணிய மூன்றும் என்கிறார். அவற்றை அந்நாளைய மருத்துவ நூலோர் வளியை முதலாவதாகக் கொண்டு எண்ணியதாகத் சொல்கிறார். வளி - வாயு - காற்று - வாதம் யாவும் ஒன்றே. உயிர்களின் உடலின் உள் உறுப்புக்களின் தொழிற்பாட்டிற்கு உதவும் வளியை வாதம் என்று அழைப்பர். நூலோர் வளி, பித்தம், கோழை எனக் கணக்கிட்டுச் சொன்ன மூன்றும் நோய்கள் அல்ல. எம் உடல் நன்கு தொழிற்படத் தேவையானவை.
வளி அதாவது வாதம் மூச்சு விடுவதற்கும், இரத்த ஓட்டத்திற்கும், மலம், சிறுநீர், வியர்வை, விந்து என்பன கழிவதற்கும் உதவுகிறது. பித்தம் உண்ட உணவு செரிக்கவும், பசி, தாகம் ஏற்படவும் பார்வைக்கும் உதவுகிறது. கோழை தசை நார்களின் இயக்கத்திற்கும், நரம்புகளின் செயல்பாட்டிற்கும் பயன்படுகிறது. அந்நாளைய மருத்துவர் கை மணிக்கட்டுக்கு ஓர் அங்குலம் மேலே ஆள்காட்டி விரல், நடுவிரல் மோதிரவிரல் நுனி மூன்றையும் மெல்ல வைத்து அழுத்தியும் தளர்த்தியும் நாடி பார்ப்பர். ஆள்காட்டி விரலால் வாதத்தின் தன்மையையும், நடு விரலால் பித்தத்தின் தன்மையையும், மோதிர விராலால் கோழையின் தன்மையையும் ஆராய்ந்து என்ன நோய் என்பதைக் கண்டுடறிவர்.
இந்த மூன்றின் அளவும் காலநிலை மாற்றத்தாலும், இயற்கையின் வேறுபாட்டாலும், நுண் கிருமிகளின் தொழிற்பாட்டாலும் மட்டுமல்ல எமது உணவு, உடை, பழக்க வழக்கங்கள் போன்றவற்றாலும் கூடிக் குறையும். பண்டைய மருத்துவ நூலை எழுதியோர் சொன்ன வாதம், பித்தம், கோழை ஆகிய மூன்றின் அளவும் கூடினாலும் குறைந்தாலும் நோய் வரும். ஆதலால் இந்த மூன்றின் தன்மையும் மாறுபடாது இருப்பின் நோய் எம்மை நெருங்காது.
Superb
ReplyDelete