குறள்:
“உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கல் ஆதார்” - 880
பொருள்:
தமது பகைவரின் செருக்கை, அழிக்க முடியாதவர் சுவாசிப்பவராக இருந்தாலும் நிச்சயமாக இறந்தவரே.
விளக்கம்:
இத்திருக்குறள் 'பகைத்திறம் தெரிதல்' என்னும் அதிகாரத்தில் உள்ளது. பகைத்திறம் தெரிதல் என்றால் பகையை வெல்வதற்கான தன்மையை அறிதலாகும். மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதை உயிர்த்தல் என்பர். ஒருவர் மூச்சு விடுவதால் மட்டும் அவரை உயிரோடு வாழ்கிறார் என்று சொல்ல முடியாது. மரக்கட்டை போல் படுத்திருந்து கொண்டு, ஒருவன் மூச்சுவிட்டு உயிர்வாழ்வதால் அவன் அடையும் பயன் என்ன? அத்தகையோர் சுவாசிப்பதற்காகவே [உயிர்ப்ப] வாழ்கிறார்கள்[உளர்].
பெரும் துன்பத்தை தந்தோரும் மறக்கமுடியாத தீமையை, கொடுமையை செய்தோருமே செயிர்த்தோர். தமக்கு ஆராத்துயரை அள்ளித்தந்தோரின் பெருமையை, மமதையை சிதைத்து சீரழிக்க முடியாதார் சுவாசிப்பதற்காகாவே இவ்வுலகில் வாழ்கிறார்கள். தமது பகைவரின் ஆணவத் தலைமைத் தன்மையை அடித்து ஒடிக்க முடியாதோர் மூச்சு இழுத்து விடுவாராயினும் இறந்தோர் என்பதே திருவள்ளுவரின் கணிப்பு.
திருவள்ளுவரின் கூற்றுப்படி இன்றைய உலகில் வாழும் பத்துக்கோடி தமிழரும் மூச்சு விடுவதற்காகவா வாழ்கிறோம்? நினைத்துப் பாருங்கள் நம் நெஞ்சம் சுடுவது புரியும்? எப்போது நம் பெருமையை ஈடழித்தோரின் செம்மலைச் சிதைத்து, உடல் சுமந்து உயிர் வாழும் உண்மையை உலகுக்கு உணர்த்தப் போகிறோம்?
பகைவரின் ஆணவச் செருக்கை, தலைமைத் தன்மையை தூள் தூளாக நொருக்கி அழித்து ஒழிக்க முடியாதவர், மூச்சை உள்ளும் வெளியும் இழுத்துவிடுவதால் உயிரோடிருக்கிறார் என்று நிச்சயமாகக் கூறமுடியாது. எனவே அப்படிப்பட்டடோர் இறந்தவருக்கு சமமாவர் என்பதை தமிழர்களாகிய எமக்கு இத்திருக்குறள் மூலம் திருவள்ளுவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment