Saturday, 1 September 2012

ஆண்டு! வருடம்! தமிழா?


பண்டைக்காலத் தமிழரில் விண்வெளி அறிஞர் பலர் இருந்ததை முதுகண்ணன் சாத்தனார் என்னும் சங்ககாலப் புலவர்
“செஞ்ஞாயிற்றுச் செலவும் 
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரி தரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந்து அறிந்தார் போல, என்றும்
இனைத்து என்பாரும் உளரே”                - (புறம்: 30)

என புறநானூற்றில் குறிப்பிட்டுள்ளார். இப்பாடலில் ‘சிவந்த சூரியன் செல்கின்ற வீதியும், அந்தச் சூரியனின் இயக்கமும், இயக்கத்தால் சூழப்பட்ட மண்டிலமும் காற்றுவீசும் திசையும், ஒருவித ஆதாரமும் இன்றி நிற்கின்ற வானமும் ஆகிய இவற்றை தாம் நேரே சென்று அளந்து அறிந்தவர் போல் இதுஇது இப்படிப்பட்டது என்று சொல்வாரும் உள்ளனர்’ எனக் கூறியுள்ளார். 

ஆனால் இன்றோ ஆண்டு என்பது தமிழ்ச்சொல் இல்லை என்பாரும், வருடம் என்பது தமிழ்ச்சொல் இல்லை என்பாரும் இருக்கின்றனர். ஆக மொத்தத்தில் ஆயிரக்கணக்கான வருடங்களாக வாழ்ந்திருக்கும் தமிழும், தமிழரும் காலக்கணிதத்தை அறியவில்லை என்பது அவர்களது முடிபு. அந்த முடிவுக்கு அவர்கள் வர அவர்களது அறியாமைமட்டுமல்ல, தமிழர்களாகிய எமது அறியாமையும் காரணமாகும்.

எது எமது அறியாமை? எமது முன்னோர் அறிந்திருந்தது என்ன? அவர்கள் சொல்லிச் சென்ற அநுபவ உண்மைகள் என்ன? அவர்கள் காண்டறிந்தவை என்ன? என்பவற்றை நாமும் அறியாது, அவற்றை தேடி எடுத்து எம் தமிழ்க்குழந்தைகளுக்கு இளமையிலேயே கற்றுக்கொடுக்காது இருப்பது எமது அறியாமை தானே? காலம் கடந்துவிடவில்லை நாம் இவற்றை இப்போதும் செய்யலாம்.

‘யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப்பெயல்  நீர் போல 
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”                
                                                  - (குறுந்தொகை: 40)

இது உங்களில் பலருக்குத் தெரிந்த பாடல், குறுந்தொகையில் உள்ளது. இந்தக் குறுந்தொகைப் பாடல் வரிகளை, ’இருவர்’ படப்பாடலான “நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்” என்றபாடலில் வைரமுத்து புகுத்தி இருக்கிறார். நறுமுகையே பாடலை விரும்பிக் கேட்டோருக்கு இந்தவரிகள் தெரிந்திருக்கும். இவ்வரிகள் இரண்டாயிர வருடப் பழமையானவை. இதில் வரும் யாயும் யாயும் என்பது தாயும் தாயும் என்றே பொருள் தரும். பழந்தமிழர் சொன்ன யாய், யானை, யாடு போன்ற சொற்களை யாய் - தாய், ஆய் ஆகவும், யானை - ஆனை ஆகவும், யாடு - ஆடு ஆகவும் நாம் மாற்றிக் கொண்டது போல ‘யாண்டு’ என்ற பழந்தமிழ்ச் சொல்லை ஆண்டு என்கிறோம்.

புறநானூற்றில் பிசிராந்தையார் என்ற சங்கப்புலவர் வயது முதிர்ந்த பின்பும் தாம் இளமையாக இருப்பதற்கான காரணத்தைக் கூறுவதாக ஒரு பாடல் வருகின்றது. அப்பாடலில் 
“யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்” 
எனக்கூறுமிடத்தில் ஆண்டுகள் பல கடந்தும் நரை இல்லாது இருப்பது எப்படி எனக்கேட்பீர்கள் ஆனால் எனத் தொடங்குகிறார். யாண்டு எனப் பண்டைத்தமிழர் அழைத்த சொல்லே ஆண்டு ஆகியது என்பதற்கு பிசிராந்தையாரின் இப்பாடலை விடவும் ஆதாரம் இன்னும் வேண்டுமா?



பண்டைத்தமிழர் வாழ்ந்த நிலத்தின் எல்லைகளைச் சொல்லும் புறநானூற்றுப்பாடல்
“வடாது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாது உருகெழு குமரியின் தெற்கும் 
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும் 
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்” 
என நான்கு திசைகளையும் சொல்கிறது. இதில் வடக்கு, தெற்கு தவிர்ந்த குணக்கு கிழக்கு திசையையும் குடக்கு வடக்குத் திசையையும் குறிக்கும்.  
மேலேயுள்ள முதற்பாடலில் முதுகண்ணன் சாத்தனார் 
‘வளிதிரி தரு திசையும்’
எனக் குறிப்பிட்டுள்ளார் அல்லவா? அவர் குறிப்பிடும் காற்று திரியும் திசையை அதாவது காற்று வீசும் திசையைக் கொண்டே ஒவ்வொரு திசையாலும் வரும் காற்றுக்கு ஒவ்வொரு பெயரிட்டு தமிழர் அழைத்தனர். 
குடக்கில் (மேற்கில்) இலிருந்து வீசும் காற்று குடக்காற்று ஆயிற்று. அதுவே கோடைக்காற்று.
குணக்கில் (கிழக்கில்) இருந்து வீசும் காற்று கொண்டல் ஆயிற்று. 
வடக்கில் இருந்து வீசும் காற்று வாடை ஆயிற்று. 
தெற்கில் இருந்து வீசும் காற்று தென்றல் ஆயிற்று.

இப்படி எல்லாம் மிக நுணுக்கமாகப் பார்த்துப் பார்த்துப் பெயர் வைத்த நம் முந்தையோருக்கு ஆண்டு, வருடம் எனப் பெயரிடத் தெரியாமல் போயிற்றா? வருடு வருடல் என்பன தடவு, தடவுதல் எனும் கருத்தில் வரும் சொற்களாகும். தென்றல் மெல்ல உடலை வருடத் தொடங்கும் காலத்தில் வருடம் தொடங்குவதால் அதற்கு வருடம் எனப்பெயரிட்டிருக்கலாம். நம் முந்தையோர் வைத்த பெயர்கள் பெரும்பாலும் காரணப்பெயர்களாகவே இருக்கின்றன. வர்ஷா என்ற வடமொழிச் சொல்லில் இருந்து வருடம் பிறக்கவில்லை என்பதை தமிழர்களாகிய நாம் அறிந்து கொள்ளவேண்டும். வடமொழியில் வர்ஷா பொழிதல் என்ற கருத்தையே தருகின்றது. வருடம் எதைப் பொழிகின்றது எனச் சொல்வார்களா?

சங்ககாலப் புலவர்களிடம் இருந்து ஏதும் தரவுகளைப் பெறமுடியுமா பார்ப்போம். பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி படுத்திருந்த கட்டில் விதானத்தில் புதிதாக மெழுகுபூசிச் செய்த  திரைச்சீலை கட்டியிருந்தது. அதில் ஓர் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. அந்த ஓவியம் உறுதியான கொம்புள்ள ஆடு என்ற இராசியைத் தொடக்கமாகக் கொண்டு விண்ணில் சுற்றிவருகின்ற ஞாயிற்று மண்டலத்தையும் அந்த ஞாயிற்றைவிட மாறுபட்ட சிறப்புடைய திங்களாகிய சந்திரன் செல்லும் பாதையில் விலகாது நிற்கும் ரோகிணி என்ற நட்சத்திரத்தையும் கொண்ட ஞாயிற்றுத் தொகுதியைக் காட்டியது. இதனை
“புதுவது இயன்ற செய் படமிசைத்
திண் நிலை மருப்பின் ஆடுதலை ஆக
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி”
                                     - (நெடுநல்வாடை: 159 - 163)
என நெடுநல்வாடை சொல்கிறது. 

இன்றைய தமிழர்களாகிய நாம் மேடராசி என்று அழைக்கும் இராசியை பண்டைய தமிழர் ஆடு என அழைத்தனர். ஆடு என்ற இராசியை (மேடராசியை) தொடக்கமாகக் கொண்டே வான்வெளியில் உள்ள கோள்களும் நட்சத்திரங்களும் சுற்றுகின்றன எனக் கணிக்கப்பட்டன. எனவே ஆடு எனும்  இராசியைத் தொடக்கமாகக் கொண்டு ஞாயிற்று மண்டலம் சுற்றிவரும் ஒரு சுற்று ஆண்டு ஆயிற்று என்பதை நாம் அறியலாம்.

இது போல் வரைஆடு என மலை ஆட்டை அழைத்தனர். வரை என்றால் மலை. வரைஆடு சங்கத் தமிழரால் வருடை எனவும் அழைக்கப்பட்டது. மேடராசியை வருடை எனக்காட்டும் சங்ககாலப் புலவரான நல்லந்துவனார் கோள்கள் சில வான்வெளியில் எந்தெந்த ராசியில் நின்றன என்பதையும் காட்டியுள்ளார். அவர் கூறியதை வைத்து அந்த வானியல் நிகழ்ச்சி கி மு 161ம் ஆண்டு ஆவணி மாதம் 12ம் நாள் வியாழக்கிழமை நடந்ததாக சைவசித்தாந்தக்கழக நூற்பதிப்பில் 1969 ல் வெளிவந்த சங்க இலக்கிய நூலான பரிபாடலில் கூறப்பட்டுள்ளது. நல்லந்துவனார் 
“விரிகதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப 
எரிசடை எழில் வேழம் தலையெனக் கீழ் இருந்து
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதின் இருக்கையுள் 
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர
வருடையைப் படிமகன் வாய்ப்பப் பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்தப் புலர் விடியல் 
அங்கி உயர் நிற்ப........”                                         
                                                  - (பரிபாடல்: 11: 1 - 7)
என விரிவாக சொல்கிறார். இதில்
“வருடையைப் படிமகன் வாய்ப்ப”
என்று வருடை ராசிக்கு (மேடராசிக்கு) செவ்வாய் (படிமகன்) வந்ததை குறிப்பிட்டுள்ளார். ஆதலால் வருடை இராசியை(மேடராசியை) தொடக்கமாகக் கொண்டு ஞாயிற்று மண்டலம் சுற்றிவரும் ஒரு சுற்று வருடம் ஆயிற்று. 

சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர் யாடு - ஆடு; வருடை என மேடராசியை அழைத்தனர். அதனால் சங்கப் புலவர் வாயிலாக யாடு - ஆடு ஆகி, யாண்டு - ஆண்டு ஆகி, வருடை - வருடம் ஆனதையும் கண்டோம். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து சொல்லப்படும் ஆண்டு, வருடம் தமிழா! எனக்கேட்போருக்கு என்ன பதில் சொல்லலாம்?
 இனிதே,
 தமிழரசி. 

2 comments:

  1. மிகச்சிறப்பு. தொடர்ந்து இதுபோல் எழுதுங்கள். தமிழின் ஆக்கச்செயல்பாடுகளுக்கு வாழ்த்துக்கள். முக நூலில் இதை வெளியிடலாம் தாங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கேட்டதற்கு அமைய முக நூலில் வெளியிட்டுள்ளேன். உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது பாராட்டுக்கள்.
      இனிதே,
      தமிழரசி.

      Delete