குறள்:
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு. - 396
பொருள்:
மணற்கேணியில் இருக்கும் மணலைத் தோண்டத் தோண்ட அதில் ஊறிவருகின்ற நீரின் ஆழம் கூடிக்கொண்டு போவது போல மனிதர் கற்கக் கற்க அவரது அறிவும் கூடும்.
விளக்கம்:
கல்வி என்னும் அதிகாரத்தில் இருக்கும் இத்திருக்குறள் எமது அறிவை எப்படி வளர்க்கலாம் என்பதைச் சொல்கிறது. சிறுகுளம், தடாகம் போன்றவை கேணி என அழைக்கப்படும். அதனை கருங்கல்லால் கட்டியிருந்தால் பொக்கணை என்பார்கள். புளியம் பொக்கணை, குட்டம் பொக்கணை போன்றவை அவை. அப்படிக் கட்டாது மணலாலே ஆனதாக இருந்தால் மணற்கேணி என்பார்கள்.
மணற்கேணியில் உள்ள நீர் வெயிற் காலங்களில் வற்றிப்போவதால், குறைந்த ஆழமுள்ள நீரே அக்கேணியில் நிற்கும். கேணியின் அடியிலுள்ள மணலைத் தோண்டி எடுக்க எடுக்க அக்கேணியின் நீரின் ஆழம் கூடும். எவ்வளவுக்கு எவ்வளவு மணலைத் தோண்டி எடுக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நீரின் ஆழம் மிகக்கூடி இருக்கும். இதேபோல் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு கற்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நம் அறிவும் பெருகும்.
ஒருவர் பத்தாம் வகுப்புப் படித்தபோது இருந்த அறிவைவிட பட்டப்படிப்பின் பின்னர் அறிவு கூடியவராக இருப்பார் அல்லவா? சிறுவயதில் படிக்கும் காலத்தில் மணற்கேணியை தோண்டுவது போல தொடர்ந்து கற்போம். அதனால் நம் அறிவு பெருகும். படியாத சாதாரணமாக மனிதர்கூட ஐந்து வயதைவிட ஐம்பது வயதில் அறிவு கூடியவராக இருப்பர். கற்றதால் பெற்ற அறிவுக்கும், வாழ்வின் இன்ப துன்ப அனுபவங்களால் பட்ட அறிவுக்கும், நிறையவே வேறுபாடு உண்டு. திருவள்ளுவர் இக்குறளில் கற்பதால் பெறப்படும் அறிவைப்பற்றியே சொல்கிறார்.
பட்டப்படிப்புக்கள் மட்டும் எமக்கு கல்வியறிவைத் தந்துவிடுவதில்லை. நம் வாழ்நாள் முழுவதும் கற்கவேண்டிய விடயங்கள் இந்த உலகில் நிறையவே இருக்கின்றன. சரஸ்வதி சொல்கிராள் என ஔவையார் சொன்னது போல்
“கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவென்று
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் - மெத்த
வெறும் பந்தயங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்"
இருக்கின்றன.
எனவே எமக்கு விரும்பிய புதுப் புது விடயங்களாகப் பார்த்து ஆராய்ந்து ஆராய்ந்து கற்கக் கற்க அறிவும் மணற்கேணியின் நீர் போல் பெருகும்.
No comments:
Post a Comment