உள்ளம் உருக உணர்மின்கள்! -1
- சாலினி -
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மூவராலும் பாடப்பெற்ற தேவாரங்களில் அழிந்தவை போக, எண்ணாயிரத்திற்கு மேற்பட்ட தேவாரங்கள் இன்றும் இருக்கின்றன. ஆனால் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களாகிய நாமோ ஐம்பது தேவாரங்களுக்கு குறைந்த தேவாரங்களையே சமயச் சடங்குகளிலும் கோயில்களிலும் மீண்டும் மீண்டும் பாடி வருகின்றோம். உதாரணமாக எல்லோராலும் மிக விரும்பிப் பாடப்படும் தேவாரங்களாக ‘தோடுடைய செவியன்,’ கூற்றாயினவாறு,’ பித்தாபிறைசூடி,’ ‘மந்திரமாவது நீறு,’ ‘மங்கையற்கரசி’ ‘நீளநினைந்தடியேன்’ ‘பிடியதன் உரு உமைகொள; போன்ற பலவற்றைச் சொல்லலாம். இவற்றுள் தோடுடைய செவியன், கூற்றாயினவாறு, பித்தாபிறைசூடி மூன்றும் தேவார மும்மூர்த்திகளால் முதன்முதல் பாடப்பட்டவை ஆதலால் பாடுகிறோம்.
மங்கையற்கரசி, நீளநினைந்தடியேன் போன்ற தேவாரங்களை ஏன் பாடுகிறோம்? அவற்றை புரிந்து பாடுகிறோமா? என்ற கேள்வி யாருக்கும் எழுவதில்லையா? இந்த இரண்டு தேவாரத்தையும் சற்றுப்பார்ப்போம்.
பாண்டியப் பேரரசனான நின்றசீர்நெடுமாறனுக்கு இருந்த வெப்புநோயை நீக்க பாண்டியனின் மனைவி மங்கையற்கரசியாரின் அழைப்பிற்கு இணங்க திருஞானசம்பந்தர் மதுரை வந்தார். அப்போது திருஞானசம்பந்தர் தன்னுடன் வந்த சிவனடியார்கள் சோழநாட்டில் இருந்து வந்ததால் அவர்களுக்கு; மங்கையற்கரசியார் யார் என்பதையும், பாண்டியனின் மந்திரியாகிய குலச்சிறையார் எப்படிப்பட்டவர் என்பதையும், அந்தக்கோயில் எது என்பதையும், அங்கு எழுந்தருளி இருக்கும் இறைவனின் பெருமை பற்றியும் எடுத்துச் சொல்கிறார். அப்படி அவர் எடுத்துச் சொன்ன திருவாலவாய்ப்பதிகத்தின் ஐந்து தேவரத்தில் அரசியாரையும், ஐந்து தேவாரத்தில் மந்திரியாரையும் குறிப்பிடுகிறார். கடைசித் தேவாரத்தில் இருவர் பெயரையும் கூறுகிறார். அப்பதிகத்தின் முதலாவது தேவாரமே ‘மங்கையற்கரசி’ எனத்தொடங்கும் தேவாரமாகும்.
அத்தேவாரம் “மங்கையற்கரசி சோழனின் மகள். கையில் வளையல் அணிந்தவர். மானமுடையவர். தாமரை மலர் போன்றவர், பாண்டியனின் பட்டத்தரசி. அவர் நாள்தோறும் வணங்க, எரியும் தீயின் உருவம் உள்ளவன். பூதங்களின் தலைவன். வேதங்களையும் அவற்றின் கருத்தையும் கூறி, அங்கயற்கண்ணியோடு (உமையம்மையோடு) அமர்ந்திருக்கும் திருவாலவாய் இதுதான்” என்று திருஞானசம்பந்தர் தன்னுடன் வந்த சிவனடியார்களுக்கு சொன்னதையே சொல்கிறது. தேவாரத்தைப் படித்துப் பாருங்கள்.
“மங்கையற்கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைமடமானி
பங்கயற்செல்வி பாண்டிமாதேவி
பணிசெய்து நாள்தொரும்பரவ
பொங்கழல் உருவன் பூதநாயகன்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும்
அமர்ந்த ஆலவாயாவதும் இதுவே”
நாம் ஏன் இத்தேவாரத்தை எமது வீடுகளிலும், கோயில்களிலும், எமது சமயச் சடங்குகளிலும் விழாக்களிலும் பாடுகிறோம்? நாம் பாடுமிடம் எல்லாம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலா?
சுந்தரமூர்த்தி நாயனாரின் ‘ நீள நினைந்தடியேன்’ தேவாரத்தை தொடர்ந்து காண்போம்.
No comments:
Post a Comment