Thursday, 5 July 2012

இறைவா வருக எனையாள!

   
                         பல்லவி
இறைவா வருக எனையாள
இதுவே தருணம் புவிமீதே 
                                          - இறைவா

                     அநுபல்லவி
நறையாய் எனையே நான்தருவேன்
நாயகனே! நானிலத்தே
                                         - இறைவா
                      சரணம்
காணா இறைவன் உன்றனையே
காண வேண்டி கலுழுகிறேன்
காணாய் என்றன் நிலைதனையே
காணுமோர் எண்ணம் உனக்குண்டேல்
                                          - இறைவா 
நிலையா வாழ்வை நித்தியமாய்
நினைந்து யானே நினைவழிந்தேன்
களையாய் என்றன் கவலைதனை
களையுமோர் எண்ணம் உனக்குண்டேல்
                                         - இறைவா   
அருளாலே அருளை அறிந்தே
அருள் வேண்டிப் பிதற்றுகின்றேன்
அருளின் அருளே! அருளாயோ!!
அருளுமோர் எண்ணம் உனக்குண்டேல்
                                        - இறைவா 
இனிதே,
தமிழரசி.     

குறிப்பு:
[1994 'கலசம்' இதழில் எழுதியது]

சொல்விளக்கம்:
நறை - தேன்
நானிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் நால்வகை நிலத்தாலான உலகு.
கலுழுகிறேன் - அழுகிறேன்
நித்தியம் - அழியாதது
பிதற்றுதல் - புலம்புதல்

No comments:

Post a Comment