முல்லைத்தீவின் தட்டையர் மலைப் பகுதி, திருவள்ளுவர் சொன்ன
“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்”
என்ற திருக்குறளுக்கு எடுத்துக் காட்டாக இருக்கும் இடங்களில் ஒன்றாகும், அங்கே மணிநீருடன் ஓடும் பேராறும், பசுமைமாறாத மண்ணும், தட்டையர் மலையும், பெரிய மருத மரங்கள் செறிந்த நிழலையுடையகாடும் பாதுகாப்பைக் கொடுப்பதாலேயே பண்டைய தமிழ் அரசர்கள் தமது அரண்மனைகளை அங்கு கட்டினார்கள். அரசர்காலத்துக்கு பின்னர் காதலரை வா என அழைக்கும் சொர்க்க புரியாய் மாறிவிட்டது.
பேராறு அமைதியாக ஓடிக்கொண்டிருக்க, மருதமரங்கள் இருமருங்கும் செழித்து வளர்ந்து குளிர்ச்சியைச் சொரிய ஓர் இளநங்கை அப்பேராற்றங்கரையில் நடந்து சென்றாள். அவள் வருகைக்காக மருதமர நிழலில் காத்திருந்த காதலன் அவளைக்கண்டதும்
ஆண்: “ஊராரும் அறியாமல்
உற்றாரும் காணாமல்
பேராற்றங் கரையினிலே
பேரின்பம் காண்பதெப்போ”
எனப்பாடினான். அவளும் அவனைப் பார்க்கத்தானே அங்கே வருகின்றாள். அவளின் தோழியர் மூலம் அந்தச் செய்தி ஊரெல்லாம் பரவிவிட்டது. அவள் பேராற்றங்கரைக்கு வந்து போவதை உறவினரும் கண்டுவிட்டனர். அதனை மிக நாகரிகமாக
பெண்: “ஊராரும் அறிந்தாரே
உற்றாரும் கண்டாரே
பேராற்றங் கரையினிலே
பேதைமனம் போனதென்னு”
சொல்கிறாள். அவளின் நிலையை உணர்ந்து கொண்ட அவனும் ஊராரையும் உற்றாரையும் பொருட்ப்படுத்தாமல் அவளை திருமணம் செய்து கொள்வதாகச் சொல்கிறான்.
ஆண்: “ஊராரும் அறிந்தாலும்
உற்றாரும் கண்டாலும்
பேராற்றங் கரையினிலே
பேதையுனை கைப்பிடிப்பேன்”
- நாட்டுப்பாடல் (முல்லைத்தீவு)
- (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
நாட்டுப்புற வாழ்வின் காதலின் நெளிவு சுழிவுகளை இந்நாட்டுப்பாடல்கள் சொல்கின்றன.
இனிதே,
தமிழரசி
No comments:
Post a Comment