Saturday, 23 June 2012

அணையா விளக்கு ஏற்றுவோம்



விளக்கு என்றால் என்ன? எமக்குத் தெரியாததை தெரிய வைப்பதே விளக்காகும். அதனாலேயே ஒன்றைப் புரிந்துகொள்வதற்கு 'அதனை விளக்கு' எனச் சொல்லுவோம். எனவே உண்மைப் பொருளை விளக்கிக்காட்டுவதே விளக்காகும். அதாவது என்ன என்று அறிய முடியாத ஒன்றை இன்னது என்று அறியத்தருவது விளக்காகும். 

எரிமலையாய் வெடித்துச் சிதறியும், காட்டுத்தீயாய்  பற்றி எரிந்தும் ஆதிமனிதனின் வாழ்வில் பலவகையான துன்பங்களைத் தீ உண்டாக்கியது. அந்தத் தீயைக் கண்டு பயந்த மனிதன் அதை வழிபடத் தொடங்கினான். அதுவே தீ வழிபாடு. அவ்வழிபாடு தீபவழிபாடு, திருவிளக்கு வழிபாடுகளுக்கு வழி காட்டியது. கார்த்திகைத்தீப வழிபாடும், தீபாவளியும்  (தீபம் + ஆவளி = தீபங்களை வரிசையாக ஏற்றிக் கொண்டாடும் பண்டிகையும்) தீபவழிபாட்டின் முதன்மையைக் காட்டுகின்றன.
தீப விளக்குகள் - திருவிளக்கு, அகல் விளக்கு, அன்ன விளக்கு, கலங்கரை விளக்கு, பாவை விளக்கு, தோழி விளக்கு, ஈழநிலை விளக்கு, ஈழச்சியல் விளக்கு, ஈழவிளக்கு, குடவிளக்கு, குத்து விளக்கு எனப் பலவகைப்படும். விளக்கு இருளை நீக்குவதால் அதில் இலட்சுமி இருப்பதாகக் கருதுதியே திருவிளக்கு என அழைக்கின்றனர். மின்மினிப் பூச்சிபோல் விட்டுவிட்டு பிரகாசிக்கும் விளக்கே அன்னவிளக்காகும். அதனை வேள்வித் தூணின் உச்சியில் வைக்கப்பட்டிருந்த அன்னவிளக்கு [ஓதிம விளக்கு; ஓதிமம் - அன்னம்] விடிவெள்ளி [வைகுறுமீனின்] போல் விட்டு விட்டு பிரகாசித்தது என்பதை பெரும்பாணாற்றுபடை
“வேள்வித் தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட
வைகுறு மீனின் பையத் தோன்றும்”                        
                                                     - (பெரும்பா: 316 - 317)
எனக்கூறுவதால் அறியலாம்.
பல சங்க இலக்கிய நூல்கள் பாவை விளக்கைப்பற்றிச் சொல்கின்றன. பெண் உருவப்பாவை விளக்கை ஏந்திய நிலையில் இருப்பதால் பாவை விளக்கு என அழைக்கப்பட்டது. முல்லைப்பாட்டு 
“பாவை விளக்கில் பரூஉ சுடர் அழல
இடம் சிறந்து உயரிய ஏழுநிலை மாடத்து”        
                                                     - (முல்லைப்: 85 - 86)
என பாவைவிளக்கை விளக்குகிறது. இக்காலத்தில் செம்பினால் செய்யப்பட்ட பாவைவிளக்கினையும் கோயில் தூண்களில் கற்சிற்பங்களாக இருக்கும் பாவை விளக்கினையுமே காண்கிறோம். பாவை விளக்கை தீப இலட்சுமி, தீப நாச்சியார் என்றும் சொல்வர். ஆண் பாவை விளக்குகளும் உண்டு. அதனை திருவிளக்குச் சீலர் என்றும், ஶ்ரீவிளக்குச் சீலர் என்றும் அழைப்பர். 
கோயில்களில் தாம் செய்த வேண்டுதல் நிறைவு பெற்றதற்காக பாவைவிளக்கைச் செய்து அக்கோயிலுக்குக் கொடுத்து இருக்கிறார்கள். அதனை பெண்களே செய்திருப்பதை பாவைவிளக்குப் படிமத்தின் பீடத்தில் உள்ள குறிப்புகளும் கல்வெட்டுகளும் எடுத்துச் சொல்கின்றன. திருவாரூர் கோயிலுக்கு 'பரவைநங்கை' என்ற பெண் பல பாவைவிளக்குகளை செய்து கொடுத்திருப்பதாகக் கல்வெட்டு சொல்கிறது. 

முதலாம் இராஜராஜ சோழனின் பட்டத்தரசியாகிய உலகமகாதேவி கோயிலுக்கு கொடுத்த விளக்குகளின் பட்டியலில் இடம்பெறும் தோழி விளக்கு, ஈழச்சியல் விளக்கு இரண்டும் ஈழத்தைச் சேர்ந்த விளக்குகளாகும். பாவைவிளக்குகள் இரண்டு முதுகுப்புறமாக ஒட்டியிருப்பது தோழி விளக்காகும். ஈழச்சியல் விளக்கு என்பது ஈழ அச்சியல் விளக்காகும். முதலாம் இராஜராஜ சோழனின் காலத்தில் இலங்கை அவனின் ஆட்சியின் கீழ் இருந்ததை ஈழத்து விளக்குகளும் சொல்கின்றன.
“அம்முனா அம்மணி” என்ற பெயரை உடைய மராட்டிய இளவரசி தன் காதல் நிறைவேறினால் இலட்சம் பாவைவிளக்கு ஏற்றுவதாக திருவிடைமருதூர் கோயிலில் வேண்டிக்கொண்டாள். அவளின் காதல் நிறைவேறி பிரதாபசிம்மனை மணந்ததும், கோயிலில் இலட்சம் பாவைவிளக்கு ஏற்றி அப்பாவை விளக்குகளிடையே தானும் ஒரு பாவைவிளக்காக அகல்விளக்கேந்தி நின்றாள். திருவிடைமருதூர் கோயில் சந்நிதி முன், தீபஒளி ஏந்தி நிற்கும் பாவைவிளக்கின் பீடத்தில் இச்செய்தியை இன்றும் காணலாம். 
எமது மனவிளக்கை ஏற்றி வழிபட்டால் சோதிவடிவான இறைவன் அருளொளி விளக்காக - அறிவொளியாக நம் மனதில் சுடர்விடுவான். அதனையே இரண்டாயிர வருடங்களுக்கு மேலாக பாவையர் [பெண்கள்] ஏற்றி வழிபடும் பாவைவிளக்கு காட்டுகிறது. 

திருமூலரின் திருமந்திரம் 
“மனத்து விளக்கினை மான்பட ஏற்றிச்
சினத்து விளக்கினை செல்ல நெருக்கி
அனைத்து விளக்கும் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கு மாயா விளக்கே
என்கின்றது. 

மனமாகிய விளக்கை அறியாமை என்னும் இருள் நீங்க [மான்பட] ஏற்றி, கோபமெனும்[சினத்து] விளக்கை வெறுத்து அழித்து [செல்ல நெருக்கி], மற்றைய ஐம்புல விளக்குகளின் திரிகளையும் ஒரே நேரத்தில் தூண்டினால் எமது மனத்தின் உள்ளொளி விளக்கானது அணையா[மாயா] விளக்காக நின்று சுடர்விடும். 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment