கம்பம்[கம்பு]
தினை, சாமி, குரக்கன், சோளம் போன்ற தானியவகைகளில் ஒன்று கம்பு. அது பார்ப்பதற்கு தடி போல் இருக்கும். அதை தமிழர் இரண்டாயிர ஆண்டுகளுக்கு மேலாக உணவாக உண்கின்றனர். அதனை ஈழத்தமிழர் கம்பம் என்று கூறுவர். கம்பம் தோட்டம், கொல்லை என அழைக்கப்படும். கம்பம் கொல்லையில் உள்ள கதிர்கள் முற்றியதும் அதனைப் பெண்கள் ஒடித்து எடுப்பர். கம்பின் நெற்றை உருவி அதன் சோங்கு (தூசு) நீங்க புடைத்து எடுப்பார்கள். கமப்ஞ்சோறு மிகவும் சத்தான உணவாகும். காய்ந்த கம்பை உரலில் இட்டு குற்றி மாவாக எடுத்து பிட்டு, கூழ், களி போன்றவற்றை செய்து உண்பர்.
காத்தான்குடியில் இருந்த கம்பங்கொல்லையில் இளம்பெண்ணொருத்தி முற்றிய கம்பங் கதிர்களை ஒடித்துக் கொண்டிருந்தாள். அங்கே வந்த அவளின் மச்சான் அவளிடம் கம்பங்கூழ் கேட்கிறான். அவள் கம்பங்கூழ் காச்சினாளாம், அது கட்டியானதால் கம்பங்களி ஆகிவிட்டதாம். அவன் கருப்பட்டி வாங்கிவந்தால் கம்பங்களி சாப்பிடலாம் என்கின்றாள். அவள் சொன்னால், அவன் கருப்பட்டி என்ன கருமணியே வாங்கிவருவான். சந்தைக்கு போய்வர இருண்டு போய்விடும். அவன் வயிறோ பசியால் காந்துகிறது. எனவே கருப்பட்டி இல்லாமலே கம்பங்களி சாப்பிடுவான் என்பதை மிக நாகரிகமாகச் சொல்கிறான்.
அன்றைய கிராமத்து சூழலையும் அவர்களின் சாப்பாட்டின் எளிமையையும் பேச்சின் நளினத்தையும் இந்த நாட்டுப் பாடல்கள் தருகின்றன.
ஆண்: கம்பம் கொல்லையில
கதிரொடிக்கும் மச்சியரே
காப்புப்போட்ட கையால
கம்பம்கூழ் தந்தாலென்ன!
பெண்: கம்பங்கூழ் காச்சயில
கம்பங்களி ஆச்சிதல்லோ
கருப்பட்டி வாங்கிவந்தா
கம்பங்களி தின்னிடலாம்
ஆண்: கருப்பட்டி வாங்கிவாறன்
கருகுமணியும் வாங்கிவாறன்
கருக்கல் ஆயிடுமே
காந்துதல்லோ என் வயிறு!
- நாட்டுப்பாடல் (காத்தான்குடி)
- (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
இனிதே,
தமிழரசி.
ஆசைக்கவிதைகள்.
ஆங்கிலத்தில் சாமி என்ற தானியத்திற்கு என்ன பெயர்
ReplyDelete