Wednesday, 23 May 2012

ஆமைபோல் தெளிவிலாதேன்


தேவாரம் பாடிய மூவரில் திருநாவுகரசு நாயனார் வயதால் மூத்தவர். அவர் தமிழரின் வரலாற்றை தமது  தேவாரங்களில் பதிவு செய்து வைத்துள்ளார். அவர் வாழ்ந்த காலத்து தமிழரின் பண்பாடு, அரசநீதி, சமயக்கொள்கை, சிற்பம், இசை, நாட்டியம், உணவு, உடை போன்ற சமூக வாழ்வியலை அவரின் தேவாரங்களில் இருந்து நாம் வடித்தெடுக்கலாம். அன்றைய தமிழர் சைவ உணவை மட்டும் உண்டு வாழவில்லை. அவர்கள் புலால் உணவும் உண்டிருக்கிறார்கள். அதிலும் ஆமையை இறைச்சியை  உண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத் தமிழரில் சிலர் கடலாமை உண்பார்கள் என நினைக்கின்றேன். 1970 களில் கோவில் வீதியும், ஆஸ்பத்திரி வீதியும் சந்திக்கும் இடத்திற்கு அருகே கடலாமைகள் விற்பனைக்காக மல்லாத்தி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

அவற்றைப் பார்த்ததும், ‘எப்படி அவற்றின் ஓட்டை கழற்றி இறைச்சியை எடுப்பார்கள்?‘ என என் மனத்துள் கேள்வி எழுந்தது. ‘பென்னம் பெரிய கடலாமைகளின் ஓடுகளை வாளல் அரிந்து கழற்றி எடுப்பார்களா?’ என, என் தந்தையிடம் கேட்டேன். அவர் வாய்விட்டு சிரித்தார். நீ பார்த்தவை பென்னம் பெரிசா என்றார். நான் பார்த்தனவற்றை விட நான்கு ஐந்து மடங்கு பெரிய கடலாமைகள் இருப்பதாகக் கூறி, ஆமை இறைச்சியை எப்படி எடுப்பார்கள் என்பதை எனக்கு விளங்கவைக்க ஒரு பாடலைப் பாடினார். நான் முன் எப்போதும் கேட்காத பாடலாக அது இருந்தது. எனக்கு அப்பாடல் பிடித்திருந்தது. என்ன பாடல்? யார் பாடியது என்றேன்? தெரியவில்லையா என்றார். மீண்டும், மீண்டும்  பாடினார்

“வளைத்து நின்று ஐவர் கள்வர்
          வந்தெனை நடுக்கம் செய்யத்
தளைத்து வைத்து உலையை ஏற்றித்
          தழலெரி மடுத்த நீரில் 
திளைத்து நின்று ஆடுகின்ற
          ஆமைபோல் தெளிவிலாதேன்
இளைத்து நின்று ஆடுகின்றேன்
           என்செய்வான் தோன்றினேனே”

முன் எப்போதும் இப்பாடலை படியாதவர் இது என்ன பாடல் என ஊகிக்க முடியுமா? இது தேவாரம்.  திருநாவுக்கரசு நாயனாரால் பாடப்பட்டது. நான்காம் திருமுறையில் இருக்கிறது. இத்தேவாரத்தின்  எந்த ஒரு சொல்லாவது கடவுளைக் குறிக்கிறதா? மிக அருமையாக மனிதவாழ்வைச் சித்தரிக்கிறது. ‘மெய்(உடம்பு), வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்கள் எனச்சொல்லப்படும் கள்வர்கள் வந்து, என்னை சுற்றி வளைத்து நின்று அச்சத்தை தருகின்றனர்’ எனக் கூறியுள்ளார். 
ஐம்புலன்களும் நல்லவர்கள் அல்லர். கள்ளர்கள். அவரிடம் இருக்கும் நல்லனவற்றைப் பறித்து எடுப்பதே அவர்களின்  நோக்கம். ஐம்புலன்களாகிய ஐந்துபேரும் ஒன்றாகச் சேர்ந்து நின்று அவரை  கொள்ளையடிக்க சுற்றிவளைத்ததால் பயத்தால் நடுங்குகிறார். உயிரோடு ஆமையைக் கட்டி உலையில் போட்டு அடுப்பில் ஏற்றி தீமூட்டுவர். உலைநீர் மெல்ல சூடாகத் தொடங்க, ஆமை நான்கு கால்களையும் தலையையும் வெளியே நீட்டி அந்த இதமான சூட்டின் இன்பத்தில் திளைத்து நின்று ஆடுகின்றது. உலைநீர் சூடாகிக் கொண்டிருப்பதையோ அதனால் வரப்போகும் மரணத்தைப்பற்றியோ அது அப்போது அறியாது. ஏனெனில் அதனை அறியும் அறிவு அதற்கு இல்லை. அந்த ஆமை ஐந்து உறுப்புக்களையும் வெளியே நீட்டி எப்படி ஆடுகின்றதோ அது போல அவரும் அறிவுத் தெளிவு இல்லாமல் ஐம்புலங்களால் கவரப்பட்டு சோர்ந்து நின்று ஆடுகிறார். மனிதனாய் பிறந்துவிட்டார் என்ன செய்யமுடியும்?
நாம் பல கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாவதற்கு காரணம் ஐம்புலங்களே. அறிவில்லாத ஆமை உலைநீரில் நின்று ஆடுவது போல் நாம் எல்லோரும் அறிவுத்தெளிவு இல்லாமல் ஐம்புலன்களுக்கு அடிமையாய் ஆடுகிறோம். இந்த விளக்கத்தை தரும் இடத்தில் அந்நாளைய தமிழர் எப்படி ஆமையைக் கொன்றனர் என்பதைக் காட்டி தமிழர் ஆமை இறைச்சி உண்டதை வரலாற்றுப் பதிவாகத் தந்துள்ளார். 
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
சொல்விளக்கம்:
வளைத்து நின்று - சுற்றி வளைத்து நின்று
ஐவர் - ஐம்புலன்கள்
நடுக்கம் செய்ய - நடுங்கச் செய்ய
தளைத்து - கட்டி
தழலெரி மடுத்த - தீமூட்ட
திளைத்து - இன்பத்தில் திளைத்து (மூழ்கி)
இளைத்து - சோர்ந்து
தோன்றினேனே - பிறந்தேனே

1 comment:

  1. ஆமையின் கறி மிக இளவாக இருக்கும் என்பார்கள்! உண்டவர்கள் கூறட்டும். தொடந்து எழுதுங்கள். என் எழுத்துக்களையும் படித்து பாருங்கள், நேரம் இருந்தால்! https://megaalaigal.blogspot.com/

    ReplyDelete