Wednesday, 11 April 2012

நடையாய் நடந்தால்


மனிதர்களாகிய நாம் வாழ உயிர் மிகமிக அவசியம். உயிரில்லாத உடல் வெறும் பிணமே. இந்த அவசர உலகில் மனித உயிர் நோய்களாலும் போர்களாலும் விபத்துளாலும் எமது சோம்பலாலும் உடலைவிட்டு போய்க்கொண்டிருக்கின்றது. அதனால் மனிதருக்கு ஏற்படும் இயற்கை மரணம் தன்னை மிகச்சிறிய வட்டத்திற்குள் முடக்கிக் கொண்டுவிட்டது. கோபமும் பொறாமையும் புரிந்துணர்வு இன்மையும், அவசரபுத்தியும், நிதானம் இன்மையுமே  விபத்துகளாலும் போர்களாலும் எற்படும் உடற்காயங்களுக்கும்  உடலின் அங்கக் குறைபாடுகளுக்கும் முக்கிய காரணங்களாகின்றன. 
நோய்  யாருக்கு எப்போது எப்படி வரும் என்பது எமக்குத் தெரியாது. ஆனால் அதைக் கட்டுப்படுத்த எம்மால் முடியும். மனிதர் உருவத்தில் மிக அழகாக இருப்பர். ஆனால் அவருள்ளே இருதய நோய், இடுப்புவலி, சிறுநீரகக் கோளாறு, முழங்கால் மூட்டுவலி, நடந்தால் களைப்பு, மூச்சுத்திணறல் என எத்தனையோ நோய்கள் கால் மேல் கால் போட்டு வீற்றிருக்கும்.
நல்ல வசதியான வீடு, படிப்பு, உத்தியோகம், கார் குழந்தைகள் என யாவும் இருக்கும். என்னை உடல் வருந்தி வேலை செய்ய கடவுள் விடவில்லை. நான் புத்திபலத்தால் வாழ்கிறேன் எனக்கூறி துணைக்கு கடவுளையும் கூப்பிடுவர். வீட்டைத் திறந்ததும் உடனே காரில் ஏறிச்சவாரி, பனியோ வெய்யிலோ நடந்து அறியமாட்டார்கள். உடல் மொழ மொழவென இருக்கும். தோலின் அடியில் கொழுப்பும் மெல்ல மெல்லச் சேர்ந்து கொண்டே இருக்கும். நாற்பது வயதைத் தாண்டியதும், அது அவரை மாடிப்படி கூட ஏறவிடாது. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும். களைக்கும் அது ஏன்?
சிந்தியுங்கள் செயற்படுங்கள். பனியோ வெய்யிலோ, காலாறக் கொஞ்சம் நடையாய் நடந்து பாருங்கள். நடந்தால் எமது உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக் கரைய  ஊளைச் சதைநீங்கி, கொடியுடலோடு வலம் வரலாம்.  ஜிம்முக்கு கொடுக்கும் காசும் உங்களுக்கு மிச்சம்.  நடப்பதனால் உடலும் இருதயமும் வலிமை பெறுவதோடு எமது மூட்டுவலி,  கொலஸ்ரோல் மட்டுமல்ல  உலகத்தின் பொலூசனும்  கொஞ்சம் குறையும்.  

No comments:

Post a Comment