கோலெழுத்தாயும், கண்ணெழுத்தாயும், குயிலெழுத்தாயும் பண்டைய தமிழர் எழுதிய தமிழ் எழுத்தை தமிழி எனச் சொல்வர். கி மு முதலாம் நூற்றாண்டில் இருந்த சமவயங்க சுத்த என்னும் நூலில் 18 வகையான எழுத்துக்களின் பெயர்கள் உள்ளன. அவற்றுள் தாமிழி என்பதும் ஒன்று. இந்தத் தமிழி எழுத்துக்கள் ஈழத்திலும் தமிழகத்திலும் அகழ்வாராய்வின் போது கிடைத்த வண்ணம் இருக்கின்றன. தமிழியை தமிழ்-பிராமி எனவும் அழைப்பர்.
நம் தமிழ் எழுத்தின் தொடக்க எழுத்தாக இன்று கருதப்படும் தமிழி எழுத்து தோன்றியதற்கு பல இட்டுக்கட்டிய கதைகளைக் கூறுகின்றனர். பண்டைய நாளில் இந்தியாவில் எழுதப்பட்டு வந்த எழுத்துவகைகளுள் ஒன்றே பிராமி என்றும், அதை படைப்புக் கடவுளான பிரமன் பெயரால் பிரம்மி என அழைத்தனர் என்றும் சொல்வர். ஆனால் அதற்கான எதுவித ஆதாரமும் அதைச் சொல்பவர்களிடம் இல்லை. வேறுசிலர் பிராமி மௌரிய பேரரசனான அசோகன் காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர். அந்தக் கருத்திற்கான ஆதாரமும் கிடைக்கவில்லை.
அசோகனின் கல்வெட்டு
உண்மையில் அசோகனின் கல்வெட்டுக்களில் இருந்த எழுத்தை ப்யூலர் என்னும் மேல்நாட்டு அறிஞரே பிராமி என்ற பெயரால் குறிப்பிட்டார். அவர் பிராமி என்ற பெயரை எங்கிருந்து பெற்றார், ஏன் அக்கல்வெட்டுக்களின் எழுத்தை பிராமி எனக்குறிபிட்டார் என்ற விபரம் தெரியவில்லை. அசோகனின் கல்வெட்டுக்கள் கிடைத்த பின்னரே இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டின் மலைக்குகைகளில் பண்டைத் தமிழ் கல்வெட்டுக்களைக் கண்டுபிடிக்கத் தொடங்கினர். அந்தக் கல்வெட்டுக்களில் காணப்பட்ட எழுத்துக்கள் அசோகனின் கல்வெட்டுகளில் இருந்த பிராமி எழுத்தைப் போல இருந்ததால் அவற்றை பிராமி என்றே அழைத்தனர்.
தமிழ்க் கல்வெட்டுக்களை முழுமையாகப் படித்தறியாது அவை என்ன மொழியில் இருக்கின்றன என்பதையும் அறியாது தம் மனம் போன போக்கில் தமிழருக்கு எழுத்தை எழுதக் கற்றுக் கொடுத்தவர் வடக்கே இருந்து வந்த பௌத்தமத பிக்குகளே என்றெல்லாம் எழுதிக் குவித்தனர். அக்கல்வெட்டுக்களை படித்தறிந்த போது அவை தமிழே என்பதை அறிந்தனர். எனினும் ப்யூலர் வைத்த பிராமியின் பெயரால் பண்டைய தமிழ் கல்வெட்டுக்களும் அழைக்கப்பட வேண்டுமென ஒருசில வரலாற்றறிஞர்கள் விட்டாப்பிடியாக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் பண்டைய எழுத்துக்களை வடபிராமி, தென்பிராமி, தமிழ்பிராமி, சிங்கள பிராமி என வட்டாரத்திற்கு ஒரு பெயாரால் அழைத்து தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.
அசோகனால் எழுதப்பட்ட கல்வெட்டுக்களை ப்யூலர், பிராமி எனக்குறிப்பிட்டதும் அதை நம்பி தொடர்ந்து எழுதி வருபவர்களுக்கு, அசோகனின் பிராமிக் கல்வேட்டுக்களில் தமிழுக்கே உரித்தான சிறப்பெழுத்துக்கள் அதிகமாக இருந்தும், அசோகனின் காலத்திற்கு முந்திய பண்டைத்தமிழ் கல்வெட்டுக்கள் பல இப்போது கிடைத்தும் அவற்றை பண்டைத்தமிழ் எழுத்தென்றோ தமிழி என்றோ எழுதவும் சொல்லவும் கூசுவது ஏன்?
சங்க இலக்கியங்களில் சங்கப்புலவர்கள் சொன்ன ஊர்களையும் விடயங்களையும் அப்படியே எடுத்துக்காட்டும் தமிழி எழுத்திலுள்ள இரண்டாயிர ஆண்டுகட்கு முற்பட்ட கல்வெட்டுக்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
அகநானூறு திருப்பரங்குன்றத்தை
“ அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை” - (அகம்: 59: 12)
எனக் கூறுகின்றது. சங்கப்பாடல்களிலேயே இசையமைந்த பாடல்களைத் தருவது பரிபாடல். அதில் மூன்று பாடல்களை நல்லந்துவனார் பாடியிருக்கிறார். அதில் திருப்பரங்குன்றத்தைப் பற்றி அவர்பாடிய பாடலாக ஒரு பாடல் இருக்கிறது. மற்றவை அழிந்தன போலும்.
திருப்பரங்குன்றக் குகைக் கல்வெட்டு
நல்லந்துவனார் போற்றிப்பாடிய திருப்பரங்குன்றத்து குகையில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டில்
‘அந்துவன் கொடுபிதவன்’
என தமிழி எழுத்தில் எழுத்தப்பட்டுள்ளது. அந்துவன் என்பவன் கற்படுக்கையை செய்து கொடுப்பித்தான் என்பதே இதன் கருத்தாகும். அந்துவன் என்ற பெயரில் சேர அரசர்களும் வேறு பலரும் இருந்ததை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான் நெடுமான் அஞ்சி, மலையமான் ஆண்ட கோவலூரை அழித்ததை
“ முரண்மிகு கோவலூர் நூறி, நின்
அரண் அடு திகிரி ஏந்திய தோளே!” - (புறம்: 99: 13 - 14)
என ஔவையார் புகழ்ந்து பாடியுள்ளார்.
ஜம்பைமலைத் தமிழிக் கல்வெட்டு
அந்த கோவலூருக்கு (இன்றைய திருக்கோவிலூருக்கு) அருகே இருக்கும் ஜம்பைமலையின் தமிழிக் கல்வெட்டு நெடுமான் அஞ்சி சமணர்க்கு செய்து கொடுத்த பள்ளிப் படுக்கை பற்றி சொல்கிறது. அக்கல்வெட்டில்
“சதியபுதோ அதியன் நெடுமான் அஞ்சி ஈத்த பாழி”
என வெட்டப்பட்டுள்ளது. அசோகனின் கல்வெட்டும் அதியமானை சதியபுத்திர எனச் சொல்வதாலும் ஜம்பைமலைக் கல்வெட்டு அசோகன் கல்வெட்டின் எழுத்தின் வடிவத்தைப் போல இருப்பதாலும் அதனை அசோகனின் கலாமாகிய கி மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பர்.
கரூர் மாவட்ட புகலூர் ஆறுநாட்டார் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு
மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்
கோ ஆ . . . . . . . ல்லிரும்பொறை மகன் பெருங்
கடுங்கோன் மகன் கடுங்கோன் (இ)ளங்கடுங்கோ
(இ)ளங்கோ ஆக அறுப்பித்த கல்.
எனச்சொல்கிறது. அந்தக் கல்வெட்டு கூறும் அரசர்களின் பெயர்களை சங்ககால சேர அரசகளின் புகழ்பாடும் சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தின் ஏழாம்பத்தில் செல்வக்கடுங்கோ வாழியாதனை கபிலரும், எட்டாம்பத்தில் பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில்கிழாரும், ஒன்பதாம்பத்தில் இளம்சேரல் இரும்பொறையை பெருங்குன்றூர் கிழாரும் ஒழுங்காக அப்படியே தந்துள்ளனர்.
இப்படி தமிழகத்தில் பரவலாகக் கண்டு பிடிக்கப்பட்ட சமணப்படுக்கைகள் பற்றிய சங்ககால கல்வெட்டுக்களைப் போல் அல்லாது, சங்க இலக்கியம் சொல்லும் செய்திகளை தேனி மாவட்டத்தில் புலிமான்கோம்பை என்ற ஊரில் கிடைத்த மூன்று நடுகற்கள் காட்டுகின்றன.
“விழுத்தொடை மறவர் வில்லிடை வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் .......................” - (அகம்: 53: )
என அகநானூற்றில் சொல்லப்பட்டது போலவே அந்நடுகற்கள் எழுத்துடை நடுகற்களாக அதுவும் பண்டைத் தமிழ் எழுத்துடை நடுகற்களாக இருக்கின்றன.
“ஊர் கொலை ஆகோள் பூசன் மாற்றே” - (தொல்: 20: 3)
புலிமான்கோம்பைக் கல்வெட்டு
எனத் தொல்காப்பியர் சொன்ன ஆகோள் பற்றிய செய்தியின் உண்மைத் தன்மையை
“கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆ கோள்”
என முதலாவது நடுகல் எடுத்துச் சொல்கிறது. கூடல் ஊரில் ஆ கோள் நடந்த போது இறந்த 'பேடு தீயன் அந்தவன்' என்பானுக்கு நட்ட கல் எனச்சொல்கிறது. அந்நடுகல்லில் உள்ள தமிழி எழுத்து வடிவத்தைக் கொண்டு இக்கல் கி மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும் மற்றைய இரு நடுகற்களும் கி மு மூன்றாம் நூற்றாண்டிற்கும் முந்தியவை எனவும் பேராசிரியர் கா இராஜன் சொல்லியுள்ளார். தொடர்ந்து சங்கத் தமிழ்கூறும் செய்திகளை நடுகற்களில் காண்போம்.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment