Friday, 30 March 2012

குறள் அமுது - (27)


குறள்:
ஈன்றபொழுதின் பெரிது உவக்கும் தன்மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய்                           - 69

பொருள்:
தாய் பிள்ளையைப் பெற்றெடுத்த நேரத்தில் அடைந்த இன்பத்தை விட, இவள் மகன் சான்றோனாக இருக்கிறான் என பிறர் சொல்வதைக் கேட்கும் போதே  பெருமகிழ்ச்சி அடைவாள். 

விளக்கம்: 
ஒரு தாய்க்கு தன் உயிரோடு கலந்திருந்த குழந்தையை பெற்றெடுத்த நேரத்திற்பட்ட துன்பங்கள் யாவும் குழந்தையைப் பார்த்ததும் இன்பமாக மாறிவிடும். அந்தக் கணம் அவள் வாழ்வில் மீண்டும் வரப்போவதில்லை. ஆனால் அதைவிட நல்ல மகிழ்ச்சியை அள்ளித்தரும் நேரங்கள் அவள் வாழ்வில் வரும். குழந்தை வளர்ந்து நல்லவனாக இருப்பதைப் பார்த்து மகிழ்பவள் தாய்தானே.
ஒரு பெண் காதலின்பக் களிப்பில் கலந்து பத்துமாதம் சுமந்து குழந்தையைப் பெற்றெடுக்க முன்பு அவள் மனதில் உதிக்கும் எண்ணங்கள் எத்தனை? எத்தனை? என்குழந்தை பெண்ணா! ஆணா! கருப்பா! சிவப்பா! என்ற சாதாரண எண்ணங்களை விட, என்குழந்தை அன்புடனும் பண்புடனும் உலகம் வாழ வழிவகுக்கும் அறிவாற்றலுடனும் யாவரும் புகழ வீரனாக இருக்க வேண்டும் என வயிற்றுள் குடியிருக்கும் குழந்தையோடு தன் உணர்வை பகிரும் தாய்மாரும் இருக்கின்றனர். அத்தகைய தாய்மார் பெற்ற குழந்தைகள் சான்றோராய் வரக்கூடும். 
வள்ளுவர் ‘சான்றோன் எனக்கேட்ட தாய்’ என்கின்றாரே, சான்றோன் என எவரைக் கூறலாம்? சான்று என்றால் எடுத்துக்காட்டு. மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பவரே சான்றோர். அவர் மனிதகுலத்திற்கு முன்னோடியாக வழிகாட்டியாக விளங்கக்கூடும். எல்லோரிடத்திலும் அன்பும், பேச்சில் உண்மையும், பழிச்சொற்களுக்கு அஞ்சும் தன்மையும், உலகம் முன்னேற என்ன செய்யலாம் என்ற சிந்தையும், எல்லா உயிரையும் ஒன்றென மதிக்கும் கருணையும் சான்றாண்மை ஆகும். சான்றோருக்கு இக்குணங்கள் இயல்பாகவே இருக்கும்.

தான் பெற்றபிள்ளை படித்து பேரறிஞன் ஆனாலும் பெரும் செல்வமுடையவன் ஆனாலும், புகழின் உச்சியில் கொடிகட்டிப் பறந்தாலும், பிறர் அவனைப் பாராட்டி புகழ்ந்து பேசுவதைக் கேட்கும் போதே ஒரு தாய் பேரின்பம் அடைவாள். உங்கள் தாய்மார் உங்களை பெற்றெடுத்த நேரத்தைவிட அதிகமாக பெருமகிழ்ச்சி அடைய வேண்டுமா, நீங்கள் மரஞ்செடி கொடி, பறவைகள் விலங்குகள் என வாழும் உலகஉயிர்கள் யாவும் மகிழ்வுடன் வாழவழி வகுக்கும் சான்றோனாய் உலகத்திற்காக வாழுங்கள். 

No comments:

Post a Comment