Saturday, 3 March 2012

குறள் அமுது - (24)


குறள்:
“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார்”                               - 140
பொருள்:
பல நூல்களைக் கற்ற அறிஞர்களாயினும் உலகத்தோடு சேர்ந்து ஒழுகும் ஒழுக்கத்தை கல்லாதவராய் இருந்தால் அவர்களும் அறிவில்லாதவர்களே.
விளக்கம்:
இத்திருக்குறள் 'ஒழுக்கமுடைமை' என்னும் அதிகாரத்தில் உள்ள கடைசிக் குறளாகும். ஒழுக்கமுடைமை என்றால் ஒழுக்கத்துடன் வாழ்தல் என்ற கருத்தைத் தரும். ஆத்திசூடியில் 'ஒப்புரவொழுகு' என ஔவையார் சொன்னதும் உலகத்தோடு ஒட்ட ஒழுகலும் ஒன்றேயாகும். அதாவது உலகத்தில் வாழ்வோர் ஒத்துக்கொள்ளும் [ஒப்புக்கொள்ளும்] படியான ஒழுக்கத்துடன் வாழ்தலாகும்.

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டேஎன்பது பழந்தமிழர் கொள்கை. அறிவில் சிறந்த சான்றோரை உயந்தோர் என்றனர். சான்றோர் தமது பழக்க வழக்கங்களால் தமது அனுபவ முதிர்ச்சியால் எவை சரி எவை பிழை என அறிந்தனர். தமது அனுபவ உண்மையைக் கொண்டு நாம் எப்படி வாழ்ந்தால் இவ்வுலகம் இனிமையாக இருக்கும் என்பதைக் கூறியுள்ளனர். 
மனித இனம் இவ்வுலகுக்கு அளித்த தத்துவஞானியர் யாவருமே உலகம் வாழ பல நல்ல கருத்துக்களையே சொல்லிச் சென்றுள்ளனர். நீதி, நேர்மை, சட்டம், ஒழுங்கு போன்ற நடைமுறைகளை மனிதப் பண்புகளில் உயர்ந்தோரே உருவாக்கினர். மானுடப்பண்புக்கு ஒத்துவராத கொள்கைகள் கால ஓட்டத்தில் அழிந்து போயின. உலகெங்கும் போரும் புரட்சியும் காலம் காலமாக நடந்தாலும் மனித இனச்சங்கிலி உயர்ந்தோர் சொன்ன ஒழுக்க முறைமையாலேயே தொடர்நடை போடுகின்றது.
ஆதிமனிதன் ஆடை இன்றித் திரிந்தான் என்பதற்காக இன்றைய மனிதனும் ஆடை இன்றித் திரிய முடியுமா? அப்படித்திரிவது இன்றைய உலகநடைமுறைக்குச் சரியாகுமா? ஆதலால் நாம் உலகநடைமுறைக்கு ஏற்ப உலகுடன் சேர்ந்து நடக்க வேண்டும். அதுவே உலகத்தோடு ஒட்ட ஒழுகலாகும். உலக வழக்கத்துக்கு மாறாக நடக்கும் அறிஞர்களின் செயலை அறிவிலார் செயலாகக் கருதுவது இக்குறளின் சிறப்பாகும்.
பல பட்டங்களைப்  பெற்று பேரறிஞர்களாக இருந்தாலும் உலகநடைமுறைக்கு ஏற்ப எப்படி வாழ்வது எனும் ஒழுக்கத்தை கல்லாதவராய் இருந்தால் அவரும் அறிவில்லாதோரே.

No comments:

Post a Comment