Wednesday, 28 March 2012

கணபதிவர அருளினன்



நாம் ஆனைமுகத்தவனை பிள்ளையார், கணபதி, விநாயகன் எனப்பல பெயர்களால் அழைத்து வணங்குகின்றோம். இந்து சமயத்தவர்கள் எந்தக்காரியத்தை செய்யத்தொடங்கும் போதும் பிள்ளையாரை வணங்கிய பின்பே செய்வது வழக்கமாகும்.  இன்று உலகெங்கும் பிள்ளையாருக்கு கோயில்கள் இருக்கின்றன. பிள்ளையார் வணக்கத்தை உலகெங்கும் பரப்பிக் கொண்டிருப்பவர்கள் ஈழத்தமிழர்களே. எமது பண்டைத் தமிழ் மூதாதையராகிய சங்ககாலத் தமிழர் பிள்ளையார் என்ற கடவுளை எந்த இடத்திலும் சொல்லவில்லை. அவர்கள் பிள்ளையாரை வணங்கவில்லை என்பதே உண்மை.
தமிழருக்கு பிள்ளையாரை அறிமுகம் செய்து வைத்த பெருமை சிறுத்தொண்டரையே சேரும். இவர் நரசிம்ம பல்லவனின் தளபதியாய் வாதாபிக்கு படையெடுத்து சென்று வென்று வந்தபோது அங்கிருந்த பிள்ளையாரை தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்தார். செங்கட்டாங்குடியில் உள்ள கணபதீச்சரம் கோயிலில் வைத்து வணங்கினார் என்பது வரலாறு. இவர் கி பி 630ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் காலத்தில் வாழ்ந்த சைவசமயச் சான்றோர்களாகிய திருஞானசம்பந்தரும், அப்பருமே முதன் முதல் தமிழர் வரலாற்றில் பிள்ளையாரைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். 
இலண்டனில் படிக்கும் பிள்ளைகளூக்கு சமயம் ஒரு பாடமாக இருக்கின்றது. அந்த சமயபாடம் எல்லா  மதங்களையும் தனித்தனியே சிறிது சிறிது விளக்கிச் சொல்கிறது. அப்படிச் சொல்வது நல்லது என்றே நினைக்கின்றேன். அதனால் ஒவ்வொரு மதங்களும் என்ன சொல்ல வருகின்றன என்ற ஒரு சிறு தெளிவு பிள்ளைகளுக்கு ஏற்படும். இந்து சமயத்தைக் கூறும் பகுதியில் பிள்ளையாரின் பிறப்பைப் பற்றி ஒரு கதை வருகின்றது. அக்கதை சிவமகாபுராணத்தில் இருக்கின்றது. 
ஒருநாள் பார்வதிதேவி அவரின் உடலில் இருந்த ஊத்தைகளை திரட்டி ஒரு பிள்ளையை உருவாக்கி, அதற்கு உயிர் கொடுத்து காவலுக்கு வைத்துவிட்டு நீச்சல் தடாகத்தில் குளிக்கச் சென்றாராம். அங்கே வந்த சிவனை அப்பிள்ளை போகவிடாது தடுக்க, சிவன் பிள்ளையின் தலையை துண்டித்தார். அதனைக் கண்ட பார்வதி அழுதார். அதனால் சிவன் ஒரு யானையின் தலையை வெட்டி பிள்ளையின் உடலில் பொருத்தி உயிர்பெற்று எழச்செய்தார். அவரே பிள்ளையார். இதுவே அக்கதை. 
இந்து சமயக் கதைகளில் ஒன்றாக அதைப் படிக்கிறார்கள். ஆனால் சில வருடங்களாக அக்கதையில் சிறு மாற்றம் செய்திருக்கிறார்கள். பார்வதிதேவியின் உடலில் இருந்து எடுத்த ஊத்தைக்குப் பதிலாக பார்வதிதேவி பூசிக்குளிக்க வைத்திருந்த அரைத்த சந்தனத்தில் பிள்ளையார் செய்ததாக அக்கதை மாற்றப்பட்டுள்ளது. இந்து சமயம் கூறும் பிள்ளையாரின் கதைகளில் இதுவும் ஒன்று.
நம் சைவசமயம் என்ன சொல்கிறது?. உமையம்மையார் பெண்யானையின் உருவத்தை எடுக்க, பெரிய ஆண்யானையின் வடிவத்தோடு தனது அடியை வணங்குபவரின் துன்பத்தை நீக்கும் பொருட்டு, சிவன்  பிள்ளையார் பிறக்க அருள் செய்தார். பிள்ளையாரை தமிழருக்கு அறிமுகம் செய்து வைத்த சிறுத்தொண்டநாயனார் காலத்து கதையே இது. ஏனெனில் இக்கதையை ஞானக்குழந்தையாகிய திருஞானசம்பந்தர் தம் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். 
நம் எல்லோருக்கும் தெரிந்த தேவாரமே அது. எனினும் பலர் அத்தேவாரம் என்ன சொல்கின்றது என்பதைக் கண்டு கொள்வதில்லை. உமையும் சிவனும் பெண்யானையாகவும் ஆண்யானையாகவும் உருவெடுக்கப் பிறந்தவரே பிள்ளையார் எனக்கூறும் தேவாரத்தை ஒருக்கால் படித்துப் பாருங்கள். 
“பிடியதன் உரு உமை கொள மிகுகரி அது
வடிவொடு தனது அடி வழிபடுமவர் இடர் 
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே”

பிடி [பெண்யானை] அதன்  உரு [வடிவத்தை] உமை கொள [எடுக்க] மிகுகரி [பெரிய ஆண்யானை] அது வடிவொடு [வடிபத்தோடு] தனது அடி வழிபடும் அவர் [தனது அடியை வழிபடுபவரது] இடர் [துன்பத்தை] கடி[களைய] கணபதி வர அருளினன் [பிள்ளையார் பிறக்க அருள்செய்தார்] மிகுகொடை வடிவினர் [தியாகராசராகிய சிவன்] பயில் வலிவலம் உறை இறையே”

இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:

1.  பிடி  -  பெண்யானை
2.  உரு  -  உருவம்
3.  கொள  -  எடுக்க
4.  கரி  -  ஆண்யானை
5.  வடிவொடு - வடிவத்தோடு
6.  இடர்  -  துன்பம் 
7.  கடி  -  கடிதல் (நீக்குதல்)
8.  மிகுகொடைவடிவினர் - தியாகராசராகிய சிவன் 

No comments:

Post a Comment