தமிழிலே ‘தாயைப்போலப் பிள்ளை நூலைப்போல சேலை’ என்ற இனிய பழமொழி உண்டு. இப்பழமொழி உலகிலுள்ள யாவற்றிற்கும் பொருந்தும். பட்டு நூலில் நெசவு செய்தால் பட்டுத்துணியும், பருத்தி நூலில் நெசவு செய்தால் பருத்தித் துணியும் கிடைப்பது போல எந்தப் பொருளால் எதைச் செய்கின்றோமோ அந்தப் பொருளின் தன்மையையே அது காட்டி நிற்கும். இது பொருட்களுக்கு மட்டுமல்ல மொழிகளுக்கும் பொருந்தும்.
மொழி என்றால் என்ன? சிலர் பல ஒலிகளின் தொகுதியே மொழி என்பர். அதனை ஏற்றுக் கொள்வது சிறிது கடினம். ஏனெனில் இடிமுழக்கமும், கடல் அலையின் ஓசையும் ஒலியே. அவற்றை மொழியெனச் சொல்ல முடியுமா? ஆதலால் மனிதர் எழுப்பும் ஒலியின் தொகுதியை பேச்சுமொழி எனச்சொல்லலாம். இன்றைய நிலையில் எமது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் மற்றவர்களோடு பறிமாறிக்கொள்ள உதவுவதே மொழி என்றும் சொல்ல முடியாது. அதுபோல் வெறும் எழுத்துக்களும் சொற்களும் சேர்ந்த கலவையும் மொழியல்ல.
அது ஓர் இனத்தின் மக்களின் மரபு வழியை, பண்பாட்டை, நாகரீகத்தை, கலைகளின் தன்மையை, காதலை, வீரத்தை, அரசியல் அமைப்பை, சமயக்கொள்கையை எடுத்துக் காட்டும் பொன் ஏடு. அந்தப் பொன்னேட்டைப் புரட்டிப் பார்த்தால் மூதாதையர் எமக்கு விட்டுச்சென்ற அறிவுச்சுரங்கமாக மொழி இருப்பதைக் காணலாம். முன்னோர் தமது வாழ்க்கையில் கண்டறிந்த உண்மைகளையும் ஆய்வுகளையும் எடுத்துச் சொல்வதும் மொழியே.
முதல் தோன்றிய மனிதர் வெவ்வேறு வகையில் ஒலிகளை எழுப்பி ஒருவருக்கொருவர் தத்தமது கருத்தைப் பரிமாறிக் கொண்ட போதிலும் சைகை மொழியே முதற்தோன்றியது எனலாம். இன்றும் நாம் மொழி தெரியாவிட்டால் எமது கருத்துக்களை சைகையாலேயே மற்றவர்க்கு புரியவைக்க முயல்கின்றோம். வாயால் பேசமுடியாத காதால் கேட்கமுடியாத சிறுகுழந்தைகள் கூட ஒருவரோடு ஒருவர் சைகையால் பேசிக்கொள்வது, சைகை மொழியே மானுடனின் முதல் மொழி என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அதுமட்டுமல்லாமல் உலகின் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் எது? என்ன? எங்கே? போன்ற கேள்விகளுக்கு விரல்களை மடக்கி முட்டிக்கையாகப் பிடித்து கையை ஆட்டி சைகையால் கேட்பதும் அந்த எச்சத்தின் மிச்சமே.
மனிதர் மொழியை பலவகையில் பயன்படுத்துகின்றனர். மொழி பேசவும் கேட்கவும் எழுதவும் படிக்கவும் மட்டுமல்ல சிந்தனைக்கும், கற்பனைக்கும், கனவு காண்பதற்கும், நினைவுகளை மீட்டவும் உதவுகின்றது. இன்றைய பல மொழிகளில் இருக்கும் பிசிருகளுக்கும் சிக்கல் தன்மைக்கும் இவையே காரணமாகும். ஒவ்வொரு மொழியும் அது பிறந்த இனத்தின் செயல் திறனையும் அறிவாற்றலையும் கொண்டே வளர்நடை போட்டு வலம்வருகின்றது. பேசுவதற்கும் எழுதுவதற்கும் மட்டும் துணைபுரிவது மொழியல்ல எனும் உண்மை இவற்றால் பெறப்படும். ஆதலால் மனித மொழியின் பிறப்பே இன்றைய மனிதரின் வளர்ச்சிக்கும் அறிவியற் கண்டுபிடிப்புகளுக்கும் வித்திட்டது.
உலகெங்கும் 6809 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் அநேக மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. பேச்சு வழக்கில் மட்டுமிருக்கின்றன. உலகில் இன்று பேசப்படும் மொழிகளில் கிட்டத்தட்ட 3000 மொழிகள் அடுத்த நூற்றாண்டில் அழிந்து போகுமாம். ஏனெனில் இரண்டு மூன்று பேர் பேசும் மொழிகளும் பத்து பேர் பேசும் மொழிகளும் ரஷ்யா, சுவீடன், நோர்வே, இந்தியா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் இருக்கின்றன.
உயிர்கள் பிறந்து வளர்ந்து அழிவது போல மொழிகளும் பிறந்து வளர்ந்து அழிகின்றன. முதன்மையமான மொழியாகப் பேசுவார் இல்லாது போனாலும் அந்தமொழியால் கிடைத்த இலக்கியம், சட்டம், அறிவியல், சமயக் கொள்கைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டால் அம்மொழியை இறந்தமொழி என்பர். இறந்த நிலையிலிருந்து இல்லாது ஒழிந்த மொழி அழிந்த மொழியாகும்.
Bo மொழியை கடைசியாகப் பேசியவர் இவரே
Bo மொழியை கடைசியாகப் பேசியவர் இவரே
ஒரு மொழி அழியும் பொழுது அந்த மொழி பேசிய குழுமத்தின் எண்ணங்கள், போதனைகள், கண்டுபிடிப்புகள் யாவும் மனித வரலாற்றுச் சுவடியிலிருந்து அழிந்துவிடும். அந்தமான் தீவில் பல்லாயிர வருடங்களாக பேசப்பட்டு வந்த ‘போ’ (Bo) எனும் மொழி 2010ம் ஆண்டு மாசி மாதம் 4ம் திகதி அழிந்து போய்விட்டது. அந்த மொழியுடன் அது மனித நாகரீக வளர்ச்சிக்கு வழங்கிய எத்தனையோ சிறந்த சிந்தனைகளும் அழிந்துவிட்டன. உயிர்கள் அழிவதைவிட மொழிகள் அழிவதே உலகவளர்ச்சிக்கு பேரிடராகும். எனெனில் மானுடனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு மொழியே. மொழிகள் அழிவதற்கு
- வளர்ச்சி அடைந்த பிறமொழித்தாக்கம்.
- பிறமொழி மோகம்.
- தமது மொழிமேல் பற்றில்லாமை.
- மொழியை எழுதாது, பேசாது தவிர்த்தல்.
- வளர்ந்து வரும் உலகமயமாக்கம்.
- இலத்திரன் தொழில் நுட்பத்தாக்கம்.
போன்றவையும் காரணமாகும். இறந்த மொழிகள் மனிதர்களின் முயற்சியால் மீண்டும் புத்துயிர் பெற்று எழுவதுண்டு. அப்படி உயிர் பெற்ற மொழிகளுக்கு வேல்ஸ் மொழியையும் ஹீப்ரு மொழியையும் உதாரணமாகச் சொல்லலாம்.
உன் தாய்மொழி என்ன எனக்கேட்கிறார்களே!, தாய்மொழி என்றால் என்ன? இன்றைய உலகமயமாக்கப்பட்ட சூழலில் எவர் என்ன மொழி பேசினாலும் அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதைக் காட்டும் மொழியே தாய்மொழியாகும். உயிர்கள் ஒவ்வொன்றும் பண்புகளால் வேறுபடுவது போல மொழிகளும் தத்தமது பண்புகளால் வேறுபடுகின்றன. ஆனால் அவை அடிப்படையில் தத்தமது தாய்மொழியின் பண்புகளை ஒத்தே இயங்குகின்றன.
இன்று உலகில் ஆறாயிரத்திற்கும் அதிகமான மொழிகள் பேசப்பட்ட போதும் ஆறு மொழிகளே செம்மொழிகள் என்ற தகுதியைப் பெற்றுள்ளன.
ஒரு மொழி செம்மொழி எனும் தகுதியைப் பெறுவதற்கு:
1. மிகத் தொன்மையான மொழியாக இருக்க வேண்டும்.
2. பிற மொழியின் துணையின்றி தானே தனித்து இயங்கக் கூடிய மொழியாக இருக்க வேண்டும்.
3. இலக்கிய வளம் நிறைந்த மொழியாக இருக்க வேண்டும்.
4. அந்த இலக்கியங்கள் அம்மொழி பேசிய மக்களின் பண்பாட்டை, கலைகளை எடுத்துக்காட்ட வேண்டும்.
5. அம்மொழி தாய்மொழியாய் இருந்து பல பிறமொழிகளை அது தோற்றுவித்திருக்கவேண்டும்.
ஆகிய ஐந்து தகுதிகளும் இருக்க வேண்டும். இத்தகுதிகளைப் பெற்ற உலகின் செம்மொழிகளை தொடர்ந்து காண்போம்.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment