இளைஞன் ஒருவன் மயிலின் தோகை போன்ற கூந்தலை உடைய இளமங்கையைக் காண்கிறான். காதல் கொள்கிறான். அவளின் காதலுக்காக அவள் பின்னே அவன் அலைந்து திரிகிறான். அவளோ அவனைக் கண்டுகொள்ளவில்லை. ஒரு நாள் அவள் பெரியமடுக் குளத்தில் குளித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து
ஆண்: மாமடுக் கங்கையில
மயிலே நீ தலைமுழுக
மீன்ரூபங் கொண்டு
மிதந்திடுவன் உன்னன்பால்
என நாட்டுப்பாடலாக தன் அன்பை வெளிப்படுத்துகிறான்.
'மாமடுக் கங்கையில மயிலே நீ தலைமுழுக' என்று சொன்னவனுக்கு அவள் தன்னைப் புறக்கணிப்பது ஞாபகம் வர, கொஞ்சம் சிந்தித்து நீ அன்பு வைத்தால் மீன் வடிவம் எடுத்து மிதந்து வருவேன் என்கிறான். அதிலே 'உன் அன்பால்' என்பதை மிக அழுத்திச் சொல்கிறான். அத்துடன் அவன் விட்டுவிடவில்லை தன்னிலையைச் தயக்கத்துடன் மெல்லக் கூறுகிறான்.
மழைக்காலங்களில் வாய்க்காலில் தண்ணீர் ஓடுவதும், அந்நீர் வீழும் இடங்களில் வாழும் மீன்கள் தாம் பிறந்த இடங்களை விட்டு ஓடிக்கொண்டிருக்கும் நீரோட்டத்தில் எதிரேறி உலாவித் துள்ளி மகிழ்வதையும் பார்த்திருக்கிறான். அதை நினைத்து அவளை பெண்மயிலே என விளித்து, தனது நிலையை அம்மீன்களுடன் ஒப்பிட்டுப் பாடுகிறான். மீன்களைப்போல் பிறந்த சூழலில் வாழ்ந்து அலுத்துப்போய் இருந்தவன் புது நினைவு வர புது இடம் தேடி அவளை நாடி தன் வாழ்வுக்கு ஒரு இன்பம் [நயம்] கிடைக்கும் என்று வந்தானாம். அதுவும் 'வந்துலவும் மீனது போல போவதும் மீண்டும் வருவதுமாக அலைந்து திரிகிறானாம்.
வந்துலவு மீனது போல்
நாடிவந்தேன் பெண்மயிலே! ஒரு
நயம் கிடைக்க வேணுமென்னு"
- நாட்டுப்பாடல் (விடத்தல் தீவு/மடு )
- (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
விடத்தல் தீவுக்காதலன் தன்னைப் பொருட்படுத்தாத காதலிக்கு தன் நிலையை நாட்டுப் பாடலாகச் சொன்னான். இதுபோல் சங்ககால மங்கை ஒருத்தியும் அவளின் காதலுக்காக அலைந்து திரிந்தவனைப் பொருட்படுத்தவில்லை. அவனின் காதலை காதலிக்கு எடுத்துச் சொல்ல அவனால் முடியவில்லை. ஆனால் அவளின் தோழி அவன் நிலையை உணர்ந்து அவளுக்கு
"சேரி சேர மெல்ல வந்து வந்துஅரிது வாய் விட்டு இனிய கூறி
வைகல்தோறும் நிறம்பெயர்ந்து உறையும் அவன்
பைதல் நோக்கம் நினையாய் தோழி.......!"
- (குறுந்தொகை: 298: 1 - 4)
எனச் சொல்வதை பரணரின் பாடல் தருகின்றது.
'தோழியே! ஒவ்வொரு நாளும் நாம் இருக்கும் தெருவுக்கு மெல்ல வந்து வந்து, எப்போதாவது ஒருமுறை வாய் திறந்து இனிமையாகப் பேசுகிறானே; [உன்னன்பை எதிர்பார்த்து] அவன் தன்னுடைய இயல்பான தன்மையில் இருந்துமாறி [நிறம்பெயர்ந்து], வாழுகின்ற துயரத்திற்கான காரணத்தை நினைத்துப்பார்' என்கிறாள்.
நாட்டுப்பாடல் காதலன் 'தண்ணீரில் வந்துலவும் மீனது போல்' எனக்கூறுவதும் பரணரின் தோழி 'சேரி சேர மெல்ல வந்து வந்து' எனக்கூறுவதும் ஒப்பு நோக்கத்தக்கது. சங்ககாலத் தமிழரின் வாழ்வியல் தொடர்ந்தும் ஈழத்தில் இருந்ததை விடத்தல்தீவு நாட்டுப்பாடல் மிக நன்றாக எடுத்துச் சொல்கிறது.
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
சொல்விளக்கம்
1. மீன்ரூபம் - மீன்வடிவம் 2. நயம் - இன்பம்
3. சேரி - தெரு 4. அரிது - எப்போதாவது
5. வைகல் தோறும் - நாள் தேறும் (ஒவ்வொரு நாளும்)
6. நிறம்பெயர்ந்து - இயல்புமாறி 7. உறையும் - வாழும்
8. பைதல் - துயரம் 9. நோக்கம் - காரணம்
குறிப்பு:
சொல்விளக்கம்
1. மீன்ரூபம் - மீன்வடிவம் 2. நயம் - இன்பம்
3. சேரி - தெரு 4. அரிது - எப்போதாவது
5. வைகல் தோறும் - நாள் தேறும் (ஒவ்வொரு நாளும்)
6. நிறம்பெயர்ந்து - இயல்புமாறி 7. உறையும் - வாழும்
8. பைதல் - துயரம் 9. நோக்கம் - காரணம்
No comments:
Post a Comment