நீரின் தேவையையும் அதைப் பெருக்கும் வழியையும் பண்டைத்தமிழர் நன்கு அறிந்திருந்தனர் என்பதை அப்புறனூற்றுப் பாடல் தெளிவாகக் காட்டுகிறது. இளமையாக என்றும் வாழவேண்டுமா? அதற்கு அமிழ்தம் வேண்டும். அந்த அமிழ்தத்தைத் தேடி வானவர் நாட்டிற்கு போகவேண்டியதில்லை. ‘மழை தவறாமல் பெய்வதால் உலகம் இயங்குகின்றது. ஆதலால் மழையே உலகஉயிர்களை வாழ்விக்கும் அமிழ்தம் என்பதை
“வானின்று உலகம் வழங்கி வருதலாற்
தானமிழ்தம் என்று உணரற்பாற்று”
எனத் திருக்குறள் சொல்கிறது.
நீர் என்ற அமிழ்தத்தால் உலகம் செழித்து வாழவேண்டும் என்பதற்காக அன்றைய பெண்கள் மார்கழி மாதம் தொடக்கம் பங்குனி மாதம் வரை நோன்பு நோற்றார்கள். அதனைச் சங்க இலக்கியங்கள் எடுத்துச் சொல்கின்றன. அன்றைய தமிழரின் சமூக வாழ்வியற் கட்டமைப்பை நெறிப்படுத்திய பெண்களின் பங்கை அவை சொல்கின்றன எனக் கொள்ளலாம். பண்டைய தமிழர் விரதத்தை நோன்பு என்றே அழைத்தனர். அது தமிழரின் நோன்பின் தொன்மையைக் காட்டும். ஆனால் முஸ்லீம்களின் விரதத்தையே நோன்பு எனச் சொல்வதாக பலரும் எழுதுகின்றனர். அப்படி எழுதுவோர் சங்க நூல்களைப் புரட்டிப் பார்ப்பது நல்லது.
“வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
தைஊண் இருக்கையின்.........”
- (நற்றிணை: 22: 6 - 7)
இவரைப் போலவே நற்றிணையில் பூதன் தேவனாரும்
“இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇத்
தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோட் குறுமகள்” - (நற்றிணை: 80: 6 - 8)
என நகையணிந்த தோழியரோடு சேர்ந்து, நாணம் அவளைத் தடுக்கவும் தைமாதக் குளிரில் நீராடும் பெருந்தோளையுடைய இளம்பெண்ணைக் காட்டுகிறார்.
தைமாதத்தில் பெண்கள் நீராடிய குளத்தை
“நறுவீ ஐம்பால் மகளிராடுந்
தைஇத் தண்கயம்” - (ஐங்குறுநூறு: 84: 3 - 4)
என ஐங்குறு நூறும் சொல்கிறது.
பெண்கள் உலக நன்மைக்காக நோன்பிருந்து நீராடியது போல நல்ல கணவன் தமக்குக் கிடைக்க வேண்டுமென தைத்திங்களில் நீராடி, வீடு வீடாகச் சென்று பாடி தாம் பெற்றதை பலருக்கும் உவந்து கொடுத்தை
“தையில் நீராடி தவம் தலைப் படுவையோ”
எனவும்
“பொய்தல மகளையாய்ப் பிறர்மனைப் பாடி நீ
எய்திய பலர்க்கீந்த பயன் பயக்கிற்பதோ”
எனவும் கலித்தொகை சொல்லும்.
இப்பாடல் வரி நல்லதொரு செய்தியை எமக்குச் தருகிறது. அந்நாளில் தவம் செய்வோரும் நோன்பு நோற்போரும் நாளைக்கு வேண்டுனென விரும்பாது தமக்குக் கிடைத்தை அன்றே மற்றவர்க்கு கொடுத்து விடுவர். ஆனால் இன்று தவம் செய்யும் சுவாமிமாரிடம் கோடி கோடியாக முடங்கிக் கிடக்கிறது. அது சுவாமிமாரின் குறையல்ல. அவர்களுக்கு அள்ளிக் கொடுப்போரின் அறியாமை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை உணர்ந்து, பிறருக்கு கொடுத்து தாமும் வாழும் பழக்கத்தை இளம் சிறுவர் சிறுமியர்க்கு உண்டாக்க ஏற்பட்டதே தைநீராடலாகும்.
இந்நோன்பு பெண்களால் மார்கழித் திருவாதிரை வருவதற்கு பத்து நாட்களுக்கு முன்பிருந்து திருவெம்பாவையாக, பாவை நோன்பாகத் தொடங்குகின்றது. மாணிவாசகரின் திருவெம்பாவையும் ஆண்டாளின் திருப்பாவையும் அதைச்சொல்லும். மார்கழித் திருவாதிரை அன்று மார்கழி நீராடி, தொடர்ந்தும் அம்பாஆடலாய் நீராடி, தைப்பூசம் வரையும் நோன்பிருப்பர். நாற்பது நாட்களுக்கு மேலாக, பனியென்றும் குளிரென்றும் பாராது நோன்பிருந்த பெண்கள், நோன்பின் பயனைப்பெற தைமாத முதல் நாளில் இருந்து தெய்வத்திடம் வேண்டுவர். அதனால் தை முதல்நாளை தைத்திருநாளாக தையலர் கொண்டாடினர். தைப்பூசத்தன்று நீராடி அந்நோன்பை நிறைவு செய்வர். நோன்பை நிறைவு செய்ய ஆடிய நீராடல், தைநீராடல் என சங்கத்தமிழரால் போற்றப்பட்டது.
திருஞானசம்பந்தரும் தேவாரத்தில்
“மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்”
என்று பெண்கள் தைப்பூசம் கொண்டாடியதைக் சொல்கிறார்.
இத்தேவாரத்தில் பெண்களை நேரிழையார் என்கிறார். ஆடை நெய்வதற்கு இரண்டு விதமாக நூல் பாவிக்கப்படும். ஒன்று நெடுக்கவும் மற்றது குறுக்கவும் போகும். நெடுக்காக ஓடும் நூல் நேரிழை எனவும் குறுக்காக ஊடும் நூல் ஊடு இழை எனவும் அழைக்கப்படும். நெசவுக்கு நேரிழை தானே ஆதாரம்! எத்தனை ஆயிரம் ஊடு இழை இருந்தாலும் நேரிழை இல்லாவிட்டால் அது ஆடையாகாது. உலகையே நேரிழையாகத் தாங்குபவள் பெண் எனக்கருதியே அன்றைய தமிழர் பெண்களை நேரிழையார் என்றனர். நேரிழை, தையல் போன்ற பெண்பாற் சொற்களுக்கு எதிரான ஆண்பாற் சொற்கள் தமிழில் இல்லை என்பதும் இங்கு நோக்கதக்கது. நேரிழையாய் நிமிர்பவளும் தையலாய் கட்டுபவளும் கட்டுப்படுபவளும் பெண்ணே!
நேரிழையார் கொண்டடிய தைத்திருநாள் அது தையலர் நாள் தானே?
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment