குறள்:
“அருளென்னும் அன்புஈன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு” - 757
பொருள்:
அன்பு பெற்றெடுத்த அருள் என்ற குழந்தை, பொருளென நாம் கூறும் செல்வச் செவிலித் தாயாலேயே இருக்கிறது.
விளக்கம்:
பொருள் செயல்வகை என்னும் அதிகாரத்தில் உள்ள ஏழாவது திருக்குறள் இது. நாம் எதற்காக பொருளைத் தேடவேண்டும் என்ற தெளிவை உண்டாக்குவதே இக்குறளின் நோக்கமாகும்.
எவரிடத்தில் இரக்கம் இருக்கின்றதோ அவரிடத்தில் அன்பு இருக்கும். அன்பு ஒரு தாயைப் போன்றது. ஒரு தாயை சேய் உணர்வது போல அன்பை நாம் உணர்ந்து கொள்ளலாம். தன்நலம் அற்று பிறருக்காக மனம் உருகுவதே அருள். அது ஒரு சக்தி. அந்த சக்தி எல்லோர் இடத்திலும் இருப்பதில்லை. அன்பு இருப்பவர் நெஞ்சிலே அருள் சுரக்கும். அதாவது அருள் பிறக்கும். குழவி என்றால் குழந்தை. குழந்தை பிறப்பது போல அன்புள்ளவர் நெஞ்சிலே அருள் பிறக்கிறது. அதனையே வள்ளுவர் ‘அருளென்னும் அன்பீன் குழவி‘ என்றார்.
அன்பு எனும் தாய் பெற்றேடுத்த குழந்தையை நாம் அருள் என்கிறோம். எத்தனையோ ஏழை எளியவர் நெஞ்சங்களிலும் அருள் பிறக்கிறது. ஆனால் அதனால் நீண்டகாலம் வாழ முடியாது. அது பிறந்த அக்கணமோ அல்லது சிறிது நேரத்தின் பின்போ மாண்டு போகிறது. அன்பான ஓர் ஏழையின் வீட்டிற்கு ஒரு முதியவர் வந்து உணவு கேட்கிறார். ஏழையிடம் ஏதும் இல்லை எனினும் குடிக்க நீராவது கொடுப்பான். ஆனால் முதியவரின் பசியை தீர்க்கவில்லையே என வருந்துவான். காரணம் என்ன? அவனின் நெஞ்சில் பிறந்த அருளை வளர்த்து முதியவரின் பசிக்கு தாரைவார்க்க அவனிடம் பொருள் இருக்கவில்லை.
அதனால் திருவள்ளுவர் பொருளென்ற செல்வமே அருளை வளர்ப்புத் தாயாக இருந்து வளர்க்கின்றது என்ற கருத்தில் அன்பு பெற்ற அருட்குழந்தை செல்வமாகிய செவிலித்தாயால் வாழ்கின்றது என்றார். எனவே அன்பு உள்ளவர் நெஞ்சில் பிறக்கின்ற அருளை வளர்க்க பொருளைத் தேடிப் பயன்படுத்துங்கள்.
No comments:
Post a Comment