குறள்:
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் - 605
பொருள்:
விரைந்து செய்ய வேண்டியதை மெல்லச் செய்வது, செய்யும் செயலை மறந்தே போவது, எதையும் செய்யாது சோம்பியிருப்பது, தூங்கியே காலத்தைக் கழிப்பது, ஆகிய நான்கும் கெட்டழிந்து போவார் ஏறும் உல்லாசக்கப்பலாகும்.
விளக்கம்:
ஒருவர் தான் செய்யவேண்டிய வேலையை நீடித்து செய்வது நெடுநீராகும். என்னால் எதனையும் செய்யமுடியாது என சோர்ந்து இருத்தல் மடியாகும். ஓயாததூக்கத்தை துயில் என்பர். கெட்டழிந்து போவோரே கெடுநீரார். காமக்கலனை உல்லாசக்கப்பல் எனப்பொருள் கொண்டுள்ளேன்.
இக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிட்ட நான்கு செயல்களும் நேரத்தை வீணாக்குபவையே. நெடுநீராகிய உல்லாசக்கப்பலில் ஏறினால் அது எம்மை ஆமை வேகத்தில் தொழிற்படவைத்து இன்று காலையில் முடிக்கவேண்டிய வேலையை மூன்று மாதங்களின் பின் முடிக்கவைக்கும். மறதி என்ற உல்லாசக் கப்பலில் ஏறிப்பயணம் செய்தால் நாம் செய்யும் வேலைகளையே மறக்கவைத்து அல்லற்படுத்துவதோடு வைத்தபொருளை எங்கு வைத்தோம் எனத்தேடித்தேடியே பல மணித்துளிகளைக் கரைக்கும். நம்மில் பெரும்பாலானோர் பவனிவருவது இந்த மறதியெனும் உல்லாசக்கப்பலிலேயே.
சோம்பலாகிய உல்லாசக்கப்பல் எம்மை இருந்த இடத்தைவிட்டு நகரவிடாது. சோர்ந்து இருந்த இடத்தில் இருந்தபடியே சுகம் காணவைத்து காலம் ஓடியதை நாம் உணராதவாறு வெகு உல்லாசமாக எம்மை இழுத்துச்செல்லும். துயில் எனும் உல்லாசக்கப்பலில் ஏறி காலவரையறை இன்றி உல்லாசமாகத் தூக்கத்தில் எம் ஆயுற்காலத்தை ஓட்டலாம்.
ஆக இந்த நான்கு உல்லாசக் கப்பல்களில் ஒன்றில் ஏறினாலே அது அழிவைத் தரும். நான்கிலும் எறி நாம் கெட்டழிந்து போக வேண்டுமா? எதைச்செய்தாலும் விரைந்து மறவாது சோம்பலின்றி விழித்திருந்து செய்யுங்கள். எனெனில் சுறுசுறுப்பின்மை, மறதி, சோம்பல், நித்திரை ஆகிய நான்கும் உல்லாசமாக இருப்பினும் கேட்டையே தரும்.
No comments:
Post a Comment