எல்லோரா குகையில் இராவணன்
"குறைக்காட்டான் விட்டதேர் குத்த மாமலை
இறைக்காட்டி எடுத்தான்"
- (பன்னிருதிருமுறை: 5: 9: 9)
- (பன்னிருதிருமுறை: 5: 9: 9)
என்று இத்தேவாரத்தில் திருநாவுக்கரசு நாயனார் கூறும் குறைக்காட்டான் யார்? அவன் எங்கு வாழ்ந்தான்? அவனுக்கு ஏன் குறைக்காட்டான் என்ற பெயர் வந்தது என்ற கேள்விகளுக்கு விடைதேடிய போது அறிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இலங்கை வேந்தனான இராவணனனையே அவர் குறைக்காட்டான் எனக்கூறுகிறார். அவன் ஓட்டிச்சென்ற புட்பகவிமானம் கையிலை மலையை இடித்ததால் தனது முன்கைகளால் மலையைத் தூக்கினான் எனச்சொல்லும் இடத்தில் திருநாவுக்கரசு நாயனார் அவனைக் குறைக்காட்டான் என்று எமக்குச் சொல்லிக் காட்டுகிறார்.
காட்டில் வாழ்பவனை காட்டான் என்போம். மறைக்காட்டில் வாழ்ந்தால் மறைக்காட்டான் என்றும் பெருங்காட்டில் வாழ்ந்தால் பெருங்காட்டான் என்றும் கூறுவோம். எனவே குறைக்காட்டில் வாழ்ந்தவனோ வாழ்பவனோ குறைக்காட்டான் ஆவான். அதனை நாம் அறிவோம். ஆனால் தேவாரங்களுக்கு தெளிவுரை ( கருத்து) எழுதிய பலர் குறைக்காட்டான் என்பதை குறைக்கு + ஆள்தான் எனப்பிரித்து, குற்றங்களுக்கு ஆளாகியவன் எனஎழுதி தாமும் தடுமாறி படிப்போரையும் தடுமாற வைத்துள்ளனர். இலகுவாக எவரும் புரிந்து கொள்ளக்கூடிய தமிழ்ச்சொல்லின் உண்மையான கருத்தை குழிதோண்டிப் புதைத்துள்ளனர்.
குறை + காடு = குறைக்காடு. குறைக்காடு என்றால் என்ன? இங்கு குறை என்பது தமிழில் ஆற்றிடைக் குறையைக் குறிப்பதோடு எஞ்சியது அல்லது மிஞ்சியது என்ற கருத்தையும் தருகிறது. ஓர் ஆறு ஓடிவரும் போது மேடான இடம் குறுக்கிடால் அந்த ஆறு இரண்டாகப் பிரிந்து மீண்டும் சேர்ந்து ஓடும். ஆறு பிரிந்து சேர்ந்த இடங்களுக்கு இடைப்பட்ட நிலமே ஆற்றிடைக்குறை என அழைக்கப்படும். ஓர் ஆற்றின் இடையே அகப்பட்டுள்ள குறை நிலமே ஆற்றிடைக்குறை. இன்னொரு வகையில் சொல்வதானால் ஓர் ஆற்றின் நடுவில் திட்டுப் போல அன்றேல் தீவுபோல இருக்கும் இடம் என்றும் சொல்லலாம்.
ஆற்றிடைக்குறை (delta of the Ganges River - Photo: source Wikipedia)
ஆற்றின் அகலத்தையும் வேகத்தையும் திட்டின் உயரத்தையும் பொறுத்து ஆற்றிடைக்குறையின் அளவு இருக்கும். பழந்தமிழர் ஆற்றிடைக் குறையை அரங்கம், இலங்கை என்ற பெயர்களாலும் அழைத்தனர். திருச்சியில் ஓடும் காவேரி, கொள்ளிட ஆறுகளுக்கிடையே உள்ள ஆற்றிடைக்குறையே திருவரங்கம் (ஶ்ரீரங்கம்). பண்டைத்தமிழர் திரு ஆகிய இலட்சுமி வாழும் அரங்கம் என்ற கருத்தில் திருவரங்கம் என்றனர்.
அதுபோல் நமது நாடாகிய இலங்கையும் தானும் குமரியாற்றின் ஆற்றிடைக்குறை என்பதை தனது 'இலங்கை' எனும் தமிழ்ப் பெயரால் இன்றும் மெல்லச் சொல்கிறது. எமது காதுகளில் அச்சொல் கேட்பதேயில்லை. குறைக்காட்டான் என இலங்கை வேந்தனான இராவணனை திருநாவுக்கரசு நாயனார் இந்தத் தேவாரத்தால் சுட்டிக்காட்டியும், நம் அறிஞர் பலர் இலங்கை எனும் சொல் எந்த வேற்றுமொழியில் இருந்து வந்தது என்று தேடி பட்டியல் இடுகிறார்கள். அவர்கள் தமிழ்மொழியில் உள்ள சொற்களைத் தேட மறப்பதும் ஏனோ?
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment