Wednesday, 19 October 2011

குறள் அமுது - (5)


குறள்:
மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்                            - 457

பொருள்:
மனம் நல்லதானால் மனித உயிர்க்கு ஆக்கம் வரும், சேரும் இனம் நல்லதானால் எல்லாவிதப் புகழும் கிடைக்கும். 

விளக்கம்:
இத்திருக்குறள் சிற்றினம்சேராமை எனும் அதிகாரத்தில் ஆறாவது குறளாக இருக்கிறது. சிறுமைக்குணம் உடையோருடன் சேர்ந்து பழகாதிருப்பதால் வரும் நன்மைபற்றி இவ்வதிகாரம் சொல்கிறது. மனிதவாழ்வு மனிதமனத்தைச் சார்ந்ததாக இருக்கின்றது. மனிதர் பொன், பொருள், பதவி, என அலைவதும், உணவு, உடை என உழல்வதும் மனித மனத்தின் கவர்ச்சியாலேயே ஆகும். இவை மட்டுமல்ல பொய், புரட்டு, கோபம், பொறாமை, வஞ்சனை, வீறாப்பு, பகை என கெட்ட உணர்ச்சிகளுக்கு மனிதரை உள்ளாக்குவதும் மனமே. உலகம், ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அவரின் மனதின் இயல்பைக் கொண்டே எடை போடுகின்றது. 

மனிதமனம் கட்டுக்கடங்காத ஒரு குதிரை போன்றது. மனதைக் கட்டுப்படுத்தி நல்வழிப்படுத்த வேண்டியது எமது கடமையாகும். எனெனில் சிலர் போட்டி, பொறாமை, கரவு என தம் மனம் போனபோக்கில் வாழ்வதாலேயே கொலை, களவு, போர் என்ற பெரும் சூறாவளியுள் மனித இனமே சிக்கிச் சுழல்கிறது. 

ஒரு சிலரின் கெட்ட செயல்கள் பல்லாயிரக் கணக்காணோரின் வாழ்க்கையைப் சீரழிக்கிறது. மொழி, மதம் என்ற போர்வையில் உண்டாகும் போர்கள் மனித இனத்தை மட்டுமல்ல உலகில் வாழும் உயிர்களையும் மரங்களையும் அழித்து ஒழிக்கின்றது. அதனாலேயே வள்ளுவரும் மனம் நல்லதானால் உலக உயிர்கட்கு அழிவில்லை என்ற கருத்தில் மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் எனக்கூறியுள்ளார். மனநலம் ஒருவர்க்கு வாய்க்கவில்லை என்றால் எவ்வளவு கோடி பணம் இருந்தாலும் வாழ்வு சிறக்காது. இதனையே நம் முன்னோர் ‘மனம் போல வாழ்வு’ என்றனர். 

எமது மனம் தூய்மையாக இருக்கின்றது, நாம் சேரும் இனம் எப்படி இருந்தால் என்ன? என நினைத்து வாழ்வதும் தவறு. களவு எடுப்பாரோடு சேர்ந்தால் களவெடுப்பதும் கடை உடைப்பாரோடு சேர்ந்தால் கடை உடைப்பதும் மனித இயல்பு. நாம் சேரும் இனத்தின் தன்மையைக் கொண்டே எடை போடப்படுகின்றோம்.  ஆதலால் நாம் வாழும் இனமும் சேரும் இனமும் நல்லதாக இருக்க வேண்டும். நீங்கள் பிறந்த குடியால், உங்கள் குணத்தால், அறிவால், செய்கையால், பணத்தால் என பலவையாகப் புகழ் பெறலாம். எனினும் அறிவால் ஆற்றலால் தன்னலம் அற்ற பொது நலத்தொண்டால் - பெருகின்ற எல்லாவிதப் புகழையும் சேர்த்துத் தருவது இனநலமேயாகும். 

உலக உயிர்களுக்கு ஆக்கம் வருவதற்கு நம் மனதைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எல்லாப்புகழும் கிடைப்பதற்கு சேரும் இனம் நல்லதா என்று பார்த்துச் சேரவேண்டும் என்பதே திருவள்ளுவர் முடிபாகும். 

No comments:

Post a Comment