Tuesday 28 February 2017

கனிந்த தென்ன மாயமோ!


எல்லை இல்லா அன்பொடு
             ஏங்கிப் பக்தர் பாடிட
வில்லை ஒத்த புருவமும்
             விநயத்தில் நெளிந் திட
நெல்லை சபை தன்னிலே
             நடன ராசர் ஆடிட
கல்லை ஒத்த நெஞ்சமும்
             கனிந்த தென்ன மாயமோ
இனிதே,
தமிழரசி.

Monday 27 February 2017

சங்ககால உணவு உண்போமா! - 1


சங்ககாலத் தமிழர் காதலையும் வீரத்தையும் தமது இரு கண்ணெனப் போற்றினர் என்பதை சங்க இலக்கிய நூல்கள் காட்டுகின்றன. உணவை உண்ணாது காதலையும் வீரத்தையும் போற்றி வாழ முடியுமா? அத்துடன் பண்டைத் தமிழர் விருந்தோம்பலிலும் தலைசிறந்து விளங்கினர் என்பதையும் சங்கப்புலவோர் மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர். எதை? எப்படி? எதனுடன் உண்ணவேண்டும் என்ற முறைமையினை அறிந்திருந்தனர் எனும் உண்மையையும் சங்க நூல்கள் பதிவு செய்து வைத்துள்ளன.

“ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்
பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி
விருந்துஉறுத்து ஆற்ற இருந்தனெ மாக” 
                                                 - (புறம்: 381: 1 - 4)
‘இறைச்சியையும் [ஊனும்] உணவையும் [ஊணும்] வெறுப்பது [முனையின்] நல்லதென்று [இனிதெனப்], பாலோடு ஊற்றியவற்றையும் பாகிற் போட்டவற்றையும் தக்க அளவோடு கலந்து கொஞ்சமாகப் [மெல்லிது] பருகி, விருந்து உண்டு இருந்தோம்’ என்கிறார் புறத்திணை நன்னாகனார்.

விருந்தென்றால் நாம் என்ன செய்வோம்? அங்குள்ள தின்பண்டங்கள் எல்லாவற்றையும் உண்டு தீர்ப்போம். அன்று இரவே வயிற்று வலியில் நித்திரை இன்றித் தவிப்போம். ஆனால் எம் சங்கத்தமிழ் மூதாதையர் விருந்தில் இருந்த உணவுகள் சிலவற்றை உடம்புக்கு நல்லதல்ல என வெறுத்து, அளவோடு பருகி வாழ்ந்திருக்கிறார்கள். இதனையே திருவள்ளுவரும்
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு”
                                                        - (குறள்: 945)
எனச் சொல்லிச் சென்றுள்ளார். ஒன்றுக்கு ஒன்று மாறுபாடு இல்லாத உணவை அதிகமாக உண்ணாது இது போதும் என மறுத்து உண்போமேயானால் நோய்களால் உயிருக்குக் கேடு இல்லையாம்.

அப்படி உண்ட உணவுகளை உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன, கொறிப்பன எனப் பலவைகையாகப் பிரித்து உண்டதையும் சங்க நூல்கள் காட்டுகின்றன. சங்ககால மக்கள் தாம் உண்ட உணவுகளை எப்படிச் சமைத்தார்கள் என்பதையும் சங்கப் புலவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். புலவர்கள் கூறியவற்றில் சில உணவுகளை எனது தாயார் எனக்குச் சமைத்து தந்து நான் உண்டிருக்கிறேன். வேறுசிலவற்றை நானும் சமைத்து சுவைத்திருக்கிறேன். 

சங்ககால மக்கள் சமைத்து உண்ட ‘மாதுளம் பிஞ்சுக்கறி’ சமைப்பது எப்படி? தயிரைக் கடைந்து எடுக்கும் வெண்ணெய் இக்கறியைச் சமைப்பதற்குத் தேவையான பொருளாகும். அம்மா நெய்யை விட்டு சமைத்த மாதுளம் பிஞ்சுக்கறியை விட வெண்ணெய் போட்டு சமைத்த கறியே சுவையாக இருந்தது. இக்கறிக்கான மாதுளம் பிஞ்சைத் தெரிந்தெடுக்கும் போது பூ உதிர்ந்த பிஞ்சாக உள்ளே விதைகளைச் சூழ மெல்லிய இளம்சிவப்பு நிறச்சதைப்பற்றுள்ளதாய் எடுக்க வேண்டும். அல்லது கறி காறும்.

சங்ககால மக்கள் மாதுளம்பிஞ்சுக்கறியை
“சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புற பசுங்காய் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி அளைஇ….”
                                           - (பெரும்பா.படை: 306 - 308)
சிகப்பு பசுவின் [சேதா] மோர் மணக்கும் வெண்ணெயில் நிறைய [உருப்புற] மாதுளம் பிஞ்சுகளை [பசுங்காய்] பிளந்து [போழொடு] மிளகு சேர்த்து [கறிகலந்து] கறிவேப்பிலை [கஞ்சக நறுமுறி] போட்டுச் சமைத்ததாகப் பெரும்பாணாற்றுப்படை சொல்கிறது.

சங்ககால மாதுளம் பிஞ்சுக்கறி

தேவையான பொருட்கள்:
மாதுளம் பிஞ்சுகள்  -  15
வெண்ணெய்  -  1 மே. கரண்டி
மிளகு தூள்    -  1 மே. கரண்டி
முழு மிளகு  -  1 தே.கரண்டி
கறிவேப்பிலை
உப்பு  -  தேவையான அளவு

செய்முறை:
1. மிளகு தூளும் தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கலந்து கொள்க.
2. மாதுளம் பிஞ்சுகளைக் கழுவி காம்புப் பக்கம் கீழே இருக்கும்படி பிடித்து [ஊறுகாய்க்கு தேசிக்காயை வெட்டுவது போல்] இரண்டு வெட்டில் நான்கு துண்டுகளாகப் பிளந்து கொள்க.
3. பிளந்த வாய்க்குள் மிளகுக் கலவையை இட்டு அரை மணிமேரம் ஊறவிடவும்.
4. வாயகன்ற பாத்திரதை சூடாக்கி வெண்ணெய் இட்டு, உருகிக் கொதிக்கும் போது முழு மிளகைப் போட்டு பொரிக்கவும்.
5. பொரிபட்டமிளகு வெண்ணெயில் மிதக்கும் போது கறிவேப்பிலையைச் சேர்த்து ஊறவைத்துள்ள மாதுளம் பிஞ்சுகளையும் போட்டு இளஞ்சூட்டில் வதக்கி வெந்ததும் இறக்கவும்.

குறிப்பு:
இந்த மாதுளம் பிஞ்சுக் கறியை சோறு, பிட்டு, ரொட்டி எதனுடனும் உண்ணலாம்.
இனிதே,
தமிழரசி.

Saturday 25 February 2017

குறள் அமுது - (130)


குறள்:
“புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு”                              - 340

பொருள்:
உடம்பினுள் ஒண்டிக் குடியிருந்த உயிருக்கு நிலையான வீடு அமையவில்லையோ?

விளக்கம்:
நிலையாமை எனும் அதிகாரத்தில் வரும் பத்தாவது திருக்குறள் இது. உலகின் நிலையில்லாத் தன்மையை இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் எடுத்துச் சொல்கிறார். இந்த உலகில் பிறந்த எந்த ஓர் உயிரும் ஏன் உடம்பினுள் நிலைத்து இருப்பதில்லை? எனும் கேள்விக்கான விடையை இக்குறள் தருகிறது.

புகுந்து நிலையாகத் தங்கிவாழும் இடம் புக்கில் எனப்படும். புக்கு + இல் = புக்கில். இருக்க இடம்மில்லாது மற்றவர் வீட்டில் ஒண்டி இருப்பவனை 'துச்சிருப்பவன்' என்பர். அதனை பதினெண்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான ‘திரிகடுகம்’ எனும் நூலில்
துச்சிருந்தான் ஆளும் கலம் காமுறுதலும்”
ஒண்டிக் குடியிருந்தவன் வீட்டுக்காரனின் பொருட்களை விரும்புவது போல என நல்லாதனார் சொல்வதால் அறியலாம்.

வீட்டுக்காரனின் பொருட்களை ஒண்டிக் குடியிருந்தவன் விரும்புவதை விட, வீட்டுச்சொந்தக்காரர் அதைச்செய்  இதைச்செய் என ஒண்டியிருப்போரை பாடாய்ப் படுத்துதலும் உலகவழக்கே. எமது உடலாகிய வீட்டிற்கு உரிமைக்காரர்கள் பலர். அவர்கள் அவ்வுரிமை  காரணமாக ஆளாளுக்கு எம்மைப் போட்டு புரட்டியெடுப்பர். அதற்குக் காரணம் உடம்பினுள்  எமது உயிர் ஒண்டிக் குடித்தனம் இருப்பதே  என்கிறது தேவாரம்.

“சாற்றுவர் ஐவர் வந்து 
    சந்தித்த குடிமை வேண்டிக்
காற்றுவர் கனலப் பேசிக் 
    கண் செவி மூக்கு வாயுள்
ஆற்றுவர் அலந்து போனேன் 
    ஆதியை அறிவொன் றின்றிக்
கூற்றுவர் வாயிற் பட்டேன் 
    கோவல்வீ ரட்டனீரே!” - (ப.திருமுறை: 4: 69: 4)

உயிர் உடலினுள் ஒண்டிக்குடி[சந்தித்த குடிமை] இருப்பதால் எனது உடலை உரிமை கொண்டாடும் ஐம்பொறிகளும்[ஐவர்] கனல்பறக்கப் பேசி கண், செவி, மூக்கு வாய் வேண்டியவற்றைக் கேட்டு என்னை வழிநடத்துவதாகச் [ஆற்றுவார்] சொல்வர் [சாற்றுவர்]. அதனால் தடுமாறி ஆதியாய் இருக்கும் உன்னை அறியும் அறிவில்லாது கூற்றுவனிடம் அகப்பட்டேன் எனச் திருநாவுக்கரசர் சொன்னதை இத்தேவாரம் சொல்கிறது. ஆதலால் உயிர் உடபினுள் ஒண்டிக்குடி இருப்பதாக நம் முன்னோர் கருதினர் என்பதை அறியலாம்.

எப்போதும் உடம்பினுள் ஒண்டிக்குடி இருக்கும் உயிருக்கு நிலையாய்க் குடியிருக்க ஓர் இடம் இன்னும் கிடைக்கவில்லைப் போலும்.

Friday 3 February 2017

மடையரைப் பாடவோ!


‘மடையரைப் பாடவோ’ என்று நான் கூறவரவில்லை. இராமச்சந்திரக் கவிராயர் என்பவர் பொதிகைமலை பெரியம்மை கோயிலில் நின்று அந்த அம்மனிடம் கேட்ட கேள்வியே இது. 

கடந்த மார்கழி மாதம் ஒரு விழாவுக்குச் சென்றிருந்த போது ஒரு கவிஞர், “தான் என்றும் பார்த்தோ கேட்டோ அறியாதவர்களைப் பற்றி அவர்களின் பிறந்த நாளுக்குப் பாட்டு எழுதித்தரும் படி கேட்கிறார்கள்” எனச் சொன்னார். அப்போது ‘சொல்லுக்கட்டும் புலவரைக் கண்டால் சொல்லு கவிசொல்லு எனக்கேட்பர்’  என இராமச்சந்திரக் கவிராயரின் அடியையும் சேர்த்து நினைத்துக் கொண்டேன். இராமச்சந்திரக் கவிராயரை கதவைப் பூட்டி அடைத்துவைத்து 'தங்களைப் புகழ்ந்து பாடும்படி' மல்லுக்கட்டி இருப்பார்களோ! அதனால் அந்தப்பாடலைப் பாடினார் போலும்.

புல்லுக்கட்டும் விறகும் சுமந்து வாழ்க்கை நடத்தினோர் முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் பெரும் பணக்காரர் ஆகிவிட்டார்கள். நெல்லு மூட்டையும் பணமூட்டையும் சேர்ந்தததால் தமது மதிப்பைக் காட்ட நீலக்கல்லில் கடுக்கனும் போட்டுக் கொள்கிறார்கள். சொற்களால் கவிதை கட்டும் புலவரைக் கண்டால் கிட்டப் [தூரிப்] பாய்ந்து கதவையடைத்து எதிர்த்து சண்டைக்கு வருகிறார்கள். இத்தகைய மடையரைப் பாடவா? எனப் பொதிகை[மலயம்] மலைச்சாரற் கோயிலில்  வாழும் பெரியம்மையைக் கேட்டுள்ளார்.

புல்லுக் கட்டும் விறகும் சுமந்தபேர்
  புண்ணிய வசத்தினால்
நெல்லுக் கட்டும் பணக்கட்டும் கண்டபின்
  நீலக்கல்லில் கடுக்கனும் போடுவார்
சொல்லுக் கட்டும் புலவரைக் கண்டால்
  தூரிப் பாய்ந்து கதவை அடைத்தெதிர்
மல்லுக் கட்டும் மடையரைப் பாடவோ
  மலயச் சாரலில் வாழ் பெரியம்மையே

தற்கால தமிழக அரசியலைப் பார்த்திருந்தால் இராமச்சந்திரக் கவிராயர் எப்படிப்பாடி இருப்பாரோ!!
இனிதே,
தமிழரசி.

Thursday 2 February 2017

ஆடவர் மூடுங் கரும்பு


‘இயற்கையாக நிலத்தில் எங்கெல்லாம் பள்ளம் இருக்கிறதோ அங்கெல்லாம் பெரும்பாலும் நீர்நிலைகளை உண்டாக்குங்கள். நீரும் உணவுமே உயிர்களை வாழ்விக்கும்’ என்று எடுத்துச் சொல்லி, சங்ககாலப் புலவர்கள் அரசர்களை வழி நடத்தியதை சங்க இலக்கியம் பதிவுசெய்து வைத்துள்ளது. அத்தகைய சங்கச் சான்றோரின் சொற்கேட்டு நடந்த அரசர்களும் ஆறு, குளங்களை வெட்டி உழவுத்தொழிலை, பயிர்ச்செய்கையை மேன்மை அடையைச் செய்திருக்கிறார்கள்.

சங்ககாலக் கழனியில் கரும்பும் நெல்லும் விளைந்ததை ஐங்குறுநூறுப் பாடல்கள் சில சொல்கின்றன. தன் தோழியின் தலைவனைப்பற்றி
“பூத்த கரும்பின் காய்த்த நெல்லின்
கழனி ஊரன்”                            - (ஐங்குறுநூறு: 4: 4 - 5)
என ஐங்குறுநூற்றுத் தோழி சொல்வதாலும் அறியலாம்.

நீர்வளம் மிகுந்ததால் செழிப்புற்று இருந்த வயல்களைச் சூழ கரும்பு வேலியிட்டு பாதுகாத்திருக்கிறார்கள். அந்தக் கரும்பு வேலியும் இக்காலத்தில் நாம் அடைக்கும் வேலிபோல் ஒற்றை வேலி அல்ல. அது கரும்புப் பாத்தி வேலி. அதாவது நெல் வயல்களைச் சூழ பாத்தி அமைத்து கரும்பை விளைவித்திருக்கிறார்கள். அப்பாத்தியில் கரும்பு ஓங்கிவளர்ந்து நெல்வயல்களுக்கு வேலியானது. விலங்குகள் வயலிலுள்ள நெற்பயிர்களை உண்ணாது கரும்பின் பாத்தி வேலிகள் தடுத்தன. அந்தப் பாத்தியில் பல மலர்கள் பூத்து வழிந்தன. அதனை கோவூர்க் கிழார்
“வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின்
பாத்தி பன்மலர் பூத்ததும்பின”
                                                 - (புறம்: 386: 10 - 11)  
எனப் புறநானூற்றில் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

நீர் நெல்வயலுக்கு மட்டுமல்ல கரும்புக்கும் தேவை. கரும்புப் பாத்தியில் நீர் நிறைந்து இருப்பதை குறுந்தொகையில்
“கரும்பு நடுபாத்தி யன்ன
பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே”
                                                    - (குறுந்தொகை: 262: 7 - 8)
‘கரும்பு நட்ட பாத்தியைப் போல் பெரிய ஆண்யானையின் அடிச்சுவட்டில் நீர் தங்கி நின்றது’ என்கின்றார் பாலை பாடிய பெருங்கடுங்கோ.

“கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல்”
                                                 - (ஐங்குறுநூறு: 65: 1)
என்கின்றார் ஓரம்போக்கியார் என்றழைக்கப்பட்ட சங்ககாலப்புலவர். ஆதலால் கரும்புப் பாத்தியில் பூத்த மலர்கள் - ஆம்பல், அல்லி, குவளை, தாமரை போன்ற நீர் வாழ் தாவரங்களின் மலர்களே என்பதை அறியலாம்.
ஆடவர் மூடும் கரும்பு கணுக்களில் முளைத்தல்

கோவூர்க்கிழார் சொன்ன நெல்வயல். அதைச் சூழ உயர்ந்து வளர்ந்த செங்கரும்புப் பாத்தி வேலி. அந்தப் பாத்தியிலோ பலவகை மலர்கள். அவையும் பலவண்ணத்தில் பூத்துத் ததும்பின. அந்தக் காட்சியை ஒரு கணம் நினைத்துப்பாருங்கள்.  சங்ககாலத் தமிழருக்கு இருந்த அழகுணர்ச்சியை அது காட்டும். 

அழகுணர்ச்சி மட்டும் அவர்களிடம் இருக்கவில்லை. அதற்கும் மேலாக பயிர்ச்செய்கையின் ஆழ அகலங்களை மிக நுண்ணிதாக அறிந்து வைத்திருந்தனர் என்பதையும் மேற்கூறிய புறநானூற்றின் இரு வரிகளும் எடுத்துச் சொல்கின்றன. ஏனெனில் நெல் விளைவதற்கு மண்ணும் நீரும் இருந்தால் மட்டும் போதாது. நிலத்துக்கு நல்ல உரம் இடவேண்டும். கரும்பை அறுவடை செய்தபின் இருக்கும் உலர்ந்த கரும்புத் தோகைகளை சிறுசிறுதுண்டுகளாக வெட்டி, வயல் மண்ணில் கலக்க அவை மக்கி அடுத்த போக நெற்செய்கைக்கு உரமாகும். தத்தமது வயலைச் சூழவே வயலுக்கு வேண்டிய இயற்கை உரத்தையும் பெற்றிருக்கிறார்கள். என்னே அவர்கள் உரத்த சிந்தனை!

அத்துடன் தாமுண்ட சிலவகை உணவுகளையும் மதுக்களையும் பலவகைப் பூக்களால் மணமூட்டியதை சங்க இலக்கியம் சொல்கிறது. பொருநர் ஆற்றுப்படை
“பூக்கமழ் தேறல்”                             -( பொருணர்.ஆ: 157)
என மதுவின் பூமணத்ததைச் சொல்வதால் மணமூட்டத் தேவையான பூக்களையும் கரும்புப் பாத்தியில் பயிரிட்டிருக்கலாம். இயற்கையை எவ்வளவு ஆராய்ந்து அறிந்திருந்தால் இவ்வளவு நேர்த்தியாக நெல், கரும்பு, பூக்கள் எனப் பயிரிட்டிருப்பர்.

பாத்திகளில் நட்டு வளர்த்த கரும்புகளை எந்திரங்களில் இட்டு சாறு பிழியும் சத்தம் என்றும் ஓய்ந்ததில்லையாம் [துஞ்சாக் கம்பலை]. பிழிந்த கரும்பஞ்சாற்றில் இருந்து வெல்லம்[விசயம்] உற்பத்தி செய்ததால் புகைசூழ்ந்தே அந்த ஆலைகள் இருந்ததன. கரும்புச்சாற்றைக் குடிக்க விரும்பியோர் ஆலைகளில் அதனைப் பெற்றுக் குடித்ததையும் பெரும்பாணாற்றுப்படை
“எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை
விசயம் அடூஉம் புகைசூழ் ஆலை தொறும்
கரும்பின் தீஞ்சாறு விரும்பினர் பெறுமின்”
                                                    - (பெரும்பாண்.ஆ: 260 - 261)
என்று மிக அழகாகச் சொல்கிறது.

அந்த எந்திரங்கள் ஓடிய சத்தம் ஆண் யானை பிளிறலுக்கு எதிர்க்குரல் கொடுப்பது போல இருக்கும் என்பதை
“கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்”
                                                   - (ஐங்குறுநூறு: 55: 1)
என ஐங்குறுநூறு கூறுகின்றது.

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே பண்டைத் தமிழர் நெல்லோடு கரும்பையும்  பயிரிட்டுள்ளனர். ஆகையால் தமிழர் இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து கரும்பைப் பயிரிட்டு வருகின்றனர்.
மன்மதன் கையில் வில்லாகும் கரும்பு

பெரும்பாலும் கரும்புச்செய்கையில் ஆண்களே ஈடுபடுவர். அவர்கள் கரும்பை நடும்போது மிகவும் விரைவாக மண்ணைத்தோண்டி, கணுக்களில் அரும்புள்ள சிறு துண்டுகளாக வெட்டிய கரும்புத் துண்டை கிடையாகப் போட்டு புதைத்து விடுவார்கள். மண்ணுக்கு மேலே தெரியும்படி கரும்பை நடாது மண்ணுக்குள் போட்டுப் புதைப்பதைக் குற்றாலக் குறவஞ்சிபாடிய திரிகூடராசப்ப கவிராயர் கண்டிருக்கிறார். கரும்பை நடும் ஆண்கள் மிக்க கோபத்துடன் அதைப் புதைப்பது போல் அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஆண்களுக்குக் கரும்பின் மேல் கோபம்வரக் காரணம் என்ன? கரும்பு தன் இனிமையைவிட காதலிகளின் பேச்சு இனிமையோ எனக்கூறிப் பழித்ததென்று புதைக்கிறார்களாம். அவர்கள் புதைத்தாலும் கரும்பு மீண்டும் வளர்ந்து அவர்களது காதலிகளை என்னவெல்லாம் செய்கிறது பாருங்கள்.

அன்னலார் மொழி தன்னைப் பழித்ததென்று
      ஆடவர் மண்ணில் மூடுங் கரும்பு
துன்னி மீள வளர்ந்து மடந்தையர்ப
      தோளை வென்று சுடர்முத்தம் ஈன்று
பின்னும் ஆங்கவர் மூரலை வென்று
      பிரியுங் காலத்தில் பெண்மையை வெல்லக்
கன்னல் வேளுக்கு வில்லாக ஒக்கும்
      கடவுள் ஆரிய நாடெங்கள் நாடே 
                                                       - (குற்றாலக் குறவஞ்சி: 91)
அழகிய இளம் பெண்களின் இனிய சொற்களைப் பழித்தது என்று கூறி ஆடவர்கள் கரும்புகளை வெட்டி மண்ணில் குழிதோண்டிப் புதைத்து மூடுவர். எனினும் அவை மீண்டும் வளர்ந்து மடந்தையரின் தோள் அழகையும் தமது பொலிவினால் வென்றுவிடும். கரும்பு வெண்முத்து முத்தாகப் பூத்து பெண்களின் பற்களையும் வெற்றி கொள்ளும். பெண்களின் காதலர்கள் பிரிந்து சென்றிருக்கும் காலத்தில் அவர்களின் பெண்மையை வெல்வதற்காக மன்மதனின் வில்லாக இருக்குமாம். அப்படிப்பட்ட கரும்பு வளம் நிறைந்த குற்றால நாதரின் அழகிய நாடே எங்கள் நாடாகும். 

ஆடவர் மூடமூடக் கரும்பும் மீண்டும் மீண்டும் வளர்ந்து இனிமைச்சுவையால் பெண்மையை வெற்றி கொள்கிறதோ!
இனிதே,
தமிழரசி. 

Wednesday 1 February 2017

மண்ணின் மைந்தர்கள்

திசாவாவி - அநுராதபுரம்

உலக இயற்கை எதனால் ஆனது என்னும் அறிவியல் உண்மையைச் சங்க இலக்கியப் புலவரான முரஞ்சியூர் முடிநாகனார் கூறுகிறார். அவர் சங்ககாலப் புலவர்களில் காலத்தால் முந்தியவர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் இயற்கையைப் போன்றவன் எனச் சொல்லும் இடத்தில் அதனைச் சொல்கிறார்.
“மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளி தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல” - (புறம்: 2: 1 - 6) 

“மண் திணிந்த[செறிந்த] நிலனும்
நிலம் ஏந்திய[தாங்கிய] விசும்பும்
விசும்பு[ஆகாயம்] தைவரு[தடவும்] வளியும்
வளி[காற்று] தலைஇய[மேலெழும்] தீயும்
தீ முரணிய[மாறுபட்ட] நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல” 
முரஞ்சியூர் முடிநாகனார் ‘மண்ணைத் திணித்து வைத்திருக்கும் நிலமும் நிலத்தை ஏந்தி வைத்திருக்கும் ஆகாயமும் ஆகாயத்தைத் தடவிவரும் காற்றும் காற்றால் மேலெழும் தீயும் தீயிற்கு எதிர் மாறான தன்மையுள்ள நீரும் என்கின்ற ஐம்பூதங்களால் ஆன இயற்கையைப் போல்’ என்று இயற்கையின் தன்மையை இருபது சொற்களுக்குள் மிக நுட்பமாக அறிவியலோடு எடுத்துச் சொல்லியிருக்கும் பாங்கு போற்றுதலுக்கு உரியதல்லவா?

தொடர்ந்து நீர் ஊறும் மண்ணும் மண் திணிந்த நிலனுமாய் ஒன்றினுள் ஒன்று தங்கி ஐம்பூதங்களும் இந்த உலகை வழி நடத்துகின்றன. உலக உயிர்களின் உயிர்ப்புக்கு ஐம்பூதங்களும் வேண்டும். எனினும்  மண்ணே எத்தனையோ கோடானுகோடி உயிர்ப் பேதங்களைச் சுமக்கிறது. அத்தகைய மண்ணிற்கு வளம் சேர்ப்பவர்கள் யார்? அவர்களே மண்ணின் மைந்தர்கள்

ஊருக்கு, உலகிற்கு நன்மை செய்பவர்களுக்கு ‘மண்ணின் மைந்தர்’ என்று தமிழர் மதிப்பளிகிறார்களே அந்த மண்ணின் மைந்தர்களைச் சொல்லவில்லை. மதிப்பளிக்கப்படும்  மண்ணின் மைந்தர்களால் அணு அளவுகூட யான் கூறவரும் மண்ணின் மைந்தர்களுடன் போட்டி போடமுடியாது.  இந்த மண்ணின் மைந்தர்களுக்கு உலக உயிர்கள் யாவும் கடப்பாடு உடையன. அதாவது உலக இயற்கை தனக்கெனப் படைத்துக்கொண்ட மண்ணின் மைந்தர்கள் பற்றியே எழுதுகிறேன். இவர்கள் மண்ணில் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை மண்ணின் வளத்திற்காகவே தம் வாழ்நாளைச் செலவு செய்பவர்கள். இவர்களால் பூமியிலுள்ள மண்ணின் பௌதிக, இராசயன, உயிரியற் காரணிகள் பேணப்படுகின்றன.

இம்மைந்தர்கள் மண்ணின் வளத்தை மட்டும் பேணவில்லை. அதற்கும் மேலாக தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் மண்ணிலுள்ள பல நுண்ணுயிர்களைக் கொல்லும் நுண்ணுயிர்க் கொல்லிகளாய் வாழ்வதோடு உலக உயிர்களின் வளர்ச்சிக்கு வேண்டிய கனிமச் சுழற்சியைச் செய்வதும் பெருவியப்பே. மிகச்சிறிய அளவில் வாழ்வதால் மனிதர்களால் புறக்கணிக் கப்பட்டாலும் உலக உயிரினங்களின் திடவாழ்வைப் பேணிப் பாதுகாத்து தொழிற்பட வைப்பதால் புவிசார்ந்த உயிரினங்கள் யாவும் இவர்களிலேயே தங்கி இருக்கின்றன. 


எனக்கு மண்ணின் மைந்தர் என்ற சொல்லை முதன்முதலில் சொல்லித் தந்தவர் ஒரு குயவர். தமிழில் ஆசிரியர், மருத்துவர் என்று சொல்வது போல் குயவர் என்பதும் ஒரு தொழிற் பெயரே. நான் சிறுவயதில் அநுராதபுரத்தில் வாழ்ந்த அம்மம்மாவோடு போய் நிற்பேன். அம்மம்மா தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆறியதும் மண்குடத்திலும் மேசையில் இருக்கும் கூசாவிலும் ஊற்றி வைப்பார். நான் கூசா தண்ணீரைக் குடிப்பது வழக்கம். கூசாவில் தண்ணிர் முடிந்தால் குடத்து நீரையும் குடிப்பதுண்டு. எப்படியோ ஒருநாள் குடத்து நீரைவிடக் கூசாவில் இருக்கும் தண்ணீர் குளிர்மையாக இருப்பதைக் கண்டு கொண்டேன். அது ஏன் என்று அம்மம்மாவைக் கேட்டேன். அது அப்படித் தான் என்றவர், சட்டி, பானை வனைபவரைக் கேட்க வேண்டும் என்றார். குயமேடு வெசகிரிய மலைக்கு மற்றப் பக்கத்தில் இருந்தது. அந்தக் குயமேடு இருந்த இடமே  எல்லாள மாமன்னன் துட்டகைமுனுவுடன் யுத்தம் செய்த இடம் என்பர். 

ஒருநாள், வழமையாக எங்கள் வீட்டிற்கு வந்து பசுஞ்சாணம் எடுத்துச் செல்லும் வயதானவர் வந்தார். அவரிடம் அம்மம்மா என்னைக் காட்டி ‘குடத்துத் தண்ணீரைவிட கூசாத் தண்ணீர் ஏன் குளிர்மையாக இருக்கிறது?’ என்று நான் கேட்பதாகச் சொன்னார். அதைக் கேட்டு அந்த முதியவர் மகிழ்ச்சி அடைந்தார். ஏனெனில் குயவர்களுக்கு என்ன தெரியும்? அவர்கள் என்னவெல்லாம் செய்து சட்டி, பானை வனைகிறார்கள் என்பதை யாரும் கேட்டதில்லையாம்.

பொக்குவாய்ச் சிரிப்போடு என்னைப் பார்த்து “குழந்த! நான் சொன்னாப் புரியுமா? அதெல்லாம் மண்ணின் மைந்தர்கள் துணையில்லாமல் செய்யமுடியாது. நம்ம வாழ்வே அவர்கள் கையில் இருக்கிறது” என்றார். அவர் நம்ம வாழ்வு என்று தன் வாழ்க்கையைச் சுட்டவில்லை இந்த உலக உயிரனைத்தையும் சுட்டினார் எனும் கருத்தைப் பின்னாளில் புரிந்து கொண்டேன். அவர்கள் எப்படி மண்ணின் மைந்தர்களின் உதவியுடன் கூசா வனைகிறார்கள் என்பதைக் கேட்டதும் அதை நேரடியாகப் பார்க்க ஆசைப்பட்டேன். குழந்த! அதைப் பார்க்க குயமேட்டிற்கு ஆதிகாலையில் வரவேணுமே என்றார். 

சொன்னால் புரிந்து கொள்ளும் வயதில்லை, பார்த்தால் புரிந்து கொள்வேன் என்று  குயமேட்டிற்கு ஒருநாள் அம்மாவின் தந்தை என்னைக் கூட்டிச் சென்றார். அந்தக் குயவர் ஓடிவந்து குயமேட்டைச் சுற்றிக்காட்டினார். அங்கே பலர் வேலை செய்தனர். மேடுகளில் சட்டி, பானை, குடம், அடுப்பு, பூந்தொட்டி, திருகணி, கூசா என விதம் விதமாக அடுக்கி வைத்திருந்தனர். அவர்கள் கூசா செய்வதற்கு வேண்டிய கனிமமண்ணைப் பெறுவதற்கு மண்ணாலான நீள்சதுரப் பாத்திகள் சிலவற்றை உண்டாக்கியிருந்தனர். அப்பாத்திகள் நான்கு பக்கமும் மரக்கட்டைகளால் அடைக்கப்பட்டிருந்தன.

மரக்கட்டை அடைப்புக்குள் காய்ந்த பொச்சுமட்டைகளைப் பரப்பி அதன் மேல் திசா வாவிக் [Tissa Wewa] செங்களிமண்ணோடு வைக்கோலும் சாணியும் சேர்த்துப் பிசைந்த மண்ணை போட்டு, அவற்றுக்கும் மேலே பழுத்த இலை தழைகளை இட்டு  பசுஞ்சாணத்தை நீரில் கரைத்து தெளித்து மண்ணைத் தூவித் தென்னையின் பச்சை ஓலைக் கிடுகால் மூடிவைத்திருந்தனர். மண்புழுக்களுக்கு [மண்ணின் மைந்தர்] சூரியஒளி படாதிருக்க கிடுகால் மூடி வைத்தனர் போலும். “ஒவ்வொரு நாள் காலையிலும் கிடுகை அகற்றி பசுஞ்சாண நீரை மண்ணின் மைந்தரின் படுக்கைக்குத் தெளிப்பர் எனவும் மேலே போட்ட இலை தழைகள் மைத்துப்போகப் போக கிடுகை அகற்றி மண்ணின் மேலே சிறுசிறு குவியலாக மண்புழு உண்டு கழித்து வைத்திருக்கும் நுழைமண்ணை வாரி எடுப்பர்” என்றும் அம்முதியவர் கூறினார். மண்புழு வாழுமிடங்களில் அதிகாலையில் நிலத்தில் சிறுசிறு குவியலாக குவிந்திருக்கும் மண்ணே நுழைமண்.

எனக்கு பச்சையோலைக் கிடுகை அகற்றி, குவியல் குவியலாக இருந்த நுழைமண்ணை வாரி எடுத்து, மட்பாண்டம் வனையும் மண்ணோடு கலந்து கூசா வனைந்து காட்டினார். மண்புழுவின் நுழைமண்ணே கூசாவில் வைக்கும் நீருக்கு குளிர்மையைக் கொடுக்கிறது என்றார். அவர் “மண்புழுவை நாங்குழுப்புழு எனவும் கூறி அவை கிட்டத்தட்ட ஒருவருடம் வாழும். இருபது நாட்களுக்குள் இன்னொரு புழுவை உண்டாக்கும் என்றும் சொன்னார். மண்ணிலுள்ள தாதுக்கள்[கனிமங்கள்] நுழைமண்ணில் சேரும். அதனால் கூசா நீரைக் குடித்து தொன்னூற்றி எட்டு வயதாகியும் தான் நோயின்றி திடமாக இருப்பதாகக் கூறி, என்னையும் கூசா நீரைக் குடித்து நீண்டகாலம் வாழச்சொன்னார்." அவர்கள் மீண்டும் மீண்டும் அவற்றிற்கு பசுஞ்சாண நீரும், இலை தழை உணவும் கொடுத்துக் கொடுத்து அவற்றை வளர்த்து கூசா செய்யத் தேவையான நுழைமண்ணை எடுப்பதை அறிந்தேன்.

இக்காலத்தில் கூசா வனைவோர் அப்படிச் செய்வதில்லை. ஏனெனில் கூசா நீரைக் குடிக்கும் ஆர்வத்தில் 2015ல் இலங்கை சென்ற போது ஒரு கூசா வாங்கினேன். அதில் ஊற்றி வைத்த நீர் குளிரவில்லை. மட்குடத்தில் வைக்கும் நீரைவிட அது சூடாக இருந்தது. அக்கூசாவுக்கு வெளியே அடித்திருந்த வண்ணத்தின் இரசாயனக் கலவையும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் மண்ணின் மைந்தரின் தேவையை இங்கே எழுதுகிறேன். 


மண்புழுவின் வாயினுள் நுழைந்து வெளிவரும் மண்ணாதலால் நுழைமண் என்று எம் தமிழ் முன்னோர்கள் மண்புழுவின் கழிவைச்[casts - their faeces] சொன்னார்களோ அல்லது நுண்மையான மண் என்ற கருத்தில் கூறினார்களோ தெரியவில்லை. ஏனெனில் நுண்மை என்பதை நுழை என்றும் கூறுவர். மண்ணில் இருக்கும் கனிமங்களை மண்புழுவின் நிறத்தைக் கொண்டு நம் முன்னோர் அறிந்ததை ஒரு தனிப்பாடல்
“நாங்கூழ் மாமை காட்டும் நானிலத்தின் தாதுதன்னை”

மண்புழு[நாங்கூழ்] நிறம்[மாமை] காட்டும் நானிலத்தின் கனிமங்களை[தாதுதன்னை‘குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலங்களிலும் இருக்கும் கனிமங்களை மண்புழுவின் நிறம் காட்டுமாம்’ எனச் சொல்கிறது.

மாணிக்கவாசகரும் நீத்தல் விண்ணப்பத்தில்
“எறும்பிடை நாங்கூழெனப் புலனால் அரிப்புண்டு”
                                                       - ( திருவாசகம்: 6: 25)
என ‘எறும்புகள் பற்றிஇழுத்துச் செல்லும் மண்புழு துடிப்பதைப் போல தானும் ஐம்புலன்களால் அரிப்புண்டு துடிக்கிறார்’ என்றார். தமிழர்கள் மண்புழுவை நாங்கூழ், நாங்குழு, பூநாகம், நாகப்பூச்சி, நிலவேர், நாங்குழுப்புழு, மண்ணுண்ணி, நாங்குழிப்பாம்பு, நாங்குழிப்பூச்சி, மண்ணுண்ணிப்பாம்பு எனப்பல பெயர்களால் அழைத்துள்ளனர்.

உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இனங்கள் மண்புழுவில் இருப்பினும் அவற்றை மூன்று பிரிவினுள் அடக்கலாம்.
1. மண்ணின் மேற்பரப்பில் காணப்படும் மண்புழுக்கள்.
2. மண்ணின் மேலடுக்கில் காணப்படும் மண்புழுக்கள்.
3. மண்ணின் கீழடுக்கில் வாழும் ஆழ்துளை மண்புழுக்கள்.   



1. மண்ணின் மேற்பரப்பில் காணப்படும் மண்புழுக்கள்[Epigeic].
இவ்வகை மண்புழுக்கள் மண்ணின் மேற்பரப்பில் உள்ள சருகுகள், பழுத்த இலைகள் போன்ற தாவரக் கழிவுகளை உண்டு வாழும். இவை 10 செ மீற்றர் அளவு நீளத்தில் இருக்கும். எவ்வித வெப்பநிலைக்கும் ஈரத்தன்மைக்கும் ஏற்றாற்போல தம்மை இசைவாக்கம் செய்து கொள்ளும். சாணக்குவியலுக்குள்ளும் இவற்றைக் காணலாம். ‘மண்புழுஉரம் உண்டாக்க’ இந்தவகை மண்புழு ஏற்றதாகும். 

2. மண்ணின் மேலடுக்கில் காணப்படும் மண்புழுக்கள்[Endogeic]. 
இந்தவகை  மண்புழுக்கள் மண்ணின் மேலடுக்கில் குறுக்காகவும் நெடுக்காகவும் தற்காலிக துளைகளை உண்டாக்கி வாழும். அத்துளைகள் இவற்றின் நுழைமண்ணால் நிரப்பப்படுவதால் அதற்குள் நிரந்தரமாக இவற்றால் வாழமுடியாது. எனவே புதுப்புது துளைகளை உண்டாக்கும். அத்துளைகள் மண்ணின் காற்றோட்டத்திற்கும் நீரோட்டத்திற்கும் உதவுகின்றன. மண்புழு உரம் தயார் செய்ய இவ்வகை மண்புழுக்களும் உகந்தவையே.

3. மண்ணின் கீழடுக்கில் வாழும் ஆழ்துளை மண்புழுக்கள்[Anecic]
இம்மண்புழுக்கள் ஆறடி நீளத்திற்கும் மேலான துளையினுள் நிரந்தரமாக வாழும். இரவில் மண்ணின் மேல் ஊர்ந்து திரிந்து தமது உணவைப் பெறுகின்றன. அவை வாழும் துளை வாயிலை மூடி நுழைமண்ணை வைத்திருக்கும். நம்மவர்கள் இவ்வகை மண்புழுவை மண்வேர் எனவும் பூநாகம் என்றும் அழைத்தனர்.

மண்புழுக்கள்
1. மண்ணின் கீழே உள்ள கனிம வளங்களை மேலே கொண்டு வருகின்றன. 
2. அத்துடன் தாவர வளர்ச்சிக்குத் தேவையான பற்றீரியா, பங்கஸ் போன்றவை வாழ வழி செய்கின்றன. 
3.   காற்றும் மழை நீரும் மண்ணினுள் செல்லத் துணை செய்கின்றன. 
4. மழைநீர் ஓடிச்சென்று கடலினுள் கலப்பதைத் தடைசெய்து, நிலத்தடி நீராகச் சேமிக்கச் செய்கின்றன. 
5. தாவரவேர்கள் கனிமநீரைப் பெற்றுக்கொள்ளவும் சுவாசிக்கவும் உதவுகின்றன.

மண்புழுவின் தேவை  அறிந்தே ஔவையாரும் ஆத்திசூடியில்
“மண் பறித்து உண்ணேல்”                          - (ஆத்திசூடி: 23)
என்று சொன்னார். 

பறித்தல் - தோண்டுதல்; மண் பறித்து - மண்ணைத் தோண்டி; அதாவது மண்ணைத் தோண்டி எடுத்து அதனை விற்று உண்டு உயிர் வாழாதே என்றே கூறியுள்ளார். நிலத்தில் உள்ள மண்ணைப் பறித்து எடுக்க எடுக்க மண்ணை வளமாக்க அரும்பாடுபடும் மண்ணின் மைந்தர்கள் அழிந்து ஒழிந்து போவார்கள். இவர்களின் அழிவு மண்ணின் வளத்தை மட்டுமல்ல உலகப் பௌதிக, இரசாயன, உயிரியற் காரணிகளைத் தாக்குவதால் இயற்கையின் சுழற்சி பாதிக்கப்படும்.

பாருங்கள்! நம் முன்னோர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்ததால் மண்புழுவை மண்ணின் மைந்தர் எனப் போற்றி வளர்த்து எதுவித இராசாயனக் கலப்பும் இன்றி நல்ல உணவையும் நீரையும் உண்டு வாழ்ந்திருக்கிறார்கள். நாமோ வெளிநாட்டு மோகத்தில் மயங்கி பிளாஸ்டிக் அரிசியும், பிளாஸ்டிக் முட்டையும் சாப்பிடும் நிலைக்கு வந்துவிட்டோம். என்னே எங்கள் மதிநுட்பம்!!
இனிதே,
தமிழரசி.