Tuesday, 31 January 2017

தண்டமிழ் வாழ அருள்வாயையா!


வண்டே அரற்றி வாழ்த்திசைகும்
       வயலூரின் பதிவாழும் வடிவேலா!
பண்டறிய பழவினைகள் பாரித்தழித்தும்
       பல்லுயிரும் பலவுலகும் படைத்தருளு பான்மை
கண்டே காமுற்றுக் காதலாற்பெரிதும்
       கசிந்துருகக் கற்றோம் அல்லோம்
தண்டே இசைக்கத் தாரணி யெங்கும்
       தண்டமிழ் வாழ அருள்வாயையா!

சொல்விளக்கம்
தண்டு - வீணை

இனிதே, 
தமிழரசி.

Monday, 30 January 2017

மழலை மொழிய தாகுமோ!


பெண்ணின் இன்ப வாழ்க்கையாய்
     பொழு தெலாங் கரையினும்
கண்ணின் இன்பக் காட்சியாய்
     கண்ட குதலைச் சொல்லினை
எண்ணி இன்பங் காண்பதாய்
     ஏங்கும் மனது சொல்லுமே
மண்ணின் இன்பப் பொருளெலாம்
     மழலை மொழிய தாகுமோ!
                                                                 - சிட்டு எழுதும் சீட்டு 133

Monday, 16 January 2017

முருகமூர்த்தி சக்தி அது

தல்லையப்பற்று முருகமூர்த்தி - புங்குடுதீவு

அருகாக அவன் இருக்க
       அலந்துதேடும் பக்தி எது
பருகாத இன்ப மெலாம்
       பருகவெண்ணும் பக்தி அது
உருகாத மனம் உருக்கி
       உணரவைக்கும் சக்தி எது
முருகாக முகம் மலரும்
       முருகமூர்த்தி சக்தி அது

இனிதே,
தமிழரசி.

Sunday, 15 January 2017

காலைவெயிலிற் காத்திருந்தேன்!

புங்குடுதீவகமே!

நீலக்கடல் அலையிடையே
         நிமிர்ந்தோடிடும் பாய்மரம் போல்
காலக்கடல் அலையிடையில் 
         குளிர்போர்த்த சோலையாய் நிதம்
தாலமரத்து ஓலையசைந்து
         தாளமிடும் புங்குடுதீவகமே உன்
கோலஎழில் காண்பதற்கு
         காலைவெயிலிற் காத்திருந் தேன்!
                                                                                       - சிட்டு எழுதும் சீட்டு 132
சொல் விளக்கம்
1. தாலமரம் - பனைமரம்

இனிதே,
தமிழரசி.


Saturday, 14 January 2017

வண்டிச்சக்கர வாழ்க்கை


மனிதவாழ்வு மிகவும் சுவைமிக்கது. அன்பு, நட்பு, பகை, கோபம், இன்பம், துன்பம், பொறாமை, அறிவு, ஆற்றல் எனும் பல சுவைகளும் கலந்த கலவையே வாழ்க்கை.  இந்தச்சுவைகளை எல்லாம் எல்லாம் இனங்கண்டு பிரித்தெடுத்து நிறைந்த மனத்துடன் எப்படிச் சுவைப்பது? அதற்கு வழி இருக்கிறதா? ஆம் இருக்கிறது. எந்தச்சுவையை எப்படிச் சுவைத்தால் இன்பமாக வாழலாம் என்பதை முன்னோர்கள் தமது அநுபவ அறிவால் கூறியுள்ளனர்.

பாதைவழியே செல்லும் வண்டில் சக்கரம் மேலும் கீழுமாக சுழன்று செல்லும். மனித வாழ்க்கைப் பாதையில் நாமும் வண்டிச்சக்கரம் போல் மேலும் கீழுமாகச் சுழன்று செல்கின்றோம். அந்தச் சுழற்சியிலும் மேடும் பள்ளமும், ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி வந்த வண்ணமே இருக்கும். அதிலும் செல்வம், வறுமை இரண்டும் என்றும் நிலைத்து நிற்காது. ஆதலால் ஏற்றம் வருங்கணம் முதல் வாழ்க்கையை எப்படிச் சுவைத்து வாழவேண்டும் என்பதை
“துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்”                                    - நாலடியார்
என்று நாலடியார் கூறுகின்றது.

குற்றம் மில்லாத[துகள்தீர்] பெருஞ்செல்வம் உருவான காலம்[தோன்றியக்கால்] தொட்டுப்
எறுமைக்கடா[பகடு] நடந்து உழுது விளைந்த உணவை[நடந்தகூழ்] பலரோடு[பல்லாரோடு] உண்க
வயிறுநிறைய[அகடுற] யாரிடத்தும்[யார்மாட்டும்] நில்லாது செல்வம்
வண்டிச்சக்கரம்[சகடக்கால்] போல வரும்.

கொலை, களவு, பொய், புரட்டு, அடுத்துக்கெடுத்தல், கைக்கூலி பெறுதல் போன்ற குற்றங்களைச் செய்யாது நேர்மையான உழைப்பால் பெருஞ்செல்வம் சேரத்தொடங்கும் பொழுதே உணவை உறவினர், நண்பர், விருந்தினர், வறியவர் முதலான பலரோடுங்கூடி வயிறு நிறைய உண்ணுங்கள். அந்தச் சுவைக்கு எதுவும் ஈடாகாது. ஏனெனில் செல்வமானது வண்டிச்சக்கரம் போல மேலும் கீழுமாக ஏறி இறங்கி ஒருவரிடமும்  நில்லாது வந்து போகும்.

செல்வம் மட்டுமல்ல மனித வாழ்க்கையும் ஒரு வண்டிச்சக்கர வாழ்க்கை என்பதை உணர்ந்து, இருப்பதை பகிர்ந்துண்டு வாழ்ந்தால் வாழ்க்கை சுவைமிகுந்ததாக இருக்கும்.
இனிதே,
தமிழரசி.

Thursday, 12 January 2017

குறள் அமுது - (128)


குறள்:
“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”                          - 1031

பொருள்:
சுற்றிச் சுழன்று பிறதொழில்களைச் செய்தபோதும் உழவுத் தொழிலின் பின்னே தான் இவ்உலகம் நிற்கின்றது. அதனால்  மிக்க துன்பப்பட்டு உழவுத்தொழிலைச் செய்தாலும் உழவுத் தொழிலே தலை சிறந்தது.

விளக்கம்:
உழவு என்னும் அதிகாரத்தில் உள்ள முதலாவது திருக்குறள் இது. நிலத்தை உழவு செய்து பயிர் செய்வதால் உழவுத்தொழிலை உழவு என்பர். மற்றைய தொழில்களைவிட உழவுத்தொழில் ஏன் தலை சிறந்தது என்பதை இக்குறள் எடுத்துச் சொல்கிறது.

மனிதன் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிகொள்வதற்காக சுழன்று திரிகிறான். நல்ல தொழிலிலைத் தேடி அலைந்து, தொழில் கிடைத்ததும் அதனைச் செய்வதற்காக வேலைக்கும் வீட்டிற்குமாக மீண்டும் மீண்டும் சுழல்கிறான். அப்படி வேலை வேலை என்று சுழன்றாலும் உலகோர் யாவரும் உணவிற்காக உழவரின் பின்னால் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. 

நிலத்தை உழும் கலப்பையை ஏர் எனச்சொல்வர். ஏரால் நிலத்தை உழுது மண்ணைப் பண்படுத்தி பயிர் செய்வதாலேயே உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. மாடு, ஆடு போன்ற விலங்குகளையும் கோழி, வாத்து போன்ற பறவைகளையும் வளர்த்து, பால், முட்டை, இறைச்சி போன்ற உணவுப்பொருட்களையும் உழவர்களே தருகின்றனர். அவர்கள் எமது உடைக்கு வேண்டிய பருத்தி, பட்டு போன்றவற்றையும் உற்பத்தி செய்கின்றனர். உழவர்களிடம் பொருட்களை விலைக்கு வாங்கி மற்றைய வியாபாரிகள் விற்று பணத்தைப் பெருக்குகிறார்கள். உலகில் பலவகைப்பட்ட தொழில் தோன்ற உழவர்கள் காரணமாக இருக்கின்றனர்.

அரசாட்சி செய்வோரின் மாபெரும் சக்திகளாய் பெரும் வீரர்களாய் போர்முனையில் நின்று போர் புரிவோருக்கும் உணவு கிடைக்க ஏர்முனையால் நிலத்தை உழுதாக வேண்டும். ஏர்முனை மழுங்கின் போர்முனை அழுந்தும். உலகின் எந்த ஓர் அரசாட்சியும் நிலைத்து நிற்காது. 

இயற்கையை அரவணைத்து உழவுத்தொழிலைப் போற்றி வாழ்ந்த மனிதன் எப்போ பண்ட மாற்றைக் கைவிட்டு பண மாற்றை உண்டாக்கிக் கொண்டானோ அன்றே உழவுத்தொழிலுக்கு சாவுமணி அடித்துவிட்டான். அதனால் உழவுத்தொழில் துன்பத்தில் உழழும் தொழிலாய் மாறிவிட்டது.

எனினும் இந்த உலகம் ஏரினால் உழுது விளையும் பொருட்களை எதிர்ர்த்து நிற்பதால் உழவர்கள் உடல் வருந்தி உழைத்தாலும் உழவுத்தொழிலே எல்லாத் தொழில்களையும்வி விடத் தலைசிறந்ததாகும்.

Saturday, 7 January 2017

ஆட்டைவிட்டு வேங்கை அகலுமோ!

பண்டடைக் காலத்தில் தில்லைவனம் இருந்த இடம் தென்புலியூர் என அழைக்கப்பட்டது. வனத்தில் புலி வாழ்வது இயற்கையானது. எனவே தில்லைவனத்தில் புலி வாழாமலா இருக்கும்? அங்கே ஒரு வேங்கை வாழ்ந்தது. வரிப்புலியை வேங்கை என்பர். நல்ல பசியோடு புறப்பட்ட வேங்கை, ஆட்டைக் கண்டால்  அதனைவிட்டு விலகிப்போகுமா? இல்லையே! அந்தத் தென்புலியூரில் இருந்த அம்பலத்தில் நடராஜர் நடனம் புரிந்தார். அதனால் அரசர்கள் அதனைப் பொன்னம்பலமாக மாற்றினர். அதுவே இன்றைய சிதம்பரம். அம்பலத்தில் சிவன் நடனம் ஆடுவதால் அவரை அம்பலவர் என்றும் அழைப்பர்.

இரட்டைப்புலவர்கள் பொன்னப்பலத்து நடராஜரை வணங்க சிதம்பரம் கோயிலுக்குச் சென்றனர். அங்கே நடராஜரின் அருகே புலி இருப்பதை முடவர் பார்த்தார். உடனே
“தென்புலியூர் அம்பலவர் தில்லைச் சிதம்பரத்தே
வெம்புலி ஒன்று எந்நாளும் மேவுங்காண் அம்மானை” எனப்பாடினார். 

அதனைக் கேட்ட குருடர்
“வெம்புலி ஒன்று எந்நாளும் மேவுமேயாம் ஆகில்
அம்பலத்தே விட்டே அகலாதோ அம்மானை” 
எனக் கேள்வி கேட்க

முடவர்
“ஆட்டைவிட்டு வேங்கை அகலுமோ அம்மானை” 
என்றார்.
தஞ்சைப் பெருங்கோயில் ஓவியம்
அம்மானை என்பது பெண்கள் பாடிப் பந்தடித்து விளையாடும் விளையாட்டாகும். இவ்விளையாட்டை முன்று பெண்கள் சேர்ந்து விளையாடுவர். ஒருவர் ஓரு செய்தியைச் சொல்லி அம்மானை என்று கூறிப் பந்தை அடிக்க இரண்டாமவர் அச்செய்தியில் கேள்வி கேட்டு அம்மானை என்று அப்பந்தை அடிக்க மூன்றாமவர் பதிலைச் சொல்லி அம்மானை என்றபடி பந்தை அடிக்க அது புதுப்புது செய்தியுடன் தொடர்ந்து பந்து கீழே விழும்வரை தொடரும்.

முடவர் சொன்ன செய்தி: 
தென்புலியூரில் இருக்கும் அம்பலவரின் தில்லைச் சிதம்பரத்தில் கொடும்புலி ஒன்று எந்நாளும் அமர்ந்திருக்கிறது. 

குருடர் கேட்ட கேள்வி:
கொடும்புலி ஒன்று அமர்ந்திருக்குமே ஆனால் அது அம்பலத்தை விட்டு அகன்று போகமாட்டாதா?

முடவரின் பதில்:
வரிப்புலி தன் உணவான ஆட்டை விட்டு அகன்று போகுமா! அதனாலேயே அது அங்கே அமர்ந்து இருக்கிறது.

இரட்டைப்புலவர்கள் பாடிய அம்மானைப்பாடலின் முழுவடிவம்: 
“தென்புலியூர் அம்பலவர் தில்லைச் சிதம்பரத்தே
வெம்புலி ஒன்று எந்நாளும் மேவுங்காண் அம்மானை 
வெம்புலி ஒன்று எந்நாளும் மேவுமேயாம் ஆகில்
அம்பலத்தே விட்டே அகலாதோ அம்மானை
ஆட்டைவிட்டு வேங்கை அகலுமோ அம்மானை”
இப்பாடலின் உண்மையான உட்கருத்தைப் பார்ப்போமா? ‘தென்புலியூர் அம்பலவரின் தில்லைச் சிதம்பரத்தில் புலிப்பாத முனிவர் [வியாக்ரபாதர்] எப்போதும் அமர்ந்திருக்கிறார்’. ‘எந்நாளும் அமர்ந்திருக்கும் புலிப்பாத முனிவர் அம்பலத்தை விட்டு அகலமாட்டாரோ?’ ‘நடராஜரின் ஆட்டத்தைப் பார்ப்பதைவிட்டு புலிப்பாத முனிவர் போவாரா?’ என இந்த அம்மானைப் பாடலில் இரட்டைப் புலவர்கள் புலிப்பாத முனிவரைப் பற்றிக்கூறியுள்ளனர். அம்மானைப் பாடல்கள் சிலேடையாக இரட்டைக் கருத்துத் தருவனவே.
இனிதே,
தமிழரசி.

Thursday, 5 January 2017

பெருமை மிகு பாதம் அது!

பாதம் அது பாதம் அது
பரவ இனிய பாதம் அது
வேதம் தொழு பாதம் அது
வெற்றி தரும் பாதம் அது
ஏதம் அற்ற பாதம் அது
எழில் நிறை பாதம் அது
நாத கீத பாதம் அது
நடன ராசர் பாதம் அது
பேதம் இலா பாதம் அது
பெருமை மிகு பாதம் அது
இனிதே,
தமிழரசி.

Wednesday, 4 January 2017

புங்கை மக்கள் புலம் பெயர...

பனை மரங்கள் நிற்ப தென்னே!

கார் மேகம் குடை பிடிக்க
      கழனி யெங்கும் மழை துமிக்க 
நீர் நிறைந்து வயல் செழிக்க
      நில மெங்கும் வளம் கொழிக்க
சீர் கண்ட உயிர் அனைத்தும்
      சேர்ந் திருந்து உடன் வாழ
பார் எனப் பெயர் சூட்டி
      பார்த் திருந்த மனிதன் எங்கே!

ஆறு குளம் வறண்ட தேனோ
      ஆற்று மணல் போன தெங்கோ
சேறு சகதி எமக்கு ஏனோ
      செழித்து வளருங் காடு தானே
மாறு கொண்டு மரத்தை வெட்டி
      மனிதர் நிற்க நிழலும் இன்றி
பேறு என்றே பொருளைப் போற்றி
      பேணிக் காக்கும் மடமை இங்கே!

போர் என்னும் மகுடி கேட்டு
      புங்கை மக்கள் புலம் பெயர
ஊர் எங்கும் பசுமை போச்சு
      உறவைக் கூட மறந்தே போச்சு
நீர் அற்ற நிலமே ஆச்சு
      நிலம் வறண்டு பாறை ஆச்சு
பார் என்று பசுமை போர்த்தி
      பனை மரங்கள் நிற்ப தென்னே!

                                                                                   - சிட்டு எழுதும் சீட்டு 131

இனிதே,
தமிழரசி.

Sunday, 1 January 2017

புங்குடுதீவின் கள்ளிக்காட்டு மாண்மியம் - பகுதி 1


அகிலம் எங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு ஆங்கிலப் புத்தாண்டு 2017ன் மங்கலவாழ்த்து! அகிலம் எமது சொத்து. அதலேயே தமிழன் அகிலமெங்கும் பரந்து வாழ்கின்றான் என்றும் சொல்லலாம். உலகை அகிலம் என்ற சொல்லால் அழைத்தவன் தமிழன். அகிலம் என்ற சொல்லை எப்படி தமிழன் உருவாக்கினான்? அச்சொல் உருவாக எது காரணம்? அகிலம் என்ற சொல்லை தமிழுக்குக் கொடுத்த பெருமை கள்ளிக்காடுகளுக்கே உரியதாகும். அதனால் புங்குடுதீவின் கள்ளிக்காடும் அந்தப் பெருமையைப் பெற்றுக்கொள்கிறது. எப்படி கள்ளிக்காடுகளுக்கு அப்பெருமை கிடைக்கும் என நினைக்கிறீர்களா! ஆங்கிலப்புத்தாண்டின் பரிசாகத் தருகிறேன் வந்து பாருங்களேன். 

புங்குடுதீவின் மான்மியம் வாசித்திருப்பீர்கள். இது என்ன புங்குடுதீவின் கள்ளிக்காட்டு மாண்மியம்!! அதுவும் உங்களுக்கு வியப்பாக இருக்கிறதா? மாண்மியம் என்பது பெருமையை, அழகை, புகழை, நன்மையை ஆற்றலை எடுத்துச் சொல்லுதலாகும். ஏனெனில் பெருமை, அழகு, புகழ், நன்மை, உயர்வு, ஆற்றல் யாவும் சேர்ந்த பெருங்கலவையே மாண்பு. புங்குடுதீவின் கள்ளிக்காட்டின் மாண்பைச் சொல்வதற்கு முன் கள்ளியின் மாண்பைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம். 

ஏனெனில் இந்தப்பூமியில் இருக்கும் கற்பாறைகளைக் கனியவைத்து மண்ணாக மாற்றித் தருவதில் கள்ளி இனத்துக்கும் ஒருசிறிய பங்கு இருக்கிறது. இப்பூமி தோன்றி கிட்டத்தட்ட 4.5 பில்லியன் வருடங்கள் என்றும் மண் பிறந்து [Pedogenesis] 410 மில்லியன் வருடங்கள் எனவும் கூறும் இன்றைய விஞ்ஞானிகள், வேர்விடும் தாவரங்கள் தோன்றி 375 மில்லியன் வருடங்கள் என்கின்றனர். விஞ்ஞானிகள் தமக்குக் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டே இவற்றைச் சொல்கின்றனர். அவர்களுக்குக் கிடைத்த ஆதாரங்களின் படி கள்ளி இனம் தோன்றி ஏறக்குறைய 35 மில்லியன் வருடங்கள். ஆனால் மனித இனம் தோன்றி 1.8 மில்லியன் வருடங்களே.

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி”                                         
                                                  - (பு. வெ. மாலை: 35: 3- 4)
இவ்வுலகில் மலை உண்டாகி [கல்தோன்றி] மண் உண்டாக முன், அதாவது உலகின் பெரும்பகுதி குறிஞ்சிநிலமாக இருந்தகாலத்தில் முதலில் தோன்றிய மூத்தகுடி நம் தமிழ்க்குடி எனப்பெருமை பேசுகிறது புறப்பொருள் வெண்பாமாலை. 

உலகம் தோன்றிய காலத்தில் உலகின் பெரும்பகுதி கற்காடாக இருந்தது.  மலை மண்ணாக மாறமுன், பாறைக்கற்களாய் கற்காடுகளாய் இருந்த இடங்களை ‘கடறு’, ‘கடம்’ என்ற பெயர்களால் நம் முன்னோர் அழைத்தனர். அதனைச் சீத்தலைச் சாத்தனாரும்
“வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
கள்ளி அம் காட்ட கடத்திடை”                                     
                                                 - [அகநானூறு: 53]
என அகநானூற்றில் கூறுவதால் அறியலாம். இதிலே ‘கள்ளிஅம் காட்ட கடத்திடை’ எனக் கடறு இடையே [கடத்திடை] அழகிய கள்ளிக்காடு இருந்ததைக் கூறியுள்ளார்.
கடறுக் காடு     [Photo: source - nationalgeographic.com] 

கல்லால் ஆன இந்த உலகத்தின் கடறை அரையில் கட்டிய மிகப்பழைய ஓர் ஊரை
“கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த
தொல்புகழ் மூதூர்”
                                                 - [ப.பத்து: 6: 53: 4 - 5]
எனப்பதிற்றுப்பத்து காட்டுகிறது. அந்தக் கடறுகளையே கள்ளிகள் தமது வேர்களால் நல்ல மண்ணாக மெல்ல மாற்றின. இன்றும் கல்லை மண்ணாக்கிக் கொண்டு கடறு இடையே இருக்கும் கள்ளிச் செடியை கீழே உள்ள படத்தில் பாருங்கள். கள்ளிவேர்களின் ஆற்றலே கல்லை மண்ணாக மாற்றுகிறது. 

மரவேர்கள் கல்லை, பாறைகளை கனியவைத்து உடைக்கும் என்தை நம் தமிழ் முன்னோர் அறிந்திருந்தனர். அதை
“வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில் 
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிரும்பு
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்”                                    
                                         - [நல்வழி: 33]
“வெட்டக்கூடியவை மென்மையானவற்றை வெற்றிகொள்ள முடியாது. யானையின் உடலை ஊடுருவிக் கொல்லும் வேல், பஞ்சை ஊடுருவிச் செல்லாது. இரும்பால் செய்த கடப்பாரைக்கு இளகாத கற்பாறை, பச்சை மரங்களின் வேருக்கு இளகும்” என்று ஔவையார் கூறியுள்ளார். ஔவையாரின் இக்கூற்றை, ‘பாறைகளை கள்ளிவேர்கள் நெகிழ்விக்கும்’ என்ற Dr Yoav Bashan அவர்களின் இன்றைய கண்டுபிடிப்பு உண்மையாக்கியுள்ளது. 

[Photo:  Dr Yoav Bashan] 

கள்ளி இனங்களை ஆய்வு செய்த தாவரவியல் விஞ்ஞானியான Dr Yoav Bashan “அனேகமான தனிப்பட்ட கள்ளி இனங்கள் மண்ணற்ற பாறைகளில் மட்டுமல்ல செங்குத்தான பாறைகளிலும் வளர்வதை அவதானித்தோம். கள்ளி இனங்களின் விதைகளில் இருக்கும் பற்றீரியாவே பாறைகளை நெகிழவைத்து வேர்கள் செல்ல வழிவகுக்கிறது. வேர்கள் பாறையைத் துளைத்துச் செல்ல பாறை வெடித்துச் சிதறுகிறது. கள்ளிகளும் பாறையில் இருந்து மண் உருவாக உதவுகின்றன” எனக் கூறுகிறார், [BBC Earth News - 2009]. எனவே கள்ளி இனங்கள்  கற்பாறைகளை மண் ஆக மாற்றும் வேலையை 35 மில்லியன் வருடங்களாகச் செய்து வருகின்றன.

இன்றைய உலகில் கள்ளி இனங்களின் பிறப்பிடம் தென் அமெரிக்கா என்று கூறப்பட்டாலும் பண்டைய உலகில் கிழக்காபிரிக்கா, மடகஸ்கார், இலங்கை இந்தியா போன்ற இடங்களிலும் பல நூற்றுக்கணக்கான கள்ளி இனங்கள் இருந்தன. இன்றும் இருக்கின்றன. ஆனால் அவை பற்றிய ஆய்வுகள் எதுவும் முழுமையாக நடத்தப்படவில்லை என்பதே உண்மை. இவ்விடங்களிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டால் கள்ளி இனங்களின் வயதை மேலும் அவை கூட்டக்கூடும்.

சங்கச் சான்றோர்கள் தம் பாடல்களில் கள்ளிகள் பற்றிய பல அரிய செய்திகளைக் கூறியிருக்கிறார்கள். நாம் ஆலமரநிழலில் இருக்கும் பிள்ளையாரை வணங்குவது போல சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர் கள்ளிச்செடி நிழலில் இருந்த கடவுளை வணங்கியதை
“கள்ளி நீழற் கடவுள் வாழ்த்தி”  
                                              - [புறநானூறு: 260: 6]
எனப் புறநானூறு காட்டுகிறது. எனவே கடவுளை வைத்து வணங்கக் கூடிய அளவிற்கு கள்ளிச் செடி உயர்ந்து வளர்ந்து நிழல் தரும் மரமாய் இருந்ததை நாம் அறியலாம். ஆயிரத்து ஐஞ்ஞூறு வருடப் பழமைவாய்ந்த தேவாரப் பாடல் பெற்ற தலமான திருக்கள்ளில் கோயில் தலவிருட்சம் கள்ளிமரமே. நம் தமிழ் முன்னோர் கள்ளிமரத்தின் கீழே கடவுளை வைத்து வணங்கியதற்கு இன்றும் எடுத்துக்காட்டாகத் திருக்கள்ளில் கோயில் விளங்குகிறது.

இப்போ நாம் வளர்க்கும் கற்றாழையில் கூட எத்தனையோ வகைகள் இருந்தன. அவை வருடங்கள் செல்லச் செல்ல மரம் போல வளரும். நாமோ அவற்றை அதிக வருடங்களுக்கு வளர விடுவதில்லை. பத்து வருடங்களுக்கு 1.5 அங்குலம் வளருகின்ற கள்ளி இனம், 25 வருடத்தில் 8 அடி உயரத்தை அடைந்து 50 வருடத்தில் 30 - 40 அடி உயரத்தைக் கூட அடையும். புல் இனத்தைச் சேர்ந்த தென்னை, பனை போன்றவை உயர்ந்து வளர்வதால் நாம் அவற்றை மரம் என அழைப்பது போல கள்ளிச் செடியையும் கள்ளிமரம் என்கிறோம்.
கள்ளியில் குடியிருக்கும் ஜோடிப்புறா

சங்ககாலப் பெண்பாற்புலவரான வெண்பூதியார் ‘மழை அற்றுப்போன வறண்ட நிலம். அங்கே கிளைவிட்ட முட்களையுடைய கள்ளிக் காய் பெரிய ஒலியோடு வெடித்துச் சிதறுகிறது. அந்த ஒலியைக் கேட்டு அக்கள்ளிச் செடியில் குடியிருந்த ஜோடிப் புறா பறந்து போகும்’ என்கின்றார்.
“பெயன்மழை துறந்த புலம்புறு கடத்துக்
கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி
துதைமென் தூவித் துணைப்புற விரிக்கும்…”     
                                                     - [குறுந்தொகை: 174: 1 - 3]
வறண்ட நிலங்களில் மட்டுமல்ல காடும் காடு சார்ந்த முல்லை நிலத்திலும் [புறவு] குறுகிய கிளைகளும் [குண்டைக் கோடு] குறுகிய முட்களுமுள்ள கள்ளி வகைகள் வளரும் என்பதை
“வெண்பிடவு அவிழ்ந்த வீகமழ் புறவில்
குண்டைக் கோட்ட குறுமுள் கள்ளி” 
                                                     - [அகநானூறு: 184: 7 - 8]
என மதுரை மருதன் இளநாகனார் சுட்டிக் காட்டியுள்ளார். 
மரங்கொத்திப் பறவையும் அதன் தலை போன்ற கள்ளியும்

‘பாறைக்கற்கள் [பரற்கற்கள்] நிறைந்த நிலத்தில் மரங்கொத்திப் பறவையின் [சிரல்] தலை போல இருக்கும் கள்ளிச் செடிகளின் மேலே மிக்க நறுமணமுள்ள முல்லைமலர்க் கொடிகள் படர்ந்திருக்கும்’ என்கிறது நற்றிணை.
“பரற்றலை போகிய சிரற்றலைக் கள்ளி
மீமிசைக் கலித்த வீநறு முல்லை” 
                                                   - [நற்றிணை: 169: 4 - 5]

தொலைக்காட்சியின் Discovery Channelல் புலி  மானைப் பிடித்துத் தின்று மிஞ்சிய இறைச்சியை விட்டுச்செல்வதப் பார்த்திருப்பீர்கள். ஆனால் கள்ளிக் காட்டில் புலி வேட்டை ஆடுவதைப் பார்த்திருக்க மாட்டீர்கள். ஏனெனில் மனிதர்களாகிய நாம் காலங்காலமாக கள்ளிக் காட்டையே அழித்துவிட்டோமே! எப்படி அங்கே புலி, மானை வேட்டையாடுவதைப் பார்ப்பது? ஆனால் கள்ளிக்காட்டில் புள்ளிமானைத் துரத்திச் சென்று, மானின் கொம்பு உதிர்ந்து விழ வேட்டையாடித் தின்ற மிச்ச இறைச்சியை விட்டுச் சென்ற [துறந்த], புலியைப் பார்த்த மாமூலனார் [2250 வருடங்களுக்கு முன்] அதனை எமக்காக எழுதிவைத்துள்ளார்.
“கள்ளிஅம் காட்ட புள்ளிஅம் பொறிக்கலை
வறன்உறல் அம்கோடு உதிர, வலம்கடந்து
புலவுப்புலி துறந்த கலவுக்கழிக் கடுமுடை”
                                                 - [அகநானூறு: 97]

இலங்கையும் ஒரு காலத்தில் கடறாக இருந்தது. இலங்கையின் கடற்கரை ஓரமாக நடந்து பார்த்தால் பண்டைய கடறுகளின் எச்சங்கள் தேய்வடைந்த நிலையில் மணலுள் புதையுண்டு இருப்பதை இன்றும் பார்க்கலாம். திரிகோணமலை, காலி கடற்கரை ஓரம்மெங்கும் கடறுத் தேய்மானங்களை அதிகம் காணலாம். உலகிற்கு அகிலம் என்ற பெயரை சூட்டக் காரணமாய் இருந்தவை கடறுக்காட்டுக் கள்ளிகளே. கள்ளிச்செடிகள்  முள் நிறைந்தவை. முள் என்பதை அக்கு என்றும் சொல்வர். வன்னி மக்கள் மரமுட்களால் ஆன வேலியை அக்கு வேலி என்பர். அக்கு + இல் =  அக்கில் ஆகி அகில் ஆயிற்று.

கள்ளியிலிருந்து அகில் பிறப்பதை
“கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் மான்வயிற்றில்
ஒள்அரிதாரம் பிறக்கும் பெருங்கடல் - உள்
பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்
நல்ஆள் பிறக்கும் குடி” 
                                                - [நான்மணிக்கடிகை: 6]
என விளம்பி நாகனார் கூறியிருப்பதால் அறியலாம். 

பேயின் உடல் பிளந்தது போல் கள்ளி உக்கிப்போக உள்ளே இருக்கும் அகில் தெரிகிறது

கள்ளி மரத்தின் நடுவே எப்படி அகில் கட்டை உண்டாகும் என்பதைக் கம்பரும்
“பேய் பிளந்து ஒக்க நின்று உலர் பெருங் கள்ளியின்
தாய் பிளந்து உக்க கார் அகில்களும்”
                                                 - [கம்பராமாயணம்: 1: 7: 8: 1-2]
பேயின் உடலை பிளந்தது போல நிற்கும், உலர்ந்து போன பெரிய கள்ளியின் முதிர்ந்த மரம், பல பிளவுகளாகப் பிளவுபட, தாய் மரத்தின் வெளிப்பக்கம் உக்கி விழும், அப்படி விழும்பொழுது உள்ளே இருந்து கரிய அகில் கட்டைகள் கிடைக்கும் என விரிவாக இராமாயணத்தின் பாலகாண்டத்தில் கூறுகிறார். இன்றும் கம்பர் கூறியது போல நிற்கும் கள்ளிமரத்தையும் அதன் நடுவேயிருக்கும் அகில் பிளவுகளையும்  மேலேயுள்ள படத்தில் பாருங்கள்.

கற்காடாக - கடறுகளாக இவ்உலகம் இருந்த போது கள்ளிக்காடுகள் யாவும்  அகில் மணத்தது. அகில் நிறைந்த உலகைத் தமிழர் ‘அகிலம்’ என அழைத்தனர். [அகில் + அம் = அகிலம்]. கள்ளி வயிற்றில் பிறந்த அகிலே, அகிலம் என்ற பெயரை உலகிற்குக் அளித்து என்பது புரிகிறதா? அதனால் கள்ளிக்காடுகள் மாண்பு பெற்றன. அகிலம் என்பது சமஸ்கிருதச் சொல் எனச் சிலர் சொல்கிறார்கள். அது பிழையான கருத்து. சமஸ்கிருதத்தில் அகரு என்பர்.

“நிரைகழல் அரவம்” என்ற தேவாரத்தில் திருக்கோணேச்சரக் கடற்கரையில் 
கரைகெழு சந்தும் காரகிற் பிளவும்”
                                              - [ப.திருமுறை: 3: 123: 1: 5]

வந்து மோதுகின்றன என திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார் அல்லவா! அந்தக் ‘கார் அகில் பிளவை’ கள்ளிச் செடிகளே தந்தன. இன்றும் திருகோணமலையின்  China Bay, Marble Point, Malay cove, திருக்கைக் குடா போன்ற பகுதிகளில் கள்ளிமரங்களைக் காணலாம். நானும் திரிகோணமலை நிலாவெளிக் கடற்கரை மணலில் ‘அகிலம்’ என எழுதி மகிழ்ந்தேன். புங்குடுதீவின் கள்ளிக்காட்டு மாண்மியத்தை அடுத்த பகுதியில் சொல்கிறேன்….
இனிதே,
தமிழரசி.