Friday, 30 September 2016

ஏரே கொண்டு எழுவோம் நாமே!சீரே இல்லாச் சிறுவர் என்றே
நேரே நின்று நகைகும் மாந்தர்
யாரே அறிவார் யாய்படு துன்பம்
காரே நீங்கி ககனத்துள் மாளினும் 
நீரே அற்று நிலனே வாடினும்
ஊரே வறண்டு உலகே மாறினும் 
போரே வரினும் புறமது காட்டா 
ஏரே கொண்டு எழுவோம் நாமே!
                                                                - சிட்டு எழுதும் சீட்டு 126 

சொல் விளக்கம்:
1. சீர் - செல்வம்
2. நேரே - முன்னனால்
3. யாய் - தாய்
4. கார் - மேகம்
5. ககனம் - ஆகாயம்
6. மாளுதல் - அழிதல்
7. ஏர் - உழும் கலப்பை

Thursday, 29 September 2016

குறள் அமுது - (123)


குறள்:
“விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது”                        - 16

பொருள்:
வானத்தில் இருந்து மழைத்துளி விழுந்தாலன்றி நிலத்தில் பசுமையைக் காணமுடியாது.

விளக்கம்:
வான்சிறப்பு எனும் அதிகாரத்தில் ஆறாவது குறளாக இத்திருக்குறள் இருக்கிறது. இக்குறளில் மழைத்துளி நிலத்தில் விழாது போனால் நிலம் எப்படி இருக்கும் என்பதை திருவள்ளுவர் எம் கண்முன்னே நிறுத்துகிறார்.

நம் எல்லோருக்கும் தெரிந்த சொல்லே விசும்பு. யாராவது விக்கி விக்கி அழுதால் ஏன் இப்படி விசும்பி விசும்பி அழுகிறாய் என்று கோட்போம் அல்லவா. அதே விசும்பல் தான். இடி இடித்து விசும்புகின்ற மழைமேகம் வானத்தில் இருப்பதால் வானை விசும்பு என்றும் அழைகிறோம். விசும்பி விசும்பி அழும்பொழுது மேகம் கறுத்தது போல் முகம் கறுத்து, மழையின் விண்ணீர் பொழிவது போல் கண்ணீரும் பொழியும்.

துளி, துளியாக நிலத்தை முத்தம் இடுவது எது? மழைத்துளி. அதனால் மழையை விசும்பின் துளி என்றார். உப்புக் கரிக்கின்ற கடல் நீரையும் மொண்டு மழைமேகமாய் காட்சிதருவது வானம். மழை பெய்வதாலேயே உலக உயிர்கள் யாவும் உயிர்வாழ்கின்றன. மழைத்துளியை வானம் பொழியவில்லை என்றால் உலகமே நீரற்று வறண்டு பாலவனமாகும். பாலைவனத்தில் பசும்புல்லை பசுமையைப் பார்கக் முடியுமா? அப்படி மாறும் நிலை வரும் பொழுது உலகில் வாழும் உயிகளின் நிலை என்னாகும்? உணவும் நீரும் இன்றி உயிர்கள் வாழ முடியுமா? அப்படி ஒரு நிலை வந்தால் யார் மகிழ்வோடு இருப்பார்? அதனை நான்மணிக்கடிகையில்

“கோல்நோக்கி வாழும் குடிஎல்லாம் தாய்முலைப்
பால்நோக்கி வாழும் குழவிகள் - வானத்
துளிநோக்கி வாழும் உலகம் உலகின்
விளிநோக்கி இன்புறூஉம் கூற்று”
                                                       -  (நான்மணிக்கடிகை: 27)
என்று விளம்பி நாகனார் கூறுகிறார். உலகத்தில் வாழும் எல்லாக் குடிமக்களும் நல்லாட்சியை[செங்கோல்] விரும்பி வாழ்வார்கள். குழந்தைகள் தாயின் முலைப்பாலில் தங்கி வாழும். உலக உயிர் யாவும்[உலகம்] வானத்தின் துளியாகிய மழையை எதிர்பார்த்து வாழும். நல்லாட்சி இல்லாமல் போனாலும், தாயின் முலைப்பால் வற்றினாலும் மழை பெய்யாது ஒழிந்தாலும் உயிர்களின் அழுகுரல் கேட்கும். உலகத்தின் ஒப்பாரியை - அழைப்பைக் கேட்டு[விளி நோக்கி] மகிழ்வானாம் கூற்றுவன்.

இப்போ தெரிகிறதா மழையின் அருமை. புல் விதைகள் ஈரநிலத்தில் ஒரே நாளில் முளைத்து பச்சைப் பசேல் எனக் காட்சிதரும். மழை பெய்வதற்கு அந்தப் பசுமையும் தேவை. பசுமை அற்ற நிலத்தில் மழைபொழியுமா? பசும் புல்லை செடி, கொடி மரங்களை வளர்த்து விசும்பின் துளி வீழ வழி செய்வோம்.

Wednesday, 28 September 2016

அடிசில் 107

கெண்டன்ஸ் பால் [Condensed Milk]
- நீரா - 

தேவையான பொருட்கள்: 
பால் - 2 கப்
சீனி - 1 கப்
பட்டர்/நெய் - 1 தே.கரண்டி
அப்பச்சோடா - 1 சிட்டிகை

செய்முறை:
1. அடிப்பக்கம் தடிப்பான வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி சீனியை இட்டு நன்கு கரைத்துக் கொள்க.
2. அந்தப் பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஆகக் குறைந்த இளஞ்சூட்டில் காய்ச்சவும். பால் அடிப்பிடியாதும் பொங்கி வழியாதும் பார்த்துக் கொள்க.
3. பதினைந்து நிமிடத்தின் பின்னர் பட்டர் சேர்த்துக் 2 - 3 நிமிடம் காய்ச்சவும்.
4. பால் தடித்து நிறம் மாறி 2 கப் பால் வற்றி, 1 கப் பால் அளவு வரும் போது இறக்கவும்.
5. அதற்குள் அப்பச்சோடாவைப் இட்டு நன்கு கலந்து கொள்க.
6. ஆறியதும் காற்றுப் போகமுடியாத போத்தலில் ஊற்றிவைத்துப் பயன்படுத்தலாம். குளிரான இடத்தில் இரண்டு கிழமைக்கு மேல் இருக்கும்.

Tuesday, 27 September 2016

மடைச் சாம்பிராணிக்கு எங்கே போவது?

சாம்பிராணிப் பூ
பனியாலும் மழையாலும் காற்றாலும் குளிரால் வாடிய பண்டைய மனிதனை இயற்கையில் கிடைத்த காய்ந்த மரங்களே காத்தன. மரங்களை எரித்து அது கொடுத்த வெப்பத்தின் கதகதப்பில் குளிரைப் போக்கிய மனிதன் மரங்களுக்கு மரம் அவை கொடுக்கும் வெப்பமும் மணமும் வேறுபடுவதைக் கண்டான். எந்தெந்த மரங்களின் புகை கண்ணில் கண்ணீரைப் பெருக்கவில்லை என்பதையும் பார்த்து அறிந்தான். அத்துடன் எரியும் புகையின் மணத்தை நுகர்ந்த போது நறுமணப் புகை அவனைக் கவர்ந்தது. கண்ணீரை வரவழைக்காத நறுமணத்தைக் கொடுத்த மரங்களின் புகை ஏன் மரத்துக்கு மரம் வேறுபடுகிறது என்பதை ஆராய்ந்தான்.

அந்த ஆய்வின் விளைவாகப் பல அரிய விடயங்களைக் கண்டறிந்தான். ஒருசில மரத்தின் புகை கொடிய விலங்குகளை, நச்சுப் பாம்புகளை, பூச்சி புழுக்களை தம்மிடம் நெருங்க விடாததைக் கண்டான். வேறு சில மரங்களின் புகை தமக்கு வந்த நோய்களைப் போக்குவதையும் காயங்களை மாற்றுவதையும் பார்த்தறிந்தான். சில மரங்களில் இயற்கையாக வடிந்த மரப்பால் காற்றின் வெம்மையில் காய்ந்து கெட்டியாகிக் கட்டியாய் மரத்தோடு ஒட்டிக் கிடப்பதையும் கண்டறிந்தான். [வேப்பமரப்பிசின், முதிரமரப்பிசின் போன்று ஒட்டிக்கிடந்தன]. 

மரத்திலிருந்து வடிந்த சாம்பிராணி

மரங்களை எரித்துப் புகையை உண்டாக்குவதை விட  மரங்களில் இருந்து வடிந்த பாற்கட்டிகளை சேகரித்து வைத்து தனக்குத் தேவையான போது நெருப்புத் தணலின் மேல் தூவி புகையை உண்டாக்குவது இலகுவாக இருந்ததை அறிந்தான். அந்த மரப்பாற் கட்டிகளில் எவை நறுமணத்தையும் அதிக புகையையும் கொடுத்து தமக்கு வந்த நோய்களையும்  நீக்கினவோ அம்மரங்களை நட்டு வளர்த்தான். அப்பாற்கட்டிகளை சேகரித்து செல்லும் வழியிலும் தங்கும் இடங்களிலும் வேண்டிய போது அவற்றைப் பயன்படுத்தினான். 

இவ்வாறு மரப்புகையின் தன்மையைக் கண்டறிந்த பண்டைய மனித இனங்களில் தமிழினமும் ஒன்று. சங்கத்தமிழரின் வாழ்வியல் அதனை நன்கு எடுத்துக் காட்டுகிறது. சங்கத் தமிழர் போரினால் ஏற்பட்ட விழுப்புண்ணை மாற்றும் மருந்தாக நறுமணப் புகையைப் பயன்படுத்தியதை புறநானூற்றில் அரிசில்கிழார் எனும் சங்ககாலப் புலவர்
“நெடு நகர் வரைப்பில் கடி நறை புகைஇ
காக்கம் வம்மோ காதலம் தோழி!
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகைப் புண்ணே”
                                                      - (புறநானூறு: 281)
எனப் பாடியிருப்பதால் அறியலாம். அதாவது ‘அன்புடைய [காதலம்] தோழியே[தோழி]! வேந்தனுக்காக [வேந்துறு] விழுப்புண்பட்ட [விழுமம்தாங்கிய], பூக்கள் பொறித்த [பூம்பொறிக்] கழலை அணிந்த காலுடைய [கழற்கால்] நெடுந்தகையின் புண்ணை; மாளிகையில் [நெடு நகர் வரைப்பில்] நறுமணம் கமழ்கின்ற [கடி நறை] புகையை புகைத்து [புகைஇ] காக்க [காக்கம்] வருக [வம்மோ]’ எனத் தலைவி ஒருத்தி தன் தோழியை அழைக்கிறாள். வீரத்தினை எடுத்துக்காட்ட மாவீரர்கள் காலில் அணியும் அணிகலனைக் கழல் என்பர்.

புகையிட்டு புண்களை நோய்களைக் குணமாக்கும் வழக்கம் தமிழரிடையே பண்டைக்காலம் தொடக்கம் இன்றுவரை இருந்து வருகிறது என நினைக்கிறேன். ஏனெனில் நான் சிறியவளாக இருந்த பொழுது எனக்கு வந்த ஒவ்வாமையைப் போக்க என் தந்தை புகையூட்டினார். சிறியவளாக இருந்த காலத்தில் இயற்கையைப் பெரிதும் காதலித்தேன். பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் அம்மா தரும் சிற்றுண்டியை உண்பேன். விளையாடுவதற்குப் பதிலாக வெள்ளைத் தாள்களை எடுத்துச் சென்று மரஞ் செடி, கொடிகளின் இலை, பூ, காய், பழம் மட்டும் அல்லாமல் கண்ணில் படும் பூச்சி, புழு, பறவைகள், விலங்குகள் யாவற்றையும் கீறுவதும் ஆடிப்பாடித் திரிவதும் எனது பொழுது போக்கு. சில வேளைகளில் இலை, பூ, காய், பழங்களை அவற்றின் சுவை அறியக் கடித்துப் பார்ப்பதும் உண்டு. 

ஒரு நாள் மாலை வீட்டுக்கு வந்தும் வழமைபோல அம்மா என்னைக் குளிப்பாட்டி துடைத்தார். அவவின் கண் முன்பே என் உடலெங்கும் திட்டுத் திட்டாகத் தடித்துக் கடிக்கத் தொடங்கியது. ‘என்ன சாப்பிட்டிங்க?’ என்று கேட்டார். நான் கீறி வைத்திருந்த படங்களைக் காட்டினேன். அவவுக்கே சில காய்களின் பெயர் தெரியாது. எது நஞ்சு! எது நஞ்சில்லை! என்பதும் தெரியாது. என்னை டாக்டரிடம் அழைத்துச் செல்வதற்காக உடைமாற்றினார். அப்போது வெளியே சென்றிருந்த என் தந்தை வந்தார். ‘மகளைப் பாருங்க, உடம்பெல்லாம் தடிக்கிறது டாக்டரிடம் கூட்டிப்போவோம்’ என்றார்.  

எனது பொழுது போக்கு என்ன என்பது என் தந்தைக்குத் தெரியும். ‘மகள்! நீங்க கடித்துப் பார்தீங்களா? சாப்பிட்டீங்களா?’ எனக் கேட்டபடியே நான் கீறிய படங்களைப் பார்த்தார். [படங்களின் அருகே அது புளிக்குமா? கசக்குமா? இனிக்குமா? நாக்கில் ஒட்டுமா என எழுதிவைத்திருப்பேன்]. இது ஒவ்வாமை என்றார். இதற்கு டாக்டரிடம் போகவேண்டிய தேவையில்லை. போனாலும் அவர்கள் இதனை மாற்றுவார்களே ஒழிய முற்றிலும் குணமாக்க மாட்டார்கள் என்றார். எனக்கு அவர் சொன்னது விளங்கவில்லை. ‘மாற்றுவார்கள் ஆனால் முற்றிலும் குணமாக்க மாட்டார்கள் என்றால் என்ன என்றேன்? ஆங்கில மருத்துவம் ஒரு நோயை இன்னொரு நோயாக மாற்றும். தமிழ் மருத்துவம் நோயை முற்றாகக் குணமாக்கும் என்றார்.

எங்கள் வீட்டில் நின்றவரிடம் தென்னை மரத்தின் இளங்குருத்தோலையை வெட்டிக் கொண்டுவரும்படி கூறினார். முற்றத்தில் நெருப்பிட்டு தணலின் மேல் தென்னங்குருத்தை பரவி, அதிலிருந்து புகை வரத்தொடங்க, இடமும் வலமுமாக இரண்டுமுறை புகையை சுற்றி வரும்படி கூறி ஒரு முறை கடக்கவைத்தார். அவ்வளவே! சிறிது நேரத்தில் உடலெங்கும் உண்டான தடிப்புகளும் மறைந்து கடியும் நின்றது. அதன் பின்னர் உணவால் எந்த ஒரு ஒவ்வாமையும் எனக்கு வரவில்லை. பாருங்கள் எதுவித மருந்தும் பத்தியமும் இன்றி சில நிமிட நேரத்தில் தென்னங்குருத்தின் புகை ஒவ்வாமையை நீக்கியதே. இது நம் முன்னோர் கண்டறிந்திருந்த அநுபவ உண்மை அல்லவா?
வாடிய கற்றாழை மடல்

தென்னங்குருத்து மட்டுமல்ல பனங்குருத்து, வாழைக் குருத்து, வேப்பந்தளிர், ஆடாதோடைச் சருகு, வாடிச்சருகான கற்றாழை மடல் போன்ற பலவகை இலைகளின் புகையையும் வெள்ளெருக்கம்பூ, மாம்பூ போன்ற பல பூக்களின் புகையையும் குங்கிலியம், சாம்பிராணி போன்றவற்றின் புகையையும் நம்முன்னோர் பயன்படுத்தி நோய்களை நீக்கியதை வாகடங்கள் [வைத்திய ஏடுகள்] கூறுவதால் அறியலாம். இவற்றின் புகை ஈ, நுளம்பு, சிலந்தி, தேள் போன்றனவற்றின் தொல்லைகளில் இருந்து காத்ததோடு, கிருமி கொல்லியாக தொற்று நோய்களையும் தடுத்தது.
குங்கிலிய மரம்

குங்கிலியம் என்று சொன்னதும் சைவசமயத்தவர் மனக்கண்ணில் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக்கலய நாயனாரே வருவார். பல்லாயிர வருடங்களாக குங்கிலியத்தை மனிதர் பயன்படுத்தி வருவதை வரலாறு காட்டுகிறது. குங்கிலிய மரத்திலிருந்து[shorea robusta] வடிந்த பாற்கட்டியே குங்கிலியமாகும். தெற்காசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட குங்கிலிய மரத்தை சால் மரம் என்றும் கூறுவர். இவை மிக உயரமாக வளரக்கூடியவை. ஜலரி என்று அழைக்கப்படும் மரம் மூன்று மீட்டர் உயரம் வரை வளரும். 
குங்கிலியம்

மருத்துவ வாகடங்கள், நிகண்டுகள் குங்கிலியத்தை குங்கிலிகம், குங்குலியம், குக்குலு என்றும் குறிக்கின்றன. குங்குதல் என்றால் நிலைகெடல் அல்லது குறைதல் என்ற கருத்தைத் தரும். தணலில் தூவப்படும் குங்கிலியம் உருகித் தன் நிலைகெட்டுப் போவதால் குங்கிலியம் என அழைத்தனர். குங்குலிய மரத்தில் பல இனங்கள் உண்டு. இனத்துக்கு இனம் குங்கிலியத்தின் நிறமும் மணமும் மாறுபடுவதோடு நோய் நீக்கும் தன்மையும் வேறுபடுகிறது. செங்குங்குலியம், பச்சைக் குங்குலியம், வெண்குங்குலியம், மஞ்சள் நிறக்குங்கிலியம், கருங்குங்குலியம், எருமைக்கண் குங்குலியம், பறங்கிக் குங்குலியம் எனக் குங்கிலியம் பலவகைப்படும். இலங்கையில் கிடைத்த ஒருவகைக் குங்கிலியத்தை இங்கிலாந்தில் ஒரு அந்தர் £14.50 என்ற விலைக்கு 1883ம் ஆண்டில் விற்றிருக்கிறார்கள்.

நாம் கடவுளர்க்குக் தூபம் காட்டும்போது இடும்  சாம்பிராணியும்[Frankincense - C20H32O4] மரத்தில் இருந்து வடிந்து காய்ந்த பாற்கட்டியே. ஐயாயிர வருடங்களுக்கு மேலாகச் சாம்பிராணியை மனிதர் பயன்படுத்துகின்றனர். சிலர் குங்கிலியமும் சாம்பிராணியும் ஒன்று என்று கருதுகின்றனர். வெவ்வேறு விதமான மரங்களில் இருந்தே இரண்டும் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து வெவ்வேறு அமிலங்கள் கிடைக்கின்றறன. குங்கிலியத்தில் Stearic acid [C18H36O2] இருக்கிறது. சாம்பிராணியில் Boswellic acid [C30H48O3]இருக்கிறது. அவை பலவைகையான நோய்களை நீக்கின்றன. 
குங்குலியப்பூ

நம் முன்னோர் பெண்களின் கர்ப்பப்பைக் கட்டிகளையும் கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோயையும் சாம்பிராணி நீக்குமென்பதை அறிந்திருந்தனர் என்பதற்கு நமது மருத்துவ வாகடங்களே சான்றாகும். ஆயிரக்கணக்கான வருடங்களாக நம்மவர்கள் முழுகியதும் தலைமயிருக்கு சாம்பிராணிப் புகை இட்டார்கள். சாம்பிராணியின் புகை மூளையில் கட்டி [Brain Tumour] உண்டாகாது தடுத்ததுடன் தலைமயிர் நரைக்காதும் காத்தது. மேலை நாட்டு மோகத்தில் நாம் அதைக் கைவிட்டு hairdryer போடுகிறோம்.

பண்டை நாளில் இருந்து இன்றுவரை உலகில் உள்ள எல்லாமதப் பூசைகளிலும் கோயில்களிலும் தூபமாக குங்குலியமும் சாம்பிராணியும் போடுகிறார்கள். அவை கலப்படம் இல்லாது இருக்கும்வரை அவற்றால் மனிதருக்கு நன்மையே கிடைக்கின்றன. இன்றைய உலகம் செய்துவரும் நகரமயமாக்கல் என்னும் நாகரீகத்தால் காடுகளை அழிக்கிறோம்.  உயர்ந்த கோபுரங்களோடு கோயில்களைக் கட்டி அழகு பார்க்கிறோம். கோயிலைப் புனிதமாக்கும் எண்ணத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை மரங்களை வெட்டி, புல் பூண்டுகளைச் செருக்கி பளிங்குக் கற்களைப் பதித்து நமது செல்வச் செழிப்பைப் பறை அடிக்கிறோம். ஆனால் கோயிலில் தூபமாகப் போடும் சாம்பிராணி மரத்தையோ குங்குலிய மரத்தையோ எந்த சமயத்தைச் சேர்ந்தோராவது நட்டு வளர்க்கிறார்களா? இம்மரங்களை எந்தக் கோயிலின் அருகிலாவது பார்த்ததுண்டா? 
சாம்பிராணிமரம்

ஒருமரத்திலிருந்து ஒருவருடத்திற்கு ஒரு கிலோ சாம்பிராணியோ ஒருகிலோ குங்குலியமோ பெறமுடியுமென்பதே மிகவும் வேதனையான விடையமாகும். அந்நாளில் இயற்கையாக மரப்பட்டையில் உண்டாகும் வெடிப்பில் இருந்து வடிந்த சாம்பிராணியைப் பெற்ற நாம் இப்போது மரத்தைக் கீறி சாம்பிராணி பெறுகிறோம். உலகம் 85% சாம்பிராணியை சோமாலியாவில் இருந்தே பெற்றுவந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் அங்கும் காடுகள் அழிக்கப்படுவதாலும் மரம் நடுவார் இன்மையாலும் சாம்பிராணி உற்பத்தி வீழ்ச்சி அடைகிறது. மேலே படத்தில் பாருங்கள் அந்த வெளியில் எத்தனை மரங்கள் நிற்கின்றன. அத்துடன் இம்மரங்கள் மிக மிக மெதுவாக வளர்வன. இன்றைய விஞ்ஞான உலகமும் சாம்பிராணியில் உள்ள இரசாயனப் பொருட்கள் புற்றுநோயை நீக்குவதைக் கண்டு கொண்டன.

சாம்பிராணி கிருமிகளைக் கொல்வதால் உணவு சமைக்கும் இடத்தில் சாம்பிராணிப்புகை இட்டனர். அப்புகை சமைத்த உணவுகள் கெட்டுப் போகாது காத்தது. உணவு சமைக்கும்  சமையலறை - அகடுக்களை, மடைப்பள்ளி எனவும் அழைக்கப்படும். இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே இலங்கையின் மாந்தையில் வாழ்ந்தோர் வீமன் எழுதிய மடைநூல் சொல்லியபடி சமையல் செய்ததை
“பனிவரை மார்பன்[வீமன்] பயந்த நுண்பொருள்
பனுவலின்[நூல்] வழாஅப்[வழுவாது] பல்வேறு அடிசில்[உணவு]” 
                                          - (சிறுபாணாற்றுப்படை: 240 - 241)
என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. இவ்வரிகளுக்கு உரைஎழுதிய நச்சினார்க்கினியார் ‘பனிவரை மார்பன் பயந்த நுண் பொருள் பனுவலை’ - வீமன் எழுதிய மடைநூல் என்கிறார். எனவே மடையில் இட்ட சாம்பிராணியே மடைச் சாம்பிராணி.

பேச்சு வழக்கில் அது மடச்சாம்பிராணியாக மருவிவிட்டது. புத்தி குறைந்தோரைப் பார்த்து மடச்சாம்பிராணி என்று தமிழர் திட்டுவது உண்டல்லவா? ‘மடச்சாம்பிராணிக்கு எங்கே போவது?’ என்று நம்மை நாமே கேட்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. நம் நாட்டில் வளரக்கூடிய இனத்தைச் சேர்ந்த சாம்பிராணி, குங்கிலிய மரங்களை நாம் வளர்க்கலாம். இல்லையேல் மாமன்னன் அலெக்சாண்டரைப் போல் சாம்பிராணிக்காக நாடுகளைப் கைப்பற்ற வேண்டிய நிலை வரும். 

அலெக்சாண்டர் சிறுவனாக இருந்த பொழுது லியோனிடாஸ்[Lionidas] என்பவரிடம் கல்வி கற்றார். ஒரு நாள் அலெக்சாண்டர் கைநிறைய சாம்பிராணியை அள்ளி நெருப்பில் தூவுவதைக் கண்ட லியோனிடாஸ், “இப்படி நெருப்பில் இட்டு சாம்பிராணியை வீணாக்க  இது விளையும் நாடுகளைக் கைப்பற்ற வேண்டும்” என்று கண்டித்தார். அது நடந்து இருபது ஆண்டுகளின் பின் அலெக்சாண்டர் கி மு 332ல் காஷா[Gaza]வைக் கைப்பற்றினார். அப்போது தனது ஆசிரியருக்கு கப்பல் நிறைய சாம்பிராணியை அனுப்பிவைத்ததோடு ‘கஞ்சத்தனம் இல்லாது தாராளமாகச் சாம்பிராணியைப் பாவியுங்கள்’ எனத் துண்டெழுதி அனுப்பினான். அலெக்சாண்டரைப் போல் நாடுகளைக் கைப்பற்ற முடிந்தாலும் சாம்பிராணி மரங்களுக்கு எங்கே போவது? 
இனிதே, 
தமிழரசி.

Saturday, 24 September 2016

ஈழத்தமிழருக்கு என்று ஓர் ஆடல் வடிவத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமா?

விசுரவசு முனிவர், கைசிகி

இயல் இசை நாடகம் என்ற முத்தமிழிலும் பண்பட்ட தமிழினமே ஈழத்தமிழினம். நம் ஈழத்திருநாடு உலகில் வாழும் மனிதருக்கு நனிநாகரீகத்தை ஈந்த நாகர்கள் வாழ்ந்த நாடு. மன்னாரின் மாந்தையைத் தலைநகராகக் கொண்டே நாகர்கள் ஆண்டார்கள். அதனை சங்க இலக்கியங்களும் மாந்தை மாண்மியமும் மாந்தைப் பள்ளும் மட்டுமல்ல வடமொழி இலக்கியங்களும், வேதங்களும் இதிகாசங்களும் புராணங்களும் கூடச் சொல்கின்றன. திருக்கேதீஸ்வர இறைவனை ‘நாகநாதர்’ என்றே இன்றும் அழைக்கிறோம் என்பதைக் கருத்திற்கொள்வது சிறந்தது. 

பண்டைய ஈழத்தின் மேற்குத் திசையை நாகர்களும் கிழக்குத் திசையை இயக்கர்களும் ஆண்டார்கள் என்பதற்கான தொல்பொருள் ஆதாரங்கள் இன்றும் இருக்கின்றன. கிடைக்கின்றன. நாகர்கள் வணங்கிய திருக்கேதீஸ்வரம் ஈழத்தின் மேற்கே மாந்தையில் இருப்பது போல இயக்கர்கள் வணங்கிய திருக்கோணேஸ்வரம் ஈழத்தின் கிழக்கே இருக்கிறது. அவை இரண்டும் பாடல் பெற்ற தலங்களாகும். 

இவ்விரு கோயில்களுக்கும் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகங்கள் இருக்கின்றன. திருஞானசம்பந்தர் கி பி 640களில் வாழ்ந்தவர். அவர்
“தென்னிலங்கையர் குலபதி மலைநலிந் தெடுத்தவன்                                                                                                    முடிதிண்தோள்
தன்னலங்கெட  அடர்த்து அவற்கருள் செய்ததலைவனார்                                                                                              கடல்வாயப்
பொன்னிலங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத்
துன்னியன்பொடு அடியவ ரிறைஞ்சுகே தீச்சரத் துள்ளாரே”
                                                  - (பன்னிருதிருமுறை: 2: 107: 8)
என்னும் இத்தேவாரத்தை 1360 வருடங்களுக்கு முன் பாடியிருக்கிறார். 
திருக்கேதீஸ்வரம் [சிவராத்திரி அன்று]

‘இராவணன் மேலது நீறு’  என்று முழங்கிய மேடைப்பேச்சாளர் எவரும் இந்தத் தேவாரத்தில் சம்பந்தர் இராவணனை ‘தென்னிலங்கையர் குலபதி’ எனச் சொன்னதைக் கண்டு கொண்டதில்லை. திருஞானசம்பந்தர் இத்தேவாரத்தை பாடிய காலத்தில் இலங்கையில் சிங்கள மொழியோ, கண்டியன் நடனமோ இருக்கவில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலே இடப்பட்டுள்ள தலைப்பில் இதனை எழுதுவதற்கான காரணத்தைக் கூறவேண்டியவளாக இருக்கின்றேன்.  24 - 09 - 2016 இன்று ‘tamilwin’ படித்தேன். அதில் ‘ஈழத்தமிழர்களுக்கு என்று ஆடல் வடிவத்தை ஏன் கண்டு பிடிக்க வில்லை?’ என்ற கேள்வியோடு ஒரு செய்தி இருந்தது. அக்கேள்வி தந்த வியப்பைவிட அச்செய்தி கொடுத்த அதிர்வால் இதனை எழுதுகிறேன். என்னைப்போல் உங்களில் பலரும் அச்செய்தியப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அச்செய்தியை வெளியிட்ட tamilwinக்கு என் வாழ்த்து.

அந்தச் செய்தியை அருட்தந்தை நேசன் அடிகளார் சொன்னாரா! அதுவும் வடமாகாணப் பண்பாட்டு பெருவிழாவில் மன்னார் மண்ணில் நின்று சொன்னாரா! அவர் கிறிஸ்த்துவர் ஆதலால் அம்மண்ணில் பண்டை நாளில் வாழ்ந்தோர் என்ன செய்தார்கள் என்ற வரலாறு தெரிந்திருக்காது. ஈழத்தின் பண்டைய வரலாறு அறியாதோருக்காக இதனை எழுதுகிறேன்.

முதலில் பரத நாட்டியத்தை நம்முடைய நடனம் என்று சொல்ல முடியாதா? அது இந்தியாவில் இருந்து இங்கு வந்ததா?  இந்தியாவிலிருந்து இங்கு[ஈழத்திற்கு] வந்த கர்நாடக இசையையும், பரதநாட்டியத்தையும் நம்முடைய பாரம்பரரிய இசை வடிவம் என்றோ, கலை வடிவம் என்றோ நாம் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்க முடியாதா? அதைக் கொஞ்சம் பார்ப்போமா!

மாந்தையைத் தலைநகராகக் கொண்டு பண்டைய ஈழத்தின் வடமேற்குப் பகுதியை ஆண்டவன் மயன். அவன் துகளினுள்[அணுவினுள்] இருந்து ஒடுங்கி விரியும் ஒளியின் சீரான நடுக்கத்தை கண்டறிந்திருந்தான். அவனது மகள் வண்டமரோதி/வண்டோதரி/மண்டோதரி சிறுமியாக இருந்தாள். [அவளை திருஞானசம்பந்தர் வண்டமரோதி என்று சொல்ல, மணிவாசகர் வண்டோதரி எனக் கூற கம்பர் மண்டோதரி என்றார்.] ஒரு நாள் அவளது தாய் “சிவலிங்கத்தைப் பாடி வணங்கினால் சிவன் உன்னுடன் ஆடவருவான்” என்று சொன்னாள். “எப்படி கை, கால் இல்லாத சிவலிங்கம் ஆடும்” என அவள் தன் பெற்றோரைக் கேட்டாள். அதனால் அணுவினுள் ஒளிரும் சீரான நடுக்கத்தை ஆடல் என்று கூறி அந்த ஆடலுக்கு மயன் கொடுத்த மானுடவடிவமே நடராசர் சிலையாகும். அதனை ‘மாந்தை மாண்மியம்’ கூறுகிறது. 


மன்னார் நிலப்பரப்பிலேயே மயன் நடனராஜனுக்குச் சிலை அமைத்தான். அத்தகைய பெருமையுடைய மன்னாரில் நின்று பரதநாட்டியம் நமது இல்லை என்று சொல்லலாமா! மயன் நடராஜ சிலையை அமைத்த காலத்தில் பரதசாஸ்திரம் எழுதிய பரதமுனிவர் பிறக்கவுமில்லை. இன்று நாம் அழைக்கும் பரதநாட்டியம் என்ற சொல்லும் இருக்கவில்லை. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புரந்தரதாசரே ‘பரதநாட்டியம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார் என்பர்.

மயனைப் பற்றியும் வண்டமரோதியைப் பற்றியும் முன்னர் பலமுறை எழுதியும் பேசியும் இருக்கிறேன். புதிதாக இப்போது இதைக் கூறவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு மேலாகச் சொல்கிறேன். ஈழத்தின் தொன்மையை அறிய linkஐ அழுத்திப் பார்க்குக.

மாந்தை மாண்மியமும் உத்தரகோச மங்கை புராணமும் சொல்லும் வண்டமரோதியின் கதையை ‘நித்திய கன்னி’ என்ற பெயரில் நாட்டிய நாடகமாக எழுதினேன். அந்நாடகத்தை அன்றைய இலங்கை வானொலி புகழ் யோகா தில்லைநாதன் அவர்களின் மகள் துளசி     10 - 06 - 1995 அன்று Acton Town Hallல் அரங்கேற்றினார்.

இங்கு நான் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பரத முனிவர் ‘நாட்டிய சாஸ்திரத்தை' எழுதுவதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்பே நமது ஈழத்தில் நாட்டியம் மிக வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்தது என்பதற்கு  ‘நாட்டிய சாஸ்திரமே' சாட்சி. அவர்
“தக்ஷிணாத்யாஸ் தாவத்
பஹு நிருத்தகீத வாத்யா: கைசிகீ பிராயா:
சதுர மதுர லலித அங்காபி நயாஸ்ச”
எனக் கூறுகிறார். இதில் தக்ஷிணாத்யாஸ் என்று அவர் குறிப்பிடுவது தென்னவர்களை. அதாவது தென் நாட்டவர். எங்கே இருக்கிறது தென் நாடு? அத்துடன் ‘கைசிகீ’ என்று ஓர் அரிய பெயரைச் சொல்கிறார் பாருங்கள். இராவணனின் தாயே அந்தக் கைசிகி. இலக்கியங்கள் இவளை கைசிகி என்றும் கைகசி என்றும் சொல்வதைக் காணலாம். கைசிகியைப் பற்றி நாட்டிய சாஸ்திரத்தில் பல இடங்களில் பரதமுனிவர் குறிப்பிட்டுள்ளார்.


இப்போதுள்ள பரதநாட்டிய பாணிகளை பந்தணை நல்லூர் பாணி, வழுவூர் பாணி என்று சொல்வோமே அதுபோல் கைசிகி பாணியை சிவன்[நீலகண்டன்] ஆடியதாகவும் நாட்டிய சாஸ்திதிரம் கூறுகிறது.
“I have witnessed the Kaisiki style during the dance of the blue-throated lord”
                                                    - (The Natya Sastra: 1: 45 - 46)

நாட்டியத்தில் நான்கு வகை விருத்திகள் உண்டு. அதில் ஒன்று கைசிகி விருத்தியாகும்.
“Thereupon the Kaisiki vrtti was evolved graceful style”
                                                    - (The Natya Sastra: 22: 13)

“The Bharati vrtti was from the Rgveda; the Sattvati from the Yajurveda; Kaisiki from the Samaveda and the remaining one i e. Arabhati from the Atharvaveda”
                                                     - (The Natya Sastra: 22: 24)

தமிழ் நூல்கள் மட்டுமல்ல வடமொழி நூல்களும் இராவணன் சாமகானம் பாடி இறைவனை வணங்கியதாகாக் கூறும். திருஞானசம்பந்தரும் தமது தேவாரத்தில்
“சாம வேதம் ஓர் கீதம் ஓதி அத் தசமுகன் பரவும் 
நாம தேயம் அது உடையார்”
                                                  - (பன்னிருதிருமுறை: 2: 92: 8)
என இராவணன் சாமவேதம் பாடி வணங்கியதைச் சொல்வார். இராவணனின் தாய் கைசிகி சாமவேதத்தில் வல்லவளாக இருந்ததால் இராவணன் இசைவல்லவனாய் சாமவேதம் பாடியது பெருவியப்பில்லை.

“Kaisiki vrtti (graceful style) They call Kaisiki vrtti if is extremely interesting thanks to the delicate costumes worn by the characters mostly women; and if it comprises of diverse types of dances and songs and the themes are the activities conducive to the enjoyment of love”
                                                     - (The Natya Sastra: 22: 47)

சிருங்கார ரசத்தையே பொதுவாக கைசிகி விருத்தி என்பர். இராவணனின் தந்தை விசுரவசு முனிவரும் ஆடற்கலை பயின்றதாக நாட்டிய நூல்கள் சொல்கின்றன. விசுரவசு முனிவரின் பெயரில்லாது பரதக்கலையின் பரம்பரையைச் சொல்லமுடியாது. மேலே உள்ள படத்தில் [இசுருமுனிய - விசுரமுனிவர் கோயிற் புடைப்புச் சிற்பத்தில்] இராவணனின் தாய் தந்தையர் இருக்கின்றனர். அதில் கைசிகி இருக்கும் நளினம் அவள் ஆடற்கலையில் தேர்ந்தவள் என்பதைக் காட்டுவதோடு விசுரவசு முனிவர் இருக்கும் பாங்கும் கைசிகியை மடியில் வைத்திருக்கும் நேர்த்தியும் அவரையும் ஆடற்கலை வல்லவராகவே காட்டுகிறது.

இராவணன் இசையில் மட்டுமல்ல தாய் தந்தையரைப் போலவே நாட்டியத்திலும் சிறந்து விளங்கினான் என்பதையும் நாட்டிய நூல் எழுதினான் என்பதையும் “மகாபரத சூடாமணி’ என்னும் நாட்டிய நூல் சொல்கிறது.
“திறமான ராவணனும் வாணாசுரன்……
முறையாக நூல்களை உண்டாக்கித் தாமுமுன்வி
  நடித்தும் உலகோர்க்கு உரைத்திட்டானே”
                                                   - (மகாபரத சூடாமணி: 1: 11)

நாட்டியம் ஆடுவதற்கு வேண்டிய கை அமைதிகள் பதினாறில் ஆறு இராவணன் கூறியதாம்.
“கமழ்தச வதனன் ஆறு புஜபேதங் கருதினானே”
                                                   - (மகாபரத சூடாமணி: 1: 134: 8)
அவை 
உத்வர்த்திகம் - கையை உயரச் சுற்றல்
பிருஷ்டானுஸாரிதம் - கையப் பின்னே நீட்டல்
நம்ரம் - கையை வளைத்து ஏந்துதல்
சரலம் - கையை பக்கத்தில் நீட்டி உள் வாங்குதல்
ஆந்தோளிதம் - கையை அகல வீசி நடத்தல்
உத்ஸாரிதம் - நளினமாகப் போகச்சொல்லி கைகாட்டி நடத்தல்

இப்படித் தாயும் மகனுமாக ஈழத்தில் வளர்த்த நாட்டியக்கலையை எப்படி நமது இல்லை என்று சொல்லமுடியும்? நாம் ஏன் சொந்தங் கொண்டாட முடியாது? ‘மறந்த சொத்து மக்களுக்கும் இல்லை’ என்பது இதைத்தானோ!

பஞ்சாபி என்ற மொழியே 10ம் நூற்றாண்டில் தோன்றிய ஒன்றாகும். பஞ்ச + அப் = பஞ்சாப்[ஐந்து ஆறுகள்] என வரும். இச்சொல்லில் உள்ள ‘அப்’ என்பது தமிழ்ச்சொல்லான ‘அப்பு’ என்பதன் திரிபாகும். அப்பு என்றால் தண்ணீர். தண்ணீரைப்போல் வாழ்க்கைக்கு மிகவும் வேண்டியவர் என்ற கருத்தில் தந்தையை ‘அப்பு’ என்று ஈழத்தமிழர் அழைத்தனர். இன்றும் கூட பிள்ளைகளை ‘அப்பு இங்கே வா!’ என அழைக்கிறோம் அல்லவா? பங்காரா ஆடல் வடிவம் [Bhangra dance] பஞ்சாப் மாநில மக்களது அறுவடையின் கொண்டாட்டமாக [harvest celebration] புதுவருடத்தின் போது சித்திரை மாதம் 13 - 14ம் திகதிகளில் வழிவழியாக ஆடப்பட்டு வந்ததாகும். ஆண்களே இந்த நடனத்தை ஆடினார்கள். 

கண்டியன் நடனம் பேயோட்டும் நடனாமாகத் தோன்றியதால் [சங்க கால வெறியாடல்] ஆண்கள் மட்டுமே ஆடினர் ஆதலாலும் பங்காராவில் வாசிக்கப்படும் ‘டோல்’ [Dhol] மத்தளம் போல் கண்டியன் நடனத்திலும் ‘கெத்த பெர’ [Geta Beraya] மத்தளம் இருப்பதாலும் பங்காரா கண்டியன் நடனத்தில் கலந்தது என்று சொல்லமுடியாது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரே பங்காரா மெல்ல வளர்ச்சி அடைந்தது. 1954ல் முதல் முதல் மேடையில் ஆடப்பட்டது. தமிழரின் சிங்களக்கூத்து வடிவமே கண்டியன் நடனத்தின் அத்திவாரமாகும். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில் மாதவி ஆடிய ஆடலை
“இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோராடலும் பாட்டுங் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்தாங்கு”
                                                          - (சிலம்பு: 3: 12 - 15)
என இளங்கோவடிகள் சொல்கிறார். அதற்கு விளக்க உரை எழுதிய அடியார்க்கு நல்லார் “இருவகைக் கூத்தாவன:- சாந்தியும் விநோதமும் என்னை?
“சாந்திக் கூத்தே தலைவனின் இன்பம்
ஏந்தி நின்றாடிய ஈரிரு நடமவை
சொக்கம் மெய்யே அவிநய நாடகம்
என்றிப் பாற்படூஉம் என்மனார் புலவர்”
சொக்கமென்றது சுத்தத நிருத்தம். அது நூற்றெட்டு கரணமுடைத்து.
மெய்க்கூத்தாவது தேசி, வடுகு, சிங்களம் என மூவகைப்படும். இவை மெய்த்தொழிற் கூத்தாதலின் மெய்க்கூத்தாயின” என்கின்றார். அடியார்க்கு நல்லார் கி பி 12ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பர்.

சிவன் ‘சொக்கம்’ என்ற சுத்த நிருத்தத்தை நூற்றெட்டு கரணங்களுடன் ஆடியதால் சொக்கநாதர் என அழைக்கப்பட்டார். மெய் - உடல். சிங்களக்கூத்து கரணங்கள் இல்லாத உடல் அசைவுகளால் செய்யப்படும் கூத்தாதலால் மெய்க்கூத்து என அழைக்கப்பட்டது. பண்டைத் தமிழரின் சிங்களக் கூத்து பற்றி கீழ் உள்ள linkல் பார்க்கவும்.

ஈழத்துக் கூத்து வடிவங்களின் சில ஆடல் வடிவங்கள் கண்டியன் நடனத்துள் உள்வாங்கப்பட்டுள்ளது உண்மையே.

‘ஈழத்தமிழருக்கான ஆடற்கலை வடிவம் ஒன்றினை ஏற்படுத்துகின்ற முன்முயற்சிகள் சிலவற்றை ஆடற்கலைஞர் வேல் ஆனந்தன் போன்றோர் ஏற்கனவே ஆரம்பித்து உள்ளனர்’ என்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. ஒன்றல்ல பல ஆடற்கலை வடிவங்களை உருவாக்குவதால் ஆடற்கலை சிறக்கும். வேல் ஆனந்தன் அவர்கள் சேர்ந்து செய்வதாயின் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே. நான் சிறுமியாக இருந்த போது எனக்குப் பரதத்தின் அரிச்சுவடியைக் கற்றுத்தந்தவர். அவர் இந்தியாவில் பரதம் பயின்று தேர்ச்சி பெற்று வந்த நேரம் பண்டிதர் ஆறுமுகன் [எனது தந்தை] அதிபராக இருந்த பாடசாலையில் கற்பித்தார். அப்போது எங்களுடன் இருந்தார். எனக்கு ஆடற்கலையில் ஈடுபாடு வருவதற்கு வேலானந்தம் அவர்களும் காரணமாவார். 

நம் ஈழத்தில் உள்ள சப்ததீவுகளிலே இசைச்சுரங்கள் பிறந்தன. அந்த உண்மையை சாரங்கதேவர் தானெழுதிய 'சங்கீத ரத்னாகரம்' என்ற நூலில் எழுதியுள்ளார். அதனை நான்  எழுதிய “ஏழிசையும் பிறந்தன இங்கே” என்ற கட்டுரையை வாசித்தவர்கள் அறிவர். எனவே கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும் நம் ஈழத்தமிழ் முன்னோர் எமக்கு அளித்த பெருநிதியம் என்றே கொண்டாடவேண்டும். 
இனிதே,
தமிழரசி.

Tuesday, 20 September 2016

சதுரங்கக்காய் தன் கதைகூறல்

- எழுதியது வாகீசன் -

பாண்டிய நாட்டிற்காக சேர சோழ அரசுகளைத் தோற்கடித்த சதுரங்கக் காய் நானே. மூன்று தலைமுறைப் பாண்டியர்களுக்கு நான் பேருதவி புரிந்தேன். என்னால் பாண்டிய மன்னர்கள் சதுரங்க விளையாட்டில் எப்போதும் வெற்றி அடைந்தார்கள். அந்நாளில் நான் எப்படி சிறப்புடன் இருந்தேன் என்பதை நீங்களும் கேளுங்கள்.

மாறன் என்னும் பாண்டிய இளவரசன் கி மு 11ம் நூற்றாண்டு தை மாதம் திங்கட்கிழமை அரசனான போது அவனுக்கு அன்பளிப்பாக நான் கொடுக்கப்பட்டேன். சதுரங்கக் காய்களின் அரசக்காய் நானே. நான் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தேன். என் முடியும் உடலும் விலைமதிக்க முடியாத கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நான் மிக மிக அழகாக இருந்ததால் அரசர் என்னை அவரின் முடியில் வைத்திருந்தார்.

பாண்டியமாறனுக்கு சதுரங்கம் விளையாடுவது மிகவும் பிடித்திருந்தது. அவனுக்கு யுத்தம் செய்வது பிடிக்கவில்லை. இருந்தும் மாமன்னனாக வேண்டும் எனும் ஆசை இருந்தது. அதை அறிந்த மந்திரி “அரசே! நீங்கள் சதுரங்கம் விளையாடியே எல்லா நாடுகளையும் வென்று வாகை சூடலாம்” என்று சொன்னான். அதனைக் கேட்டு நான் மட்டுமல்ல அரசனும் அளவிலா மகிழ்ச்சி அடைந்தான்.


அதன்பின் பாண்டிய மாறன் சேர, சோழ அரசர்களுடன் சதுரங்கமாடி அவர்களை வென்று மாமன்னனாக விளங்கினான். அவன் என்னைத் தன் உயிர் போல் பாதுகாத்தான். அவனின் பேரனான நெடுமாறன் காலத்திலும் பாண்டிய நாடு பேரரசாகவே விளங்கியது. என் புகழும் உலகெலாம் பரவியது. கிரேக்கத் தூதுவனாகப் பாண்டிய நாட்டுக்கு வந்த அரிஸ் என்பவன் என்னைக் கபடமாக கிரேக்கத்துக்குக் கொணர்ந்து விட்டான்.

எனது வரலாறு அறியாத பிரிட்டிசார் என்னைக் கிரேக்கர்கள் சொத்து எனக்கூறி அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்கள். மூவாயிர ஆண்டுகளுக்கு மேலாகியும் என் இளமைக் காலத்தை என்னால் மறக்க முடியவில்லை. சங்கத்தமிழ் கேட்ட என் காதுகளில் எத்தனை வேற்றுமொழிகளைக் கேட்டுவிட்டேன். அந்தத் தமிழ் தந்த இனிமையும் இளமையும் எது தரும்?

குறிப்பு:
[இது 9 வயதுச்சிறுவன் எழுதிய கட்டுரை. இலண்டனில் நடைபெறும் GESE தமிழ்ப் பரீட்சையை அவனது 10 வயதில் எடுத்து, A தரத்தில் சித்தியடைந்தான். அவன் எழுதிய கட்டுரைகள் GESE தமிழ் பரீட்சை எடுப்போருக்கு மாதிரிக் கட்டுரையாகப் படிக்க உதவும் என்பதால் எனது வலைத்தளத்தில் இடுகிறேன். தமிழ் படிக்கும் பிள்ளைகள் இருப்போர் இதனைப் பயன் படுத்தலாம்]

Monday, 19 September 2016

மேகம் மீண்டும் மழையாய்த் தருமே!


போகம் வேண்டி பொழிலை அழித்தோம் 
காகம் பொறுக்கக் கல்லும் இல்லை
காகம் குந்தக் குச்சும் இல்லை
தாகம் தீர்க்கத் தண்ணீர் இல்லை
தாகம் கொண்டு தண்ணீர் தேடி
மோகம் மிக்க மானுடர் நாமும்
மோதி அழியும் மரணம் வரமுன்
தேகம் வேர்க்க மரங்கள் நடுவோம்
தாகம் தீர்க்கும் அமிழ்தாம் நீரை
மேகம் மீண்டும் மழையாய்த் தருமே!
                                                                       - சிட்டு எழுதும் சீட்டு 125

Sunday, 18 September 2016

தாய்வண்ணம் அறியா சேய்நானே!


மின்வண்ணம் நகை வண்ணமோ
          மதிவண்ணம் முக வண்ணமோ
பொன்வண்ணம் நின் வண்ணமோ
          பூவண்ணம் தாள் வண்ணமோ
உன்வண்ணம் எவ் வண்ணமோ
          எம்முள்ளத் தொளி வண்ணமோ
தன்வண்ணம் தளிர் வண்ணமோ
          தாய்வண்ணம் அறியா சேய்நானே

Friday, 16 September 2016

குறள் அமுது - (122)


குறள்:
“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக்
கொள்வர் பயன்தெரி வார்”                                           - 104

பொருள்:
ஒருவர் தினையளவு நன்மை செய்திருந்தாலும் அதனால் தாம் அடைந்த பயனை நினைத்துப் பார்ப்போர், அவ்வுதவியை பனையளவு பெரிதாக எடுத்துக் கொள்வர்.

விளக்கம்:
இத்திருக்குறள் செய்நன்றி அறிதல் என்னும் அதிகாரத்தில் இருக்கும் நான்காவது குறளாகும். தினையளவு - மிகச்சிறிய அளவு நன்மையை ஒருவர் செய்திருப்பினும் அதனை நாம் மிகப் பெரிதாகக் கருதவேண்டுமா என்ற கேள்விக்குப் பதிலை இத்திருக்குறள் தருகிறது.

தினை என்பது எள், வரகு, குரக்கன், நெல் போன்ற ஒரு கூலம்[தானியம்]. தானியத்தை தமிழில் கூலம் என்பர். முருகப்பெருமான் தினைப்புனம் காத்த வள்ளியைத் தேடிச் சென்றதை
“தேனும் தினைமாவும் தின்ற சுவையால்
தினைப்புனம் நாடியே சென்றான்”
என்று பாடுவார்களே அந்தத் தினை அளவு சிறிய நன்மை செய்திருந்தாலும் அதனால் தமக்குக் கிடைந்த பயன் என்ன என்பதை சிந்தித்துப் பார்ப்போரே பயன் தெரிவார். அதாவது ஒருவர் செய்த தினையளவு நன்மையால் எவ்வளவு பெரிய பனையளவு பயனை அடைந்தேன் என்று நினைத்துப் பார்த்து, உதவுவர் அதன் பயனை அறிந்தோர்.

சான்றோருக்கும் ஒருவர் செய்த நன்மையை உணராத கீழோருக்கும் [நன்றறியார் -நன்மையை அறியார்] இடையே உள்ள வேறுபாட்டைப் பற்றிச் சொல்லுமிடத்தில் 

“தினைஅனைத்தே ஆயினும் செய்த நன்றுண்டால்
பனைஅனைத்தா உள்ளுவர் சான்றோர் - பனையனைத்து
என்றும் செயினும் இலங்கருவி நன்னாட
நன்றில நன்றறியார் மாட்டு”
                                                        - (நாலடியார்: 344)
என நாலடியார் கூறுகிறது. தினையளவு நன்மை செய்தாலும் அதைப் பனையளவு செய்ததாகச் சான்றோர் நினைப்பர்[உள்ளுவர்]. ஒவ்வொரு நாளும்[என்றும்] பனையளவு நன்மை செய்தாலும் நன்மையை உணர்ந்தறிய முடியாத கீழோருக்கு அவை நன்மையாகத் தெரியாது. 

பண்டைய தமிழர் ‘நன்றி’ என்னும் சொல்லை ‘நன்மை’ என்ற கருத்தில் பயன்படுத்தி உள்ளார்கள். நாம் இந்நாளில் ‘நன்றி’ என்னும் சொல்லைப் பயன்படுத்தும் பொருளில் அவர்கள் சொல்லவில்லை. அவர்களைப் பொருத்தவரையில் நன்றி செய்யப்படுவதே அல்லாமல் சொல்லப்படுவதல்ல. பாருங்கள் திருவள்ளுவரும் இக்குறளில் ‘தினைத்துணை நன்றி செயினும்’ என்றே சொல்கிறார்.

ஒருவர் செய்த தினையளவு நன்மையின் பயனை அறிந்தவர்கள் அதனை விடப் பலகோடி மடங்கு பெரிய பனைமரத்தின் அளவு நன்மை செய்ததாகக் கருதுவர்.

Thursday, 15 September 2016

அடிசில் 106

மெதுலட்டு
- நீரா -
  

தேவையான பொருட்கள்: 
ரவை - 1 கப்
தேங்காய்ப்பூ - 1 மே.கரண்டி
டின் பால் - ½ கப்
பால் - ½ கப்
வெட்டிய முந்திரிப்பருப்பு - 1 மே.கரண்டி
நெய்  - 1 மே.கரண்டி
ஏலக்காய் தூள் - ½ தே.கரண்டி

செய்முறை:
1. ஒரு வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய்யைச் சூடாக்கி முந்திரிப்பருப்பை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
2. அந்த நெய்யினுள் ரவையையும் தேங்காய்ப்பூவையும் இட்டு  6 - 7 நிமிடம் இளஞ்சூட்டில் வறுக்கவும்.
3. அதற்குள் டின் பாலைச் சேர்த்து கட்டி படாமல் கிளறவும்.
4. டின்பால் உருகிவரும் போது முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிண்டவும்.
5. எல்லாம் கலந்ததும் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறி பால் முழுவதும் வற்றியதும் இறக்கவும்.
6. ஆறியதும் லட்டுகளாகப் பிடித்துக் கொள்க.

Wednesday, 14 September 2016

தமிழரும் தாளிப்பனையும்


 தாளிப்பனை - இலங்கை 1895
இயற்கையின் இன்பங்களைப் பார்த்து மகிழ்ந்த தமிழன் இயற்கை அளித்த தாளிப்பனையை தன் வாழ்க்கையின் தேவைகளுக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொண்டான். தாளிப்பனையின் [Corypha Umbraculifera - Talipot] பிறப்பிடம் தமிழர் இருப்பிடமான இலங்கையும் தென் இந்தியாவுமே. மியான்மார், அந்தமான் தீவுகள், தாய்லாந்து, கம்போடியா, சீனா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் வளர்கிறது. இப்போது அமெரிக்காவில் பெருமளவில் பயிர் செய்கிறார்கள். பண்டைத் தமிழரின் வாழ்வை வளம்படுத்திய தாளிப்பனை இன்று இலங்கையர்க்குத் தெரியாத பனையாக மாறிவிட்டது. தாளிப்பனை பூத்துக் குலுங்கி நிற்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அது உள்ளத்தால் முழுமையாக வாழ்ந்த ஒரு மனிதன் முதுமையில் நரைத்த முடியோடு முகத்தில் அறிவின் ஒளிவீச புன்னகை சிந்த தலைநிமிர்ந்து நிற்பது போல் நிற்கும். 

அது என்ன தாளிப்பனை என நினைக்கிரீர்களா? அதனை இரத்தினபுரி பக்கம் வாழ்ந்தவர்கள் பார்த்திருப்பார்கள். இருப்பினும் பூத்திருக்கும் போது பார்த்தவர்கள் எத்தனை பேரோ? யாழ்ப்பாணத்தில் தாளையடி என்று ஓர் ஊர் இருக்கிறது அல்லவா? அங்கு தாளிப்பனை நின்றதால் அவ்வூர் தாளியடி என அழைக்கப்பட்டது. தாளியடி மருவி தாளையடி ஆயிற்று என்பர். தாளிப்பனையை மறந்த நம்மவர்கள் தாழையடி என்கிறார்கள். நம் புங்குடுதீவில் உள்ள ‘கள்ளிக்காடு’ என்ற இடத்தை கல்லிக்காடு என்றும், ‘கள்ளியாறு’ ஓடிய பகுதியை களியாறு எனவும் எழுதுகிறார்களே அது போன்றதே இதுவும்.

மதுரையை ஆண்ட குலசேகர பாண்டியனின் மகள் வீரமாதேவி. அவள் பதிநான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு வந்து புங்குடுதீவில் கோட்டைகட்டி வாழ்ந்தாள். கப்பலில் வந்திறங்கும் வெளிநாட்டவர்க்கு பட்டனத்துப் பெண்கள் தாளிப்பனையின் ஓலையில் செய்த நிழற்குடையின் கீழே பொருட்களை வைத்து விற்றார்கள் என்பதை அவளது நாட்குறிப்பில் எழுதியுள்ளாள்.

பனைமரத்தின் பெயர்களை திவாகர நிகண்டு
“பெண்ணை தாலம் புல் தாளி போந்தை என்று
எண்ணிய நாமம் பனையின் பெயரே”  - (திவாகர நிகண்டு: 700)
என்று சொல்கிறது.

தாளிப்பனைக்கு கூந்தற்பனை, தாளி, தாளம், சீதாளி, சீதாளம், தேர்ப்பனை, ஈரப்பனை, ஆதம் குடப்பனை[குடைப்பனை] என்ற பெயர்களும் உண்டு.
கூந்தற்பனை: தாளி - (பிங்கல நிகண்டு: 2757)
எனப் பிங்கல நிகண்டு கூறுகிறது.
Talipot - Singapore Botanical Garden 2005

தாளிப்பனை பூத்திருக்கும் போது பார்த்திருக்கிறேன். என் தந்தையும்[பண்டிதர் மு ஆறுமுகன்] நானும் பள்ளிக்கூட விடுமுறை நாளில் சீனக்குடாவில் [ChinaBay] இருந்த [திரிகோணமலை] மாமி வீட்டிற்கு சென்றிருந்தோம். அப்போது மட்டக்களப்பில் நடந்த விழா ஒன்றில் என் தந்தை உரையாற்ற வேண்டி இருந்தது. என்னையும் அவரோடு அழைத்துச் சென்றார். போகும் வழியில் எனக்குக் காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகப் பாடல்களைச் சொல்லித் தந்தார். அவரோடு மேசையில் இருந்து சாப்பிடும் பொழுதும் பயணம் செய்யும் போதும் தனக்குத் தெரிந்தவற்றை கதைசொல்வது போல் எனக்குச் சொல்லித் தருவது அவரது வழக்கம். கையில் எந்தப் புத்தகமும் வைத்திருக்க மாட்டார். அன்றும் வழமை போலச் சொன்னார்.
“தாளிப் பனையின் இலைபோல்
           மயிர்கட் டழல்வாய் அழல்கட்பேய்
கூளிக் கணங்கள் குழலோடு
           இயம்பக் குழகன் ஆடுமே”   - (ப.தி.முறை: 11: 17: 5 - 8)

என்று அம்மையாரின் பாடல்வரிகளைச் சொன்னபோது “பனைக்கு இலை இருக்கா? ஓலை இருக்கா? எனக்கு பனையில் ஆண்பனை, பெண்பனை இருப்பது தெரியும். தாளிப்பனையா அது என்ன?” என்றேன். “ஓலையை இலை என்றது மரபு வழுவமைதி[இரண்டும் பொருள் ஒன்றே]; மகள் நீங்க சிறுவயதில் ‘வேர் வேர் வெட்டி வேர்’ பாடுவது ஞாபகமிருக்கா? அதில் தாளிப்பனை வருகிறதே” என்றார். அவர் அப்படிச் சொன்ன பொழுது நான் ஆறு அல்லது ஏழாம் வகுப்பில் படித்திருப்பேன். அதனால் தாளிப்பனை வருகிறதா என அறிய
“வேர்! வேர்! என்ன வேர்?
வெட்டி வேர்
என்ன வெட்டி?
பனை வெட்டி
என்ன பனை?
தாளிப்பனை
என்ன தாளி?
விருந்தாளி
என்ன விருந்து?
மணவிருந்து
என்ன மணம்?
தேன் மணம்
என்ன தேன்?
பூந்தேன்
என்ன பூ?
மாம்பூ
என்ன மா?
சும்மா”
என்று மனதிற்குள் சொல்லிப் பார்த்தேன். ‘சின்ன வயதில் மரங்களின் வேறுபாடு தெரியவில்லை’ என்றேன். சிரித்தார். ‘இப்போ தெரிகிறதா?’ என்றார். ‘ஓம்’ என்று தலையை ஆட்டினேன். ‘நல்லது’ என்றார். நேரத்தைப் பார்த்தார். அடுத்த தரிப்பில் பேரூந்து நின்றதும் இறங்கினோம்.

மட்டக்களப்பு நோக்கி போன எங்கள் பயணம் காரைக்கால் அம்மையாரின் பாடலால் திசை மாறி இரத்தினபுரிப் பக்கம் சென்றது. அவரது உரை அடுத்தநாள் மாலை இடம்பெற இருந்ததால் எனக்குத் தாளிப்பனையைக் காட்ட அவருக்கு நேரம் இருந்தது. அன்று அவர் தாளிப்பனையைக் காட்டியதால் அது பற்றி எழுத முடிகிறது.

நம்நாட்டுக் காசில் தாளிப்பனை

இலங்கைக்கு சேரன் தீவு என்ற பெயரும் உண்டல்லவா? சேரர்கள் பனம்பூவை மாலையாக அணிந்தார்கள் என்பதை இலக்கியங்கள் சொல்கின்றன. தலைக் கண்ணியாகவும் கழுத்தில் அணியும் மாலையாகவும் பனம்பூவைச் அணிந்ததைச் சேரமன்னர்கள் புகழ்பாடும் பதிற்றுப்பத்து சொல்கிறது.

ஆண்பனை பூக்கும் துள்ளுப்பூக்களைத் தலையில் கண்ணியாகச் சூடமுடியுமா? அதனால் பலரும் பனங்குருத்தைச் சேரர்கள் சூடியதாக பாடல்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.
“மறங்கெழு போந்தை வெண்தோடு புனைந்து
நிறம்பெயர் கண்ணிப் பருந்தூறு அளப்ப”                                                                                                 - (பதிற்றுப்பத்து: 51: 31 - 32)
மறத்தன்மை தெரியச்சூடிய பனையின் வெண்ணிறப் பூங் கண்ணி[தலையில் சூடும் மாலை] பகைவரது இரத்தத்தால் சிவந்து நிறம்மாற, பருந்து அதை எப்ப தூக்கலாம் என்று வட்டமடித்தது [பருந்து ஊறு அளப்ப]. என சேர அரசர்கள் பனம்பூங் கண்ணி சூடியதைக் காக்கைபாடினியார் சொல்கிறார்.

“வண்டு இசை கடாவா தண்பனம் போந்தைக்
குவிமுகிழ் ஊசி வெண்தோடு கொண்டு
தீம்சுனை நீர்மலர் மலைந்து”     - (பதிற்றுப்பத்து: 70: 6 - 8)

சங்க இலக்கியத்தில் தேர் கடாவா என்றால் தேரைச் செலுத்துதல் என்று பொருள் தருதல் போல ‘வண்டு இசை கடாவா’ என்பது வண்டு பாடுகின்ற எனும் கருத்தத் தரும். இப்பாடலில் ‘வண்டு பாடும் சீதாளிப் பனையின் குவிந்த அரும்பையுடைய ஊசிபோன்ற வெண்ணிறப் பூக்களும் சுனை மலரும் கொண்டு கட்டிய மாலையைச் செல்வக்கடுங்கோ வாழியாதன் சூடியதாகச் கபிலர் கூறுகிறார்.
ஊசி வெண்தோடு

காக்கைபாடினியாரும் கபிலரும் பனம்பூவை வெண்தோடு என்றே குறிப்பிடுகிறார்கள். வெண்தோடு என்பதை பனக்குருத்து எனப் பொருள் கொள்ள பனங்குருத்து வெண்மையா!

தொல்காப்பியர் புல்லின் உறுப்புகளை
“தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலையே சேர்ந்தன பிறவும்
புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்”                                                                                               - (தொல்: பொ: 9: 88)
எனக் கூறியவர், அடுத்து மரவகையின் உறுப்புக்களை
“இலையே முறியே தளிரே தோடே
சினையே குழையே பூவே அரும்பே
நனையேஉள்ளுறுத் தனையவை எல்லாம்
மரனொடு வரூஉம் கிளவி என்ப”     - (தொல்: பொ: 9: 89)
என்று சொல்கிறார். புல், மரம் இரண்டின் உறுப்பிலும் தோடு எனும் உறுப்பு இருக்கிறது. தொல்காப்பியர் சொல்லும் தோடு என்ன? அதற்கான விடையை புறநானூற்றில் கபிலர் தந்துள்ளார்.

பாரியின் பரம்புமலையில் வயலை உழுது வரகை விதைத்ததிலிருந்து கதிராய் வெட்டுவது வரை ஒரு காட்சியாக்குகிறார்.
“வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல்
கார்ப்பெயற் கலித்த பெரும்பாட்டு ஈரத்து
பூழி மயங்கப் பலஉழுது வித்திப்
பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்
களைகால் கழாலின் தோடு ஒலிபுநந்தி
மென்மயில் புனிற்றுப்பேடை கடுப்ப நீடிக்
கருந்தாள் போகி ஒருங்குபீள் விரிந்து
கீழும் மேலும் எஞ்சாமைப் பலகாய்த்து
வாலிதின் விளைந்த புதுவரகு அரிய” - (புறம்:120: 1 - 9)

வரகு

வெப்பத்தில் விளைந்த வேங்கை மரமுள்ள சிவந்த நிலத்தில் [செஞ்சுவல்] கார்காலத்தில் பெய்த மழையின் பெரும்போக [பெரும்பாட்டு] ஈரத்தில் புழுதி[பூழி] கலக்க[மயங்க] பலமுறை உழுது விதைத்து[வித்தி] ஊடடித்து[பல்லியாடுதல் - நெருங்கி முளைத்த பயிர்களைப் பிரித்து] பூங்கிளைப் பருவத்தில்[பல்கிளைச் செவ்வி] களையை அடியோடு[களைகால்] நீக்கியதால்[கழாலின்] பூந்தோடு செழித்துப்பெருக[ஒலிபுநந்தி] மெல்லிய மயிலினது முட்டையிட்ட பேடை[புனிற்றுப் பேடை] போல[கடுப்ப] உயர்ந்து[நீடி] ஊதா நிறத்தண்டு[கருந்தாள்] விலக[போகி] எல்லாம் ஒன்றாய் சூழ்[ஒருங்கு பீள்] விரிந்து கீழும் மேலும் எஞ்சாது யாவும் காய்த்து சீராக[வாலிதின்] விளைந்த புதிய வரகை அரிந்தனராம் என்கிறார் கபிலர்.
 மென்மயில் புனிற்றுப் பேடை

கபிலர் இப்பாடலில் வரகின் பூந்தோடு செழித்து வளர்ந்து சூழ் விரிந்து கதிராவதைக் காட்டுகிறார். இங்கு பூந்தோடுகளே முற்றிக் கதிராயின. எனவே கதிராகத் தொங்கும் பூங்கொத்துக்களில் தனித்தனியாக இருக்கும் சிறு பூக்களை தோடு என்றனர் என்பதை நாம் அறியலாம். புல் இனத்திலும் மர இனத்திலும் பூங்கொத்துக்களில் தோடுகளை காணலாம். பெண்கள் அணியும் தோடும் தனியானதே.

அந்நாளைய அரண்மனைகளிலும் கோயில்களிலும் செல்வந்தர் வீடுகளிலும் குடையாகவும் ஆலவட்டமாகவும் இருந்தவை தாளிப்பனையின் ஓலையால் செய்தவையே. பண்டைய தமிழர் பெருவாரியாக இதன் ஓலையில் செய்த குடையை பயன்படுத்தியதால் அது குடைப்பனை என்றும் அழைக்கப்படுகிறது. அதன் குடை, ஆலவட்டம், தொப்பி என்பவற்றை நாம் மறந்தாலும் கேரளாவில் இன்றும் செய்கிறார்கள்.
ஆலவட்டம்

தாளிப்பனை 80 அடி உயரத்துக்கு மேலேயும் வளரும். அதன் ஓலை 16 அடி விட்டமுடையதாக இருக்கும். தாளிப்பனை பூப்பதற்கு ஏறக்குறைய ஐம்பதில் இருந்து எண்பது ஆண்டுகள் வரை செல்லும். மரத்தின் உச்சியில் பூக்கும் வெண்ணிறப்பூ பல லட்சம் தோடுகளை உடைய பூங்கொத்துக்களால் ஆனது. பூ இணர்கள் பிஞ்சாகிப் பழமாக ஒருவருடத்திற்கு மேல் எடுக்கும். தாளிப்பனை ஆயிரக்கனக்கான பழங்களை தரும். வாழ்நாளில் ஒருமுறையே பூத்துக் காய்க்கும். Floridaவில் இப்பழங்களில் இருந்து ஒருவகை wine செய்கிறார்கள். பழங்கள் உதிர்ந்ததும் இறந்து போகும்.

இதன் ஓலையில் செய்த பாயை வண்டிகளின் கூரை வேயப் பயன்படுத்தியதை புறநானூறு சொல்கிறது.
“மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்”                                                                                              - (பெரும்பாணாற்றுப்படை: 49 - 50)
மாரி காலத்து குன்றில் மழைமேகம் தவழ்ந்ததுபோல[சுமந்தன்ன] கொத்தளிப்பாய்[ஆரை] வேய்ந்த பாதையை அறைத்துச் செல்லும்[அறைவாய்] வண்டி[சகடம்]. 

கொழும்பு 1952 - உமணர் ஓட்டிய சகடம் இதைவிடப் பெரியது

தாளிப்பனை ஓலையால் செய்த பாய் கொத்தளிப்பாய் எனப்படும். ஆனால் கொத்தளிப்பாய் என்னும் சொல் அதற்கும் மேலே நம் தமிழ் மூதாதையரின்  அறிவின் செழுமையைக் காட்டுகிறது. உமணர் உப்பு ஏற்றிச் செல்லும் வண்டி வெம்மையாக இருக்கும். அந்த வெம்மையைத் தணிப்பதற்கு வண்டியின் கூரையை வேய்ந்த தாளிப்பனை ஓலைப் பாயின் மேல் தாளி வெண்பூங்கொத்துகளை செருகி அலங்கரித்தனர். தாளிப்பனையின் பூங்கொத்து பல காலம் வாடாமலும் குளிர்ச்சியுடனும் இருக்கும். கொத்து + அளி + பாய் = கொத்தளிப்பாய். [கொத்து - பூங்கொத்து; அளி - குளிர்மை]. உப்பேற்றும் வண்டி குன்றுபோல் உயரமாகவும் பருமனாகவும் இருக்க அதன் கூரையில் தாளிப்பனையின் பூங்கொத்து இருப்பது மலைமேகம் தவழ்வது போல இருக்கும் அல்லவா! என்னே அவர்களின் அழகுணர்ச்சி!

சீதாளை என்று தாளிப்பனை ஓலையையும் சொல்வர். சீ என்பது குளிர்மையும் பளபளப்பும் நிறைந்தது என்ற கருத்தில் வரும். ஓலையின் பேற்பரப்பில் மெழுகுத்தன்மை இருப்பதால் தண்ணீர் தங்கி நிற்காது வழிந்து ஓடிவிடும். வெப்பமும் உள்ளே புகாது. ஆதலால் தாளிப்பனை ஓலையால் வேய்ந்த வீடுகளின் கூரைகள் நம் முன்னோரைத் கால நிலை வேறுபாடு தாக்காது காத்தன. நீண்ட காலத்திற்கு உக்காது இருந்தன. பெரிய ஓலையாதலால் குறைந்த ஓலைகளால் கூரைகள் வேயப்பட்டன.

அதன் ஓலை தடிப்பாகவும் அகன்ற விட்டமாகவும் இருந்ததால் ஒரே குடையின் கீழ் பலர் செல்லக்கூடியதாகவும் இருந்தது. பெருங்காற்றுக்கும் மழைக்கும் ஈடுகொடுத்தது. தாளிப்பனைக்கு அருகே  பனை சிறியதே. ஆறுகளுக்கு குறுக்கே பாலங்கள் கட்ட தாளிப்பனை பயன்பட்டது. குளங்களின் துருசுகளாயும் கிணறுகளின் துலாக்களாயும் பண்டைய தமிழரின் கமத்தொழிலுக்கு கைகொடுத்தது. கோட்டைச் சுவர்களின் பாதுகாப்பிற்கும் துணை புரிந்தது. அகன்ற நீளமான ஓலைச்சுவடிகள் உண்டாக்க உதவியது. அதனால் அரசர்களாலும் புலவர்களாலும் விரும்பப்பட்டது.
கரும்பில் 'தாளை பூத்தல்' நோய்

கரும்பு பயிரிடும் போது மண்ணில் இரும்புச்சத்துக் குறைவால் வரும் நோயை 'தாளை பூத்தல்' என்றே அழைக்கின்றனர். இலையில் நரம்புக்கு இடையே இருக்கும் பகுதி பச்சையம் இன்மையால் வெளிரி இருப்பது தாளை பூத்தது போல் தெரிவதால் அப்படி அழைக்கின்றனர். ஆதலால் தமிழர் முற்று முழுதாகத் தாளிப்பனையை மறந்து போயினர் என்று சொல்ல முடியாது. 

கடல் தென்னை - மாலைதீவு

என் தந்தை, தமிழர் வளர்த்த இன்னொரு அற்புதப்பனை பற்றியும் சொன்னார். அவரின் இளங்காலத்தில் புங்குடுதீவுக் கடற்கரையில் அதன் காய் ஒதுங்குமாம். அதனை எடுத்து விளையாடுவார்களாம். மாலைதீவில் இருந்து கடலலையில் மொத்துண்டு புங்குடுதீவுக் கரைக்கு வந்து சேரும் போது தும்புகள் அற்று பார்ப்பதற்கு இரட்டைத் தேங்காய் போல் தெரியுமாம். உடைத்தால் உள்ளே இரண்டு தேங்காய் இருக்கும் என்றார். அதைக் கேட்டு இது உங்கள் கற்பனையா? என்றேன். சிரித்தார்.
இரட்டைத்தேங்காய்

அது நடந்து ஏழு எட்டு ஆண்டுகளின் பின் என்னை மாலைதீவுக்கு அழைத்துச் சென்றார். அங்கே பலவைகையான மரங்களைக் காட்டித் தந்தார். முதலில் காட்டியது இரட்டைத் தேங்காய் மரத்தையே. அதன் ஓலை 10 - 12 அடி விட்டமாய் பனை ஓலையைப் போல விசிறியாய் இருந்தது. ஆனால் நம் தமிழ் மூதாதையர் அதனை ‘கடல் தென்னை[ Lodoicea]’ என்று அழைத்தனர். தேங்காய் போல் அதன் காய் இருந்ததால் அப்படி அழைத்தனர் போலும். அதன் தேங்காயை என்னால் தூக்கமுடியவில்லை. இந்தக் கடல் தென்னையின் தேங்காயை இரட்டைத் தேங்காய் அல்லது கடல் தேங்காய் என்றே அழைப்பர். கடல் தென்னை எட்டு ஒன்பது வருடத்தில் காய்க்கும். இயற்கை அன்னை இப்படி எத்தனை எத்தனை அற்புதங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறாள்!
இனிதே,
தமிழரசி.