Tuesday 30 August 2016

குறள் அமுது - (121)


குறள்:
வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து                       - 221

பொருள்:
வறியவர்க்கு ஒன்றைக் ஈவதே ஈகையாகும். வறுமை இல்லாத ஏனையோர்க்குக் கொடுப்பதெல்லாம் கொடுத்து வாங்கும் தன்மையுடையது.

விளக்கம்:
ஈகை என்னும் அதிகாரத்தில் உள்ள முதலாவது திருக்குறள் இது. ஈகை என்றால் என்ன? என்பதற்கான விளக்கத்தை இக்குறள் சொல்கிறது. வறுமைத் துன்பத்தில்  வாடுவோருக்கு  கொடுப்பதே ஈகை என்பது நம் பழந்தமிழ் முன்னோர் கண்ட முடிவாகும். 

மனித வாழ்வுக்குத் தேவையான இருக்க இடம், படுக்கப் பாய், உண்ண உணவு, நோய்க்கு மருந்து, குடிக்க நீர் என்று சொல்லப்படும் அடிப்படை வசதிகளற்று வாழ்வோரே வறியோர் ஆவர். இன்னொரு வகையில் சொல்வதானால் பலவகைத் துன்பங்கள் சேர்ந்து இருக்கும் இடமே வறுமை உள்ள இடமாகும். ஆதலால் அன்றாட தேவைகளுக்காக அல்லற்படும் வறியவர்களின் துன்பத்தை நீக்குவதே ஈகையின் குறிக்கோளாகும். மற்றோர்க்கு ஈவதை ஈகை என்று சொல்வதில்லை.

அறம், தானம், ஈகை, கொடை யாவும் பிறருக்கு நாம் மனமுவந்து கொடுப்பதைச் சுட்டினாலும் ஒவ்வொன்றும் அதனதன் தன்மையில் மாறுபடுகின்றது. தமிழில் உள்ள ஒவ்வொரு சொல்லும் தனித்தனிக் கருத்தைத் தரும். தன்னிலையில் இருந்து குறைந்தோருக்குக் கொடுப்பதே ஈதலாகும். தொல்காப்பியரும்
“ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே”
                                                        - (தொல்: சொல்: 445)
எனச் சொல்கிறார். வயதில், பொருளில், பதவியில், அறிவில் எம்மிலும் குறைந்தோரை இழிந்தோன் என்கிறார். அதனால் இல்லாதவர்க்கு ஈதலும் இரப்போர்க்கு இடுதலும் ஈகையாகும் என்பதை அறியலாம். இல்லாதவர்க்கும் இரப்போருக்கும் நாம் அளிப்பதை மீண்டும் எமக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நாம் அளிப்பதில்லை. 

வறியோர் அல்லாதோருக்குக் கொடுப்பவை மீண்டும் கிடைக்கும் என்று நினைத்து கைமாறுகருதிக் கொடுப்பவையே. தருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஒருவர்க்கு ஒன்றைக் கொடுத்தல் ஈகையாகுமா? ஆதலால் ‘மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து’ என்றார். நீரது உடைத்து என்றால் அத்தன்மையானது  என்ற கருத்தைத் தரும். 

வறுமைத் துன்பத்தில் துடிப்போருக்கு ஈவதே ஈகை. வறுமையில்லோதோருக்குக் கொடுத்தல் பயன் கருதி கொடுத்து மீண்டும் பெற்றுக்கொள்ளும் கடன் போன்றதே.

Monday 29 August 2016

அடிசில் 105

பீட்ரூட் கறி
- நீரா - 
  

தேவையான பொருட்கள்: 
பீட்ரூட்  -  400 கி
வெட்டிய வெங்காயம்  - 1 மே. கரண்டி
மிளகு தூள்  -  ½ தேக்கரண்டி
பால்  -  2 மே.கரண்டி
எண்ணெய்  -  1  தேக்கரண்டி
எலுமிச்சம் புளி  -  1  தேக்கரண்டி
கறிவேப்பிலை கொஞ்சம் 
உப்பு தேவையான அளவு

செய்முறை:
1. பீட்ரூட் கிங்கின் தோலைச் சீவி நீக்கிக் கழுவி, சிறிய மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்க.
2. ஒரு பாத்திரத்தினுள் வெட்டிய பீட்ரூட், வெங்காயம், உப்புப் போட்டு எண்ணெயையும் சேர்த்து அரைக் கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். 
3. தண்ணீர் வற்றிவரும் போது பால், கறிவேப்பிலை மிளகுதூள் சேர்த்து கிளரி கறி திரண்டு வரும்போது இறக்கவும்.
4. ஆறியதும் எலுமிச்சம் புளிவிட்டுக் கலந்து கொள்க.

குறிப்பு:
1. பாலுக்குப் பதிலாகத் தயிர் சேர்க்கலாம்.
2. தயிர் சேர்த்தால் எலுமிச்சம் புளிவிடத் தேவையில்லை.
எண்ணெய் சேர்ப்பதால் கீரை, கிழங்கு போன்றவற்றில் உள்ள cellulose இலகுவில் சமிபாடு அடையும். 
3. அதற்காகத் தாளிதம் செய்தும் போடலாம்.

Sunday 28 August 2016

நுணலும் தன் வாயாற் கெடும்!


“மணலுண் முழுகி மறந்து கிடக்கும்
நுணலுந் தன் வாயாற் கெடும்”
                                         - (பழமொழி நாநூறு: 184)
நுழல் என்பதே நுணல் ஆயிற்று. தழல் - தணல் ஆதல் போல். தமிழுக்கே உரிய ‘ழ’ கரம்  பேச்சு வழக்கில் ‘ண’ ஆக மாறுகிறது. நுழல் - நுணல் - தவளை இனத்தின் பொதுப்பெயர். மண்ணினுள் உறங்குநிலையில் வாழும் தவளையை நுழல் - நுணல் என்பர். மண்ணினுள், கல்லினுள், மர இடுக்கினுள் நுழைந்து வாழ்வதால் நுழல் என்பர். உறங்கு நிலையில் வாழும் தவளை மழை பொய்ததும் மகிழ்ச்சில் துள்ளி ஆரவாரமாய் சத்தம் போடும். அப்போது தவளையை உண்ணும் விலங்குகள் [பூனை, நரி] அதனைப் பிடித்து உண்ணும். தவளையின் ஆர்ப்பாட்டம் அதன் உயிருக்கு உலைவைப்பதால் தவளையும் தன்வாயால் கெடும் என்பர். தவளை போடும் சத்தத்தைக் கேட்டு பாம்பு தவளையைப் பிடிப்பதில்லை.

பாம்பு தன் இரையை கண்ணால் பார்த்தும், காதால் கேட்டும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. இரைகளின் உடல் வெப்பத்தைக் கொண்டே அவற்றைப் பகுத்தறிகின்றன. பாம்பு பார்க்கும் இடங்கள் யாவும் Infra red rays காரணமாகச் சிவப்பாகத் தெரியும். பாம்பின் கண்களுக்கு அருகே ஒரு சிறு குழி உண்டு. அது எமது செவிப்பறை போல ஆனால் இரைகளின் உடல் வெப்பநிலையை உணர்ந்தறியும் உறுப்பாகத் தொழிற்படுகிறது. கண்ணருகே இருக்கும் அவ்வுறுப்பைக் கொண்டு பாம்புகள் கேட்காததால் தமிழர் பாம்பை ‘கட்செவி’ என்று அழைத்தனர். 

“கரகம் உந்திய மலை முழையில் கட்செவி
உரகம் முந்தின”
                                                       - (கம்பரா: 8343)
குடத்தைப்[கரகம்] போன்ற மலைக் குகைகளில்[முழையில்] கண்ணே செவியாக[கட்செவி] உடைய பாம்புகள்[உரகம்] புகுந்தன என்கிறார் கம்பர். அதாவது கண்ணே செவியாகவும் செவியே கண்ணாகவும் தொழிற்படும் என்ற கருத்தில் தமிழர் பாம்பைக் கட்செவி என்றனர். இன்றைய விஞ்ஞானமும் அதனை ஏற்கத்தான் செய்கிறது.

பாம்புகள் இரை தேடும் போது பார்த்திருக்கிறீர்களா? அது தன் நாக்கை வெளியே நீடியும் உள்ளே இழுத்தபடி ஊர்ந்து செல்லும். அப்படிச் செல்லும் பொழுது சுற்றுச் சூழலின் மணத்தை வைத்து இரைகளின் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ளும். பாம்பின் நாக்கில் உள்ள நரம்புகள் மணத்தை உணர உதவும் உறுப்பை 1813 ம் ஆண்டு Ludwig Jacobson கண்டுபிடித்தார். அதனால் அவ்வுறுப்பு Jacobson’s Organ [Vomeronasal Organ] என்றும் அழைக்கப்படும். பாம்புகள் மட்டுமல்ல உடும்பு, பல்லி, ஓணான் போன்ற ஊர்வன[reptile] யாவும்  தமது உணவை அவற்றின் மணத்தைக் கொண்டு அறிந்து பிடித்து உண்கின்றன என்பதே இன்றைய விஞ்ஞானம் சொல்லும் செய்தியாகும்.
இனிதே,
தமிழரசி.

Saturday 27 August 2016

பண்டைத் தமிழர் வழங்கிய கொடை


உலகமொழிகள் எல்லாவற்றிற்கும் இல்லாத் தனிச்சிறப்பு தமிழ்மொழிக்கு உண்டு. அந்தச் சிறப்பை நாம் உலகிற்கு எடுத்துச் சொல்ல துணையாக இருப்பவற்றுள் முதன்மையானது தொல்காப்பியம் ஆகும். உலகில் உள்ள மனித இனங்களின் படையெடுப்பால் எம் பண்டைய பெருமைகளைக் கூறும் கலைச்செல்வங்கள், கட்டிடங்கள், நூல்கள், நூலகங்கள் களவு எடுக்கப்பட்டு அழித்து எரிக்கப்பட்ட போதும் தமிழரின் பெருமையை எடுத்துக் காட்டுவன சங்க இலக்கிய நூல்களே.

காலம் என்றால் என்ன? நேரத்தின் அளவைக் காலம் என்ற சொல்லால் குறிக்கிறோம். ஒரு செயல் எப்போது நடந்தது? என்பதைக் காட்டுவது வினைச்சொல்லாகும். அந்தச் செயல் நடந்ததா? நடக்கிறதா? நடக்கப்போகிறதா? என்னும் காலத்தைச் சரியாகக் காட்டுவது வினைச் சொல்லே. அதனால் தொல்காப்பியர் வினைச்சொல்லை ‘காலக்கிளவி’ என்றும் அழைக்கிறார். கிளவி என்றால் சொல். ஒரு செயல் நடைபெற்ற காலத்தை [இறந்தகாலமா? நிகழ்காலமா? எதிர்காலமா? என்னும் மூன்று காலத்தையும்] சொல்லைக் கொண்டு [படித்தான், படிக்கிறான், படிப்பான்] அறிகிறோம் அல்லவா? அச்சொல் செயல் நடந்த காலத்தைக் காட்டுவதால் காலக்கிளவி என்றார். 

“வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலை காலமொடு தோன்றும்”                
                                                     - (தொல்: சொல்: 198)

“காலம்தாமே மூன்று என மொழிப”                       
                                                      - (தொல்: சொல்: 198)

“காலக் கிளவி அஃறிணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே”                
                                                     -(தொல்: சொல்: 198)

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே அதாவது இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்பே ‘காலம்’ என்னும் சொல் தமிழில் இருந்ததை
“காலம்தாமே மூன்று என மொழிப” 
இந்த தொல்காப்பிய நூற்பாவில் சொன்னார்கள்[மொழிப] என்று தொல்காப்பியர் குறித்துள்ளதால் அறியலாம்.

காலத்தை தொல்காப்பியர் ‘பொழுது’ என்ற சொல்லாலும் குறிப்பிடுகின்றார். இன்று வாழும் தமிழர்களாகிய நாமும் ‘எப்பொழுது வந்தீர்கள்? எப்பொழுது கொண்டுவர வேண்டும்? எனக் கேட்கும் போதும், பொழுதோடு வந்துவிட்டேன் எனச் சொல்லும் போதும் காலத்தை பொழுது என்ற சொல்லால் தானே குறிப்பிடுகிறோம்!

நாம் செய்யும் செயல் எதுவித தடையும் இன்றி நடைபெற இடமும் காலமும் மிகமிகத் தேவை என்பதை நம் பண்டைத் தமிழ் முன்னோர்கள் அறிந்திருந்தார்கள். அதனை
“முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பெனெ மொழிப இயல்பு உணர்ந்தோரே” 
என தொல்காப்பியம் சொல்கின்றது.

ஒன்றைச் செய்வதற்கு தேவையான முதல் பணமோ பொருளோ அல்ல.  எதனைச் செய்யத் தொடங்கும் போதும் அதனைச் செய்வதற்கு ஏற்ற இடம், ஏற்ற காலம் ஆகிய இரண்டும் தேவை ஆதலால் அவற்றை முதல் என்றார். இத்தொல்காப்பிய நூற்பா நிலம் என இடத்தையும் பொழுதெனக் காலத்தையும் சுட்டுகிறது. சோதிடர்களும், குருக்கள்மாரும் குறித்துத்தரும் காலத்தை [நல்ல நேரத்தை] இதில் சொல்லவில்லை. இரவு, பகல், பருவகாலங்கள் இங்கு காலம் என்று அழைக்கப்படுகின்றன. அவை எவை எனப்பார்ப்போம்.

பண்டைத்தமிழர் வகுத்த காலப்பிரிவுகள்

காலத்தை - பொழுதை நம்முன்னோர் பெரும்பொழுது, சிறுபொழுது எனப் பிரித்தும் வைத்துள்ளனர். ஒரு வருடத்தை ஆறு பொழுதுகளாக [காலங்களாக] பிரித்து அவற்றை ‘பெரும்பொழுது’ என்றனர். அதை நம்பியகப்பொருள் 
“காரே கூதிர் முன்பனி பின்பனி
சீரிளவேனில் வேனிலென்றாங்கு
இருமூன்று திறத்தது தெரிபெரும் பொழுது”                 
                                                  - (நம்பியகப்பொருள்: 11)
என்கின்றது. அதாவது கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், வேனிற்காலம் என்ற ஆறும் பெரும்பொழுதாகும்.

பெரும் பொழுது
[இரண்டு மாதம் ஒரு பெரும் பொழுதாகும்]
கார்காலம் - மழை மேகங்களால் சூழ்ந்த காலம் [கார் - மேகம்] ஆவணி, புரட்டாதி மாதங்கள்
கூதிர்காலம் - குளிர் காற்று வீசும் காலம் [கூதிர் - குளிர் காற்று] ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்
முன்பனிக்காலம் - விடியலில் பனி பெய்யும் காலம் மார்கழி, தை மாதங்கள்
பின்பனிக்காலம் - காலையில் பனி பெய்யும் காலம் மாசி, பங்குனி மாதங்கள்
இளவேனிற்காலம் - வசந்த காலம் சித்திரை, வைகாசி மாதங்கள்
வேனிற்காலம்/முதுவேனிற்காலம் - கோடை காலம் ஆனி, ஆடி மாதங்கள்

இதே போல் ஒரு நாளை ஆறு பொழுதுகளாகப் பிரித்து சிறுபொழுது என்றனர். அதனை
“மாலை யாமம் வைகுறு என்றா
காலை நண்பகல் ஏற்பாடு என்றா
அறுவகத்து என்ப சிறுபொழுது அவைதாம்
படுசுடர் அமையம் தொடங்கி ஐஇரு
கடிகை அளவைய காணுங் காலே”                  
                                          - (இலக்கணவிளக்கம்: பொருள்: 385)
என்று இலக்கணவிளக்கம் சொல்கின்றது. அதாவது ‘மாலை, யாமம், வைகறை [வைகுறு], காலை, நண்பகல், பிற்பகல் [ஏற்பாடு] என்ற ஆறும் சிறுபொழுதாகும். ஆராய்ந்து பார்த்தால் [காணுங்காலே] அவை சூரியன் மறையும் காலந்தொடக்கம் [படுசுடர் அமையம்] பத்து[ஐயிரு] நாழிகை [கடிகை] அளவு உடையன ஆகும்’ என்கின்றது இலக்கண விளக்கம்.

சிறு பொழுது
[பத்து நாழிகை ஒரு சிறு பொழுதாகும்
மாலை - சூரியஒளி மயங்கும் காலம் [முன்னிரவு] 18:00 மணி தொடக்கம் 22:00 மணி வரை
யாமம் - நள்ளிரவு 22:00 மணி தொடக்கம் 02:00 மணி வரை
வைகுறு - விடியற் காலம் 02:00 மணி தொடக்கம் 06:00 மணி வரை
காலை - காலை வேளை 06:00 மணி தொடக்கம் 10:00 மணி வரை
நண்பகல் - உச்சிக்காலம் [நடுப்பகல்] 10:00 மணி தொடக்கம் 14:00  மணிவரை
ஏற்பாடு - சூரியன் மறையும் காலம்  14:00 மணி தொடக்கம் 18:00 மணி வரை

ஒரு சிறுபொழுது பத்து நாழிகை அளவுவுடையது. எனவே அறுபது நாழிகை ஒரு நாள் ஆகும். இரண்டரை நாழிகையை ஒரு ஓரை என அழைதனர். எமது பண்டைத்தமிழர் கணக்கின்படி 24 ஓரைகள் கொண்டது ஒரு நாளாகும். ஆதலால் பண்டைத் தமிழரின் கணக்குப்படி ஒரு ஓரை என்பது இன்று நாம் சொல்லும் ஒரு மணித்தியாலமேயாகும். அதனாலேயே ஒரு நாளை 24 மணித்தியாலங்கள் கொண்டது என்கின்றோம். நம்தமிழ் முன்னோரின் ‘ஓரை’ என்ற சொல்லையே கிரேக்கமொழியில் ‘ஹோரா [hora]’ என்றனர். அதுவே ஆங்கிலத்தில் ‘ஹவர் [hour]’ என்று மாறிற்று. ஆனால் நாமோ மேற்கு நாட்டினரே ஒரு நாளில் 24 மணி நேரம் இருப்பதைக் கண்டுபிடித்தனர் என்று ஏமாளிகளாக சொல்லியும் எழுதியும் வருகிறோம். இந்த நிலை மாறவேண்டும்.
10 நாழிகை   -         1 சிறு பொழுது
6 சிறு பொழுது  -    1 நாள்
60 நாழிகை  -          1 நாள்
2½ நாழிகை  -         1 ஓரை
4 ஓரை  -                  1 சிறு பொழுது
24 ஓரை  -                1 நாள் [24 hour - 1 day]
1 ஓரை  -                  1மணி நேரம்

ஓரை என்னும் பண்டைத் தமிழரின் கருத்தை இன்றைய சோதிடம் சிறிது மாறுபட்ட கருத்தில் பயன்படுத்துகிறது. ஒவ்வொருநாளும் அந்ததந்த நாளுக்கு உரிய ஓரையுடன் தொடங்கும். [புதன் கிழமை புதன் ஓரை என்றவாறு…]. ராகு கேது தவிர்ந்த ஏழு கிரகத்திற்கும் ஓரைகள் உண்டு. ஒருமணி நேரத்தை [ஓரையை] சுழற்சி முறையில் ஒவ்வொரு கிரகத்திற்கும் கொடுத்து அதனை ஓரை என்கின்றனர். அது நாளுக்கு நாள் மாறுபடும். அதைக் கொண்டே சுப ஓரை - சுப நேரம் கணிப்பர். எனினும் ஒரு ஓரை என்பது ஒரு மணி நேரம் என்பதை மாற்றவில்லை.

மனித இனத்துக்கு காலத்தை வகுத்துக் கொடுத்தவன் தமிழன் என்பதை ‘ஓரை’ எனும் சொல் எடுத்துச் சொல்கிறது. ஆதலால் காலக் கணிதமும் பண்டைத் தமிழர் வழங்கிய கொடை எனலாம். 
இனிதே,
தமிழரசி

Thursday 25 August 2016

இறைவன் தோன்றுவான்


இறைவன் என்பது உண்மையா? உண்மையானால் எங்கே? எப்படி இருக்கின்றான்? அவனை அறிவது எப்படி? அதற்கு வழி என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை காண முயன்ற அருளாளர்கள் பலராவர். அவர்கள் தத்தமது இறை அநுபவத்தை சொல்லிச் சென்றிருக்கிறார்கள். இருப்பினும் அவரவர் சொன்ன பாங்கு அவர்களது அநுபவத்தைப் பொறுத்து மாறுபடுகின்றது. தாம் கண்ட இறை அநுபவத்தை தாய்மையோடு இழைத்துத் தந்தவர் காரைக்கால் அம்மையாரே. அவரின் அடியொற்றி மிக இலகு தமிழில் இறைவனைக் காணும் வழிகளை அடிக்கித் தந்திருப்பவர் திருநாவுக்கரசு நாயனாரே. அவற்றுள் ஒன்றைப் பார்ப்போம்.

இறைவன் எப்படி இருப்பான் என்பதை அறியவேண்டுமா? காய்ந்த மரத்தை வெட்டி, விறகாக்குவோம்.  அதனைக் கட்டுக்கட்டாக அடுக்கி வைத்திருப்போம். அந்த விறகை எரித்து சமைப்போம். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. காய்ந்த மரமாக இருந்த போதும், விறகாக வெட்டிய போதும், விறகுக் கட்டாகாக் கட்டி வைத்திருந்த பொழுதும் பற்றி எரியாத அந்த ‘எரி சக்தி’ விறகினுள் தானே இருந்தது! விறகுக்குள் தீ எப்படி மறைந்து இருந்து எரியும் பொழுது வெளிப்படுகின்றதோ அவ்வாறே உலக இயற்கை எங்கும் வெப்பசக்தி, ஒளிச்சக்கி, மின்சக்தி, ஒலிச்சக்தி எனச் சக்தி வடிவில் இறைவன் மறைந்திருக்கின்றான்.

இறைவனை அறிவது எப்படி? அதற்கு வழி என்ன? பசுவில் இருந்து பாலைக்கறந்து, கறந்த பாலைக் காச்சி, தயிராக்கி, தயிரைக் கடைய வெண்ணெய் வருகிறது. பசுவில் பாலைக் கறந்த போதும், கறந்த பாலைக் காச்சிய பொழுதும், காச்சிய பாலைத் தயிராய் ஆக்கிய வேளையிலும் கண்ணுக்குத் தெரியாதிருந்த வெண்ணெய் தயிரைக் கடையத் தெரிகிறது. பாலுக்குள் வெண்ணெய் எப்படி மறைந்திருந்து கடையும் போது வெளிப்படுகின்றதோ அதுபோல் எமது உள்ளத்துள் - சிந்தையுள் அன்பு என்னும் மத்தை[உறவு கோல்] நட்டு, அதில் உணர்வாகிய கயிற்றறைச் சுற்றி அங்கும்  இங்கும் இழுத்துக் கடைய வெண்ணெய் தெரிவது போல் இறைவன் தோன்றுவான்.

“விறகில் தீயினன் பாலில்படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே”

என்பது திருநாவுக்கரசு நாயனார் தேவாரம். மத்தால் தயிர்கடையும் போது கையால் முறுகக் கடைதல் ஒருவிதம். மேலே படத்தில் உள்ளது போல் மத்தை நட்டு, அதில் ஒரு கயிற்றைச் சுற்றி அங்கும் இங்கும் இழுத்துக் கடைவது இன்னொருவிதம். இத்தேவாரத்தில் திருநாவுக்கரசு நாயனார் மேலே படத்தில் உள்ளது போன்ற தயிர் கடைதலையே குறிப்பிட்டுள்ளார். 

அன்பின் பிணைப்பாலேயே உறவுகள் ஏற்படுகின்றன. ஒருவரிடம் எமக்கு இருக்கும் அன்பு எத்தகையது என்பதை நம் உணர்வே எமக்கு உணர்த்துகிறது. உறவுக்குக் காரணம் அன்பு ஆதலால் அன்பாகிய கோலை மத்தாக நடச்சொல்கிறார். அன்பாகிய கோலில் உணர்வு என்னும் கயிற்றைச் சுற்றி கடையக் கடைய இறைவன் தோன்றுவான். இறைவனை அறிய திருநாவுக்கரசு நாயனார் சொன்ன வழி மிக நல்ல வழி அல்லவா!
இனிதே, 
தமிழரசி.

Wednesday 24 August 2016

என்ன தவம் செய்தோம்?


இளமை ததும்பும் புதுமணமக்களைப் பார்ப்பது ஓர் இன்பம். அதுவும் நாம் கொஞ்சி மகிழ்ந்த குழந்தைகளைச் சிறுவர்களை மணமக்களாகப் பார்ப்பது பேரின்பமாகும். ஆவணி மாதம் திருமணக் காலம். இலண்டன் மாநகரில் ஒவ்வொரு கிழமையும் ஒன்றிற்கு இரண்டு மூன்று எனத் திருமணங்களுக்கு சென்று, புதுமணமக்களைப் கண்டு, மகிழ்ந்து ஆசி வழங்கி வந்த மனநிறைவில் இதனை எழுதுகிறேன். நாம் பார்த்திருக்க வளர்ந்து மணமக்களாக மேடையில் நிற்கும் பிள்ளைகளைக் கண்ட போது ‘என்ன தவம் செய்தோம்?’ என மனம் அசைபோடுகிறது. கூடவே திருவிளையாடற் புராணத்தில் வரும் மதுரை மீனாட்சி, சுந்தரேசர் திருமணக்காட்சியும் கண்ணில் விரிகிறது.

இலண்டன் மாநகரத்தில் நடைபெறும் திருமணங்களை நாம் பார்த்து மகிழ்வது போல மதுரை மாநகரில் மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேசருக்கும் திருமணம் நடைபெறுவதைக் கண்டு மகிழ்ந்தோர் சொன்னதை 
“நங்கை என் நோற்றாள் கொல்லோ 
          நம்பியைத் திளைத்தற்கு என்பர்
மங்கையை மணப்பான் என்னோ
          வள்ளலும் நோற்றான் என்பர்
அங்கடி மதுரை என்னோ
          ஆற்றிய தவம்தான் என்பர்
இங்கிவர் வதுவை காண்பான்
          என்ன நாம் நோற்றோம் என்பர்”
                              - (திரு.வி.புராணம்: திருமணப்படலம்: 120)
இப்பாடல் சொல்கிறது. திருமணத்தைக் காண வந்தோரில் சிலர் ‘பெண்மை நலங்கள் மிக்கவளான மீனாட்சி ஆண்மையிற் சிறந்த சுந்தரேசனை அநுபவிக்க என்ன தவம் செய்தாளோ?’ என்பர். வேறு சிலர் ‘மங்கைப் பருவத்தை உடைய மீனாட்சியை மணக்க வள்ளளான சுந்தரேசனும் தவம் செய்திருகிறான்’ என்பர். இன்னும் சிலர் ‘கடைகள்[அங்கடி] உள்ள மதுரை செய்த[ஆற்றிய] தவம் தான் என்னவோ?’ என்பர். ‘இவர்களது திருமணத்தைக்[வதுவை] காண நாம் என்ன தவம் செய்தோம்’ என்று எல்லோரும் சொல்வர். அத்தகைய மன நிலையில் தான் நல்ல திருமணத்தைப் பார்த்தோர் இருப்பர்.

மீனாட்சி, சுந்தரேசர் போன்ற அழகும் ஆற்றலும் உள்ள நங்கைக்கும் நம்பிக்கும் நாள், நட்சத்திரம் பார்த்து தீவளர்த்து செய்து வைக்கும் திருமணங்களை ஐயர்மாரும் சாத்திரம் சொல்வோரும் குறித்துக் கொடுக்கும் நாட்களில் செய்கிறோம். அவர்கள் குறித்துக் கொடுக்கும் நாட்கள் திருமணத்திற்கு ஏற்ற நல்ல நாட்களா என்று எத்தனை பேர் சரி பார்த்திருக்கிறோம்? எமது சிந்தனையை நாமே செதுக்கிப் பார்க்க வேண்டும். 

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நம்மில் பலருக்கு நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டும் என்பது மட்டும் தெரியும். அது சரியான நாளா! பிழையான நாளா! என்பதை எப்படி அறிவது? என்ற விடயம் தெரியாது. தெரிந்த பலரும் தத்தமது நன்மைக்காக வாய்மூடிக் கொள்கிறார்கள் என நினைக்கத் தோன்றுகிறது. அந்த வரிசையில் ஐயர்மாரும் சாஸ்திரம் சொல்வோரும் மட்டுமல்ல கோயில் அறக்காவலர்கள், திருமண மண்டபங்களை வாடகைக்கு விடுவோர், திருமணவிழாவிற்கான ஒழுங்குகள் செய்வோர், திருமணத்திற்கு வேண்டிய உணவு கொடுப்போர், பெண்ணிற்கு அலங்காரம் செய்வோர், படம் எடுப்போர் எனப்பலரையும் சேர்க்கலாம். இவர்களுக்கு தேய்பிறையில் திருமணம் செய்யக்கூடாது என்ற அடிப்படை உண்மை தெரியாமலா இருக்கும்? அதைத் திருமணம் செய்ய வருவோருக்குச் சொல்லலாம் அல்லவா?

இந்த மாதம் [ஆவணி] தேய்பிறையில் வந்த திரிதியை, சதுர்த்தி, துவாதசி ஆகிய மூன்று நாட்களிலும் நடந்த திருமணங்களுக்குச் சென்று வந்தேன். நாள் நட்சத்திரம் பார்த்து திருமணம் செய்து வைப்பதாக இருந்தால் இந்த நாட்களைத் தேர்வு செய்திருக்கமாட்டேன். நான் தூக்கி மகிழ்ந்த பிள்ளைகளின் திருமணங்கள் நம்மவர்களின் பொறுப்பு இல்லாத் தன்மையினால் நல்ல நாள் [சுபமுகூர்த்தம்] எனும் போர்வையில் நடைபெற்றதே என்ற நெருடல் உண்டு.  நான் சாத்திரத்தின் மேல் நம்பிக்கை கொண்டவள் அல்ல. ஆனால் முறையாக என் தந்தையிடம் சோதிட சாத்திரம் கற்றவள்.  சில நூறு ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்தும் இருக்கிறேன். சாத்திரத்தில் இருக்கும் குளறுபடிகளும், இடைச்செருகல்களும், சோதிடக் கணிப்பில் பலர் செய்யும் தவறுகளுமே நம்பிக்கை இன்மைக்கு முக்கிய காரணங்களாகும். எனினும் சோதிடத்தின் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்காக திருமணத்துக்கு நாள்குறிக்கும் போது கவனிக்க வேண்டிய அடிப்படை விதிகளைச் [மணமக்களின் ஜாதகத்தில் உள்ள கிரகநிலைகளைக் கொண்டல்ல] சொல்கிறேன்.

திருமண நாளைத் தேர்ந்தெக்கும் போது…
1. திருமணங்கள் வளர்பிறையில்[சுக்கில பட்சம்] செய்யவேண்டும். தேய்பிறையில்[ கிருஷ்ண பட்சம்] செய்வதில்லை.
2. சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி மாதங்கள் திருமணம் செய்ய உகந்த மாதங்களாகும். [ஆனால் எனக்கு மார்கழியில் திருமணம் நடந்தது. ஏனெனில் தேவர்கள் திருமணம் செய்யும் மாதம் மார்கழியாம். அம்மாதத்தில் செய்தால் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளச் செய்தது.
3. ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமி அல்லது இரண்டு அமாவாசை வந்தாலும் [மல மாதம்] அம்மாதத்தில் திருமணம் செய்வதில்லை.
4. புதன், வியாழன், வெள்ளி கிழமைகளே திருமணம் செய்ய ஏற்ற கிழமைகளாகும். செவ்வாய், சனிக் கிழமைகளில் திருமணம் செய்து வைப்பதில்லை. மணமக்கள் பிறந்த திகதி, கிழமைகளில் திருமணம் நடைபெறுவது நன்றல்ல.
5. மணமக்கள் பிறந்த நட்சதிரங்களில் திருமணம் செய்வதில்லை. அத்துடன் அந்த நட்சத்திரங்களுக்கு 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 25 ஆகிய நட்சத்திரங்களிலும் திருமணம் செய்வதில்லை.
6. ரோகிணி, மிருகசீரிடம், மகம், உத்தரம், உத்தராடம், அத்தம், உத்திரட்டாதி, சுவாதி, அனுசம், மூலம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் திருமணம் செய்ய ஏற்றது. பரணி, கார்த்திகை, ஆயிலியம், கேட்டை,  ஆகிய நட்சத்திரங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பர்.
7. வளர்பிறையில் வரும் துவதியை, திரிதியை, சப்தமி, தசமி, திரயோதசி, பௌர்ணமி ஆகிய திதிகளில் திருமணம் செய்யலாம். பிரதமை, அட்டமி, நவமி திதிகளில் திருமணம் செய்வதில்லை.
8. இடபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய இலக்கினங்களில் திருமணம் செய்யலாம்.
9. மரணயோகத்தில் திருமணம் செய்வதில்லை.
10. பதினொரு கரணங்களில் பத்திரை என்ற கரணத்தில் திருமணம் செய்வதில்லை.

என்பவற்றைக் கருத்தில் கொண்டு திருமணநாள் குறிப்பது நல்லது என்பதை நினைவில் வைத்திருங்கள். திருமணத்திற்கு எல்லோரும் வரவேண்டும் என நினைத்து சனி, ஞாயிறு வேலை இல்லாததால் அந்நாட்களில் திருமணத்தை செய்து வைக்கிறோம். ஆனால் அது சாத்திரத்திற்கு முரணானது. நல்ல மணமங்கல நாளில் நடைபெறும் திருமணத்தைப் பார்த்து என்ன தவம் செய்தோம் எனப் பெருமிதம் கொள்வோம்.
இனிதே, 
தமிழரசி.

Tuesday 23 August 2016

புள்ளி வைத்து கால் எடுப்போமா?

தமிழ் இலக்கண நூல்களில் ஒன்று தண்டியலங்காரம். அந்த நூலை எழுதிய ஆசிரியரின் பெயர் தண்டி. அவர் அந்நூலில் தமிழின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐவகை இலக்கணங்களில் ‘அணி இலக்கணம்’ பற்றி விளக்கியுள்ளார். அணி இலக்கணத்தை விளக்குவதற்கு சில பாடல்களை மேற்கோளாக எடுத்துக் காட்டுகிறார். அப்பாடல்களை யார் யார் எழுதினார்கள் என்பதை அறியமுடியவில்லை. அவை பழைய பாடல்கள் என்று பலர் சொல்ல சிலர் அவர் எழுதியதாகச் சொல்கிறார்கள். தண்டியலங்காரம் எழுதியே ஆயிரத்து ஐம்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. எனவே எமக்கு அப்பாடல்கள் யாவும் பழமையானவையே.

பெண்ணைப் பற்றிப் பாடுவோரே புலவர்கள் என்று சொல்லும் அளவுக்கு பெண்களை வைத்துப் புலவர்கள் பாடல்கள் பாடியிருக்கிறார்கள். இந்தப் பெயர் அறிய முடியாத புலவர் என்னவெல்லாம் சொல்கிறார் பார்ப்போமா?

அழகிய பெண்களின்[நேரிழையார்] கூந்தலில் ஒரு புள்ளி வைத்தால் நீண்ட மரமாக மாறும் என்கிறார். அதுபோல நீர் நிலையில் ஒரு புள்ளி வைத்தால் அது நெருப்பாகுமாம். காடு அதில் ஒன்றை நீக்கினால் இசையாய் மாறிவிடும் என்றும் அந்த இசையில் மீண்டும் ஒன்றை நீக்கினால் கழுத்தாகும்[மிடறு] என்றும் கூறியுள்ளார்.

“நேரிழையார் கூந்தலில் ஓர் புள்ளி பெற நீள் மரமாம்
நீர்நிலை ஓர் புள்ளி பெற நெருப்பாம் - சீரிய
காடு ஒன்று ஒழிப்ப இசை ஆகும் அதனுள்ளும்
மீட்டு ஒன்று ஒழிப்ப மிடறு”
                                  - (தண்டியலங்ககார மேற்கோள் வெண்பா)

இது என்ன பாடலா? பிதற்றலா? அப்படித்தானே எண்ணத் தோன்றுகிறது! இந்தப் புலவரை என்ன என்று அழைப்பது?  அழகிய பெண்களின் கூந்தலுக்கு அவர் ஒரு புள்ளி வைத்ததும் சின்ன மரமும் அல்ல நீண்ட மரமாகுமாம். மரம் தேவை என்றால் பெண்களின் கூந்தலுக்கு புள்ளி வைக்கலாமோ? நீர் நிலைகளை புள்ளி வைத்து நெருப்பாக்கினால் தண்ணிக்கு எங்கு போவது? 

தமிழில் உள்ள உயிர் எழுத்துக்களில் எ, ஒ ஆகிய எழுத்துக்களை இன்று நாம் எழுதுவது போல் அக்காலத்தில் எழுதுவதில்லை. மேல் ஒரு புள்ளி வைத்தால் அதனை என்று படிப்பர். அதுபோல் மேல் ஒரு புள்ளி வைத்தால் என்று படிப்பர். பெண்களின் கூந்தலை 'ஓதி' என்றும் அழைப்பர். இராவணனின் மனைவியின் பெயரை திருஞானசம்பந்தர் ‘வண்டமரோதி’ என்று தமது தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். வண்டு அமரும் கூந்தலை உடையவளே வண்டமரோதி = வண்டு + அமர் + ஓதி. அவளை மாணிக்கவாசகர் திருவாசகத்தில் வண்டோதரி என்கின்றார். கம்பர் மண்டோதரி என்றார். பெண்களின் கூந்தலாகிய ஓதி என்ற சொல்லின் ஓ மேல் ஒரு புள்ளி வைத்தால் அது ஒதி ஆகும். பெண்களின் கூந்தலாகிய ஓதி புள்ளி வைத்ததும் ஒதியமரம் ஆகும். நீர் தேங்கி இருக்கும் இடத்தை 'ஏரி' என்றும் அழைப்போம். ஏரி என்ற சொல்லின் ஏ மேல் ஒரு புள்ளி வைத்தால் அது எரி[நெருப்பாகும்] ஆகும்.

நாம் சிறுவயதில் தமிழ் எழுதப் பழகியதை கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம். கனாவுக்கு[க] பக்கத்தில் கால்[அரவு] போட்டு காவன்னா[கா] எழுதியது நினைவிருக்கிறதா? அதனையே கடைசி இரண்டு வரிகளில் சொல்கிறார். காட்டைக் காந்தாரம் என்றும் சொல்வர். காந்தாரம் என்ற சொல்லிலுள்ள ‘கா’ எழுத்தின் காலை எடுத்தால்[ ஒழிப்ப] கந்தாரம் ஆகும். ஓர் இசைப்பண்ணின் பெயர் கந்தாரம். இந்தக் கந்தாரம் என்னும் இசைப் பண்ணின் சொல்லிலுள்ள ‘தா’ எனும் எழுத்தின் காலை எடுத்தால் கந்தரம் ஆக மாறும். கழுத்தைக் கந்தரம் என்பர்.

புள்ளி வைத்து கால் எடுத்து மீண்டும் பாடலைப் படித்துப் பாருங்கள் புலவரின் புலமை புரியும்.
இனிதே,
தமிழரசி.

Friday 19 August 2016

ஆழிப்பேரலை வந்தாலும் அழியுமோ!


தென்னைமரத் தோப்பென்று சீராட்டித்
          தேடிவைத்த தென்னை யெல்லாம்
சின்னச்சூறா வளியில்சிக்கிச் சாய்ந்து
          சின்னாபின்னமாய் சிதறிக் கிடக்குதே
புன்னைமரத் தூடு புதுத்தென்னை தனை
          பண்டைத் தமிழரைப்போற் பாராட்டி
அன்னைமண் மடியில் ஆழவைத்தால்                                            
          ஆழிப்பேரலை வந்தாலும் அழியுமோ!!
                                                                             - சிட்டு எழுதும் சீட்டு 123

Thursday 18 August 2016

அருள் பொழிவாய்!


மற்றோர் அறியா வந்தென் மனத்திருந்து
          மாசறுக்கும் மருந்தே மண் உலகில்
கற்றோர் ஏத்தும் கரும்பே தேனே
          காமுற்றே உன்றன் கழலடி தேடும்
நற்றோர் இருக்க நயமிலா பாவியெனை
          நண்ணி மகிழ்வ தேனைய
அற்றோர் அறவோர் அன்போடு வப்ப
          அருள் பொழிவாய் அரன் மகனே!
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
மற்றோர் - பிறர்
மாசறுக்கும் - குற்றங்களை நீக்கும்
ஏத்தும் - புகழும்
காமுற்றே - விரும்பி
கழலடி - கழல் அணிந்த அடி[கழல்-வீரர்கள் காலில் அணிவது]
நயமிலா - சிறப்பு இல்லாத
நண்ணி - அருகேவந்து
அற்றோர் - பொருளற்றோர், கல்ல்வியற்றோர், ஏதும் இல்லாதவர்
அறவோர் - எல்லா உயிர்களிடத்தும்  அன்புள்ளோர்
உவப்ப - மகிழ.

Monday 15 August 2016

குறள் அமுது - (120)


குறள்:
“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்”                           - 120

பொருள்:
வாணிகம் செய்வோர் பிறர் பொருளையும் தமது பொருள் போலப் பேணி இலாபத்தைப் பெறவேண்டும்.

விளக்கம்:
இத்திருக்குறள் நடுவு நிலைமை என்னும் அதிகாரத்தில் கடைசிக் குறளாக உள்ளது. வாணிகம் என்றால் ஊதியம் அல்லது இலாபம் என்ற கருத்தைத் தரும். வியாபாரத்தால் பெறுவது இலாபம் ஆதலால் வாணிகம் என்று வியாபாரத்தை அழைத்தனர். ஒரு பொருளை விற்றுக் கிடைக்கும் இலாபத்தை[வாணிகத்தை] பெறுவோரே வாணிகர் [வியாபாரிகள்]. எனவே வியாபாரம் செய்வோர் நடுவு நிலைமையோடு வியாபாரம் செய்ய வேண்டுமாம்.

எத்தொழிலைச் செய்தாலும் அதனால் இலாபம் பெறுவோர் யாவரும் வாணிகர்களே. பொருட்களை விற்பனை செய்வோர் நடுவு நிலைமை இல்லாமல் கூடுதலான இலாபத்தைப் பெற்று உலகின் பெரிய பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பெறுகிறார்கள். இன்றைய உலகில் அது பெருமைப்படும் செயலாகாக் கருதப்படுவதால் அவர்கள் போற்றப்படுகிறார்கள். நம் கண்கள் விழித்திருக்க மனித நேயம் சிறிதுமின்றி அவர்களிடும் கொள்ளையும் சுரண்டலும் [இலாபங்கள்] எமக்குத் தெரிவதில்லை.

ஆனால் பண்டைத்தமிழர் வாணிகத்தால்[இலாபத்தால்] இட்ட கொள்ளையை நடுவு நிலைமையோடு செய்த கொள்ளை எனப்   பட்டினப்பாலை என்னும் சங்க இலக்கிய நூல்
“கொடு மேழி நசை உழவர்
நெடு நுகத்துப் பகல் போல
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைகொடாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்
தொல் கொண்டி துவன்று இருக்கை”
                                            - (பட்டினப்பாலை: 205 - 212)
என்று சொல்கிறது. 'வளைந்த[கொடு] கலப்பையை[மேழி] விரும்பும்[நசை] - உழவுத்தொழிலை விரும்பும் உழவரது நீண்ட நுகத்தில் உள்ள பகலாணி போல [நுகத்தையும் கலப்பையையும் இணைக்கும் நுகத்தாணி] பக்கச் சார்பு இன்றி நடு நிலைமையோடு பழிக்கு அஞ்சி உண்மையைக் கூறும் நல்ல நெஞ்சம் உடையவராய் தமது பொருளையும் மற்றவர் பொருளையும் ஒன்று போல் பார்த்து தாம் எடுப்பதை அதிகமாக எடுக்காமலும் கொடுப்பதைக் குறைத்துக் கொடாமலும் பலவகைப் பொருட்களின் இலாபத்தையும் வெளிப்படையாகச் சொல்லிக்[பகர்ந்து] கொடுக்கும்[வீசும்] பழமை மிக்க[தொல்] கொள்ளையினையும்[கொண்டி] நெருங்கிய[துவன்று] குடியிருப்பையும் உடையது காவிரிப்பூம் பட்டினம் என்கிறது. 

பட்டினப்பாலையைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனக்கும் ஒருபடி மேலே சென்று இலாபம் பெறுவதை ‘பழங்காலத்தில் இருந்து வரும் கொள்ளை’[தொல் கொண்டி] என்று கூறியிருப்பதைப் பாருங்கள். நுகத்தாணி மாடுகள் இரண்டு, கலப்பை ஆகிய மூன்றுக்கும் நடுவாக இருப்பது போல மொத்த வாணிகர், சிறு வாணிகர், கொள்வோர் ஆகிய மூவர்க்கும் நடுநிலையாக இலாபம் பெறுதல் இருக்க வேண்டும்.

பெறுவதை அதிகம் பெறாமலும் கொடுப்பதை குறைத்துக் கொடாமலும் நடுநிலையோடு வாணிகம் செய்வதையே திருவள்ளுவர் ‘பிறவும் தமபோல் செயின்’ எனக் கூறியுள்ளார். ஆதலால் இலாபம் பெறுவோர்[வியாபாரம் செய்வோர்] பொருட்களுக்கான பணத்தை கூடுதலாக வாங்கி, கொடுக்கும் பொருளை குறைத்து அல்லது தரம் குறைந்ததாகக் கொடாது நடுவு நிலைமையோடு இலாபத்தைப் பெற வேண்டும்.