Saturday, 25 June 2016

பள்ளி எழுச்சி!


எழுந்திரடா மகனே எழுந்திரடா - என்
கண்மணியே நீ எழுந்திரடா
                                                  - எழுந்திரடா

ஏழ்கடல் முத்தாய் வந்தவனோ அன்றி
இமய மலை தந்த சந்தனமோ
வாழுனர் மகிழ வாசித்திடும் நல்ல
மாணிக்க வீணையாய் வாய்த்தவனோ
                                               - எழுந்திரடா

மாழை மணி வடிவானவனே என் வயிற்றில்
வளர்ந்து நிறைந்து ஓடி வந்தவனே
சொல்லுவார் சொல்லு கேழாதே கெட்ட
துட்டரை நன்கு அறிந்து கொண்டு
மெல்ல நிமிர்ந்து சிரித்துக் கொண்டு நீயும்
                                                - எழுந்திரடா

சோம்பல் உலகமெடா என் செல்வமே அது
சும்மா இருந்து சுகங்காண நிற்குது
ஆம்பல் மலர் போன்ற ஆணழகா என் அருந்தவமே
வீம்புகள்பேசிப் பழகாதே மேன்மை தெரிந்து 
மாம்பழம் பெறாத முருகனைப் போல் என்
வாழ்வில் மலர்ந்த செந்தாமரையே
                                                  - எழுந்திரடா

Friday, 24 June 2016

மாட்சிமை பெறவும் வழியிலையோ!


பெண்ணே ஆக நின்றிங்கு
        பேசிடும் சொல்லைக் கேளாயோ!
உண்ண உணவும் நீரும்நல்கி
        உயிர்க் காற்றுந் தருகிறேன்
கண்ணே போலக் காத்திடா
        காடுகள் யாவும் அழிக்கின்றார்
மண்ணே மானுடர் மதியிதுவோ
        மாட்சிமை பெறவும் வழியிலையோ! 
                                                                      - சிட்டு எழுதும் சீட்டு 119

Thursday, 23 June 2016

குறள் அமுது - (117)


குறள்:
உழந்துஉழந்து உள்நீர் அறுக விழைந்துஇழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண்                                     - 1177

பொருள்:
விரும்பி உள்ளம் நெகிழ்ந்து அவரைப் பார்த்த கண்ணே! துன்பத்தில் அழுந்தி உள்ள கண்ணீர் எல்லாம் அற்றுப்போ!

விளக்கம்:
இத்திருக்குறள் காமத்துப் பாலில் வருகிறது. அன்றைய உலகின் பார்வையில் ஒத்த அன்புடைய இரு உள்ளங்களின் ஈர்ப்பைக் காதல் என்றும் இரு உடல்களின் ஈர்ப்பைக் காமம் என்றும் கருதினர். அதனால் திருவள்ளுவர் காமத்துப்பாலில் எந்த ஓர் இடத்திலும் ஒருதலைக் காமத்தையோ, பொருந்தாக் காமத்தையோ சொல்லவில்லை. ஒத்த அன்புள்ள உண்மைக் காதலின் தேடலையே காமம் என்கிறார். இக்குறள் 'கண் விதுப்பு அழிதல்' என்னும் அதிகாரத்தில் உள்ளது. படிப்புக்காகவோ வேலைக்காகவோ பிரிந்து சென்ற கணவனைக் காண, கண் ஆசைப்படுவதால் ஏற்படும் மனத்துன்பத்தையே கண் விதுப்பு அழிதல் கூறுகிறது.

மனிதரின் ஆசைகளைத் தூண்டுவதில் ஐம்புலன்களுக்கும் பங்கு உண்டு. எனினும் அதிக ஆசைகளை உண்டாகுவது கண்ணே. பெண்ணின் கண்ணே காதலனை முதலில் அவளுக்குக் காட்டியது. அவனது அறிவு, ஆற்றல், அழகு, நடை, உடை யாவற்றையும் கண் காட்டக் காட்ட அவள் கண்டாள். இரசித்தாள். காதல் வசப்பட்டாள். கல்யாணமும் செய்து கொண்டாள். இப்போது  அவன் பிரிந்து சென்று விட்டான். அவன் மீண்டும் வருவான் என்பது அவளுக்குத் தெரியும். ஆதலால் அவள் அழவில்லையாம். அவளது கண்ணே அவனை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அழுகின்றதாம்.

உண்மைக் காதலில் ஏற்பட்ட பிரிவு அவளைத் தத்துவஞானி என்ற நிலைக்கு கொண்டுசென்றுவிட்டது. அதனால் அவள் தனது கண்ணுக்குச் சொல்கிறாள். ‘விழைந்து [விரும்பி], இழைந்து [உள்ளம் நெகிழ்ந்து] பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று அடம்பிடித்து அவரைப் பார்த்த கண்ணல்லவா! உன்னால் தானே நான் இப்போ பிரிவுத் துன்பத்தில் துயரம் அடைகிறேன். நீ காட்டவில்லை என்றால் நான் கண்டிருப்பேனா? எனக்கு இந்தத் துன்பம் வந்திருக்குமா? ஆனபடியால் துன்பத்தில் அழுந்தி அழுந்தி [உழந்துஉழந்து] அழுதழுது உள்ள கண்ணீர் எல்லாம் இல்லாது போ!’ என்கிறாள்.

‘ஆசை ஆசையாய் கணவரைப் பார்த்து மகிழ்ந்து அவரோடு இழைந்த கண்ணே! அழுதழுது துயரத்தில் மூழ்கி கண்ணீர் அற்றுப்போ’ எனக் கண்மேல் பழியைப் போட்டுத் தன் மனத்துயரை ஆற்றப்பார்க்கின்றாள்

Tuesday, 21 June 2016

அடிசில் 102

பால் இனிப்பு 
- நீரா -

தேவையான பொருட்கள்: 
பால் - 2 கப்
டின் பால் - 1
சீனி - 2 தேக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
ஏலப்பொடி - கொஞ்சம்
எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை: 
1.  ஒரு தட்டில் எண்ணெய் பூசி வைக்ம்.
2. வாயகன்ற பாதிரத்துள் பாலைவிட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சசவும்.
3. பால் கொதிக்கும் போது தயிரைச்சேர்க்க கெட்டியாக வரும்.
4. அந்தப் பாலினுள் சீனியை இட்டு, டின் பால் விட்டு பாத்திரத்தின் ஓரங்கத்தில் பிடிக்காதவரை தொடந்து கிளரவும்.
5. பாத்திர ஓரத்தில் ஒட்டிப்பிடிக்கும் போது ஏலப்பொடி சேர்த்துக் கலந்து, எண்ணெய் பூசிய தட்டில் ஊற்றி ஆறியதும் விரும்பிய வடிவத்தில் வெட்டவும்.

Wednesday, 15 June 2016

பெண்கல்வியும் கணித அறிவும்

Roman slave Market
சங்க இலக்கிய பாடல்கள் தோன்றிய காலத்தில் [கி மு 3ம் நூற்றாண்டளவில்] மேலைநாடுகளில் [Greek, Rome] பெண்கள் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். அதுவே அன்றைய மேற்கத்தைய நாட்டினர் பண்பாடாக இருந்தது. ஆனால் பண்டைத் தமிழகமும் தமிழர் பண்பாடும் அப்படி இருக்கவில்லை என்பதற்கு சங்க இலக்கியமே சாட்சி. மாதவியின் அரங்கேற்றத்தில் அவளது ஆடற்கலையைப் பாராட்டி வழங்கப்பட்ட மாலையை வாங்குவோருக்கு மாதவியைக் கொடுப்பதாகக் கூறவைத்தவள் மாதவியின் தாய் என்பதை சிலப்பதிகாரம் காட்டுகிறது. மாதவி அடிமையாய் விற்கப்படவில்லை. பெண்கள் அடிமைகளாய் விற்கப்பட்டதை சங்க இலக்கியம் பதிவுசெய்யவில்லை.

அதற்கு மாறாக பன்னெடுங்காலமாக பண்டைத்தமிழர் பெண்கல்வியைப் போற்றி வளர்த்து வந்தனர் என்பதை சங்ககால இலக்கிய நூல்கள் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றன. சங்ககால இலக்கிய பாடல்களை எழுதிய புலவர்களில் பெண்புலவர்களாக 38 பேரை உ வே சாமிநாதையர் குறிப்பிடுகிறார்.

சங்க இலக்கிய நூல்களை நாம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதிற்றுப்பத்து, பதினெண்கீழ்கணக்கு, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, களவழி நாற்பது, பழமொழி நானூறு என்று எண்களில் குறிப்பிடுகிறோம். அவை எவையும் கணக்குப் பார்ப்பது எப்படி என்பதைச் சொல்லவில்லை. அவற்றிலுள்ள பாடல்கள் சங்ககால மக்கள் தாவரங்கள், விலங்குகள், பயிர்ச்செய்கை, மருத்துவம், பொருளாதாரம், அரசியல், படைகள், கலைகள், காலங்கள், கோள்கள் யாவற்றையும் மிக விரிவாய் நுட்பமாய் அறிந்திருந்தனர் என்பதைக் காட்டுகின்றன. அவை ‘ஆம்பல்’ ‘குவளை’ ‘நெய்தல்’ எனப் பெயரிட்டு பேரெண்களை அழைத்ததைச் சொல்வதால் சங்கத் தமிழரின் கணித அறிவை நாம் உய்த்துணரலாம்.

புறநானூற்றில் கல்லாடனார் 
“துளிபதன் அறிந்து பொழிய
வேலி ஆயிரம் விளைக நின் வயலே”    
                                        - (புறம்: 391: 20 - 21) 
என அரசனை வாழ்த்தும் இடத்தில் “ உன் நாட்டு நிலத்தின் பதம் அறிந்து மழை[துளி] பொழியட்டும். ஒரு வேலி நிலத்துக்கு ஆயிரமாக உன் வயலில் நெல் விளைக!” என வாழ்த்தியுள்ளார். 

அதுமட்டுமல்ல சங்ககாலத் தமிழர் கணிதத்தைப் படித்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்ட திருவள்ளுவரின்
“எண்என்ப எனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு” 
எனும் இக்குறள் ஒன்றே போதும். எனினும் சங்ககால கணித நூல்கள் எதுவும் முழுமையாய் கிடைக்கவில்லை. எண் எழுத்து இரண்டையும் கண்ணாகப் போற்றிய நம் தமிழ் மூதாதையர் எழுதிய ஏரம்பம், சிறுகணக்கு போன்ற எத்தனையோ கணித நூல்கள் அழிந்து போயின.

சங்ககாலப் பெண்புலவர்களும் எண், எழுத்து இரண்டையும் மிகத் தெளிவாகவே கற்றிருந்தனர் என்பதை காக்கைபாடினியார் என்னும் சங்ககாலப் பெண்புலவரின் பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த காக்கைபாடினியார்[நச்செள்ளையார் அல்ல] குமரியாற்றை கடல் கொண்டபின் வாழ்ந்தவர் ஆவார். அதனை இவர்
“வடதிசை மருங்கில் வடுகு வரம்பாகத்
தென்திசை உள்ளிட்ட எஞ்சிய மூன்றும் கடல்” 
எனக் கடலை எல்லையாகக் கூறுவதால் அறியலாம். இந்தக் காக்கைபாடினியாரை சிறுகாக்கைபாடினியார் என்றும் அழைப்பர்.

இவர் எழுதிய ‘யாப்பிலக்கண நூல்’ பாடல்களும், ‘கணக்கு நூல்’  பாடல்களில் சிலவும் கிடைத்திருக்கின்றன. அவை அன்றைய தமிழ்ப் பெண்கள் தமிழையும் ஆடலையும் பாடலையும் மட்டும் கற்கவில்லை கணிதத்தை நன்கு கற்று கணித நூல்களை எழுதும் ஆற்றல் உள்ளவராய் விளங்கியதை எடுத்துக் காட்டுகிறது. மேலை நாடுகளில் பெண்கள் அடிமைகளாய் விற்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் கணிதத் தரவுகளை காக்கைபாடினியார் எழுதினார் என்றால் பண்டைத் தமிழ் இனத்தின் பெண்கல்வி எத்தகைய உன்னத நிலையில் இருந்திருக்க வேண்டும்! என்பதை நாம் நினைத்துப் பார்ப்பது நன்றாகும்.

வட்டத்தின் சுற்றளவு காண்பதற்கு
“விட்டமோர் ஏழு செய்து 
          திகைவர நான்கு சேர்த்து
சட்டெனெ இரட்டி செயின் 
          திகைப்பன சுற்றுத்தானே”                      
என ஒரு சூத்திரத்தைக் காக்கைபாடினியாரின் பாடல் கூறுகிறது. 

பண்டைய தமிழர்கள் ஒரு வட்டத்தின் விட்டத்தை விட அரைவட்டச் சுற்றளவு ஏழில் நான்கு பங்கு கூடுதலாக இருக்கும் என்பதை அறிந்திருந்தனர்.
விட்டம்  = வி
விட்டத்தை ஏழாகப் பிரித்து [விட்டமோர் ஏழு செய்து] = வி/7
திகைவர நான்கு சேர்த்து = 4வி + வி/7
சட்டென இரட்டி செயின் = 2(4வி + வி/7)
கிடைக்கும் சுற்றளவு    = 2 (11வி/7)
                                    = 22/7 x வி

வட்டத்தின் விட்டம் [diameter] = d
வட்டத்தின் சுற்றளவு      = 2 (4d + d/7)
                                      = 2(11d/7)
                                      = 22/7 x d
இன்று நாம் பயன்படுத்தும்π[22/7] எனும் காரணியையே காக்கைபாடினியாரும் கூறியுள்ளார். தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் “pi” [π], William Jones என்ற கணித ஆசிரியரால் 1706 ம் ஆண்டு முதல் முதன் பயன்படுத்தப்பட்டது என்பதே மேற்கத்தைய வரலாறாகும். William Jones பிறப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே காக்கைபாடினியார் 22/7 வருவதைப் பாடிவைத்திருக்கின்றார். ‘அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு’ என்பாரும் ‘அடுப்பங்கரையே உன் உலகமென்று முடங்கிக் கிடந்தது போதும்’ என்பாரும் இதனை அறிந்து வைத்திருத்தல் நல்லது. 

இதுமட்டுமல்லாமல் கணக்கைப் பெண்களுக்கே கற்பித்ததை காரிநாயனார் எழுதிய 'கணக்கதிகாரம்' என்னும் நூல் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது. அவர் முதலாவது வெண்பாவிலேயே “நேரிழையாய்!” எனத்தொடங்கி 
பொற்பூந்தளிரின் நிறமொன்று மாதே!
முகிழ்நகையாய்!
ஒண்ணுதலாய்!
பூங்கொடி நீ சொல்!
என்றெல்லாம் அழைத்து கணிதபாடத்தைச் சொல்வதிலிருந்து பெண்களுக்கு கணிதம் கற்பிக்கவே அவர் கணக்கதிகாரத்தை எழுதினார் என்பதை நாம் அறியலாம். எவராவது மாதே! முகிழ்நகையாய்! பூங்கொடி! என்று ஆண்களை அழைப்பதைக் கேட்டிருக்கின்றீர்களா? காரிநாயனார் வட்டத்தின் சுற்றளவை எப்படிக்காணலாம் எனும் சூத்திரத்தை
“விட்ட மதனை விரைவாய் இரட்டித்து
மட்டு நான்மா வதினில் மாறியே - எட்டதினில்
ஏற்றியே செப்பிடில் ஏறும் வட்டத்தளவும்
தோற்றுமெனப் பூங்கொடிநீ சொல்”                             
                                      - (கணக்கதிகாரம்: 50)
என பெண்ணுக்குச் சொல்லிக் கொடுக்கின்றார். 
வட்டத்தின் விட்டம் [diameter] = d
விட்டமதனை விரைவாய் இரட்டித்து = d x 2
தமிழ்க்கணக்கில் மா = 1/20
நான்மா = 4/20 = 1/5
நான்மா அதனில் மாறியே = 2d x 1/5
எட்டு அதனில் ஏற்றி = 2d x 1/5 x 8
வட்டச் சுற்றளவு [வட்டத்தளவு] = 16/5 d 
காரிநாயனாரின் கணிப்பைவிட, காக்கைபாடினியாரின் கணிப்பே இன்றைய π யின் காரணியை அப்படியே தருகிறது.

காரிநாயனார் முதலில் ஒன்றின் பின்னங்களை பெண்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார். அந்தப் பாடலைப் பாருங்கள்.
“முந்திரிய ரைக்காணி முன்னிரண்டு பின்னிரண்டாய்
வந்ததோர் காணிநான் மாவாக்கி - ஒன்றோடு
நாலாக்கிக் காலாக்கி நன்னுதலாய் காலதனை
நாலாக்கி ஒன்றாக நாட்டு”                                     
                                              - (கணக்கதிகாரம்: 3)

நல்ல நெற்றியை உடையவளே! இரண்டு முந்திரி அரைக்காணியாகும். இரண்டு அரைக்காணி காணியாகும். நான்கு காணி ஒரு மா ஆகும்.  ஐந்து மா ஒரு கால் ஆகும். நான்கு கால் ஒன்றாகும்.
1 முந்திரி = 1/320
இரண்டு முந்திரி ஒரு அரைக்காணி [1/320 + 1/320 = 2/320 = 1/160]
1 அரைக்காணி = 1/160
இரண்டு அரைக்காணி ஒரு காணி [1/160 + 1/160 += 2/160 = 1/80] 
1 காணி = 1/80
நான்கு காணி ஒரு மா [1/80 + 1/80 + 1/80 + 1/80  = 4/80 = 1/20]
1 மா = 1/20
ஐந்து மா ஒரு கால் [1/20 + 1/20 + 1/20 + 1/20 + 1/20 = 5/20 = 1/4]
1 கால் = 1/4
நான்கு கால் ஒன்று.

இப்படியான பின்னக்கணக்கை நன்னுதலாய்! என விழித்துச் சொல்வதுடன் பின்னத்தை முழு எண்ணால் பெருக்குதல், நெற்கணக்கு, கால அளவை, நிறுத்தல் அளவை, நீட்டல் அளவை, நில அளவை, வட்டத்தின் சுற்றளவு, பரப்பளவு, எந்தெந்த உலோகங்களை என்னென்ன விகிதத்தில் சேர்த்தால் என்ன என்ன உலோகங்கள் கிடைக்கும், மணிகள், தானியங்கள், படைகளின் அளவு, புதிர்க் கணக்குகள் என நிறையவே கணக்கதிகாரம் கற்றுக் கொடுக்கிறது. அத்துடன் இன்றைய கணித அறிவால் அளந்தறிய முடியாத சில கணக்குகளையும் அன்றைய பெண்களுக்கு காரிநாயனார் சொல்லிக் கொடுத்துள்ளார்.

இப்போ பலாப்பழக் காலமல்லவா. நிறையவே கடைகளில் நல்ல பலாப்பழம் வாங்கலாம். இன்றைய தமிழ்ப் பெண்களாகிய நாம் முக்கனிகளில் வாழைப் பழத்தையும் மாம்பழத்தையும் எண்ணி வாங்குவோம். பலாப்பழத்தை வாங்கும் போது அதற்குள் இருக்கும் சுளையை எண்ணி வாங்க முடியுமா? இப்போது நாம் கற்றிருக்கும் கணிதம் ஏதாவது அதற்கு உதவுமா? ஆனால் அந்நாளைய பெண்கள் பலாப்பழம் வாங்கும் போது அதற்குள் எத்தனை சுளைகள் இருக்கும் என்பதை அறிந்து வாங்கினர்.
“பலவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பரு கெண்ணி - வருமதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை”                           
                                             - (கணக்கதிகாரம்: 72)

பலாப்பழத்தைப் பிடித்துத் தூக்கும் பலாப்பழக் காம்பின் அருகே சுற்றியிருக்கும் சிறு முள்ளுகளை எண்ணி அதை ஆறால் பெருக்கி ஐந்தால் பிரிக்க வருவது சுளைகளின் எண்ணிக்கையாகும். 
சிறு முள்ளுகளின் எண்ணிக்கை y என்றால்
பலாப்பழச்சுளைகளின் எண்ணிக்கை = 6y/5

‘ஏட்டையும் பெண்கள் தொடுவதில்லை’ என்ற நிலையில் பண்டைய பெண்கள் இருக்கவில்லை என்பதை இவை காட்டுகின்றன. முஸ்லீம் படையெடுப்பின் பின்னர் அன்னியர் ஆட்சியில் அந்நிலை தமிழ்நாட்டில் உருவான பொழுதும் ஈழத்துப் பெண்கள் கல்வி கற்றதைக் காண முடிகிறது. 

மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மகள் வீரமாதேவி கி பி 1311ம் ஆண்டு இலங்கை வந்த போது யாழ்ப்பாணத்தில் இருந்த சரஸ்வதி மகாலயத்தில் ‘திருவி’ என்பவள் வைத்திய சாஸ்திரத்தை கற்பித்ததாக அவளது நாட்குறிப்பில் எழுதியுள்ளாள். அதுமட்டும் அல்லாமல் தமிழ்நாட்டுப் பெண்களின் கல்விக்காக - விடுதலைக்காக முழங்கிய பாரதியார் பிறக்க முன்பே, 1824ம் ஆண்டு உடுவில் மகளிர் கல்லூரி யாழ்ப்பாணத்தில் தோன்றிவிட்டது. தெற்காசியாவில் பெண்கள் தங்கிப் படிக்கும் வசதியுடன் கட்டப்பட்ட முதல் பாடசாலையும் அதுவேயாகும்.  இராமநாதன் கல்லூரியும் பெண்களின் கல்விக்காக 1913ம் ஆண்டு உருவாகிவிட்டது. 
திருமதி தம்பிராசா
பாரதியார் பாடியது போல அந்தக் காலகட்டத்தில் புங்குடுதீவுப் பெண்களைக் கூட வீட்டிற்குள் யாரும் பூட்டிவைக்கவில்லை. புங்குடுதீவுக் கிழக்கூரில் இருந்து மடத்துவெளிக்கு மாட்டு வண்டிலில் வந்து, வள்ளத்தில் யாழ்ப்பாணம் போய் அங்கிருந்து மாட்டு வண்டியில் இராமநாதன் கல்லூரிக்குச் சென்று படித்து சித்திஎய்தி, பின்னர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்று படித்து 1st classல் சித்திடைந்த பெருமைக்குரியவர் திருமதி தம்பிராசா [ஐஸ்வரி teacher]. உண்மையைச் சொல்வதானால் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த புங்குடுதீவுப் பெண்களில் யாழ்ப்பாணம் சென்று படித்த முதற் பெண்ணும் முதல் ஆசிரியையும் இவரே. 1920களின் கடைசியில் புங்குடுதீவு ஶ்ரீ கணேசவித்தியாசாலையில் ஆசிரியையாகப் பணியாற்றாத் தொடங்கிவிட்டார். அதனால் புங்குடுதீவுப் பெண்கல்வியின் முன்னோடி என்றே இவரை அழைக்க வேண்டும். திருமதி தம்பிராசா அவர்கள் புங்குடுதீவில் மட்டுமல்ல யாழ்.செங்குந்தா இந்துக் கல்லூரியில் முப்பத்தைந்து ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்து பல அறிஞர்களை உருவாக்கிய புகழுக்கு உரியவரும் ஆவார். 

இப்படி எல்லாம் பெண்கள் எண்ணையும் எழுத்தையும் தம் கண்ணே போல் போற்றி கல்வி கற்று வாழ்ந்த படியாலே வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் வையமதில் வான்புகழ் கொண்ட மைந்தரை பெற்றெடுக்க முடிந்தது.
இனிதே,
தமிழரசி.

Sunday, 12 June 2016

தாள் பணிந்துய்யவே!


நாக ராஜ நாயகி
        நயினை மேவு பூரணி
பாக மேவு பரமனு
        பயிலு நாம பாரணி
ஆக மங்கள் யாவும்
        ஆகி நின்ற ஆரணி
மேக லைய தெய்வமு
        முருகி வேண்டு தாரணி
போக போக்கிய நாடு
        பக்தர் தேடு நாரணி
மோக ராக பாடலை
        மகிழக் கேட்குங் காரணி
சோக தேக நோயினை
        தீர்க்கு நல் சீரணி
தாக நீக்கு தையலே
        தாள் பணிந் துய்யவே!

Thursday, 9 June 2016

மரமிளை எலாம் காணவில்லை

தழை ஆடை

உழை ஆடை கட்டி உலகத்தில் உழன்றோரும்
உழை எலாம் கொன்றதில்லை
கழை ஆடை கட்டி காட்டிடை அலைந்தோரும்
கழை எலாம் தறித்ததில்லை
தழை ஆடை கட்டித் தாரணியிற் திரிந்தோரும்
தழை எலாம் களைந்ததில்லை
இழை ஆடை கட்டி இருநிலத்தே வாழ்ந்தோரும்
இழை எலாம் எரித்ததில்லை
விழை ஆடை கட்டி விண்ணில்  பறப்போரின்
விழை எலாம் நிறையவில்லை
மழை ஆடை கட்ட மானிலம் எங்கனும்மர
மிளை எலாம் காணவில்லை
                                                                    - சிட்டு எழுதும் சீட்டு 118

சொல்விளக்கம்:
உழை - மான்
உழை ஆடை - மான் தோல் ஆடை
கழை - மூங்கில்
தழை - தளிர் இலை
இழை - நூல்
விழை - விருப்பம்
மழை ஆடை கட்ட - மழை மேகம் உண்டாக
மிளை - குறுங்காடு/சிறுகாடு 

Monday, 6 June 2016

குறள் அமுது - (116)

குறள்:
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதியாகி விடும்                             - (குறள்: 476)

பொருள்:
ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறி நிற்பவர் அதற்கு மேலும் கடந்து சென்றால் அதுவே அவருடைய உயிர்க்கு முடிவை உண்டாக்கும்.

விளக்கம்:
இத்திருக்குறள் ‘வலி அறிதல்’ என்னும் அதிகாரத்தில் உள்ளது. இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் ஒருவன் தன்னுடைய வலிமையை எப்படி தானே அறிந்து கொள்ளலாம் என்பதை விளக்கிக் கூறுகிறார்.

மரத்தின் உச்சியில் மென்மையான இளம் தழைகளையுடைய கொப்புகள் [கொம்பர்கள்] இருக்கும். மரஉச்சியில் மட்டுமல்ல ஒவ்வொரு கொப்புகளின் நுனியிலும் இருப்பதே நுனிக்கொம்பர்.  அக்கொம்பர்களில் சில எமது பாரத்தை தாங்க முடியாதவையாக இருப்பது இயல்பு. அதாவது ஒருமரத்தின் மேல் கிளைகளைவிட [கொம்பர்களைவிட] கீழ்க்கிளைகள் முற்றி வைரமாகா இருக்கும். மரத்தின் ஓரளவு முற்றிய கீழ்க்கிளையின் நுனிக்கொம்பர் வரை சென்று, அதற்கு மேலேயுள்ள மரக்கிளையைப் பிடிக்கவோ அல்லது பழத்தைப் பறிக்கவோ முற்படும் போது அக்கிளையை உந்துவோம். அப்படி உந்துவதையே வள்ளுவர் ‘ஊக்கின்’ என்கிறார்.

சிறுவயதில் என்னைப் போல் மாமரக்கிளைகளில் ஏறி நின்று உந்தி மாங்காய் பறித்தவர்களுக்கு இது புரியும். அப்படி உந்தும்[ஊக்கி] போது மரக்கிளை மேலும் மீழும் ஆடும். மரக்கிளை மேலே போகும் பொழுது மேல் கிளையில் உள்ள மாங்காயைப் பறித்துக் கொள்ளலாம். மரக்கிளையின் தன்மை மட்டும் அல்ல உந்தும் வலிமையையும் எமது பாரத்தையும் பொறுத்து கிளை முறிந்து நாம் கீழே விழுவோம். அதனால் உயிரை இழக்க நேரிடும். 

ஊஞ்சலில் இருந்து ஆடும் போது எம்மை ஊஞ்சலில் வைத்து ஆட்டுபவரைப் பார்த்து என்னை ‘ஊக்கு’ என்று தானே இன்றும் கூறுகிறோம். எனவே உந்தித் தள்ளு என்பதையே ஊக்கு என்னும் சொல் குறிக்கிறது. திருவள்ளுவர் இத்திருக்குறளில் ஒன்றைச் செய்து அதன் நுனிவரை சென்றவர், அதற்கு மேலும் கடந்து செல்லக் கருதினால் என்ன நடக்கும் என்பதை மரத்தை உதாரணம் காட்டி விளக்குகிறார். சில உரையாசிரியர்கள் சொல்வது போல ஊக்கின் என்பதை ஊக்கம் என்று வள்ளுவர் சொல்லவில்லை. ஊக்கின் என்பதை உந்தினால் என்றே பொருள் கொள்ள வேண்டும். 

ஒருவரின் வலிமைக்கு, ஆற்றலுக்கு, செய்யும் செயல் யாவுக்குமே ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடந்து செயற்பட முற்பட்டால் உயிர்போகும் நிலை வரும்.

Sunday, 5 June 2016

அடிசில் 101

புளிக்கஞ்சி
- நீரா -
  

தேவையான பொருட்கள்: 
அரிசி  - ½ கப்
முள் நீக்கிய மீன் துண்டு -  5
வெட்டிய கத்தரிக்காய்  -  ½ கப்
வெட்டிய வாழைக்காய்  -  ½ கப்
வெட்டிய பயற்றங்காய்/ பீன்ஸ்  -  ½ கப்
கீரை  -  1  கைப்பிடி
வெட்டிய வெங்காயம்  - 1 மேசைக்கரண்டி
வெட்டிய உள்ளிப்பூடு  -  1 மேசைக்கரண்டி
வெட்டிய இஞ்சி  -  1 தேக்கரண்டி
வெட்டிய பச்சைமிளகாய்  -  1 தேக்கரண்டி
தேங்காய்ப்பால்  - ½  கப் 
மஞ்சள் தூள்  -  ¼  தேக்கரண்டி
மிளகாய்த் தூள்  -  ¾ தேக்கரண்டி
சீரகம்  -  ½  தேக்கரண்டி
மிளகு  -  ½  தேக்கரண்டி
மல்லி  -  1 தேக்கரண்டி
பழப்புளி  -  தேவையான அளவு 
உப்பு  -  தேவையான அளவு

செய்முறை:
1. அரிசியைக் கழுவி ஒரு பெரிய பாத்திரத்தில் இட்டு மூன்று கப் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
2. பழப்புளியை தண்ணீர்விட்டு கரைத்து வைக்கவும்.
3. உள்ளிப்பூடு, இஞ்சி, மிளகு, சீரகம், மல்லி யாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து வைக்கவும்.
4. அரிசி முக்கால் பதமாக வெந்ததும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மீன், மரக்கறிகள், வெங்காயம், பச்சைமிளகாய்  என்பவற்றோடு இரண்டு கப் தண்ணீரும் விட்டு துழாவி அவியவைக்கவும்.
5. யாவும் அவிந்ததும் அரைத்த கூடு, கீரை, தேங்காய்ப்பால், உப்பு, கரைத்துவைத்துள்ள புளியையும் சேர்த்து மீண்டும் தூழாவி தேவையானால் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துத் துழாவிக் காச்சவும்.
6. கஞ்சி கொதித்ததும் இறக்கவும்.

Friday, 3 June 2016

புங்குடுதீவு வாணர் தாம்போதியும் அம்பலவாணர் அரங்கும்

புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கம்

இயற்கை என்னும் கடலலை ஓயாது இசைபாடும் புகழ்மிக்க அரங்கே எங்கள் புங்குடுதீவு. அந்த அரங்கு ஆடல் அரங்கனாம் அம்பலவாணனின் கலைகளுக்கு ஓர் அரங்கை அம்பலவாணர் சகோதரர்களின் பெயரில் 1977ல் கட்டி மகிழ்ந்தது. அவ்வரங்கு நம் நாட்டின் சூழ்நிலைக்காரணியால் செயல் இழந்து கிடக்கிறது. அதனை மீளக்கட்டி எழுப்புதற்காக உலகநாடுகளில் உள்ள புங்குடுதீவு மக்களை ஒருங்கிணைக்க ஒன்றுகூடல்கள் நடைபெற இருப்பதை முன்னரே அறிந்திருந்தேன். இன்று[03/06/2016] எனது facebook  timeline உள்ளே சுவிஸ் - புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய வலைத்தளத்தைப் பகிர்ந்து கொண்டதால் இதனை எழுதுகிறேன். இல்லையேல் புங்குடுதீவு வாணர் தாம்போதியும் அம்பலவாணர் அரங்கும் பற்றிய தரவுகளை - எமது முன்னோர் பற்றிய தரவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை எனக்கு வந்திருக்காது. அதற்காக எனது வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது புங்குடுதீவு இராமாயணம், கந்தபுராணம் போன்ற நூல்களில் கிரௌஞ்சத்தீவு என்றே அழைக்கப்படுகிறது. திருப்பாற்கடல் கடைந்த மேருமலையையே பாற்கடலினுள் போட்ட பெரும் வீரர்களாக கிரௌஞ்சத்தீவில் வாழ்ந்தோரை இராமாயணம் கூறுகிறது. அத்தகைய வீரர்களை ஒல்லாந்த, ஆங்கிலேயப் படைகளுக்கும் புங்குடுதீவு கொடுத்திருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் ‘துப்பாக்கியர்’ என்பவர் தரைப்படைத் தளபதியாக இருந்திருக்கிறார். துப்பாக்கியர் நயினாதீவில் திருமணம் செய்தவர். அவரின் இயற்பெயர் என்னதென்று தெரியவில்லை. அவரின் உறவுவழி வந்த ‘முத்தையா’ என்பவர் ஆங்கிலேயர் காலத்தில் கடற்படை Captain ஆக இருந்திருக்கிறார். ஆங்கிலேயர் அவருக்கு அளித்த மதிப்பை பறைசாற்றிக் கொண்டு ‘முத்தையா ரோட்’ கொழும்பு - 7ல் அவரது பெயரோடு இன்றும் இருக்கிறது. அவரது பெற்றோர் புங்குடுதீவையும் மானிப்பாயையும் பிறப்பிடமாகாக் கொண்டோரே.

Captain முத்தையா அவர்களின் சகோதரி தெய்வானைப்பிள்ளையை Dr கனகசபை என்பவர் திருமணம் செய்தார். இவரது தந்தையார் மானிப்பாயைச் சேர்ந்த உலகநாதர் மாதர் பரம்பரையைச் சேர்ந்தவர். தாய் ஆரியா புங்குடுதீவு வீராமலையைச் சேர்ந்தவர்.  Dr கனகசபை ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் இருந்த புகழ் பெற்ற ஐந்து டாக்டர்களில் ஒருவராக இருந்த பெருமைக்குரியவர். 1939ல் கூட கொழும்பு Sulaiman’s Hospitalல் Surgeon ஆக இருந்தவர். மிகப்பெரிய கொடையாளியும் ஆன்மீகவாதியும் முருகபக்தனும் ஆவார். தானே பூசை செய்து கும்பிடுவதற்காக நெலுந்தெனியவில் மலையைக் குடைந்து வேல் பதித்த ஒரு முருகன் கோயிலைக் கட்டியிருந்தார். 

மானிப்பாய் பிள்ளையார் கோயில், நல்லூர் கந்தசுவாமி கோயில், அநுராதபுரம் கதிரேசன் கோயில், முனீஸ்வரம் சிவன் கோயில், கொழும்பு ஜிந்திப்பிட்டி சிவன் கோவில், கதிர்காமம் போன்ற பல கோயில்களுக்கு நன்கொடை வழங்கியவர். கதிர்காமத்தில் 'Dr கனகசபை' மடம் என ஒரு மடத்தை தனது ஏழு பிள்ளைகளும் தங்கிச்செல்வதற்காக ஏழு அறைகளுடன் தனித்தனியே சமையலறை, குளியலறை வசதிகளுடன் கட்டியிருந்தார். அதன் பின்னரே செல்லப்பாசுவாமி மடம் அங்கு கட்டப்பட்டது. இலங்கை குடியரசாக மாறிய பின்னர் அங்கே தமிழர் கட்டியிருந்த மடங்கள் யாவும் அழித்து ஒழிக்கப்பட்டு புனிதநகராய் கதிர்காமம் விளங்குகிறது.

Dr கனகசபையே முதன்முதலில் கேகாலையில் ‘இரப்பர் மரங்களை’ அறிமுகப்படுத்தியவர். இன்று நெலுந்தனிய எனக்கூறப்படும் இடம் அவரது Rabber Estate ஆக இருந்தது. அதில் அவர் கட்டியிருந்த மருத்துவமனை [கண்ணாடி மாளிகை - கண்ணாடி மாளிகாவ] மகிந்தவின் ஆட்சியில் வீதியை அகலமாக்குவதற்காக இடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு தனது பிள்ளைகள் ஏழு பேருக்கும்  வீடுகளைக் கட்டிக் கொடுத்தார். அவற்றில் ஒரு சில வீடுகள் இன்றும் இக்கின்றன. அந்த வீடுகளில் ஒன்றில் வாழும் விஜயசுபசிங்க என்பவர் தானிருக்கும் வீட்டை Dr கனகசபை 1891ல் கட்டியிருக்கிறார் என்று கடந்த வருடம் நான் அங்கு சென்றபோது சொன்னார். 
புங்குடுதீவின் முதுபெரும் தாயார்
படம் - தினக்குரல்

Dr கனகசபை தனது கடைசி மகள் இராசமணி அம்மாளுக்கு அந்தவீட்டை சீர்தனமாய்க் கொடுத்திருந்தார். போனவருடம் August 17ல் தனது நூற்றி ஐந்து வயதைக் [105] கொண்டாடிய இராசமணியம்மாள் அவர்கள் பம்பலப்பிட்டியில் வாழ்ந்து வருகிறார். 'புங்குடுதீவின் முதுபெரும் தாயார் என  இவரைச் சொல்லலாம்'.  வேலணைக்கும் புங்குடுதீவுக்கும் இடையே படுகைப்பாலம் போடுவதற்கு Dr கனகசபை அவர்கள் வழங்கிய கொடை பற்றிய விபரத்தை புங்குடுதீவு நலன்புரிச்சங்கம் - பிரித்தானியா கிளை முதன்முதல் இலண்டனில் தொடங்கிய போதே எழுதியிருந்தேன்.
‘ஒசரிய’ [osaria]
Dr கனகசபையின் தம்பி நமசிவாயமுதலியார் கண்டி, களுத்துறை நீதிமன்றங்களில் முதலியாராக இருந்தவர். அவர் தமிழ், சிங்கள, சமஸ்கிருத பண்டிதர் ஆவார். அதனால் பஞ்சதந்திரக் கதைகள் போன்ற தமிழ், சமஸ்கிருத நூல்களை சிங்களத்தில் மொழிபெயர்த்தார். அந்நாளைய [19ம் நூற்றாண்டின் இறுதியில்] கண்டிப் பெண்கள் சட்டையும் இடையில் துண்டும் [யட்ட கத்த] அணிவதைக் கண்டு, சட்டைக்கு மேல் இன்னொரு துண்டை வலதுபக்கத் தோளால் தாவணியாகப் போட்டு சுற்றிக்கட்டும் - ‘ஒசரிய’ [osaria] கட்டும் வழக்கத்தை ஏற்படுத்தியவர். அவரால் வடிவமைக்கப்பட்ட ‘ஒசரிய’ இன்று கண்டியன் சாறியாக வளர்ச்சியடைந்துள்ளது. 

அவர் கண்டிச் சிங்களவரின் வழிகாட்டியாக விளங்கியதால் கண்டிப்பெரஹராவின் போது அவரின் படத்தை யானையின் உப்பரியில் வைத்து எடுத்துச் சென்றனர். 1960களில் நான் அதனைப் பார்த்திருக்கிறேன். அவரைப்பற்றி பேசியும் இருக்கிறேன். அவர் மானிப்பாயில் திருமணம் செய்தவர். அவரது மகன்மாரில் ஒருவர் மாமனெல்லையில் வழக்கறிஞராக இருந்தார். எனது தாயின் தந்தையார் 1973ல் இறந்த போது மரணவீட்டிற்கு வந்திருந்த தியாகராஜாவை கதிரவேல் அப்பாவே [புரொக்டர் கதிரவேல்] எனக்கு முதலில் அறிமுகம் செய்து வைத்தார். மேலே நான் குறிப்பிட்டவர்கள் கதிரவேல் அப்பாவுக்கும் உறவினர்களே.

வாணர் தாம்போதி

Captain முத்தையாவின் முன்னோர்களில் ஒருவர் 1870ம் ஆண்டளவில் புங்குடுதீவில் இருந்து வேலைக்காக பர்மாவுக்கு [இன்றைய மியான்மார்] சென்றார். அங்கே ரங்கூனில் திருமணம் செய்துகொண்டார். எனினும் தனது மகளை புங்குடுத்திவில் வாழ்ந்த தன் உறவினர்க்கே திருமணம் செய்து கொடுத்தார். அவர்களுக்கு ஒரு மகளிருந்தாள். அவள் பெயர் பெரியநாயகி. 1920ம் ஆண்டளவில் அக்குடும்பத்தார் வள்ளத்தில் யாழ்ப்பாணம் சென்றபோது வள்ளம் கவிழ்ந்து பெரியநாயகியின் தந்தை இறந்து போனார். தாய், பெரிய நாயகியுடன் நீந்திக் கரையேறினார். 

உயிர் தப்பிய பெரியநாயகியின் தாய் [ரங்கூன்காரியின் மகள்] புங்குடுதீவுக்கு கடல்வழிப்பாதை இருந்தால் அந்த விபத்து நடந்திருக்காது என்பதை Dr கனகசபைக்குக் கூறினார். பாதை போடுவதற்கான  ஏற்பாடுகளைச் செய்யுமாறும் தான் அதற்கு உதவுவதாகவும் சொல்லி பெரியநாயகியுடன் ரங்கூன் சென்றார். [அந்தக் குடும்பம் பின்னாளில் பெரியநாயகி குடும்பம் என அழைக்கப்பட்டது]. அவரது விருப்பத்தை நிறைவேற்ற Captain முத்தையா, Dr கனகசபை, நமசிவாயமுதலியார் மூவரும் பதுகைப்பாலம் அமைக்க பெருந்தொகைப் பணத்தை முதலிட்டனர் என்பதை நான் அறிவேன். பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே இலங்கையில் புகழ்மிக்கவர்களாக இருந்த இந்த மூவரின் தாய்மாரும் புங்குடுதீவாக இருந்தும் அவர்களை நாம் மறந்தது வியப்பைத் தரவில்லையா!!!
பெரியவாணர்

அப்போது யாழ்ப்பாணத்தின் அரசாங்க அதிபராக[GA] இருந்த Constantine உடன் பேசிய, Dr கனகசபையும் Captain முத்தையாவும் ‘கடல்வழிப்பாதை இன்றி தீவுப்பகுதி மக்கள் இறப்பதை எடுத்துக்காட்டி, புங்குடுதீவு மக்களே பாதையைப் போட்டுக் கொள்வதாகக் கூறி பாதை போடுவதற்கான அனுமதியைப் பெற்றனர். அப்பேச்சு வார்த்தையின் போது பெரியவாணர் இருந்தாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இந்தியா, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து பேன்ற இடங்களிலும் இலங்கையிலும் வாழ்ந்த புங்குடுதீவு செல்வந்தர்களிடம் இருந்து பாதை அமைக்க தேவையான பணத்தைப் பெறும் பொறுப்பை பெரியவாணர் மேற்கொண்டார். பெரியவாணர் என் தாயின் தகப்பனுக்கு மைத்துனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரும் பொழுதும், போகும் பொழுதும் எங்களது அநுராதபுர வீட்டில் தங்கிச் செல்வார்களாம். பெரியவாணரின் மகளே புங்குடுதீவுப் பெண்களில் முதல்முதல் கார் ஓட்டியவர் என்று எனது அம்மா தமது மச்சாளைப்பற்றிக் கூறுவார்.  

எனது அம்மம்மாவைப் பார்த்து ‘உங்க அப்பனும் [Dr கனகசபை], மாமனும் [Captain முத்தையா] ஊருக்குப் பாலம் கட்ட Constantineஐ கையெழுத்துப் போடவைத்து நாட்டைவிட்டே சொல்லாமல் ஓடவைத்தார்களே என்று கூறி அம்மாவின் தகப்பன் கேலி செய்வார். அப்படி அவர் கேலி செய்தபோது நான் கேட்டதற்கே பெரியநாயகியின் குடும்பக்கதையை எனக்குக் கூறினார். யாழ்ப்பாண GA ஆக இருந்த Constantine எப்போது நாட்டைவிட்டு சொல்லாமல் சென்றார் என்பதை அறிந்தால் எந்த வருடத்தில் நம்மூருக்கு பாலம் போடத்தொடங்கினர் என்பதை அறியமுடியும்.

நான் சிறுவயதில் புங்குடுதீவுக்கு காரில் சென்ற பொழுது கார் சென்ற பாதைக்கு இணையாக [parallel] ஒரு பாதை சில இடங்களில் கடலினுள் மூழ்கியும் சில இடங்களில் கடல் மட்டத்திற்கு மேலேயும் தெரிந்தது. மேலே தெரிந்த பாதையின் கீழே தென்னை மட்டைகளும் தெரிந்தன. என்னைப்போல் உங்களில் பலரும் அப்பாதையைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ‘தென்னை மட்டைபோட்டு பாதை போடலாமா?’ என்று என் தந்தையைக் கேட்டேன். உன் அம்மாவின் சொந்தங்களே அந்தப்பாதையைப் போட்டவர்கள். அம்மாவின் தகப்பனைக் கேள் என்றார். அம்மாவின் தகப்பன் வேலையில் ஓய்வு பெற்றிருந்ததால் அவருக்கும் வேலை இருக்கவில்லை. எனக்கும் வேலை இருக்கவில்லை. அவர் கதை சொல்ல நான் கேட்பேன். சின்னவாணரும் தனது சித்தப்பாவும் [பாய்க்கடை இளையதம்பியும்] அப்பாதையைப் போட்ட கதையைச் சொன்னார். 
படுகைப்பாதை

Constantine அனுமதி அளித்த படுகைப்பாதையைப் [தாம்போதி - நீரால் பிரிக்கப்பட்ட இரண்டு நிலங்களை இணைக்கும் கற்பாதை] போடும் ஒப்பந்ததார்களாக [Contractors] சின்னவாணரும் அவரது மாமன் முறையான பாய்க்கடை இளையதம்பியும் இருந்தனர். இவர்கள் கடலுக்குள் கல்லையும் மண்ணையும் இட்டு அதற்குமேல் தென்னைமட்டை, தென்னை ஓலை போட்டு அதற்குமேல் கல்லும் மண்ணும் என மாறிமாறிப் போட்டு பாதையைப் போட்டனர். இப்படியான பாதையை முழுவதும் போட்டனரா இல்லையா என்பது தெரியவில்லை. தென்னை ஓலை, தென்னைமட்டை என்பன கடல் நீரின் உப்பால் உக்கிக் கரைந்து போகப் போக பாதை கடலில் மூழ்கியது. ஊராரிடம் சென்று மீண்டும் பணம் பெறமுடியாததலால் அரசாங்கத்தைக் கேட்க வேண்டிய பொறுப்பு, பாதையைப் போட முனைந்தோருக்கு ஏற்பட்டது.

‘ஊரார் போட்ட பாதை கடல் பெருக்கால் அழிந்துவிட்டது’ எனக்கூறியதால் புங்குடுதீவிற்குப் பாலமமைக்க முன்னுரிமை வழங்கப்பட்டது. இருக்கும் பாதையைத் திருத்தும் நோக்கில் அந்த முன்னுரிமை வழங்கப்பட்டது. முதலில் பாதையைப் போட்ட சின்னவாணருக்கும் பாய்க்கடை இளையதம்பியருக்கும் கடலினுள் பாதை போட்ட அநுபவம் இருந்ததால் அவர்களுக்கே அந்த ஒப்பந்தம் மீண்டும் கிடைத்தது. அவர்களும் தாம்விட்ட பிழையை உணர்ந்து படுகைப்பாதையை [தாம்போதியை] உறுதியானதாகாக் கட்டினர். 

உண்மையில் புங்குடுதீவுக்கும் வேலணைக்கும் இடையே படுகைப்பாதையை [தாம்போதியை] போடச்சொல்லி அதற்காக முதலில் பணத்தைக் கொடுத்தவர் பெரியநாயகியின் தாயான ரங்கூன்காரியின் மகளே. அவருக்கே அந்தப் பெருமை சேரவேண்டியது. அவரின் பெயர் என்ன என்று தெரியாமலே நாம் இன்று வாழ்கிறோம். அப்படி கைமாறு கருதாது எத்தனையோ நல்லவிடையங்களை செய்தோரை காலஓட்டத்தில் கரைய விடுவதே மனித வாழ்வின் வேடிக்கையாகும். அதனாலேயே உண்மையான வரலாறுகள் சிதைக்கப்படுகின்றன.

அம்பலவாணர் அரங்கு

நான் இராமநாதன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம். ஒரு நாள் வித்துவான் மாமா [வித்துவான் சி ஆறுமுகம்] எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். புங்குடுதீவு விடயம் என்றாலும், எங்கள் குடும்ப[நீலயனார்] விடயம் என்றாலும் வித்துவான் மாமாவிடம் இருந்து என் தந்தைக்கு கடிதம் வரும் அல்லது மாமா வருவார். அன்றும் வழமைபோல வந்திருந்தார். எனது தந்தையும் மாமாவும் நானும் மேசையில் சாப்பிட்டபடி கதைத்தோம். “சின்னவாணருக்கு வயதாகிவிட்டது, அவரை நாங்கள் கௌரவிக்க வேண்டும்” என்று மாமா தன் மனக்கிடைக்கையைச் சொன்னார். “என்ன செய்ய வேண்டும்?” என்று என் தந்தை கேட்டார். அரங்கு கட்ட வேண்டும். அதற்கு காசு சேர்க்க வேண்டும் என்றார். நீங்கள் போனால் பெரும் தொகையைப் பிரட்டமுடியும் என்றார். பொன் சுந்தரலிங்க அண்ணனும் மு இராமலிங்கம் அவர்களும் வருவார்கள் என்றார். ‘அவர்கள் இருவரும் போனால் கொடுக்கமாட்டார்களா?’ என்று கேட்டேன். ‘கொடுப்பார்கள் கிள்ளிக் கொடுப்பார்கள். என் ஆசான் போனால் அள்ளிக்கொடுப்பார்கள்’ என்றார்.

மாமா சொல்லிச் சென்றது போல பொன் சுந்தரலிங்க அண்ணனும் இராமலிங்கம் அவர்களும் இரண்டு மூன்று முறை வீட்டிற்கு வந்தார்கள். முதல்முதல் அவர்கள் வந்த போது கிளிநொச்சியில் ஒரு சிறு தொகை கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் வந்தார்கள் போலும். ‘கிளிநொச்சியில் எவ்வளவு தொகையை எதிர்பார்க்கிறீர்கள்’ என என் தந்தை கேட்டார். அவர்களும் ஒரு தொகையைச் சொன்னார்கள். உடனே கிளிநொச்சி எட்டாம் வாய்க்காலில் வாழ்ந்த நாகரத்தினம் என்பவர் வீட்டிற்கு இருவரையும் அழைத்துச் சென்றார். அவர் வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாது கொடுக்கும் ஒரு பெருங் கொடையாளி.  அம்பலவாணர் அரங்கு கட்ட காசுக்கு வந்திருக்கிறார்கள் என்று என் தந்தை சொன்னதும். இவர்கள் கிளிநொச்சியில் எதிர்பார்த்து வந்த தொகையைவிட பெருமடங்கு தொகையைக் கொடுத்ததோடு அம்பலவாணர் அரங்கு திறக்கும் நேரம் நெல்லும் தருவதாகக் கூறி, சொன்னபடி செய்தார். அவர்கள் நினைத்து வந்த காசைவிட கூடிய காசு கிடைத்ததால் வந்த வேலை முடிந்தது என்ற மகிழ்ச்சியில் இருவரும் கிளிநொச்சி கடைத்தெருவுக்கும் போகாது யாழ்ப்பாணம் சென்றனர்.

அடுத்த முறை இருவரும் வந்தபோது கிளிநொச்சி கண்டி வீதியில் இருந்த சிவாஸ் கபே, மகாலிங்கம் ஸ்ரோஸ், ஞானம் மில், பரமன் கபே, குமரகுரு ஸ்ரோஸ் என புங்குடுதீவைச் சேர்ந்தோரின் கடைகள் எல்லாவற்றுக்கும் அழைத்துச் சென்று காசுகிடைக்க வழிசெய்தார். மூன்றாம் முறை வந்தபோது இருவரையும்  இலங்கையின் பலபகுதிகளுக்கும் அழைத்துச் சென்று பணத்தைத் திரட்டவைத்தார். இலங்கை எங்கும் வாழ்ந்த புங்குடுதீவு மக்கள் வழங்கிய பணத்தில் கட்டப்பட்டதே அம்பலவாணர்  அரங்கு. அதுமட்டுமல்ல அது ஒரு திறந்தவெளி அரங்காகவே கட்டப்பட்டது.

அந்த அரங்கின் திறப்புவிழாவில் பேசுவதற்கு எனக்கு அழைப்பு வந்திருந்தது. வித்துவான் மாமா தனிப்பட்ட முறையில் என்னை அழைத்தாரா! அல்லது என் தாய்வழிச் சொந்தங்கள் தாம்போதியைக் கட்டியதால் அழைத்தார்களா! எனக்குத் தெரியாது. நானும்  ‘அம்பலவாணர்கள் பாலம் காட்டினார்கள், நாமும் அம்பலவாணர்க்கு அரங்கு கட்டினோம்’ என்ற தலைப்பில் பேசினேன். நான் அம்பலவாணர் அரங்கத் திறப்புவிழாவில் பேசியனேன் என்ற உண்மையை பேராசிரியர் கா குகபாலன் அவர்கள் எனது தந்தையின் நூற்றாண்டு மலருக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கட்டுரையை கீழே உள்ள linkஐ அழுத்திப் பார்க்கவும்.

பாலங்கட்டியோரும் அரங்குகட்டியோரும் என் இரத்த உவுறவுகளே என்பதை மேலே நான் சொன்னவற்றில் இருந்து அறிந்திருப்பீர்கள்.  அவர்களின் பரம்பரைக் காரணிகள் [DNA] எனது உடலிலும் இருக்கும். மு இராமலிங்கம் அவர்களும் என் திருமணத்தின் பின்னர் உறவானவர். அவர் எனது கணவரின் சிறிய தந்தை. ஊர்கூடிக்கட்டிய அம்பலவாணர் அரங்கு இன்று போரின் தாக்கத்தால் செயல் இழந்து கிடக்கிறது. அதனை மீண்டும் கட்டி எழுப்பி செயல்பட வைக்க ஒன்று கூடல்கள் நடக்கின்றன. அது பாராட்டப்படவேண்டிய நல்ல செயலே. அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. 

அம்பலவாணர் அரங்கைவிட நம் முன்னோர் மகிழ்ந்து குலாவி இருந்த புங்குடுத்தீவு எனும் செல்வச்சீமாட்டி சீர் அழிந்து கிடக்கின்றாள். கடந்த இரண்டு வருடங்களாக அங்கு சென்று நிலைமையை நேரே பார்த்ததால் எழுதுகிறேன். காற்றுவழிக் கிராமம் என்ற கவிஞனின் வாக்கு சற்றே மாறி காற்றுவெளிக் கிராமமாக நிற்கிறது. பசுமை அற்றுப் போனதால் புங்குடுதீவு எனும் பேரழகுச் சீமாட்டி இப்போது பரட்டைத் தலையும், ஒட்டிய உடலும், குழிவிழுந்த கண்களுடன், பற்களும் இழந்து பொக்கைவாய்ச் சிரிப்புடன் காட்சிதருகிறாள். இப்படி காட்சி அளிக்கும் அவளது உடலிலே ஆங்காங்கே கோயில்கள் என்ற இரத்தினங்களை சிலர் பதித்துள்ளார்கள். அவர்கள் பதித்த இரத்தினங்களால் புங்குடுதீவாம் அழகு சீமாட்டியின் இளமை திரும்பியதா? இல்லையே!!!!

புங்குடுதீவு எனும் அச்சீமாட்டியை இயல்பு நிலைக்கு மாற்றி, பசுமையாம் பச்சையாடை உடுக்கவைத்து அம்பலவாணர் அரங்கென்ன எந்த அரங்கையும் நாம் மீளக்கட்டிக் கொள்ளலாம். அம்பலவாணர் அரங்கை மீளக்கட்ட இருக்கும் வீதியில் வித்துவான் மாமா வீட்டடியில் இருந்து கணேசவித்தியாலயம் வரையும் எத்தனை வீடுகள்? அம்பலவாணர் அரங்கின் பக்கத்துத் தெருவில் எத்தனை வீடுகள்? பாழ் அடைந்து கிடக்கின்றன? பாழடைந்த வீடுகளுக்கு இடையேயா கலையரங்கம்? சிந்தியுங்கள்! செயற்படுங்கள்!! அரங்கம் பற்றிய எனது முழுக்கருத்தையும் தொடர்ந்து தரும்வரை…
இனிதே
தமிழரசி.