Saturday 28 May 2016

எம்மோடு ஒட்டி வாழ்பவன் யார்?


திருவள்ளுவர் நிலையாமை என்ற அதிகாரத்தில் உயிரின் இயல்பு பற்றிக் கூறுகிறார். அவ்வதிகாரத்தின் கடைசிக்குறளில் 'ஏன் எந்த ஓர் உயிரும் உடம்பினுள் நிலையாகத் தங்கி வாழ்வதில்லை?’ என்பதை மிக அழகாகச் சொல்கிறார்.
“புக்கில் அமைந்துஇன்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு”                           - (குறள்: 340)

உடம்பிற்குள் ஒட்டிக் [துச்சில் - ஒண்டி] குடித்தனம் வாழ்ந்த உயிருக்கு; நிலையானவீடு [புக்கில்] அமையவில்லையோ? [அமைந்தின்று கொல்லோ]. 

எனவே எமது உயிர் உடலினுள் ஒட்டியே வாழ்கிறது. அப்படி ஒட்டி வாழும் உயிர், நிலையான வாழ்வு எப்போ கிடைக்கும் என்று பிறவி தோறும் தேடுகிறது. அந்தத் தேடலின் வெளிப்பாடே கடவுள் கொள்கையாகப் பிறந்து வளர்ந்துள்ளது.

சொந்த வீடு இருந்து இல்லாமல் போய் நாம் வாடகை வீட்டில் அல்லது எமது உறவினர் வீட்டில் வாழநேர்ந்தால் எம்மைத் தேடி வருவோரும் அந்த வீட்டில் தானே வாழவேண்டும். சொந்த வீடற்ற நிலையில் வாழ்வாரைத் தேடி - நாடி வருபவோர் யார்??? அப்படி வருவோருக்கு எம்மேல் அளவுகடந்த அன்பும் பாசமும் இருக்க வேண்டும். எமக்கும் அவர்களிடம் அத்தகைய அன்பு இருக்க வேண்டும்.
“என்னில் ஆரும் எனக்கு இனியாரில்லை
என்னிலும் இனியான் ஒருவன் உளன்
என்னுளே உயிர்ப்பாய் புறம்போந்து புக்கு
என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே”                    
                                              - (ப.திருமுறை: 5: 21: 1)

என்னை விட எனக்கு இனிமையானவர் யாரும் இல்லை. என்னிலும் இனிமையானவன் ஒருவன் இருக்கின்றான்.  நான் ஊசலாடித் திரிவதற்கு ஏதுவாக உயிர்ப்பாய் [உயிர்த்தல்] வெளியே போய் [புறம்போந்து] உள்ளே வந்து [புக்கு], என்னுள்ளே உயிர்மூச்சாய்  [மூச்சுக்காற்றாய்] நிற்பவன் இன்னம்பர் எனும் இடத்தில் வாழும் ஈசனே என்கிறார் திருநாவுக்கரசு நாயனார்.

ஆதலால் எம்மோடு ஒட்டி உறவாடி எந்நேரமும் கலந்து வாழ்வதே கடவுள். அது நம் உறவுகள் போல் அல்ல. வீடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் எம்மைநாடி வந்து ஒட்டி உறவாடும். அதைத் தேடி நாம் எங்கும் போகவேண்டியதில்லை. அது எம்மைத்தேடி நாடி ஓடி வரும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதையும் அவரே இன்னொரு தேவாரத்தில் சொல்கிறார்.

உயிராவணம் இருந்து உற்று நோக்கி
            உள்ளக் கிழியின் உருஎழுதிது
உயிர் ஆவணம் செய்திட்டு உன்கைத்தந்தால்
           உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி 
அயிராவணம் ஏறாதே ஆனேறு ஏறி
           அமர்நாடு ஆளாதே ஆரூராண்ட
அயிராவணமே என் அம்மனே நின்
           நோக்காதார் அல்லாதாரே                             
                                              - (ப. தி.முறை: 6: 25: 1)

மூச்சுவிடுவதை உயிர்த்தல் என்று சொல்வர். உயிராத வண்ணம் [உயிராவணம்]. அதாவது யோகாசனம் செய்வோர் பிராணாயாமம் என்று சொல்கிறார்களே அதனை நம் பண்டைத்தமிழ் முன்னோர் உயிராவணம் என அழைத்தனர். மூச்சுக்காற்றாய் வெளியேயும் உள்ளேயும் சுழன்று உயிர்ப்பாய் இருப்பது அது. திரைச்சீலையைக் கிழி என்பர்.

உயிராவணம் செய்து கொண்டு தியானத்தில் இருந்து இறைவனை மனதில் நினைத்து [உற்று நோக்கி] மனத்திரையில் [உள்ளக்கிழி] அந்த இறைவனின் உருவத்தை வரைந்து [உருஎழுதி] உயிரை ஒப்படைத்துக் [உயிரை ஆவணப் படுத்தி] கொள்ளவேண்டும். அப்படி இறைவனை உணர்ந்து அறிகின்றவரோடு சேர்ந்து வாழ்பவன்[ஒட்டி வாழ்தி]. தேவலோகத்தில் இருக்கும் ஐராவணம் என்ற யானையில் ஏறாது, எருதில் ஏறி, தேவர் உலகத்தையும் ஆட்சி செய்யாது, திருவார்ரூரை ஆளுகின்ற எவ்வித ஐயமும் இல்லாத மெய்ப்பொருள் வடிவானவனே! [அயிராவணமே - ஐ இரா வண்ணம்; ஐ - ஐயம்] உன்னை அகக் கண்ணால் காணமுடியாதவர் [நோக்காதார்] நீ சேர்ந்து வாழாதோரே! [அல்லாதாரே].

எனவே இறைவன் நம்மை நாடி வரவேண்டுமானால் எமது மனத்திரையில் அகக்கண்ணால் அவன் உருவைக் காணவேண்டும். அப்படிக் காணும் போது இறைவன் எம்மொடு ஒட்டி வாழ்வான். மூச்சு போனால் பேச்சு போய்விடும் அல்லவா? அதற்காகத்தான் எமது உயிரை ஆவணப்படுத்தி அவன் கையில் கொடுத்து வைப்பது [உன்கைத்தந்தால்]. அந்த நேரம் எம்மொடு ஒட்டி வாழ்பவன் எம்மைக் கைவிட முடியுமா? அதனால் என்றும் தன்னோடு நிலைத்து வாழவைப்பான். 

இனிதே,
தமிழரசி.

Friday 27 May 2016

அறியாப் பொழுதுகள்


பிறந்த பொழுதுக்கும் இறக்கப்போகும் பொழுதுக்கும் இடையே எத்தனை விதமான பொழுதுகள். இந்தப் பொழுதுகளே எம்மை இயக்கிச் செல்கிறன என்பதை நாம் உணர்வதில்லை. ஒவ்வொரு மனிதரின் வாழ்வையும் வகை வகையாக மாற்றிச் செல்வதும் இப்பொழுதுகளே.  

இந்த நீள் தரையில் பிறந்த பொழுது தாய் அடைந்த துன்பத்தையும் நாமடைந்த துன்பத்தையும் அறியோம். நாம் ஒரு குழந்தைக்குத் தாயாய், தந்தையாய் ஆகும் பொழுது, நம் தாயும் எவ்வளவு வேதனைப்பட்டு எம்மைப் பெற்றிருப்பாள் என நினைக்கும் பொழுது, கண்ணில் நீர் கசியுமே அந்தப் பொழுதுக்கு எந்தப் பொழுதும் ஈடாகாது. பிறந்த எம்மைப் பார்த்து  பெற்றாரும் உற்றாரும் ஊராரும் சேர்ந்து சிரித்து மகிழ்ந்த பொழுதுகள் எமக்குத் தெரியாது. 

பிறந்த பொழுதிலிருந்து மூன்றுவயது அடைந்த பொழுதுவரை எமக்கு என்ன நடந்தது, என்ன செய்தோம் என்பதையும் அறியமாட்டோம். அந்தப் பொழுதுகளை எம்முடன் சேர்ந்து இருந்தோர் சொன்னதால் அறிந்து கொள்கிறோம். அது கூட சிலருக்குக் கிடைப்பதில்லை. பிறந்த பொழுதே தாயால், தந்தையால் கைவிடப்பட்ட குழந்தைகள், களவாடிச் செல்லப்பட்ட குழந்தைகள், மற்றவர் தத்து எடுத்த குழந்தைகள், போரால், இயற்கையால் பொறாமையால் யாருமற்றவராய் ஆக்கப்பட்ட பசிளம் குழந்தைகள் அறிவார்களா அந்தப் பொழுதுகளை?  

முதன்முதல் தாய் எம்மை அணைத்து எடுத்த அந்தப் பொழுது எமக்குத் தெரியுமா? தாய் முலைப் பாலைச் சுவைத்த பொழுது அதன் சுவையை அறிந்த பொழுதை யாரால் நினைத்துப் பார்க்க முடியும்? தவழ்ந்த பொழுது, தபுதபு என நடந்த பொழுது, குதழை மொழி பேசிய பொழுது, தாயும் தந்தையும் எமைப்பார்த்து ரசித்த பொழுது இப்படி எத்தனை எத்தனை பொழுதை அறியாதே வாழ்கிறோம். தாய் தந்தையர் மட்டுமா! பாட்டன், பாட்டி, மாமா, மாமி, அண்ணன், அக்கா என்ற உறவெல்லாம் நம் குழந்தைப் பருவத்தில் ஆசையோடும் பாசத்தோடும் அரவணைத்து கொஞ்சி மகிழ்ந்த பொழுகள், சினந்த பொழுதுகள், வாரி அணைத்த பொழுதுகள், அடித்த பொழுதுகள், திட்டிய பொழுதுகள், உணவு ஊட்டிய பொழுதுகள் இவற்றில் எந்தப் பொழுதுகள் எவர் நெஞ்சில் நிழல் ஆடுகின்றன? 

‘என் தாய் என்னை முதன்முதல் முத்தமுட்டு மடியிருத்தி தாய்முலைப் பால் ஊட்டிய அந்தப் பொழுதை இன்றும் மறக்காது இருக்கிறேன்’ என்று சொல்ல எவரால் முடியும்? இப்படி நம் வாழ்நாளில் நாம் அறியாமல் தொலைத்த பொழுதுகள் எத்தனை எத்தனை? இவைமட்டுமா! எம்மோடு அன்பாக ஆசையாக மரியாதையுடன் கதைக்கிறார் என நாம் நினைப்போரே செந்தமிழால் வையவும் வருவர். அப்படி ஒரு பொழுது வரும் என்று கனவிலும் நாம் கருதாப் பொழுதாக எம்மைத்தேடி அந்தப் பொழுது ஓடோடி வரும். இப்படி நாம் எதிர்பாராமல் வேலை செய்யும் இடங்களில், பயணங்களில், விழாக்களில் மனிதரால் மட்டுமல்ல இயற்கையால், விலங்குகளால், வாகனங்களால் நாம் அறியாப் பொழுதுகள் பல வந்து எமக்கு இடர் செய்யும். இவைபோல் அறிவையும், ஆற்றலையும், பண்பையும், அன்பையும், புகழையும் பெருக்கவும் நம்மை நாடி நாம் அறியாப் பல பொழுதுகள் வந்து எமக்கு மகிழ்ச்சியைத் தந்து கொண்டுதான் இருக்கின்றன. அறிந்த பொழுதுகளை விட அறியாப் பொழுதுகளே இன்ப அதிர்ச்சி தந்து வாழ்வை இனிமை ஆக்குகின்றன.
இனிதே,
தமிழரசி.

Wednesday 25 May 2016

ஆத்திரம் தீர்ந்திட விழித்திடுவீர்!



சைவர்கள்
மேலை நாட்டு சைவர்தம்
       மேன்மை சொல்லுவன் கேட்டிடுவீர்

சாலையோரம் எங்கணுமே
       சைவக் கோயில் எழுப்பிடுவார்
மாலை போட்டுப் படமெடுத்தே
       மமதைதனைப் பறையறைவார்

நாளைய உலகின் நாயகர்தாமென
       நாத்தழும்பேறிடக் கூறிடுவார்
பாளம் பாளமாய் பணமிருந்தால்
       பல்லிளித்துக் கதைத்திடுவார்

கூழைக் கும்பிடு போட்டு
       குருக்களுக்கு பணமிறைப்பார்
ஏழை எளியரைக் கண்டிடினே
       ஏறெடுத்தும் பார்த்தறியார்

கோயிலினுள்
மூலை முடுக்கு எங்கணுமே
       மூடைநாற்றம் வீசவைப்பார்
சேலை கொண்டு கொடுத்திடுவார்
       சேவிக்கத் தானறியார்

பாலைத் தேனை கலந்துடனே
       பாகும்சேர்த்து படையென்பார்
காலை மாலை பூசையென்பார்
       காதலால் கனிந்துருகார்

வாயிலில் உண்டியல் வைத்தே
       வக்கனையாகப் பேசிடுவார்
கோயில் கோயில் என்றிடுவார்
       குருக்கள் காலில் விழுந்தெழுவார்

ஆதலால்
சூத்திரர் சண்டாளர் என்றிங்கும்
       சொல்லிடும் கூட்டத்தைப் பாரீரோ!
சாத்திரம் இங்கு சமைத்தவர் யார்
       சைவரே எனக்கதைச் செப்பிடுவீர்!

மானமிழந்து மதியை இழந்து
       மண்ணில் வாழ்வது வாழ்வெனலாமோ
மோனத்திருந்தவன் மொய்கழலை
       மோகித்தே இதைச் சொல்லுகிறேன்

பானமினிக்குது என்று நச்சுப்
       பானமதைப் பருகிடலாமோ
ஞானமிக்க சைவ மதத்தீர்
       நியாயமதைச் சொல்லிடுவீர்

அன்று
ஒன்றே குலம் ஒருவனே
       தேவன் என்றே உலகிற்கு
அன்றே பகன்ற கொள்கை
       பொன்றே போன தென்னே

இன்று
மேன்மை கொள் சைவநெறி
        மிண்டோங்கி வளர்ச்சியுற
பான்மை மிகு சைவநீதி
       பக்குவமாய் சமைத்திடுவோம்

அதுவரை
நேத்திரம் மூன்றுடை நிர்மலனை
தோத்திரம் செய்து தொழுவதற்கே
கோத்திரம் கேட்கும் கீழரை
ஆத்திரம் தீர்ந்திட விழித்திடுவீர்!
அவனியோர் மேல் ஆணையிட்டே!!
                                           - சிட்டு எழுதும் சீட்டு 117
குறிப்பு:
இலண்டனில் முதற்கோயிலான ஆச்வே 'உயர் வாயிற்குன்று முருகன் கோயில்' உருவான நாளில் இருந்து இங்குள்ள கோயில்களில் நடப்பதைப் பார்த்து மனம் குமைந்தேன். அந்த நேரம் கனகதுர்க்கை அம்மன் கோயில் குருக்கள் ஒருவர் அப்போது அங்கு வரும் பக்தரை சூத்திரர் எனச் சொன்னதை அறிந்தேன். அந்நிகழ்வே இதனை எழுதவைத்தது. 2009ம் ஆண்டு எழுதியது.

Tuesday 24 May 2016

மனங்கசிய வேணும்!


முச்சுடராம் மூர்த்தி
         முருகனவன் நாமம்
நச்சுடையார் நைந்துரையார்
         நாவினிக்க எனினும்
அச்சுடரைப் போற்றி
         அவனிவாழ எங்கும்
மிச்சுடரை ஏற்றி
          மனங்கசிய வேணும் 

Monday 23 May 2016

குறள் அமுது - (115)


குறள்:
“இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்
சீறின் சிறுகும் திரு”                                                 - 568

பொருள்:
தலைவன் ஒருவன் இனத்தவர்களுடன் சேர்ந்து சிந்தித்துப் பார்க்காது  சினங்கொண்டு மூர்க்கத்தனமாக நடந்தால் அவனது மதிப்புக் குறைந்து போகும்.

விளக்கம்:
'வெருவந்த செய்யாமை' என்னும் அதிகாரத்தில் இத்திருக்குறள் இருக்கிறது. பிறர் பயப்படக்கூடிய செயலைச் செய்யாதிருத்தல் வெருவந்த செய்யாமை ஆகும். இன்றைய தமிழில் சொல்வதானால் பிறரை வெருட்டாதிருத்தல் என்று சொல்லலாம். ஒருவர் தானே செய்யும் வேலையை, தன் விருப்பப்படி செய்து கொள்ளலாம். சமூகம் சார்ந்த பொதுவான வேலைகளில் ஈடுபடுவோர் ஒன்றைச் செய்வதற்கு தாமே தனித்து முடிவெடுப்பது நல்ல செயல் அல்ல. தன்னைச் சேர்ந்தவர்களோடு கதைத்து அதனால் வரும் நன்மை தீமைகளை ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கவேண்டும். அதுவே இனத்து ஆற்றி எண்ணுதலாகும்.

ஒன்றைச் செய்வதற்கு முன் எப்படிப்பட்ட நிலையில் இருந்து ஆராயாவேண்டும் என்பதை அறநெறிச்சாரம் என்னும் நூலை எழுதிய முனைப்பாடியார் என்னும் புலவர் கூறியதைக் கொஞ்சம் பார்ப்போம்.
“காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்
உற்றகுணம் தோன்றாதது ஆகும் உவப்பதன்கண்
குற்றமும் தோன்றாக் கெடும்”
                                             - (அற நெறிச்சாரம்: 42)

வெறுப்பு[காய்தல்] விருப்பு[உவத்தல்] இல்லாது நீக்கி[அகற்றி] ஒன்றிலுள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து அறிதல்[ஆய்தல்] அறிவுடையார் செயலாகும். வெறுக்கப்படுவதால்[காய்வதன்கண்] அதன் உண்மையான தன்மை [உற்றகுணம்] தெரியவராது [தோன்றாது]. விரும்புவதால் [உவப்பதன்கண்] அதிலுள்ள குறைகளும்[குற்றமும்] தெரியாது[தோன்றாது] மறைந்துபோகும் [கெடும்]. எதை ஆராய்வதாக இருந்தாலும் பக்கச்சார்பு இல்லாது ஆராயவேண்டும்.

பொது நன்மையைக் கருத்தில் கொள்ளாது ஒரு அரசனோ தலைவனோ தன் இனத்தவரோடு கலந்து ஆராய்ந்து பாராது தானே முடிவெடுத்துக் கோபப்படுட்டு மூர்க்கத்தனமாக நடந்தால் அவனது செல்வம் செல்வாக்கு என்பன மெல்ல மெல்லக் குறையும். சமூகத்திற்கு செய்கிறோம் என்று தாம் நினைத்ததை தாமே முடிவெடுத்து தம்மெண்ணத்திற்கு மற்றவர்களை அடக்கி ஒடுக்கி வெருட்டி செய்யப்படும் எந்தச் செயலும் அச்சமூகத்தால் வெறுக்கப்படும். 

இனத்தவர்களுடன் சேர்ந்து ஆராய்ந்து பார்க்காமல் தானென்ற செருக்கோடு பிறரைத் துன்பப்படுத்தி பயங்காட்டுவதால் இனத்தவர்களின் மனதில் உண்டாகும் வெறுப்பு படிப்படியாகத் தலைவர்களின் மதிப்பைக் குறைக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

Friday 20 May 2016

அடிசில் 100

கறிமிளகாய் இறால் பஜ்ஜி
- நீரா -  
தேவையான பொருட்கள்: 
கறிமிளகாய் - 15
இறால்  -  200 கிராம்
உருளைக்கிழங்கு  -  100 கிராம்
சிறிதாக வெட்டிய வெங்காயம்  -  1 மேசைக் கரண்டி
உப்பு  -  தேவையான அளவு
எண்ணெய்  -  பொரிக்கத் தேவையான அளவு
மிளகுதூள்  -  ½ தேக்கரண்டி
மிளகாய்த்தூள்  -  1 தேக்கரண்டி
கடலைமா  -  ¾ கப்
அரிசிமா  -  ¼ கப்

செய்முறை:  
1. கறிமிளகாயின் நுனியை  ஒரு அங்குல நீளத்திற்கு கீறி வைக்கவும்.
2. உருளைக்கிழங்கை அவித்து உரித்து புட்டுப்போல உதிர்த்துக் கொள்க.
3. வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
4. வதங்கிய வெங்காயத்துக்குள் உப்பு, அரைத்தேக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, இறாலையும் இட்டு கலந்து மூடியால் மூடி மெல்லிய நெருப்பில் வேகவிடவும்.
5. நீர் வற்றியதும் உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கி ஆறவிடவும்.
6. இன்னொரு பாத்திரத்தில் அரிசிமா, கடலைமா,  மிளகாய்த்தூள், உப்பும் போட்டு, ஒன்றாகாக் கலந்து நீர்விட்டு இட்லிமாப்போல் கொஞ்சம் கட்டியாகக் கரைத்து எடுக்கவும்.
7. இறால் கலவையை ஒவ்வொரு கறிமிளகாயின் பிளந்திருக்கும் நுனியின் ஊடாக உள்ளே வைத்து மூடுக.
8. அடுப்பில் வாயகன்ற தட்டையான பாத்திரத்தை வைத்து பஜ்ஜி மூழ்கி வேகும் அளவுக்கு எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
9. கரைத்து வைத்திருக்கும் மாவினுள் கறிமிளகாயைத் தோய்த்து, கொதிக்கும் எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

Wednesday 18 May 2016

என்று தணியும் எங்கள் இதயத்தின் தீ!

ஈழத்தமிழ் இனத்தின் உரிமையை அழிக்கிறோம் அழிக்கிறோம் என கங்கணங் கட்டி அழிக்க முற்பட்டோர் பலராவர். அச்செயல் வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே நடைபெறுகிறது. ஈழத்தமிழினத்தை அழித்தோம் என்று இங்கு யாரும் மார்தட்ட  முடியாது. அது வரலாறு காட்டும் உண்மையாகும். ஈழத்தமிழினம் கரப்பான் பூச்சி போன்ற ஓர் இனம் என்பதை உலகம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. கரப்பான் பூச்சி போல் காலத்தால் மூத்ததாயும் சூழ்நிலைக்காரணிகளுக்கு தகுந்தது போலவும் வாழ்கின்ற ஓர் அற்புதமான இனமாகும். அதனால் ஈழத்தமிழினம் என்றும் தன் தனித்தன்மைகளை  இழந்ததில்லை. இழக்கப் போவதுமில்லை.

மானம்வரின் வாழா கவரிமான் போன்ற பலகோடித் தன்மானவீரர்களை உலகுக்கு ஈந்த தாய்மாரின் பண்பில் வளர்ந்த இனமானதால் தன் குலமானத்தை என்றும் எதற்காகவும் குழிதோண்டி புதைக்காது. என்று தணியும் எங்கள் இதயத்தின் தீ என்ற ஏக்கம் இருப்பினும் முள்ளிவாய்க்காலின் வடு சுமந்து இன்றுடன் ஏழு ஆண்டுகள் கடந்தாலும் நம் தன்மானம் அழியாது. முள்ளிவாய்க்கால் நம் இனத்தின் முடிவல்ல. 

முள்ளிச்செடிக்குக்கூட ஈழத்தமிழரின் பண்புகள் இருக்கின்றன. வெளியே மற்றோரின் கயமை, கொடுமை, அதிகாரவெறி போன்ற எத்தனையோ முட்களால் குத்தப்பட்டு - சூழப்பட்டு முள்ளிச்செடி போல் இருப்பினும் அதிலிருந்து மணம் வீசும் தேன் தளும்புவது போல் அறிவும் ஆற்றலும் ஈழத்தமிழரிடம் நிறைந்தே தளும்புகிறது. அந்த ஆற்றலும் அறிவும் ஈழத்தமிழினத்தை தலைநிமிர்ந்து வாழவைக்கும். ஆற்றலும் அறிவும் மட்டும் இருந்தால் போதாது எம்மிடையே ஒற்றுமை வேண்டும். 


ஈழத்தமிழினத்துக்கு ஒற்றுமை வேண்டும் என்பதை அறுபது ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துச் சொன்னவர்களில் ஒருவர் பாவேந்தர் பாரதிதாசன். அவரின் அற்புதமான அந்தப் பாடலை நீங்களும் ஒருமுறை படித்துப்  பாருங்கள்.

“இலங்கைத் தமிழர் துலங்க எண்ணினால்
அவர்கள் ஒற்றுமை அடைய வேண்டும்
வேற்றுமை விளைக்கும் ஆற்றல் எவற்றையும்
கான்றே உமிழ்தல் வேண்டும்; கழிவடைச்
சாதி சமயம் என்னும் எவற்றையும்
மதித்தல் கூடாது; மறப்பது நன்று
தமிழர் நலத்தைத் தாக்கும் கட்சிகள்
எவற்றினும் எவரும் சேர்தல் சரியன்று
தமிழர் அனைவரும் கூடித் தக்கதோர்
கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டும்
தாய்மொழி யான தமிழ்மொழி வாழ்ந்தால்
தமிழர் வாழ்வர்; தாய்மொழி வீழ்ந்தால்
தமிழர் வீழ்வர்; தமிழ் தமிழர்க்குயிர்
தமிழன்னைக்கு ஒரு தாழ்வு நேர
விடுதலின் உயிரை விடுதல் தக்கது
சிங்களவர்க்கு உள்ள இலங்கையின் உரிமை
செந் தமிழர்க்கும் உண்டு; திருமிகு
சட்ட மன்றிலும் பைந் தமிழர்க்கு
நூற்றுக்கு ஐம்பது விழுக்காடு நோக்கிப்
படிமை ஒதுக்கப் படுதல் வேண்டும்
செந்தமிழ் மக்கள் சிறுபான்மை யோரெனச்
சிங்களவர் பெரும்பான்மை யோரெனச் செப்பித்
தமிழர் உரிமையைத் தலை கவிழ்க்க
எண்ணும் எண்ணம் இழைக்கும் தீமைகள் 
எவற்றையும் தமிழர் எதிர்க்க வேண்டும்
மானங் காப்பதில் தமிழ் மக்கள்
சாதல் நேரினும் தாழக் கூடாது
இவைகள் இலங்கை தமிழர் கொள்கைகள்!
யாவர் இவற்றை எதிர்ப்பினும் விடற்க!
வெல்க இலங்கைத் தமிழர்!
வெல்க தமிழே! மேவுக புகழே! "
(இலங்கை ‘தினகரன்’ சனிக்கிழமை சிறப்பு மலரில் 7/11/1959 அன்று வெளிவந்தது)
இனிதே,
தமிழரசி

Sunday 15 May 2016

வாழ்க கலசம் நிறைந்தே!

சித்திரக் கவிதை - 4
தேர்ப்பிணையல்

இன்றைய தமிழர்களாகிய நாம் செய்யும் அசட்டையால் எமது கலைகளும் அவற்றின் அரிய கலைநுணுக்கங்களும் அழிந்து ஒழிந்து வருகின்றன. அவற்றில் ஒன்று சித்திரக்கவிதை. கலையார்வம் மிக்க தமிழன் தான் வணங்கும் தெய்வம் கொலுவிருக்கும் இடத்தை கோலங்களால் அழகுபடுத்தினான். தன் தெய்வத்தின் பெருமைகளை அக்கோலத்தினுள் எழுதி மகிழ்ந்தான். அவற்றிற்கு சிதிரக்கவிதை என்று பெயரிட்டான். சித்திரக்கவிதை எழுதுவதற்கு இலக்கணமும் வகுத்தான். அதனை எமது குழந்தைகளாவது அறிந்து கொள்ளவேண்டும் என்ற அவாவில் நான் புனைந்த இச்சித்திரக் கவிதை 1995ம் ஆண்டு ‘கலசம்’ இதழில் ‘சாலினி’ என்ற பெயரில் வெளிவந்தது.

சித்திரக்கவிதை புனைவதில் பெண்களே சிறந்து விளங்கினார்கள். பெண்களின் அழகுணர்ச்சியும் கோலம் போடும் திறமையும் அதற்கு வழிவகுத்திருக்கலாம். தொல்காப்பியரின் மாணவி எனத் தமிழ் அறிஞர்களால் கருதப்படும் 'காக்கைபாடினியார்' எழுதியது 'காக்கைபாடினியம்' என்னும் கவிதை இலக்கண  நூலாகும். அதில்  அழியாதிருக்கும் சில நூற்பாக்கள் சித்திரக்கவிதை பற்றியும் சொல்கிறன. அக்காலப் பெண்கள் ஆழிக்கட்டு [சக்கரபந்தம்], இரு நாகப்பிணையல், நால் நாகப்பிணையல், எண்ணாகப்பிணையல் [அட்டநாகபந்தம்] தேர்க்கட்டு அல்லது தேர்ப்பிணையல் [ரதபந்தம்] போன்ற சித்திரக்கவிதைகளைப் புனைந்திருக்கிறார்கள். அந்தப் பழந்தமிழ்ப் பெண்டிரின் ஆற்றலை அறிந்து நாமும் பெருமை கொள்வோம்.

கலசம் இதழில் மகளிர்பகுதிக்கு ஆசிரியராக இருந்த காலத்தில் உலகெங்கும் உண்மையான [போலியான மூடக்கொள்கை அற்ற] சைவசமயம் தலைத்தோங்கி கோயிற் கோபுர கலசங்கள் நிறைந்து விளங்க வேண்டும் என்ற பெருவிருப்பில் இந்தத் தேர்ப்பிணையல் சித்திரக்கவிதையைப் புனைந்தேன். 
“மாதேநீ எந்நேரமுறை செய்ததவ நினைவால்எப்
போதும் வண்ணத்தமிழ் சைவசமயப் - போது
ஓங்கவுலகில் கோபுரமெங்கணுமே உயர்க இசைசூழ்க
வாழ்க கலசம் நிறைந்தே”

மேலே தேர்ப்பிணையலினுள் இருக்கும் செய்யுளை வாசிக்கும் முறை:
தேரின் இடது சில்லில் தொடங்கி மேலேறி வலது சில்லில் இறங்கி, அடித்தட்டின் வலது நுனியில் ஏறி அத்தட்டின் இடப்புறமாகச் சென்று, அதற்கு மேற்றட்டின் இடது நுனியில் நின்று வலப்புறம் சென்று…. இவ்வாறு வலமும் இடமுமாக மாறிமாறி ஒவ்வொரு தட்டாக ஏறி உச்சிக்குச் சென்று அங்கிருந்து நடுவழியாக நேரே கீழிறங்கி வரவும்.

தேர்ப்பிணையல் கவிதையின் சிறப்பு:
இச்சித்திரக் கவிதையின் நான்காவது அடியிலுள்ள எழுத்துக்கள் முதல் மூன்று அடிகளிலும் ஏறுவரிசையில் மறைந்து கிடப்பதே இச்செய்யுளின் சிறப்பாகும்.
இனிதே,
தமிழரசி.

Saturday 14 May 2016

பாவையர் போற்றிய பாடல்கள் - 1

முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத

மானுட வாழ்வின் தொடக்கத்தில் பெண்கள் காட்டிலும் மேட்டிலும்  அலைந்து உணவு தேடித்திரிந்தனர். அப்படித் திரிந்த போது இயற்கையிடமிருந்து இசையைக் கற்றனர். தாம் கற்றதை தம் குழந்தைகட்கும் கற்றுக்கொடுத்த பெருமை பெண்களையே சாரும். இயற்கையிடம் இருந்து இசையை மனிதன் கற்றான் என்பதை தெள்ளத் தெளிவாக சங்க இலக்கியப் பாடல்கள்  சில காட்டுகின்றன. இன்றைய இசையின் கூர்ப்பை - பரிணாமவளர்ச்சியை சங்ககாலப் புலவோர் பதிவு செய்திருக்கும் பாங்கு போற்றுதற்கு உரியதாகும்.

இடிமுழக்கம் இசையாவதை
திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப, பண் அமைத்து
திண் வார் விசித்த முழவோடு”
                                                     - (மலைபடுகடாம்: 1 - 3)
என மலைபடுகாடாம் எனும் சங்க இலக்கியம் முதல் இருவரியிலேயே சொல்கிறது. பொருளை[திரு] உண்டாக்கும் மழையைப் பொழியும் இருள் நிறமான மேகத்தினது [விசும்பின்] விண்ணை அதிரச் செய்யும்[விண் அதிர்] ஒலி[இமிழ்] இசையைப் போல[கடுப்ப] பண் அமைத்து திண்மையான வாரல்[திண்வார்] கடப்பட்ட[விசித்த] முழவோடு’ என்கிறது. அதாவது ‘சங்ககாலக் கூத்தர் மழையைத் தரும் மேகத்தின் இடிமுழக்க இசை போல இடக்கண் இளிச்சுரமாக வலக்கண் குரல்சுரமாக சுருதி கூட்டி [பண் அமைத்து] வலிய வாரால் கட்டப்பட்ட முழவோடு மற்ற இசைக்கருவிகள் இசைத்தனர்’ எனச் சொல்கிறது.

பரிபாடலில்
“விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப
முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத
யாணர் வண்டினம் யாழ் இசை பிறக்க
பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப
ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்
இரங்கு முரசினான் குன்று”
                                                     - (பரிபாடல்: 21: 33 - 38)
நல்லச்சுதனார் ‘வெற்றி முரசு கொட்டும் முருகனின் திருப்பரம் குன்றில் விரலால் துளைகளை அழுத்தியும்[செறி] விடுத்தும் இசைக்கும் மூங்கிற்குழலின்[தூம்பு] இசையைப் போல முரலும் தும்பிகள் விரிந்த மலர்களில் ஊத, அழகிய[யாணர்] வண்டினம் யாழ் இசையை உண்டாக்க, தாளத்தோடு சேர்ந்த முழவின் இசையை அருவி நீர் ததும்பச் செய்ய, இவை ஒன்றாகச் சேர்ந்து[ஒருங்கே] பரந்து எல்லாம் ஒலிக்கும்' என்கிறார்.
மறம்புகல் மழகளிறு உறங்கும்

இப்படி இயற்கையிடம் இருந்து தாம் கற்ற இசையைப் பெண்கள் பாடித்திருந்ததையும் சங்க இலக்கியத்தில் பதிவுசெய்து வைத்துள்ளனர். கொடிச்சி ஒருத்தி[குறிஞ்சிநிலப் பெண் - மலைநாட்டுப் பெண்] குறிஞ்சிப் பண்ணைப் பாட, யானை உறங்கிற்றாம் என்கிறது அகநானூறு. 
“உளைமான் துப்பின் ஓங்குதினைப் பெரும்புனத்துக்
கழுதில் கானவன் பிழிமகிழ்ந்து வதிந்தென
உரைத்த சந்தின் ஊரல் இருங்கதுப்பு
ஐதுவரல் அசைவளி ஆற்றக் கைபெயரா
ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி
பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக்
குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற் றெய்யென
மறம்புகல் மழகளிறு உறங்கும்”              
                                                  - (அகநானூறு: 102)
பெரிய மலைப்பாங்கான பகுதியிலிருந்த [பெருவரை மருங்கு] ஓங்கிவளர்ந்திருந்த தினைப்புனத்துப் பரணில்[கழுதில்] கானவன் கள்[பிழி] உண்டு மகிழ்ந்திருந்தான். அவனது மனைவியின்[கொடிச்சி] உரைத்தசந்தனச் சாந்து[ஊரல்] பூசியகரிய கூந்தலை[இருங்கதுப்பு] மெதுவாய்வீசும்[ஐதுவரல்] காற்று[அசைவளி] உலர்த்த[ஆற்ற], அவள் தன் கையால் தழைத்த[ஒலியல்] ஈரமானகூந்தலைக்[வார்மயிர்] கோதிக் கொண்டு[உளரினள்] குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள். தினையை[குரல்] கொய்யாது உண்ணாது[கொள்ளாது], தான் நின்ற நிலையில் இருந்தும்[நிலையினும்] அசையாது[பெயராது] மூடாத பசுமையான கண்ணை[பைங்கண்] மூடிப் பாட்டைக் கேட்ட[பாடுபெற்று], வலிமைமிக்க[மறம்புகல்] இளங்களிறு [மழகளிறு] விரைவாக [ஒய்யென] உறங்கியதாம்.

சங்ககாலக் குறிஞ்சிப் பண் இன்று சங்கராபரண இராகமாக பெயர் பூண்டு எம்முன்னே வலம் வருகிறது. கட்டுத் தறியில் கட்டிவைத்த யானை அயையாது நிற்பதைப் பார்த்திருப்பீர்களா? யானை தன் காதை, தலையை, துதிக்கையை, காலை என எந்நேரமும் உடலை அசைத்தபடியே நிற்கும். அத்தகைய யானையை தினைப்புனம் காத்த மலைநாட்டு பெண்ணின் சங்கராபரண இராகப் பாடல் தாலாட்டாய் உறங்க வைத்தது. அதற்கு அவளின் குரலா! அன்றேல் சுருதி சுத்தமான பண்ணா! அல்லது இரண்டுமா காரணம்? அன்றைய பெண்கள் இயற்கையின் ஆற்றாலை இசையால் வெல்லலாம் என அறிந்திருந்தனர் போலும்.

சங்ககாலத்திற்கு முன்பிருந்தே பெண்கள் தமது சமூகவாழ்வில் பலவகையான பாடல்களைப் பாடி மகிழ்ந்ததோடு மற்றைய உயிரினங்களை இசையால் மயக்கியதை இது காட்டுகிறது. அதனால் பாடல்களுக்கு ஏற்ப இசையமைக்கும் முறையையும் அறிந்திருந்தார்கள். இவ்வாறு பாவையர் போற்றிப் பாடிய பாடல்களை சங்ககால மகளிர் போற்றிய பாடல்கள் என்றும் அதற்குப் பிந்தியகால மகளிர் போற்றிய பாடல்கள் என்றும் பிரிக்கலாம்.

அ: சங்ககாலமகளிர் போற்றிய பாடல்கள்:
அகவன்மகளிர் பாடல், துணங்கைப் பாடல், இணைமகள் பாடல், தழிஞ்சிப் பாடல், விற்களப் பாடல் என இப்பட்டியல் நீண்டு செல்லும்.
சிறுகோல் அகவன்மகளிர்

அகவன் மகளிர் பாடிய பாடல்:
குறி [நிமித்தம்] சொல்லிப் பாடும் பெண்களை அகவன்மகளிர் என்பர். அகவன்மகளிர் பாடிப் பரிசு பெற்றதை
“வெண்கடைச் சிறுகோல் அகவன்மகளிர்
மடப்பிடி பரிசில் மான”              - (குறுந்தொகை: 298)
எனச் சங்கப்புலவரான பரணர் குறிப்பிடுகிறார். அகவன் மகளிர் கையில் வெண்ணிற அடியுடைய[வெண்கடை] சிறுகோல் இருப்பதால் குறிசொல்லிப் பாடும் பெண்களே அகவன்மகளிர் என்பது தெளிவாகிறது. 

குறிசொல்லிப் பாடி பெண்யானையைப்[மடப்பிடி] பரிசு பெறும் அளவிற்கு அவர்கள் பாடலும் குறியும் சிறப்புடையதாக இருந்திருக்கிறது. அகவன் மகளிர் குறிகூறத் துணையாக நாவில் வந்து இருக்குமாறு தெய்வங்களை வேண்டிப் பாடியிருக்கிறார்கள். இன்றும் திருச்செந்தூர், குற்றாலம் போன்ற இடங்களில் குறிகூறும் பெண்கள் இறையருளை வேண்டிப்பாடி குறிசொல்வதைக் காணலாம்.

சங்ககால அகவன்மகள் ஒருத்தி ஒரு மலைநாட்டைப் புகழ்ந்து பாடியவாறு தெருவில் நடந்து சென்றாள். தனது காதலனின் நாட்டைப் புகழ்ந்து அகவள் மகள் பாடுவதைக் கேட்ட காதலியொருத்தி ‘அகவன் மகளே!’ என அவளை அழைத்து, ‘அந்தப் பாட்டைப்பாடு, இன்னும் பாடு என்று கேட்கின்றாள். அதனை ஔவையார்,
“அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே!
இன்னும் பாடுக பாட்டே! அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!
- (குறுந்தொகை: 23)
எனப்பாடியிருப்பதால் அறியலாம். இதிலிருந்து அகவன் மகளிர் பாடலின் சிறப்பு இனிது விளங்கும்.

ஆ:  கடந்தகால மகளிர் போற்றிய பாடல்கள்:
இப்பாடல்களும் ஆரத்திப்பாடல், ஊஞ்சல்பாடல், கும்மிப்பாடல், குறத்திப்பாடல், தாலாட்டுப்பாடல் என நீண்டு செல்லும்.

 ஆரத்திப்பாடல்:
மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும்போது ஆரத்தி எடுத்துப் பாடல்பாடும் வழக்கம் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்றும் நடைபெறுகிறது. மஞ்சள் குஞ்குமத்தைக் கரைத்து அத்தட்டில் மங்கலவிளக்கேற்றி வைத்து மணமக்களுக்கு ஆரத்தி சுற்றிப்பாடும் பாடல் ஒன்றை படித்து இரசியுங்கள்.
“ஆலாத்தி ஆலாத்தி ஐந்நூறு ஆலாத்தி
முத்தாலே ஆலாத்தி முன்னூறு ஆலாத்தி
பாக்காலே ஆலாத்தி பலநூறு ஆலாத்தி
வெத்திலையாலே ஆலாத்தி வெகுநூறு ஆலாத்தி
குங்முமத்தாலே ஆலாத்தி கோடிகோடி ஆலாத்தி
மஞ்சலாலே ஆலாத்தி மங்கலமாய் ஆலாத்தி”
ஆரத்தி எடுக்கும் இருவரும் மனநிறைவுடன் இணைந்து பாடும் போது இப்பாடலின் இனிமை நன்கு புலப்படும்.
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
1999ம் ஆண்டு ‘கலசம்’ இதழுக்கு ‘சாலினி’ என்ற பெயரில் எழுதியது.

Thursday 12 May 2016

புங்குடுதீவில் கண்ணகி வழிபாடு


கன்னித் தமிழ்நாட்டில் காவிரியாறு கடலோடு கலக்கும் காவிரிப்பூம்பட்டனத்தில் கண்ணகை எனும் கற்பரசியின் காற்சிலம்பு சிரித்தது. வடநாட்டிலோ கங்கை ஆற்றங்கரையில் கனகர் விசயர் என்னும் முடியுடை மன்னர்களின் தலைகள் கல் சுமந்து நெரிந்தன. இதனையே சிலப்பதிகாரம் சித்தரிக்கின்றது.

காவிரிப்பூம்பட்டனத்தின் பெருஞ் செல்வர்களான மாநாய்கன் மகளான கண்ணகிக்கும் மாசாத்துவான் மகனான கோவலனுக்கும் திருமணம் நடந்தது. கண்ணகியின் கொஞ்சும் சிலம்பொலியில் நெஞ்சம் நெகிழ்ந்தான் கோவலன். கண்ணகி மேல் தீராக் காதல் கொண்டான். மனையறம் இனித்தது. சில ஆண்டுகள் சீராகச் சென்றன.

கோவலன் மாதவியின் ஆடற்சிலம்பொலி கேட்டான். கண்ணகியின் கொஞ்சும் சிலம்பொலியை மறந்தான். கலையரசியின் காதற் சிலம்பொலியில் கட்டுண்டான். காலம் உருண்டது. காசும் கரைந்தது. காதற் சிலம்பொலியே அவனுக்குப் புலம்பற் சிலம்பொலியாயிற்று. பாடினான் கானல்வரி. அதைக் கேட்ட மாதவியும்
“ஆங்கு கானல்வரி பாடல்கேட்ட மான்நெடுங்கண் மாதவியும்
மன்னும் ஓர் குறிப்புண்டு இவன் தன்நிலை மயங்கினான் எனக்
கலவியான் மகிழ்ந்தாள் போல் புலவியால் யாழ்வாங்கித்
தானும் ஓர் குறிப்பினள் போல் கானல்வரி பாட”
                                                         - (சிலம்பு: 7: 138 - 141)
கானல்வரி பாடினாள். அதனால் மாதவிமேல் கோபம் கொண்டு மீண்டும் கண்ணகியிடம் சென்றான் கோவலன்.

“சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக்
குலம்தரு வான்பொருட் குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணுத் தரும் எனக்கு என்ன”
                                                         - (சிலம்பு: 9: 69 - 71)
‘வஞ்சனையை வாழ்வாகக் கொண்டவளோடு இவ்வளவு காலமும் கழித்தமையால் முன்னோர் தேடித்தந்த பெருஞ் செல்வத்தைத் தொலைத்துவிட்டேன். என் வறுமைக்காக [இலம்பாடு] நாணுகிறேன்'  என்று கண்ணகியிடம் கூறினான்.

அதனைக் கேட்ட கண்ணகி, தன் காற்சிலம்பை எடுத்து கோவலன் கையிற் கொடுத்து இச்சிலம்பை விற்று வரும் பணத்தை வைத்து இழந்த செல்வத்தை தேடிக்கொள்ள முடியும் எனத் தைரியம் ஊட்டினாள். தன் வறுமை நிலைக்கு வெட்கப்பட்ட கோவலன் இரவோடு இரவாக கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான்.

மதுரை நகரிலே பொற்கொல்லர் தெருவில் கண்ணகியின் காற்சிலம்பை விலைகூறி விற்க முயன்றான் கோவலன். கண்ணகியின் காற்சிலம்பு பொற்கொல்லன் ஒருவனின் சூழ்ச்சியால் கள்ளச் சிலம்பாய்ப் புலம்ப கொலை செய்யப்பட்டான் கோவலன். கள்ளச் சிலம்பொலி கேட்டுக் கலங்கினாள் கண்ணகி.
“பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே யாமாகில்
ஒட்டேன் அரசரோடு ஒழிப்பேன் மதுரையையும்”
                                                         - (சிலம்பு: 11: 36 - 37)
என வஞ்சினம் உரைத்து, ஒற்றைச் சிலம்பு ஒலிக்க கொற்றைக் கொற்றவனிடம் சென்று நீதிகேட்டாள்.

“காவி உகுநீரும் கையில் தனிச் சிலம்பும்
ஆவி குடிபோன அவ்வடிவம் - பாவியேன்
காடெல்லாம் சூழ்ந்த கருங்குழலும் கண்டு அஞ்சிக்
கூடலான் கூடுஆயி னான்”
                                                       - (சிலம்பு: 10: 2)
முத்துடைச் சிலம்பொலிக்கும் மணியுடைச் சிலம்பொலிக்கும் வேற்றுமை அறியாக் கொற்றவன் முன்னே  சிரித்தது சிலம்பு. பறந்தன மணிகள். எரிந்தது மதுரை.

தன்னை மறந்து ஓர் ஆடலரசியுடன் வாழ்ந்த தன் கணவனுக்காக நீதி கேட்டு, மதுரையையே எரித்து பத்தினி எனப்போற்றப்பட்டவள் கண்ணகி. சோழ நாட்டில் பிறந்து பாண்டி நாட்டில் வழக்குரைத்து சேர நாட்டில் தெய்வீகம் அடைந்தவள். எனவே சேர, சோழ, பாண்டிய நாடு என மூன்றாய் கூறுபட்டுக் கிடந்த தமிழ்நாட்டை ஒன்றாக்கிய பெருமையும் கண்ணகிக்கு உண்டு.

வடநாட்டு கனக விசயர் சுமந்து வந்த கல்லில் கண்ணகிக்குச் சிலைவடித்து கோயில் கட்டி மகிழ்ந்தான் சேரமன்னன். அன்று முதல் பத்தினித் தெய்வமாய் - கண்ணகி அம்மனாய் போற்றப்படுகிறாள் கண்ணகி.
களனி விகாரை

தமிழகத்தில் கண்ணகி வழிபாடு அருகி வந்து கொண்டிருப்பினும் ஈழத்தின் புங்குடுதீவுக் கடற்கரையில் கம்பீரமாகக் கோயில் கொண்டிருக்கிறாள் கண்ணகி. கி பி இரண்டாம் நூற்றாண்டளவில் நாக அரச வம்சத்தில் வந்த முகநாகன் என்பவன் புங்குடுதீவிலிருந்த பத்தினி கோட்டத்திற்கு [கண்ணகி கோயிலுக்கு - சிறு தெய்வம் இருக்குமிடத்தை கோட்டம் என்பர்.] ஒவ்வொரு நாள் செலவுக்கும் பொருள் கொடுத்திருக்கிறான். அதனை களனி விகாரையில் இருந்த ஏட்டால் அறியலாம். அந்த விகாரை இன்றும் தமிழரின் [நாகரின்] கட்டிடக் கலையையும் சிற்பக் கலையையும் ஓவியக் கலையையும் எடுத்துச் சொல்லும் ஓர் அகல்விளக்காக நிமிர்ந்து நிற்கிறது.

அங்கே இருக்கும் ஓர் ஓவியத்தில் நாக அரசன் ஒருவன் தன் தலையில் படம் விரித்த நாகத்தின் தலைவடிவான மணிமுடியை அல்லது கவசத்தை அணிந்திருப்பதைக் காணலாம். அமைதியாகத் தோற்றம் அளிக்கும் அவன் ஒரு கையில் அமுத கலசத்தை வைத்திருப்பினும் கண்களில் இருந்து ஏனோ இரத்தக் கண்ணீர் சிந்துகிறது. அவ்வோவியத்தைப் பார்ப்போர் நெஞ்சங்களை அக்கண்ணீர் உறுத்தும். எனினும் மிக அழகிய ஓவியமது. 

நாக அரசன்

புங்குடுதீவில் இருந்த பண்டைய பத்தினி கோட்டம் காலத்துக்கு காலம் அழிந்தபோதும் அங்கு வாழ்ந்த நம்முன்னோரின் நம்பிக்கைகட்கு அமைய புதுப்பொலிவுடன் ஶ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் தென்கடலைப் பார்த்தபடி கண்ணகி அம்மன் கொழுவிருக்கிறாள்.  சேர அரசர்களின் பூவாகிய வஞ்சிப்பூ மரமே [பூவரசம்பூ மரம்] கோயில்மரமாக இன்றுவரை நிலைக்கிறது. அதனால் கண்ணகி அம்மன் வழிபாடு பல நூற்றாண்டுகளாக புங்குடுதீவில் நடைபெறுகிறது எனலாம். 
“கன்னலொடு செந்நெல் விளை கண்ணகிப் பெண்ணரசியே”
என முத்துக்குமாருப் புலவராலும் 
“வண்ண வண்ண சேலை கட்டும் மீனாட்சி”
என யாழ்ப்பாணம் வீரமணி ஐயராலும் போற்றப்பட்டவள் புங்குடுதீவுக் கண்ணகி அம்மன்.

கோவலன் “சலம்புணர் கொள்கைச் சலதி” என இளங்கோ அடிகளால் வஞ்சகியாகக் காட்டப் பெற்ற மாதவியோடு முறையற்ற வாழ்க்கை வாழ்ந்தவன். அது தெரிந்தும் கள்வனாய் கொலை செய்யப்பட்ட போது மதுரையை எரித்து கோவலனை தமிழ் உள்ளவரை வாழவைத்தவள் கண்ணகி. சேரன் தீவு என்று இலங்கையைக் கூறுவதற்கு அமைய புங்குடுதீவில் மட்டுமல்லாமல் அங்குள்ள தம்புலுவில், காரைநகர், கல்லாறு, கல்முனை, வீரமுனை, புதுக்குடியிருப்பு, கொக்கட்டிச்சோலை என எல்லா இடங்களிலும் கண்ணகி தெய்வமாகப் போற்றப்படுகிறாள். 
இனிதே, 
தமிழரசி

குறிப்பு:
1997ம் ஆண்டு கலசம் இதழுக்கு 'சாலினி' என்ற பெயரில் எழுதியது.

Wednesday 11 May 2016

பேரருள் தன்னில் மூழ்குவனே!


பண்ணே மொழியே பழந்தமிழ் பாவே
          பாரிட மெங்கனும் பயின்றிடும் தேனே
எண்ணே யுந்றன் இளமையின் வனப்பே
          ஏங்கிடும் உளத்து ஒளியெனப் புகுந்தே
கண்ணே நிறைந்தே காட்சியும் தந்தே
          காத்திடு மருள்விழி கண்டு கந்தே
பெண்ணே ஆய பெருமாட்டி யுன்
          பேரருள் தன்னில் மூழ்குவனே!
இனிதே,
தமிழரசி.

Tuesday 10 May 2016

பச்சை வண்ணச் சிட்டின் பாடல்


இச்சை இன்றி நாளும் 
          இன்பம் கேட்க வேண்டின்
பச்சை வண்ணச் சிட்டின் 
          பாடல் கேட்க வேண்டும்
உச்சி மரக் கொம்ப 
          ரேறியிருந்தே பாடுந் நேரம்
பச்சை இலை பாட்டு 
          பாடுதெ ன்றே தோன்றும்
                                                       - சிட்டு எழுதும் சீட்டு  116

Monday 9 May 2016

குறள் அமுது - (114)

குறள்:
“எல்லோருக்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
செல்வர்க்கே செல்வம் தகைத்து”                      - 125

பொருள்:
பணிவுடன் நடப்பது எல்லோருக்கும் நன்மையைக் கொடுக்கும். அவர்களுக்குள் பணம் உள்ளோருக்கே மேலும் செல்வம் வந்து சேர்ந்தது போல் மிகுந்த நன்மையைக் கொடுக்கும். 

விளக்கம்:
இத்திருக்குறள் ‘அடக்கம் உடைமை’ எனும் அதிகாரத்தில் இருக்கிறது. பணிவு என்றால் என்ன? அடக்கமா? அரசியல் தலைவர்களின் கால்களில் வீழ்ந்து எழுகிறார்களே அதுவா? வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிக்கு அருகே கைகட்டி நிற்பார்களே அதனையா? பணிவென்கிறோம்? தீமையைக் கண்டு அடக்கமாக இருக்கலாமா? அது பணிவாகுமா? தன்மானத்தை இழந்து காலில் வீழ்வது அடிமைத்தனம். வேலையில் கைகட்டி நிற்பதும் பணிவு அல்ல. நான் என்ற செருக்கு - தலைக்கனம் - தற்பெருமை அற்ற தன்மையே பணிவாகும்.

செருக்கு வேறு. பெருமிதம் வேறு. அழகு, அறிவு, கல்வி, செல்வம், வீரம், பதவி, அதிகாரம், முன்னோரின் பெருமை போன்றவற்றால் ஒருவருக்கு பெருமிதம் வரலாம். ஆனால் அது தற்பெருமையாகத் தலைக்கனமாக மாறக் கூடாது. அப்படி மாறும் போது பணிவற்ற நிலை தோன்றும். அத்துடன் கடுங்கோபம், பொறாமை உள்ளோரும் பணிவற்று நடப்பர். அது பிறரின் உணர்வை மதிக்காது பேசவைக்கும். கடுஞ்சொற்கள் பலரின் மனதை நோகச் செய்து பகைமையை உண்டாக்கும். பகைமை பல கேடுகளுக்கு வழிவகுத்து கடைசியில் குலத்திற்கே அழிவை உண்டாக்கும்..

அதனால் ஏழை, பணக்காரன், ஆண், பெண், இளைஞர், முதியோர், அங்கயீனர், சாதி, மதம் என்று சொல்லப்படுகின்ற எந்த வேறுபாடும் இன்றி எல்லா மனிதருக்கும் பணிவு நல்லது எனத் திருவள்ளுவர் கூறுகிறார். அப்படிப்பட்ட எல்லா மனிதருள்ளும் பொருள் படைத்தோர் பணிவாக இருந்தால் அது அவர்களுக்கு பெரும் செல்வம் சேர்ந்தது போல் இருக்கும் என்கிறார். தகைத்து என்பது மிகுதல் ஆகும். அழகு, அறிவு, கல்வி, வீரம் உள்ளோரை விட செல்வம் உள்ளோரை மட்டும் பணிவு எப்படி மிகுந்த செல்வந்தர் ஆக்கும்? 

மற்றோரை விட பொருள் படைத்த செல்வந்தர் தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் பொருளைக் காக்கவும் ஆள் அடிமை வைத்திருப்பர். அவர்கள் வைத்திருக்கும் வேலையாட்களிடம் அன்பாய் பணிவாக அரவணைத்து நடக்காவிட்டால் வேலை செய்வோர் எதிரியாவர். அன்றேல் எதிரிகளுக்கு இவர்களைக் காட்டிக் கொடுப்பர். அதனால் இருந்த செல்வமும் அழிந்து உயிரை இழக்கும் நிலையும் வரும். பணிவு உடைய செல்வந்தர்க்கு அழிவுகள் ஏற்படாது செல்வம் மேன்மேலும் வளரும். ஆதலால் மற்றோரைவிட செல்வந்தரை பணிவு மிக்க செல்வந்தர் ஆக்கும் என்றார்.