Monday, 29 February 2016

சங்கத் தமிழ்ச்சான்றோர் காட்டும் கோயில்கள்

சங்ககால முருகன் கோயில் - சாளுவன் குப்பம் [இன்றையநிலை]

சங்ககாலத் தமிழரது கலைகளின் உறைவிடமாகத் திகழ்ந்த கோயில்கள் அழிந்ததால் எமது கலைகளின் பண்டைய பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்ட முடியாத நிலையில் இருக்கிறோம். எனினும் சங்கத்தமிழ்ச் சான்றோர் பலர் அந்நாளில் இருந்த கற்கோயில்கள் பற்றிய தரவுகளைத் தம் சொற்பாக்களில் இயம்பிச் சென்றுள்ளனர். பாண்டியன் கூடாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி என்ற மன்னனது போரின் வலிமையால் பகைநாட்டுக் கோயில் பாழ்பட்டுப் போகும் என்பதை மருதன் இளநாகனார்
கலிகெழு கடவுள் கந்தம் கைவிட
பலிகண் மாறிய பாழ்படு பொதுஇல்
நரைமூதாளர் நாயிடக் குழித்த
வல்லின் நல்லகம் நிறையப், பல்பொறிக்
கான வாரணம் ஈனும்
காடாகி விளியும் நாடுடையோரே
                                                  - (புறம்: 52: 12 - 17)
‘மனித நடமாட்டத்தால், விழாக்களால் ஆரவாரமாய் இருந்த கோயிலின் கடவுள் தூண்[கடவுள்கந்தம்] வழிபாடு இன்றி கைவிடப்பட்டதால் அதற்கு உணவு படைப்பதும் நின்று [பலிகண் மாறிய], பாழ்பட்டுப்போக[பாழ்படு], நரைமுதிர்ந்தோர் சூதாடிய [நாய்] நல்ல மனையிடமும் அழிந்து, கோயில் பலியிடத்தில் காட்டுக் கோழிகள் [கானவாரணம்] முட்டையிடும். நாடாய் இருந்த இடம் காடாகிப் போகும்’ என்கிறார். கடவுள் கந்தம் இருந்த இடத்தை ‘பொதுஇல்’ [அம்பலம்-கோயில்] எனக் குறிப்பிடுவதால் எல்லோருக்கும் பொதுவானதாக அந்த இடம் இருந்ததை உணரலாம். 
சங்ககால கடவுள் கந்தம் [கடவுள் தூண்]

அந்தக் கடவுள் கந்தம் எப்படி இருந்திருக்கும்? மாடு தனது உடலை உராய்ந்து கொள்ளும் கல்லைக் கந்தம் எனச் சொல்வதை சங்க இலக்கியம் காட்டுகிறது.‘ஆண் மரை தினவு எடுத்ததால் [சொரிந்த] அசையும் நிலையிலுள்ள அகன்ற அடியுடைய [மாத்தாள்] கந்தத்தில் சுரைக்கொடி படரும் அம்பலத்தே, சிற்றூரிலுள்ளவர்கள் நாள் தோறும் படைப்பதை மறந்து போனதால் பலிபீடம் [இட்டிகை] வெறிச்சோடிக் கிடக்கிறது’ என்பதை
மரை ஏறு சொரிந்த மாத்தாட் கந்து
சுரைஇவர் பொதியில் அம்குடிச் சீறூர்
நாட்பலி மறந்த நரைக்கண் இட்டிகை"
                                                         - (அகம்: 287: 4 - 6) 
என அகநானூறு காட்டுகிறது.

இப்படி சங்க நூல்கள் காட்டும் பாழ்பட்டுப்போன கோயில் போன்று பல கோயில்கள் இன்று ஈழத்தில் பாழ்பட்டுக் கிடக்கின்றன. மனித வரலாற்றில் கோயில்கள் பாழ்படக் காரணமாக இருப்பவை இயற்கையின் சீற்றமும் அரசின் சீற்றமுமே. யுத்தங்களின் கொடுமையால் கோயில்களும் நாடுகளும் அழிந்து பாழடையும் நிலையை யாரால் மாற்ற முடியும்?

பாழடைந்த பண்டைய கோயில் - பொலநறுவை [இன்றையநிலை]

சங்கத்தமிழ்ச் சான்றோர் இடையே ஈழத்தின் புலவனாக வலம் வந்தவராக முதலில் இனங்காணப்பட்டவர் ஈழத்துப் பூதந்தேவனார். அதனால் சங்ககாலத்தில் ஈழத்தில் தமிழரும் வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரமாய் அவர் நிமிர்ந்து நிற்கிறார். அவர் இன்றைய ஈழத்துக் கோயில்களைப் போல் பாழடைந்து கொண்டிருக்கும் கோயில் ஒன்றை அகநானுற்றில் காட்டுவதைப் பாருங்கள்.

அது கடவுள் இல்லாத கோயில். வழிபடுவோர் இன்மையால் பாழ்பட்டுப் போகும் கோயில். அதன் சுவர்களோ புதர் மண்டி, புற்றுகளுடன் காணப்படுகின்றன. அந்த புற்றுகளில் உள்ள கரையான்களை [குரும்பி - புற்றாஞ்சோற்றை] பெருங்கையுடைய கரடிக் கூட்டம் ஆராய்கின்றது [தேரும்]. எனினும் வலிமையான அடியை உடைய தூண் அசையாது நிற்கிறது. புறாக்கள் அக்கோயிலில் நெடுங்காலம் வாழ்ந்த பழக்கத்தால் அதனைவிட்டுப் போகாது பேடைகளுடன் கூடிசத்தமிட்டு வாழ்ந்து வருகின்றன எனத் தான் நேரில் கண்டதை ஈழத்துப் பூதந்தேவனார் அப்படியே பதிவு செய்திருக்கிறார்.
பெருங்கை யெண்கினங் குரும்பி தேரும்
புற்றுடைச் சுவர புதலிவர் பொதியிற்
கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து
உடனுறை பழமையிற் றுறத்தல் செல்ல
திரும்புறாப் பெடையோடு பயிரும்
பெருங்கல் வைப்பின் மலைமுதலாறே
                                                         - (அகம்: 307: 10 - 15)

போரின் கோரத்தாண்டவம் கோயில்களைப் பாழ்படுகின்றன என்பதை
முனை கவர்ந்து கொண்டெனக் கலங்கி பீரெழுந்து
மனை பாழ்பட்ட மரை சேர் மன்றத்துப்
பணைத் தாள் யானைப் பரூஉப் புறமுரிஞ்சிக்
செதுகாழ் சாய்ந்த முதுகாற் பொதியில்
                                                        - (அகம்: 373: 1 - 4)

எனப் ‘போர் [போர்முனை] நாட்டைக் கவர்ந்து கொள்ள, கலங்கி மக்கள் ஓடியதால் பீர்க்கம் கொடி படர்ந்து வீடுகள் [மனை] பாழ்பட, அங்கேயுள்ள மன்றத்துக்கு காட்டு மரையும் வந்துசேர, பருத்த காலுடைய யானை தனது பெரிய முதுகை உரசுவதால் சோர்ந்து விட்டம் வீழ்ந்த பழைய தூண்களையுடைய கோயில்’ ஒன்றை பாண்டியனாதி நெடுங்கண்ணனார் தமது சொற்பாவில் செதுக்கியுள்ளார்.

இதே போல் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் மக்கள் ஊரைவிட்டுச் சென்றதால் பாழ் அடைந்த கோயில் ஒன்றை அகநானூற்றில் படம் பிடித்துக் காட்டுகிறார். கோயிலுக்கு அருகே ஒரு முருங்கை மரம். அதனை உண்ண வந்த யானை கோயில் சுவரில் உரசுகிறது. கோயில் சுவர் சரிய அதன் உத்திரம் கீழே விழ அதனால் கோயில் மாடத்தில் குடியிருந்த புறாக்கள் பறந்தன. தூசி மண்டிக் கிடந்த பலியிடத்தில் குட்டியீன்ற நாய் குடியிருந்தது. கறையான்களோ கூரையளவு புற்றெழுப்பி விட்டத்து மரங்களைத் தின்றன. 

இவ்வாறு ஊரார் இன்மையால் கோயில் அழிந்ததைக் காட்டும் கடியலூர் உருத்திரங்கண்ணனார் மக்களால் வழிபாடு செய்யப்பட்டு நன்னிலையில் இருந்த கோயில்களையும் படம் பிடித்துக் காட்டத் தவறவில்லை.

திருமாவளவன் கோயில் அமைத்ததை
கோயிலொடு குடி நிறீஇ
வாயிலொடு புழை அமைத்து
                                              - (பட்டினப்பாலை: 286 - 287)
எனச் சொல்லும் பட்டினப்பாலை சிறைப் பிடிக்கப்பட்ட அரச மகளிர் நீராடி, மெழுகி, மலரால் அலங்கரித்து அந்திரேரம் மாட்டிய விளக்கின் ஒளியில் பலர் கும்பிட, வழிப்போக்கர்களும்[வம்பர்] வந்து தங்கியிருக்கும் தூண்களையுடைய கோயில் இருந்ததை
கெண்டிமகளிர் உணதுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலர் அணி மெழுக்கம் ஏறிப் பலர் தொழ
வம்பர் சேர்க்கும் கந்துடைப் பொதியில்
                                                - (பட்டினப்பாலை: 246 - 249)

என்று சொல்வதோடு; சோறு ஆக்கும் போது உண்டான கஞ்சி ஆறு போல ஓடிச் சேறாகி, பின் காய்ந்து தேர் ஓடும் போது துகளாக எழுந்து, சாம்பலில் குளித்த யானை போல் பல்வேறுபட்ட ஓவியங்கள் தீட்டப் பெற்ற கோயிலை மூடுவதை
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி
யாறு போலப் பரந்து ஒழுகி
ஏறு பொரச் சேறாகி
தேர் ஓடத் துகள் கெழுமி
நீறு ஆடிய களிறு போல
வேறு பட்ட வினை ஓவத்து
வெண்கோயில் மாசு ஊட்டும்
                                                       - (பட்டினப்பாலை: 44 - 50)
என்றும் காட்டியுள்ளார்.
திருச்செந்தூர் [இன்றைய நிலை]

புறநானூற்றில் செந்தில் முருகன் கோயிலை
வெண்தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறை
                                                      - (புறம்: 55: 20 - 21)
எனக் குறிப்பிடும் மருதன் இளநாகனார் அகநானூற்றில் திருப்பரங்குன்று பற்றி
சூர்மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல்
சீர்மிகு முருகன் தண்பரங்குன்றத்து
அந்துவன் பாடிய சந்துகெழுனெடுவரை
                                                      - (அகம்: 59: 10 - 12)
எனச் சொல்லுமிடத்தில் திருப்பரங்குன்றத்தை நல்லந்துவனார்[அந்துவன்] பாடிய சந்தனமரம் நிறைந்த[சந்துகெழு] நெடியமலை[நெடுவரை] எனக்குறிப்பிடுகிறார். இவரால் குறிக்கப்படும் நல்லந்துவனார் பரிபாடலின் எட்டாம் பாடலில் முருகனையும் திருப்பரங்குன்றையும் பாடி வணங்கியுள்ளார். அதில் முருகனைக் காண மும்மூர்த்திகளும் திருப்பரங்குன்றம் வருவதாகக் குறிப்பிடுகிறார்.
திருப்பரங்குன்றம் [ இன்றைய நிலை]

திருப்பரங்குன்றத்தில் உள்ள சித்திரச்சாலை மன்மதனின் படைவீட்டை ஒத்தது என்பதை
ஒண் சுடரோடைக் களிறேய்க்கு நின்குன்றத்து
எழுதெழில் அம்பலம் காம வேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்
                                                      - (பரிபாடல்: 18: 27 - 29)
எனப் பரிபாடலின் பதினெட்டாம் பாடலில் குன்றம்பூதனார் சொல்கிறார். அதாவது ‘ஒளி பொருந்திய நெற்றிப்பட்டத்தை உடைய உனது பிணிமுக யானையைப்[களிறு] போன்றது நீயிருக்கும் திருப்பரம்குன்றம். அதில் கீறியுள்ள ஓவியங்களால் அழகாக விளங்கும் அம்பலம் மன்மதனின் அம்பின் தொழில் நடைபெறும் இன்பமாளிகை’ என்கிறார்.

குன்றம்பூதனார் சொன்ன சித்திரச்சாலைக்கு - இன்பமாளிகைக்கு பரிபாடலின் பத்தொன்பதாம் பாடல் மூலம் நப்பண்ணனார் எம்மை அழைத்துச் செல்ல முன்னர் திருபரங்குன்றக் கோயிலுக்கு எத்தகையோர் வந்தார்கள் என்பதை மிகவிரிவாக எடுத்துச் சொல்கிறார்.
சுடரொடு சூழ்வரு தாரகை மேருப்
புடைவரு சூழால் புலமாண் வழுதி
மடமயிலோரும் மனையவரோடும்
…………………………
மாஅன் மருகன் மாட மருங்கு
                                                     - (பரிபாடல்: 19: 19-57)
பாண்டிய அரசன் தன் குடும்பத்தினரோடும் அமைச்சரோடும் திருப்பரங்குன்றத்து மலையின் மேல் ஏறி, திருக்கோயிலை வலம்வந்து மனம் மகிழ்ந்து துதிபாடியதையும், பாண்டியனுடன் வந்தவர்களில் சிலர் தலையில் துணி கட்டி இருந்ததையும் வழியில் சிலர் யானைகளை வழியைவிட்டு அகற்றி, அவற்றை மரங்களில் கட்டி கரும்பு முறித்துப் போடுவதையும், சிலர் தேர்களையும், குதிரைகளையும் வழியில் இருந்து அகற்றுவதையும், இசையறிவு உடையோர் பிரமவீணையை வாசிக்க, சிலர் புல்லாங்குழல் ஊத, சிலர் யாழை மீட்ட, அதற்குத் தக சிலர் முரசை ஒலிக்க, சிலர் பூசையின் சிறப்பைப் பாராட்டுவதைக் காண்பித்து திருப்பரங்குன்றத்துச் சித்திரச் சாலைக்குள் எம்மை அழைத்துச் செல்கிறார்.

மன்மதனின் இன்பமாளிகையான அந்த சித்திரச்சாலையில் துருவ நட்சத்திரத்துடன் சூரியன் முதலிய கிரகங்களின் நிலையை விளக்கும் வானவியல் பற்றிய சித்திரங்களை அவர்கள் பார்ப்பதையும், இன்னோரிடத்தில் இருந்த சில சித்திரங்களைக் காட்டி மனைவியர் கேட்க கணவன்மார் இவள் இரதி, இவன் காமன் எனப்பதில் கூறுவதையும் வேறோரிடத்தில் இருந்த சித்திரத்தைப் பார்த்து இந்த உருவம் பூனையுருவம் எடுத்த இந்திரன், இவள் அகலிகை, இவன் கௌதமன். இவனது கோபத்தினால் அகலிகை கல்லானாள் என்று விளக்கிக் கூறுவதையும் காட்டி மகிழ்விப்பதோடு திருப்பரங்குன்ற முருகன் கோயில் பல சித்திர மண்டபங்களை உடையதாய் மங்கலகரமாக விளங்கியது என்கிறார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருப்பறங்குன்றத்து சங்ககால முருகன் கோயிலுக்குச் சென்ற சங்கச் சான்றோராகிய கடுவன் இளவெயினனார், எமக்காக முருகனிடம் மூன்று பொருட்களக் கேட்டு வாங்கி வைத்துள்ளார்.
…………………………யாம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருளிணர் கடம்பின் ஒலிதா ரோயே
                                                         - (பரிபாடல்: 5: 79 - 81)
இனிதே,
தமிழரசி.
['கலசம்' இதழுக்கு 1999ல் எழுதியது]

Sunday, 28 February 2016

சிறப்புறக் காத்தருள்கவே!

திருக்கோணேஸ்வர நாதர்
வணக்கப் பாமலர்
- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -

நான் மறையி னாரந்த நால்வரந் தணருய்ய
         நலமேவு வடாஆல் நிழல்
ஞானநிறை வானவொரு யோகநிலை தாமருவி
         மோனத் திருந்த குருவே
மேன்மைதரு கனகசபை யிரதசபை யதனுடன்
         மெத்தென்ற ரதன சபையும்
மேவரிய தாமரம் கோணாசலந் திகழ்
         சூடா மணிச் சபையிலும்
ஆன்மகோ டிகளுய்ய அடியாரு ளத்திலும் 
         அனவரத நடன மாடும்
அன்னமென் நடையம்மை பங்கனார் கங்கைவார்
         அனலென்ன செஞ் சடையினார்
தேனன்ன செந்தமிழ் தெரிந்த சங்கப்புலவ
        தென் பொதிகைமலை வள்ளலே
தெண்டனிட் டனமெங்கள் பண்டையர சீந்தெமைச்
         சிறப்புறக் காத்த ருள்கவே

Saturday, 27 February 2016

கதிரடிக்கும் பிஞ்சுக் கரங்கள்!


குவிந்து கிடந்தது நெற்கதிர்ச் சூடு
குனிந்து எடுத்தான் குழந்தை தன்கையில்
கவிந்து தூங்கும் நெற்கதிர் தன்னை
கலைத்து அடுக்கி அடித்தனன் கல்லில்
பொவிந்து வீழ்ந்தன நெல் மணிகள்
புதைந்தன கால்கள் நெல்மணி இடையே
உவிந்து வீழ்ந்த வியர்வைத்துளி கண்டும்
உவந்து கதிரடிக்கும் பிஞ்சுக் கரங்கள்.
                                                                                           - சிட்டு எழுதும் சீட்டு  111

Thursday, 25 February 2016

குறள் அமுது - (112)

குறள்:
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற”                                                   - 34

பொருள்:
மனத்தில் குற்றம் இல்லாமல் இருத்தலே எல்லா அறங்களுமாகும். மற்றவை யாவும் வெறும் ஆரவார ஆடம்பரங்களே. 

விளக்கம்:
இத்திருக்குறள் அறத்தின் மேன்மையை வலியுறுத்திக் கூறும் ‘அறன் வலியுறுத்தல்’ என்னும் அதிகாரத்தில் இருக்கிறது. இத்திருக்குறளில் அறம் செய்பவன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.

அறநூல்கள் முப்பத்திரெண்டு அறங்கள் பற்றிக்கூறும். இந்த அறங்களைச் செய்வோரின் மனம் தூய்மையாக இருக்க வேண்டும். மனத்துக்கண் மாசிலன் ஆதல் - களவு, பொய், அகங்காரம், போட்டி, பொறாமை, அடுத்துக் கொடுத்தல், நயவஞ்சகம் போன்ற குற்றங்கள் இல்லாது மனம் சுத்தமாக இருக்க வேண்டும். 

அதாவது தூசு போன்ற மாசு படிந்த கண்ணாடிக்கு அருகே மிக விலையுயர்ந்த உயர்ந்த பொருள் இருந்தாலும் அதனை அக்கண்ணாடியில் பார்க்க முடியாது. அது போல் மாசு - குற்றம் நிறைந்த நெஞ்சினர் செய்யும் அறமும் அறமாகாத் தெரியாது -விளங்காது. மங்கி மறைந்து போகும். அதுவும் தனியொருவர் அல்லாமல், பொது நலத்திற்கு உழைப்போர் என்று தம்மை அடையாளப்படுத்துவோர் நெஞ்சம் - உள்ளம் - எண்ணம் யாவும் மிகவும் தூய்மையானதாக கைகள் கறைபடியாததாக இருக்கவேண்டும். 

அறத்தை வலியுறுத்திக் கூறவந்த திருவள்ளுவர் ஏன் மனத்தூய்மையை வலியுறுத்துகிறார் என்பது சிந்திக்கத் தக்கது. உலக ஆற்றல்களில் மிகவலிமையான ஆற்றல் தூயமனம் உடையோரின் மன ஆற்றலேயாகும். அத்தகைய மனமுடையோர் எதனையும் ஒருவர்க்கு கொடுக்காத போதும் செய்யவேண்டும் நினைத்தாலே அது அறனாகும். அந்தத் தூய்மை உள்ளத்தின் மன ஆற்றல் அறனாற்றலாய் பிறரை வாழ்விக்கும். அவர்கள் நினைத்தது தானாக நிறைவேறும்.  மனமது சுத்தமானால் மந்திரம் செய்யத் தேவையில்லை என்ற முதுமொழி இதனைச் சொல்லாமல் சொல்கிறது. தூய மன ஆற்றாலே அனைத்து அறனாகும் என்கிறார் திருவள்ளுவர்.

ஆகுலம் என்றால் ஆரவாரம். மனத்தூய்மை இல்லாமல் செய்யப்படுகின்ற அனைத்து அறங்களும் பகட்டுக்காய் செய்யப்படும் கபட நாடகங்களே. இந்த ஆரவாரத்தையே அறநிறுவனங்கள் என்ற போர்வையில் பலர் செய்கின்றனர். எனவே அறம் செய்பவனுடைய மனதில் - எண்ணத்தில் தூய்மை இருக்க வேண்டும். அதுவே எல்லா அறங்களுமாகும். மனதில் தூய்மை இல்லாமல் செய்யும் அறங்கள் யாவும் வெறும் ஆடம்பரமான ஆரவாரங்களே. 

Tuesday, 23 February 2016

அடிசில் 94

பொட்டுக்கடலைத் துவையல்
- நீரா -

தேவையான பொருட்கள்: 
துருவிய தேங்காய்ப்பூ  -  1½ கப்
பொட்டுக்கடலை  -  ½ கப்
பச்சை மிளகாய்  -  6
உப்பு  -  தேவையான அளவு
புளி  -  சிறிதளவு

தாளிக்க தேவையானவை
கடுகு  -  ½ தேக்கரண்டி
உழுந்து  -  ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை  -  5
எண்ணெய்  -  2 தேக்கரண்டி

செய்முறை:
1. தேங்காய்ப்பூ, பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், உப்பு, புளி யாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பட்டுப் போல் அரைத்தெடுக்கவும்.
2. ஒரு சிறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகைப் போட்டு வெடிக்க விடவும்.
3. கடுகு வெடிக்கும் போது உழுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, உழுந்து பொன் நிறமாக வரும்போது இறக்கி அரைத்து வைத்துள்ள துவையலில் கொட்டி நன்கு கலந்து கொள்க.


குறிப்பு: வெங்காயம் சேர்க்காத இந்தத் துவையல் உடனே கெட்டுப் போகாது. விரும்பினால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கலாம். இத்துவையலை வெண்பொங்கல், ரவைப் பொங்கல், தோசை போன்றவற்றோடு உண்ணலாம்.

Sunday, 21 February 2016

அறங்கள் இரண்டா?முப்பத்திரெண்டா?


பண்டைத்தமிழன் வகுத்ததோ இல்லறம் துறவறம் என அறங்கள் இரண்டே. இவ்விரு அறங்களும் உணர்த்தியது ஈகையும் விருந்தோம்பலும். இவற்றால் பிறந்த முப்பத்திரெண்டு அறங்களையும் பார்ப்போமா! 
1. நிழல் தரும் மரங்கள் நட்டு சோலை அமைத்தல்
2. படிப்போர்க்கு உணவு கொடுத்தல்
3. மறு சமயத்தார் நட்பு
4. ஆதுலர்க்கு சாலை அமைத்துக் கொடுத்தல்
5. சிறையில் இருப்போருக்கு உணவு கொடுத்தல்
6. ஆதரவற்றோருக்கு உணவு கொடுத்தல் 
7. குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்தல்
8. தாயில்லாக் குழந்தைகளுக்கு பால் அளித்தல்
9. ஆதரவற்றோருக்கு உடைகள் கொடுத்தல்
10. ஆதரவற்று இறந்தோரின் உடல்களை எரித்தல்
11. நோய் உற்றோருக்கு மருந்து வாங்கிக் கொடுத்தல்
12. எண்ணெய் வாங்கிக் கொடுத்தல்
13. கண் மருந்து கொடுத்தல்
14. தோடு கொடுத்தல்
15. கண்ணாடி கொடுத்தல்
16. திருமணம் செய்து வைத்தல்
17. போக வீடு கட்டிக் கொடுத்தல்
18. ஐயம் - இரப்போருக்குக் கொடுத்தல்
19. மகப்பேறுவுக்கு உதவுதல்
20. பிறர் துயர் தீர்த்தல்
21. தண்ணீர் பந்தல் வைத்தல்
22. வழிப்போக்கர்களுக்கு உதவுதல் 
23. மடம் கட்டிக் கொடுத்தல்
24. தடம் அமைத்துக் கொடுத்தல் - குளம் அமைதல்
25. வைத்தியசாலை கட்டிக் கொடுத்தல்தல்
26. தலைமயிர் வெட்டுவதற்கு பணம் கொடுத்தல்
27. ஆடை வெளுக்கப் பணம் கொடுத்தல்
28. பசுவுக்கு உணவு கொடுத்தல்
29. ஆ உராய்ஞ்சிக் கல் நிறுவுதல்
30. ஏறு விடுதல் - பசுக்கள் கருத்தரிக்க ஏற்ற எருதுகளைக் கொடுத்தல்
31. மற்றைய விலங்குகளுக்கு உணவு கொடுத்தல்

32. விலை கொடுத்து உயிர் காத்தல் - கொல்வதற்கு கொண்டு செல்லும் உயிரினங்களின் உயிர்களை காசு கொடுத்துக் காத்தல்
இனிதே,
தமிழரசி

Saturday, 20 February 2016

எம்மால் முடியுமா?


இந்த உலக இயற்கை பலவைகையான அற்புத இரகசியங்களால் நிறைந்தது. மிகச்சிறிய கரையான் தன் சின்னஞ்சிறிய வாயால் மண்ணை மென்மையாக்கி எத்தனை பெரிய புற்றைக் கட்டி எழுப்புகிறது! கரையான் புற்றைப்போல் ஒரு புற்றை எம்மால் கட்ட முடியுமா? அங்கும் இங்கும் தொங்கிப் பாய்ந்து தன்னைவிடப் பல மடங்கு பெரிய வலையை பின்னுகிறதே சிலந்தி அதன் வலையை நம்மால் பின்னமுடியுமா? 

எனது சிறுவயதில் ஒரு சிலந்தி வலையைப் பார்த்து அதைப் போல் கீற எனக்கு மூன்று நாட்கள் பிடித்தன என்பது எனக்குத்தான் தெரியும். ஏனெனில் நான் சாப்பிட்டு வரமுன்போ, பாடசாலை சென்று வர முன்போ அது தன் வலையில் சிறிது மாற்றம் செய்திருக்கும். அதுவும் மிகமிக நுட்பமாகச் செய்திருக்கும். அந்த நுட்பத்தைக் கண்டுபிடித்து நான் திருத்தம் செய்யவேண்டி இருந்தது. கரையானால் சிலந்தியால் மிக இலகுவாகச் செய்ய முடிந்தனவற்றை எம்மால் செய்ய முடியாதல்லவா? 

காரியாசானும் இத்தகைய ஐந்து அற்புதங்களை கூறி, நன்கு கற்றறிந்த வல்லமை உடையோர் கூட அவற்றை செய்வோம் என்று நினைக்க மாட்டார்கள் என்றும் சிலருக்குச் செய்ய அருமையாக இருக்கும் செயல்கள் சிலருக்கு எளிமையாக இருக்குமென்கிறார். காரியாசான் கூறும் செயல்களைச் செய்ய எம்மால் முடியுமா? பாருங்கள்.

“வான்குருவிக் கூடரக்கு வாலுலண்டுநூல் புழுக்கோல்
தேன்புரிந் தியார்க்குஞ் செயலாகா - தாம்புரீஇ
வல்வவர் வாய்ப்பன வென்னாரொ ரோவொருவர்க்
கொல்காதோ ரொன்று படும்”                                      
                                                          - (சிறுபஞ்சமூலம்: 25)

இச்செயல்களைச் செய்வதற்கு முன்னர் காரியாசான் சொல்லும் அற்புதங்கள் ஐந்தும் எவையெனப் புரிந்ததா? காரியாசானின் இவ்வெண்பாவைப் பொருள் விளங்கக் கொஞ்சம் பிரித்துப் படிப்போமா?

“வான்குருவிக் கூடுஅரக்கு வால்உலண்டு நூல் புழுக்கோல்
தேன்புரிந்து யார்க்கும் செயல்ஆகா - தாம்புரீஇ
வல்லவர் வாய்ப்பன என்னார் ஓரோ ஒருவர்க்கு
ஒல்காது ஓரொன்று படும்”                                            
                                                         - (சிறுபஞ்சமூலம்: 25)

அதாவது வான் குருவிக் கூடு, அரக்கு, வால் உலண்டு நூல், புழுக்கோல், தேன் கூடு போன்றவற்றை செய்தல் எல்லோர்க்கும்[யார்க்கும்] செய்ய முடியாது [செயல்ஆகா]. தாமே செய்யக்கூடிய வல்லமை உடையோரும் [வல்லார்] செய்வதற்கு வசதியானது [வாய்ப்பு] எனச் சொல்லார். ஓர் ஒருவர்க்கு [ஓரோஒருவர்க்கு] இயலாதது [ஒல்காது] ஒருவருக்கு இயலும் [ஓரொன்றுபடும்]. 

வான்குருவிக் கூடு, அரக்கு, வால் உலண்டு நூல், புழுக்கோல், தேன் பொதி பார்த்திருக்கிறோம். நாம் அன்றைய தமிழ்ச் சொற்கள் பலவற்றை மறந்து போகிறோம். அதனால் காரியாசன் கூறும் சொற்களும் எமக்கு விளங்கவில்லை. 

வான்குருவிக் கூடு:

வானத்தில் தூங்குவதால் தூக்கணம் குருவிக் கூட்டை வான்குருவிக் கூடு என்பர். வான் குருவிகள் [தூக்கணம் குருவிகள்] வானத்தில் சிறகடித்துப் பறந்தபடி, மின்மினிப் பூச்சியை மின் விளக்காக வைத்து அடுக்கு மாடி  வீட்டைக் - கூட்டை எவ்வளவு அழகாகக் கட்டுகின்றன! அவை எவ்வளவு எளிமையாய் விரைவாய் அக்கூட்டைக் கட்டுகின்றன. வான்குருவி போல அந்தரத்தே பறந்தபடி அதன் கூட்டைக் கட்ட எம்மால் முடியுமா?

அரக்கு:

நம் முன்னோர்களின் அரிய கண்டுபிடிப்பு இந்த அரக்கு. இப்போ அரக்கு நிறத்தைத் தெரிந்த எமக்கு அரக்கைத் தெரியாது. அந்நாளில் கடிதங்களை பிறர் உடைத்துப் படிக்காது இருப்பதற்காக செந்நிற அரக்கை உருக்கி ஊற்றி, தமது தனிப்பட்ட முத்திரையை [சீல் - seal] அதன் மேல் அடித்து அனுப்புவர். அந்த அரக்கையே இப்பாடலில் காரி நாயனார் குறிப்பிடுகிறார். அரக்கை கல்யாண முருங்கை, பூவரசமரம் போன்ற மரங்களில் இருந்து எடுப்பர். மரத்தின் சாற்றைக் குடித்து வாழும் ஒருவகைப் பூச்சி [அரக்குப் பூச்சி] மரக்கொப்புகளில் பாச்சும் திரவமே காற்றோடு சேர்ந்து அரக்காக மாறுகிறது. அந்த அரக்கை உண்டாக்க எம்மால் முடியுமா? 

வால் உலண்டு நூல்:

‘வால் உலண்டு நூல்’ கேள்விப்பட்டு இருகின்றீர்களா? உலண்டு என்றால் என்ன? கலித்தொகை  ‘உலண்டு’ பட்டுப்புழுவைச் சொல்கிறது. உயர்ந்த பட்டுப்புழுவின் நிறத்தை ஒத்ததாய் எருதின் கண் இருக்கும் என்று சொல்லும் இடத்தில் கலித்தொகை 
“மேல் பட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன்குருக் கண்”     
- (கலித்தொகை: 110: 15)
எனப் பட்டுப்புழுவை உலண்டு என்று கூறுகிறது. வால் என்பது வெண்மையை - வெள்ளை நிறத்தைக் குறிக்கும். பட்டுப்புழு வெண்மை நிறமானது. பட்டுப்பூச்சி இடும் முட்டையில் இருந்து வெளிவரும் பட்டுப்புழு உண்டாக்கும் ‘பட்டு நூலே’ வால் உலண்டு நூலாகும். கயிறு, நூல் போன்றவற்றை ஒன்றில் சுற்றும் போது மேழும் கீழுமாக மாறி மாறிச் சுற்றுவோமே அப்படிச் சுற்றுவதை உலண்டாகச் சுற்றுவது என்றே இன்றும் கூறுகிறோம். அந்த உலண்டாகப் பட்டு நூல்களைச் சுற்றும் செயலை உலண்டுகளே தம் கூட்டைச் சுற்றி முதன்முதல் செய்தன. நாம் அவற்றைப் பார்த்தே அப்படிச் சுற்றக் கற்றோம். வால் உலண்டு நூலை [பட்டு நூலை] உருவாக்க எம்மால் முடியுமா?

புழுக்கோல்:

ஒருவகை அந்துக்கள் நேரான மரக்குச்சிகளை ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து வைத்து கூடுகட்டி கூட்டுப்புழுவாக வாழும். அத்தகைய கோல்கூடுகளே புழுக்கோல் என்று அழைக்கப்படும். அந்தப் புழுக்கோலை அமைக்க எம்மால் முடியுமா?

தேன்கூடு:

இயற்கையின் இனிமை ததும்பும் ஓர் அற்புதமே தேன்கூடு. யாராவது தேன் கூட்டை எடுத்து அளந்து பார்த்திருக்கிறீர்களா? எனது சிறுவயதில் தேன் மெழுகை எடுத்து வைத்து, தேன்கூட்டினுள் அறுகோணத்தில் இருக்கும் சின்னஞ்சிறு அறைகளை அளந்து பார்த்திருக்கிறேன். எல்லா அறைகளும் ஒன்றுபோல் எவ்வளவு நேர்த்தியாகக் கட்டுகின்றன. எந்த வெப்பநிலை மாற்றத்தையும் தாங்கி தேன் பழுதடையாமல் இருக்கிறதே. அந்தத் தேனை, தேன் மெழுகை, தேன்கூட்டை செய்ய எம்மால் முடியுமா? 

குருவி, பூச்சி புழுக்களால் மிக இலகுவாகச் செய்ய முடிந்தவற்றை எம்மால் செய்ய முடியுமா? ஆதலால் ஒருவர் மிக இலகுவாகச் செய்ததை மற்றவரால் அதே போல் எளிதாகச் செய்ய இயலாது என்கிறார் காரியாசான். 
இனிதே,
தமிழரசி.

Friday, 19 February 2016

பக்கத்துணை வருவான்
கத்துகடல் ஒலியும் அவனை
       கந்தன் என்றே முழங்க
பித்துமிகக் கொண்டு நான்
       பிதற்றித் திரியல் உற்றேன்
செத்துமடிந் திடினும் உயிர்ச்
       செம்மைப் பகை அறுக்க
பத்துமலை முருகன் எந்தன்
       பக்கத்துணை வருவான்

Tuesday, 16 February 2016

வானில் போகும் கப்பல் பார்!


பட்டம் பார் பட்டம் பார்
பல வண்ணப் பட்டம் பார்
வட்ட விண்ணின் நடுவே பார்
வால் இல்லாப் பட்டம் பார்
தட்டு போன்ற கப்பல் பார்
தாவி ஏறும் பட்டம் பார்
எட்ட டுக்குப் பாய்கள் பார்
ஏறி இறங்கும் பட்டம் பார்
வட்ட மிடும் பட்டம் பார்
வானில் போகும் கப்பல் பார்    

                                 - சிட்டு எழுதும் சீட்டு  110

Sunday, 14 February 2016

குறள் அமுது - (111)


குறள்:
இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்
துன்பம் உறுதல் இலன்”                                          - 628

பொருள்:
இன்பத்தை விரும்பாமல் துன்பப்படுவது இயல்புதானே எனக்கூறுவன், எப்போதும் துன்பம் அடைவதில்லை.

விளக்கம்:
இத்திருக்குறள் ‘இடுக்கண் அழியாமை’ என்னும் அதிகாரத்தில் இருக்கின்றது. அதாவது துன்பத்தில் [இடுக்கண்] மனம் கலங்காதிருக்கும் தன்மைபற்றி இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுகிறார். துன்பம் வந்த போது மனக்கலங்குவதால் மனஅழுத்தம், மனவுளைச்சல் போன்ற பலவித நோய்களுக்கு அடிமையாகிறோம். அதனால் திருவள்ளுவர் இவ்அதிகாரத்தில் மனநோய்களில் இருந்து நாம் தப்புவதற்கு வழி சொல்கிறார் எனலாம்.

மனிதரிற் பலர் துன்பங்களில் துவளும் போது தத்தமது கொள்கைகளை குழிதோண்டிப் புதைத்து விடுவர். அவர்கட்கு உலக இன்பங்களின்  மேல் இருக்கும் அளவிடமுடியாத ஆசையினாலேயே அப்படிச் செய்கின்றனர். மனிதரின் மனம் எவ்வளவு உறுதியாக அசையாது இருக்கிறதோ அவ்வளவுக்கு அவரது கொள்கையும் உறுதியுடன் எத்தகைய இன்பங்களைக் கண்டாலும் அசையாது இருக்கும். உலக இன்பங்களை விரும்பாதவரை இக்குறளில் இன்பம் விழையான் என்று சொல்கிறார். விழைதல் என்றால் விரும்புதலாகும். உலக இன்பத்தைப் பொருட்படுத்தாது, உலகவாழ்க்கையில் துன்பம் [இடும்பை] இயல்பாக வருவது என்று சொல்பவன் எப்போது எதனையும் எண்ணி துன்பம் அடையமாட்டான். 

துன்பம் இயல்பானது என்று கூறி, துன்பத்தைக் கண்டு வருந்தாதிருப்பதற்குக் காரணம் என்ன? உலக இயற்கை இரவும் பகலுமாகச் சுழன்று கொண்டிருப்பது போல மனித வாழ்வில் இன்பமும் துன்பமும் சுழன்று கொண்டே இருக்கும். அந்த உண்மையை உணர்ந்தோர், எத்தகைய துன்பம் வந்தாலும் துன்பம் அடையார். எமது வாழ்க்கையில் எப்படி துன்பம் வரும் என்பதை முன்னரே நாம் அறிந்து கொள்ளவதில்லை. அதுவே இயற்கை மனிதனுக்குத் தந்த கொடையாகும். துன்பம் வரும் பொழுது அதில் தோய்ந்து கரைந்து போகாதிருக்க, சரி எது, பிழை எது என அறியும் அறிவுத் தெளிவும், மனஉறுதியும் மிக மிக அவசியமாகும்.

அந்தத் தெளிவு திலீபனிடம் இருந்ததாலேயே இன்பங்களில் மூழ்கி இன்பம் காணும் வயதினனாக இருந்தும் இன்பங்களை விரும்பாது, பசித் துன்பம் என்பது எல்லோருக்கும் இயல்பாக உள்ள ஒன்று தானே என நினைந்து, உடல் வருந்தி உயிர் பிரியும் மாபெரும் துன்பத்திற்கும் துன்பப்படாதவனாக இத்திருக்குறளுக்கு இலக்கணமாய் தமிழாய் மலர்ந்தான்.

Wednesday, 10 February 2016

உயிர்த்தமிழை ஈழத்தொளிர வைப்போம்

எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன்
[1956]

பல்லவி
தமிழ்தமிழ் தமிழ்எங்கள் உயிர்தமிழ் தரணியில்
அமிழ்தினுமினிய செந்தமிழ் நிலை காப்போம்

சரணம்
இயல்இசை நாடகம் எனத்தளை தனித்தமிழ்
ஈசனும் ஏட்டினில் எழுதி மகிழ்ந்ததமிழ்

சங்கமிருந்த தமிழ் தரணியை ஆண்டதமிழ்
எங்கள் உயிர்த்தமிழை ஈழத்தொளிர வைப்போம்

அறம்பொருள் இன்பமும் வீடுமளிக்கும் தமிழ்
அகத்தியன் இலக்கணம் அருளிய வருந்தமிழ்

உலகினில் இயலுமா றாயிர மொழிகளுள் 
முன்மொழி தமிழெனு மேன்மைதெளிய வைப்போம்Tuesday, 9 February 2016

எந்தனாவி தழுவுமோ!


பத்துமலை முருகன்

வெள்ளம் பெருகி வீதிதொறு மோட
       வேடிக்கை பார்த்து விளையாடுங்
கள்ளம் இல்லா குழந்தை போல்
       கணமும் விளையாடி மகிழ்ந்து
விள்ளம் பாடிய விழிநீர் சொரிந்து
       வியந்து கனிந்துருகி நின்று 
உள்ளம் சிவக்க உனையும் ஓர்கணம்
       உண்ணி எந்தனாவி தழுவுமோ

Saturday, 6 February 2016

கொம்பதிரக் கேட்டே!


கானமயில் ஆடும் ஒரு காட்சிதனைப் பாரும்
கான கன கான என்று கருங்குயிலும் கூவும்
தேனதுவும் கொம்பிருந்து சிந்தி துளி தூவும்
தெய்ய தெய தெய்ய என தேன்குருவி பாடும்
வானருவி வானிருந்து வையந் தனைச் சேரும்
வைய வய வைய என வாவி அலை மோதும்
கூனலிளம் பிறைமதியும் குளிர்நிலவைப் பொழியும்
குற்றால மலையதனில் கொம்பதிரக் கேட்டே
                                                                           - சிட்டு எழுதும் சீட்டு  109

Tuesday, 2 February 2016

அடிசில் 93

மைலோ பர்ஃபி
- நீரா -

  
தேவையான பொருட்கள்: 
மில்க்டின்  -  1
சீனி  -  ¾ கப் 
மைலோ  -  ½ கப்
பட்டர்  -  50  கிராம்
உடைத்த முந்திரிப் பருப்பு  -  100 கிராம்
கொக்கோ பவுடர்  -  ¼ கப்

செய்முறை: 
1.  வாயகன்ற கனமான அடிப்பக்கமுடைய பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதற்குள் பட்டரை இட்டு இளஞ்சூட்டில் உருக்கவும்.
2.  பட்டர் உருகி வரும்போது சீனியையும் டின் பாலையும் சேர்த்து கிளறவும்.
3.  பாத்திரத்தில் உள்ள கலவை கொதித்து குமிழிகள் வரும்போது மைலோவைச் சேர்த்து கிளறவும்.
4.  கலவை தடித்து வரும்பொழுது உடைத்த முந்திரிப் பருப்புச் சேர்த்துக் கிளறுக.
5.  கலவை பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டாது கரண்டியுடன் சேர்ந்து திரண்டு வரும் போது இறக்கவும்.
6.  சிறிது ஆறியதும் பட்டர் தடவிய தட்டில் இட்டு சமமாக்கி வெட்டியோ அன்றேல் விரும்பிய வடிவில் பிடித்து, கொக்கோ பவுடரில் பிரட்டி எடுக்கவும்.

Monday, 1 February 2016

பாற்கடல் பூங்காவனம் எனும் ஏழு தீவகங்கள்

அசுரரும் தேவரும் பால்கடல் கடைதல்
கம்போடியாவில் உள்ள ஐங்கோர்வாட் கோயிலுக்கு 11/11/2012ல் சென்றபோது எடுத்த படம் 

பாற்கடல் பூங்காவனமா! அதுவும் தீவுகளா!! வியப்பாக இருக்கின்றதா!!! பரந்தாமன் பள்ளி கொண்ட பாற்கடலே தான். அமிர்தம் பெறுவதற்காக அசுரரும் தேவருமாய்ச் சேர்ந்து பாற்கடல் கடைந்தார்களே, அதே பாற்கடல் தான். அன்று அந்தப் பாற்கடலின் பொழிலாய் - பூங்காவனமாய் நம் தீவகங்கள் ஏழும் இருந்தன. நம்பமுடியவில்லையா? முதலில் பாற்கடலைப் பார்ப்போமா?

பாற்கடல் என்றால் என்ன? எனது தந்தை [ பண்டிதர் மு ஆறுமுகன்] எனக்கு திருப்பாற்கடல் கடைந்த கதையைச் சொன்ன காலத்தில் [நான் சிறுமியாய் இருந்த பொழுது] நான் அவரைக் கேட்ட கேள்வியே இது. அது ஓர் இரவு நேரம். முற்றத்தில் நிலவு காய்ந்து கொண்டு இருந்தது. முற்றத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். 

நிலவைக் காட்டி “அது என்ன?” என்று என்னைக் கேட்டார்.
“சந்திரன்” என்றேன்.

“வேறு எப்படியெல்லாம் சந்திரனைச் சொல்வார்கள்?” எனக் கேட்டார்.
“நிலவு, மதி, சந்திரன்..” என்று எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன்.

“இந்த நிலவு எப்படித் தெரிகிறது?” என வினவினார்.
“வட்டமாய் பால் போலத் தெரிகிறது” என்றேன்.
“இப்போ பாற்கடல் புரிந்ததா?” என்று சிரித்தார். எனக்கு ஏதும் புரியவில்லை.

“நிலவுக்கும் பாற்கடலுக்கும் என்ன தொடர்பு?” என்றேன்.
“மகள்! கொஞ்சம் முந்தி நீங்க தானே சொன்னீங்க பால் நிலவு” என்று. “ஏன் பால் நிலவு என்று சொன்னீங்க?” “நிலவு என்ன பசும்பாலாய் சிந்துகிறதா?” என்றார்.
“நிலவு பால் போல வெண்மையாய் இருப்பதால் அப்படிச் சொன்னேன்” என்றேன்.
“கடலும் பால் போல் வெண்மையாய் இருந்ததால் பாற்கடல் என்றார்கள்” என்றார்.

“கடல் எங்கே வெள்ளையாக இருக்கிறது?” என்றேன்.
“வடதுருவம் தென் துருவம் எங்கும் கடல் வெள்ளையாக இருக்கிறதே” என்றார்.
“அது பனிப்பாறை அல்லவா” என்றேன்.
“பனிப்பாறைக்குக் கீழே கடல் இல்லையா?” என்றார். கடல் கடுங்குளிரால் உறைந்து மெல்லப் பனிப்பாறையாய் - பாற்கடலாய் மாறி இருக்கும்” என்றார். தொடர்ந்து கதை சொன்னார்.

“ இப்போது வடதுருவம் தென்துருவம் இருப்பது போல அந்தக் காலத்தில் நம்ம வங்கக் கடலிலும் இடையிடையே பனிப்பாறை இருந்தது. அதைக் கண்ட பண்டைய தமிழர் பாற்கடல் என்று அழைத்தனர். கால நிலை மாற்றத்தால் குமரிமலைக்குக் கிழக்கே பெரிய பனிப்பொழிவு ஏற்றட்டது. நீர்நிலைகள் எல்லாம் உறைந்து போக மக்கள் குடிக்கவும் நீர் இன்றி அவதிப்பட்டனர். அதனால் தமிழரும் ஆரியரும் சேர்ந்து வங்கக் கடலைக் கடைந்தனர்.” 

“ஆண்டாள் ‘வங்கக் கடல் கடைந்த மாதவனை’ எனச் சொல்கிறாள் அல்லவா? வங்கக் கடல் பனிக்கடலாய் - பாற்கடலாய் இருந்ததால் அதைக் கடைந்தார்கள். பனிப் பாறையைக் கடையக் கடைய நல்ல தண்ணீர் - குடிநீர் வருந்தானே! தண்ணீரைக் கண்டதும் தமிழரும் ஆரியரும் ஒருவரோடு ஒருவர் அடிபட்டு, போர் செய்து தமிழரில் ஒருபகுதியினர் இறந்தனர். இருந்த தமிழரில் சில அடிவருடித் தமிழரும் ஆரியரும் சேர்ந்து உண்டாக்கிக் கொண்டதே பாற்கடல் கடைந்த கதை”

பாற்கடலைக் கடைய அசுரர்கள்  நின்ற பக்கம் [கம்போடியா]
தீவார்கள் அசுரர்களாதலால் மகனை அசுரர் பக்கம்விட்டு படமெடுத்தேன்

“சங்க காலத்தமிழருங்கூட கிழக்குக் கடலைத் ’தொடுகடல்’ என்பர். தோண்டிய கடலே தொடுகடல். பனிக்கடலை - பாற்கடலைக் கடையக் கடைய அது தோண்டப்படும் தானே? அதுமட்டுமல்ல இந்தப் பனிக்கடல் கடைந்த கதை கிழக்கே சுமத்திரா, யாவா, இந்தோனேசியா, தாய்லாந்து, கம்பூசியா போன்ற நாடுகள் யாவிலும் சொல்லப்படும் கதையாகும். மேற்கே உள்ள நாடுகளுக்கு அவ்வளவாகத் தெரியாது.” 

“மகள்! இங்க நீங்க இரண்டு விடயத்தைக் கவனிக்க வேண்டும். ஒன்று பாற்கடல் மற்றது தண்ணீர். தண்ணீரை, தமிழர் அமிர்தம் என்றனர். அதனால் திருவள்ளுவரும் ‘வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்று உணர்’ என்றார். அவர் இக்குறளில் மழையே உலகத்தை வாழ்விக்கும் அமிழ்தம் என்கிறார் அல்லவா? தண்ணீர் என்ற அமிழ்தத்தையே தேவர்கள் உண்டார்கள். தண்ணீர் இல்லாவிட்டால் உலக உயிர்கள் எத்தனை நாளைக்கு உயிர் வாழும்?”

“பாற்கடல், அமிழ்தம் போன்ற தமிழ்ச்சொற்களின் உண்மைக் கருத்துக்கள் ஆரியருக்குத் தெரியாது. ஆரியர் பழந்தமிழரின் ஆகுபெயரின் கருத்தை அறியாது பாற்கடல் என்றும் அமிழ்தம் என்றும் சொல்ல, நம்மை ஆளவந்த ஆங்கிலேயரும் Milky Ocean, Nectar என்று சொல்கிறார்கள். அது தொடர்கதையாய் நீள்கிறது. பண்டைய தமிழர் மிகத் தெளிவாய் ஆராய்ந்து அறிந்ததை எல்லாம் போட்டு மூடி, சமாதி கட்டுகிறோம்” என்றார்.


வெள்ளத்தின் மேலொரு பாம்பு

என் தந்தை சொன்னது போல நம் முன்னோர்கள் யாராவது பாற்கடலை வேறுவிதமாகச்  சொன்னதுண்டா? எனத்தேடியதில், பெரியாழ்வார் பாடிய பெரியதிருமொழியில்
“வெள்ளை வெள்ளத்தின் மேலொருபாம்பை மெத்தையாக 
                விரித்து அதன்மேலே
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் 
                காணலாங்கொல்…”
                                            -(பெரியதிருமொழி: 1: 439: 1- 2)

என்கின்றார். இப்பாசுரத்தில் வரும் ‘வெள்ளை வெள்ளம்’ என்பது வெள்ளை நிறமான வெள்ளப் பெருக்கு. இங்கே பாம்பு என்பது வரம்பைக் குறிக்கும். வெள்ளைநிறமான வெள்ளப் பெருக்கின் மேலே பனியாலான வரம்பை[பாம்பை - பனியாலான வரம்பை பாம்பு என்பர் - தமிழரின் ‘பனி அணை’ என்ற சொல்லை பிறமொழி பேசியவர்கள் ‘பணி அணை’ எனச் சொல்ல பிற்காலத்தில் பாம்பணை ஆயிற்று] மெத்தையாகப் பரவி[விரித்து] பரந்தாமன் கள்ளநித்திரை கொள்வதாகப் பாடியுள்ளார். பெரியாழ்வார் பனிப்பெருக்கை ‘வெள்ளை வெள்ளம்’ எனக்கூறுவதால் பனிக்கடலே பாற்கடல் என்பது தெளிவாகிறது.

இருப்பினும் சிலர் பாற்கடலையே வெள்ளை வெள்ளம் என்று பெரியாழ்வார் சொன்னர் எனக்கருதலாம். கம்பராமாயணத்தின் ‘சடாயு வதைப்படலம்/ சடாயு உயிர் நீத்த படலத்தில்’ இராம இலக்குவனர் சீதையைத் தேடிவரும் வழியில் கம்பர் ஒரு காட்சியைக் காட்டுகிறார். வில்லொன்று உடைந்து கிடப்பதைப் பார்த்த இராமன்
“சிலை கிடந்ததால், இலக்குவ! தேவர் நீர் கடைந்த
மலை கிடந்தென வலியது வடிவினால் மதியின்
கலை கிடந்தன்ன காட்சியது”                             
                                                   - (க.ரா: ஆ.கா: 3487: 1 - 3)
என இலக்குவனுக்குச் சொல்கின்றான்.

அதாவது “இலக்குவனே! வில் [சிலை] கிடக்கிறது. அது தேவர்கள் நீர் கடைந்த மந்தர மலை கிடந்தது போல வலிமையுடையது. வடிவத்தால் பிறைச்சந்திரன் கிடப்பது போல காட்சி தருகிறது” என இராமன் கூறுகிறான். இதிலே ‘தேவர்கள் நீர் கடைந்த மலை வலிமை உடையது’ என இராமர் கூறுவதாகத் தானே கம்பர் பாடியுள்ளார். பால் கடைந்தது என்று பாடவில்லையே. இதைவிடவா தேவர்கள் நீர் கடைந்தார்கள் பால் கடையவில்லை என்பதற்கு ஆதாரம் வேண்டும்? 

இதுமட்டுமல்ல பனிக்கடலைக் [பாற்கடலைக்] கடைவதற்கு தகுந்த வலிமைமிக்க மந்தர மலையைத் தூக்கிச் சென்று ‘புங்குடுதீவாரே’ கடலினுள் போட்டார்கள் என்றும் யுத்தகாண்டத்தில் கம்பர் குறிப்பிட்டுள்ளார். மந்தர மலையையே தூக்கும் வீராதி வீரராய் நம் முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆண்டாள் பாடியது போல் வங்கக் கடலில் நீர் கடைந்திருந்தால்  நம்மவர்களும் மந்தரமலையை பனிப்படலத்தின் மேல் உருட்டிச் சென்று போட்டிருப்பார்கள். 

எனவே இன்றும் வங்கக் கடலில் இருக்கும் நம் தீவகங்களே அன்றும் பாற்கடலாய் இருந்த போதும் இருந்தன. அப்போது அவை பொழில்களாக - பூங்காவனங்களாக -சோலைகளாக இருந்தன. நம் தீவகங்களின் பண்டைய பெயர்களே அவை அன்று பூங்காவனங்களாக இருந்தன என்பதற்கு ஆதாரமாய் இருக்கின்றன. கந்தபுராணம், இராமாயணம், நிகண்டுகள் மட்டுமல்ல 'சங்கீத ரத்னாகரம்' போன்ற சமஸ்கிருத இசை நூல்களும் நம் தீவகங்களின் பண்டைய பெயர்களைக் கூறுகின்றன.

சிறுவயதில் கணிதம் படிப்பதற்காக வாய்ப்பாடு பாடமாக்குவோம் அல்லவா? அதுபோல நம் முன்னோர் தமிழைப் படிப்பதற்கு சிறுவயதில் நிகண்டை மனனம் செய்தனர். இன்று எம்மிடம் இருக்கும் நிகண்டுகளில் காலத்தால் முந்தியது திவாகர நிகண்டாகும். அது  கி பி 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பர்.

திவாகரநிகண்டு எமது எழுதீவுகளின் பெயர்களையும் கூறி அவற்றை ஏழு பொழில் - பூங்காவனம் எனவும் சொல்கிறது. 
“நாவலந் தீவே இறலித் தீவே
குசையின் தீவே கிரவுஞ்சத் தீவே
சான்மலித் தீவே தெங்கின் தீவே
புட்கரத் தீவே எனத்தீ வேழே
ஏழுபெருந் தீவும் ஏழ்பொழில் ஏனப்படும்”
                                                       - (திவாகர நிகண்டு: )

          ஏழு பொழிலாய் இருந்த ஏழுபெருந் தீவும்
அன்றைய பெயர்
பேருக்காண காரணம்
இன்றைய பெயர்
நாவலந்தீவு நாவல் மரப்பொழில் நயினாதீவு
இறலித்தீவு மருத மரப்பொழில் 
[இறலி - மருதம்]
காரைதீவு
குசைத்தீவு தர்ப்பைப் பொழில் 
[குசை - தர்ப்பை]
வேலணைத்தீவு
கிரவுஞ்சத் தீவு புங்க மரப்பொழில் 
[கரஞ்சம் - புங்கம்]
புங்குடுதீவு
சான்மலித்தீவு இலவ மரப்பொழில் 
[சான்மலி - இலவு]
அனலைதீவு
தெங்கின் தீவு தென்னை மரப்பொழில்  எழுவைதீவு
புட்கரத்தீவு தாமரைப் பொழில் 
[புட்கரம் - தாமரை]
நெடுந்தீவு


குசை - தர்ப்பை
இன்று இருக்கும் இந்த எழு தீவுகளில் வேலணை - சரவணை, நாரந்தணை, ஊர்காவற்றுறை, மண்டைதீவு எனப் பல பகுதிகளாகப் பிரிந்து இருக்கின்றது. பண்டைக் காலத்தில் இவையாவும் ஒரு பெருந்தீவாக குசைத்தீவு என அழைக்கப்பட்டது என்பதை பண்டைய நூல்கள் ஏழுதீவாய்ச் சொல்வதில் இருந்து அறியலாம். அப்படி இருந்த போதும் சரவணை - சரவணப் பொழிலாகவும், நாரந்தணை - நாரந்தப் பொழிலாகவும் மண்டைதீவு - புன்னைப் பொழிலாகவும் இருந்தமை தெரிகிறது. 


சரவணம் - நாணல்
தர்ப்பையைப் போல சரவணம் என்பதும் ஒருவகைப் புல். சரவணப்புற்கள் வளர்ந்த கரைப்பகுதியை சரவணை என்றனர். அணை என்பது கரையைக் குறிக்கும். தோடை இனத்தில் செம்மஞ்சள் நிறப்பழங்களைத் தருவன நாரந்தம் என அழைக்கப்படும். நாரந்தமரச் சோலையாக இருந்த கரை நாரந்தணை என அழைக்கப்பட்டது.  

புங்கமரமும் புன்னைமரமும் வெவ்வேறானவை. புங்கமரத்தை ‘தைலவருக்கம்’ என்னும் வைத்திய நூல் ‘கரஞ்சம்’ என்று சொல்கிறது. கரிஞ்சம் என்பது அன்றில் பறவை. புங்குடுதீவு புங்கமரப் பொழிலாய் காட்சி அளிக்க, மண்டைதீவுக் கரை எங்கும் புன்னைக்காடு மண்டிக்கிடந்தது. அதனால் மண்டைதீவு என்றனர். கடல் அரிப்பைத் தடுப்பதற்காக நம் தீவுகளின் கடற்கரையைச் சூழ இருந்த கடலுக்குள்ளும் புன்னைமரத்தை பண்டைய தமிழர் நட்டு வளர்த்தனர். இன்றும் புங்குடுதீவு, மண்கும்பான், மண்டைதீவுப் பகுதிகளில் புன்னை மரத்தைப் பார்க்கலாம் என நினைக்கிறேன்.

நம் தமிழ் முன்னோர் எவ்வளவு இரசனை உடையவர்களாக இருந்திருந்தால் ஒவ்வொரு தீவிலும் ஒவ்வொரு மர இனத்துக்கு முதன்மை கொடுத்து வளர்த்து அவற்றின் பெயர்களால் அத்தீவுகளை அழைத்திருப்பர்? நாம் என்ன செய்தோம்??
“மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்”
                                                  - (நற்றிணை: 226: 1)
மருந்துக்காகக் கூட மரத்தைச் சாகடித்து மருந்து உண்ணாத மனிதராய் வாழ்ந்த நம் மூதாதையர் எங்கே? நாம் எங்கே? ஏழு தீவிலும் நம் முன்னோர் எமக்காக விட்டுச்சென்ற ஏழ்பொழிலும் எங்கே!! சிந்திப்போமா?
இனிதே,
தமிழரசி.