Saturday 30 January 2016

கல்லும் மண்ணும் தோன்றமுன் தமிழன் தோன்றினானா?

குறிஞ்சிப்பூ பூத்துக்குழுங்கிய குறிஞ்சி நிலம் [கல்தோன்றிய காலம்]

இலண்டனில் இயங்கும் ‘புங்குடுதீவு நலன்புரி சங்கம் - பிரித்தானியா கிளை’ ஆண்டுதோறும்  ‘காற்றுவெளிக் கிராமம்’ விழாவினை நடத்தி வருகிறது. அது ‘Pungudutivu Got Talent’ and Kattruvalikiramam 2015 விழாவை 19th December 2015 அன்று நடத்தியது. அந்த விழா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய திருமதி வத்சலா, தமிழரின் தொன்மையை எடுத்துச் சொல்லும் 

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி”

என்பதற்கான விளக்கத்தை இணையத்தில் [internet] தேடி, தான் ஏற்றுக் கொண்ட கருத்தை அங்கு எடுத்துச் சொன்னார். அவர் சொன்ன கருத்து அவருடையது அல்ல. ஏனெனில் அந்தக் கருத்து 2004ம் ஆண்டில் ஈழமுரசில் வெளிவந்தது. அதனை நான் அப்போதே வாசித்திருந்தேன். திருமதி வத்சலா அக்கருத்தைச் சொன்ன பொழுது ‘அந்தக் கருத்துப் பிழையாக இருந்தால் அதற்கான சரியான கருத்தைத் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்’ என்றும் கேட்டார். தமிழ் என்னும் பெருங்கடலில் ஒரு சிறுதுளித் தமிழை அறிந்தவள் என்ற முறையில் அப்பாடலுக்கான விளக்கத்தைக் கூறலாம் என நினைக்கிறேன்.

தமிழ்ப்பாடல்களின் வரிகளைப் பிழையாக எழுதியும் பேசியும் வருவதால் அவை தரும் கருத்துக்களும் பிழையாகின்றன. அத்துடன் பாடலின் முழுவடிவத்தையும் பாராது, ‘ஈரடிக்கு’ விளக்கம் தருவதும் கருத்துப் பிழை தோன்றக் காரணமாகிறது. 

ஈழமுரசு 2004ல் வெளியிட்ட பாடலின் வரியையும் கருத்தையும் முதலில் பார்ப்போம்.
“கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி”
[கல்] கல்வி அறிவு தோன்றாத [மன்] மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே [வாளோடு] வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது, இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே [பூமி உருவாவதற்கு முன்பே….?] தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப்படுத்தப் படுகின்றது. எனக் கூறியதோடு, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்தே தோன்றிய தமிழன் என்ன காற்றாகவா இருந்தான்..! என வியந்து, என்ற கேள்வியையும் ஈழமுரசு எழுப்பியிருந்தது. ஈழமுரசில் இந்தக்கருத்தை ‘விவேகன்’ என்பவர் எழுதியிருக்கலாம் என நினைக்கிறேன். இது அவரின் தவறல்ல. பாடலின் முழுவடிவத்தையும் படித்துப் பாராததே தவறு.

இப்பாடலுக்கான இத்தகைய கருத்தை எத்தனையோ தரம் நான் கேட்டிருக்கிறேன். பெரும்பாலும் பட்டிமன்றங்களே இப்படியான கருத்தை மக்களிடையே விதைத்தது. பட்டிமன்றப் பேச்சாளர்கள் தமது கட்சி வெற்றி வெறவேண்டும் என்ற காரணத்தால் பாடல்களை பிழையாகாக் கூறி உண்மையான கருத்துக்களை இருட்டடிப்புச் செய்கின்றனர். அவர்களின் வாய்ச்சாலத்தில் மயங்கும் நம்மவர்கள் அவர்களின் கருத்தை அப்படியே நம்பிவிடுகின்றனர். இந்தநிலை மாறவேண்டும்.

இப்பாடல் ஈரடியால் ஆன குறள் வெண்பா அல்ல. நாலு அடியால் ஆன வெண்பா இது. என் சிறுவயதிலேயே தமிழின் மேலும் நம் தமிழ் முன்னோரின் அறிவியல் கருத்துக்கள் மேலும் எனக்கு ஈடுபாடு உண்டாக இப்பாடலும் ஒரு காரணமாகும். இந்த உலகின் தோற்றத்தைப் பற்றி நம் தமிழ் முன்னோர் அறிந்திருந்த அறிவியற் கருத்தை மூன்றரை அடியில் புதைத்து வைத்திருக்கும் மிக அற்புதமான வெண்பா இது. தமிழ்க்குடியின் பெருமை பேசும் இந்த அற்புதப் பாடல் ‘புறப்பொருள் வெண்பா மாலை’ என்னும் நூலில் இருக்கிறது. புறப்பொருள் வெண்பா மாலை கி பி 9ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. புறப்பொருளின் சூத்திரங்களை வெண்பாக்கள் விளக்குகின்றன. நம் இளம் தலைமுறையினருக்காக அந்த வெண்பாவின் உண்மையான முழு வடிவத்தையும் கொஞ்சம் பார்ப்போமா?

பொய்அகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம்போர்த்த வயங்கு ஒலிநீர் - கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி”                                         
                          - (பு. வெ. மாலை: சூத்திர விளக்க பாடல் 35)

புறப்பொருள் வெண்பா மாலையில் இரண்டாவது படலத்தின் பதிமூன்றாவது சூத்திரம் ‘குடிநிலை’ பற்றிக் கூறுகிறது. தான் பிறந்த குடியின் நிலையை - உயர்வை - புகழை பிறருக்கு எடுத்துச் சொல்லுதல் குடிநிலை எனப்படும்.

“மண்திணி ஞாலத்துத் தொன்மையும் மறனும்
கொண்டுபிறர் அறியும் குடிவர வுரைத்தன்று”           
                                 - (பு. வெ. மா: கரந்தைப் படலம்: 13)
‘மண் செறிந்து, அந்தரத்தே தொங்கும் உலகின் [ஞாலம்] தொன்மையையும் மறக்குடியின் அஞ்சாமை என்னும் வீரத்தையும் காட்டி, பிறர் அறியும் படி தமது குடியின் பெருமையை - புகழை - வரலாற்றை உரைப்பது குடிநிலை ஆகும்’ என்கின்றது இச்சூத்திரம்.
  
வையகம் போர்த்த வயங்குஒலிநீர் கையகலக் கல் தோன்றுதல்

இச்சூத்திரம் சொல்வது போல எப்படித் தன் குடியின் உயர்வை எடுத்துச் சொல்வது? என்பதைக் காட்ட ‘நில உலகின் தொன்மையை - தோற்றத்தைக் கூறி, மண்தோன்ற முன்பே தன்குடி தோன்றிவிட்டது’ என்று வெண்பாவாகத் தன் குடியின் பழைமை கூறப்பட்டுள்ளது.  

“பொய்அகல[பொய்னீங்க] நாளும் புகழ்விளைத்தல்[புகழ்பெருகுதல்] என்வியப்பாம்
வையகம்போர்த்த[பூமியைமூடிய]  வயங்குஒலிநீர்[ஆரவாரித்தகடல்நீர்] - கையகலக்[விலக]
கல்தோன்றி [மலைதோன்றி] மண்தோன்றாக்[மண்தோன்றாத] காலத்தே வாளொடு
முற்றோன்றி[முதலில்தேன்றிய] மூத்த குடி”
                           - (பு. வெ. மாலை: சூத்திர விளக்க பாடல் 35)

‘இந்த உலகம் தோன்றிய காலத்தில், பூமியை மூடி ஆரவாரித்து ஒலி எழுப்பிய கடல் நீர் விலகிச் செல்ல மலை தோன்றி, மண்தோன்றாத அப்பழங்காலத்தே, வாளாண்மை என்னும் வீரத்துடன் எல்லாக் குடிகளுக்கும் முதலில் தோன்றிய மூத்தகுடி நம் குடி. அதனால் பொய் சொல்வோரின் பொய் நீங்கிப்போக, நம் குடி ஒவ்வொரு நாளும் புகழ் பெருகிச் சிறப்படைதலில் என்ன வியப்பு இருக்கின்றது?’ என்பதே இவ்வெண்பாவின் கருத்தாகும்.

இன்றைய அறிவியல் கருத்தின்படி பனியும் நீரும் போர்த்தி இருந்த பூமி

பண்டைத் தமிழில் கல் என்பது மலையைக் குறிக்கும். இன்றும் திண்டுக்கல், குருநாகல் என்னும் இடங்களின் பெயர்களில் உள்ள கல் மலையைத் தானே குறிக்கின்றது. அது கல்வியைக் குறிக்கவில்லை என்பது புரிகிறதா? 

உலகம் மலைகளாகக் காட்சி தந்த காலத்தில் [கல்தோன்றி] - மண் உண்டாக முன் [மண் தோன்றா] - குறிஞ்சி நிலமாக உலகம் இருந்த காலத்தில் கையில் வாளுடன் போர்புரிந்த மூத்த குடி - மறக் குடி - தமிழ் குடி இதில் என்ன வியப்பிருக்கிறது? இல்லையே என்கிறது இப்பாடல். 

அதாவது ஆரவாரித்து ஒலி எழுப்பிய ஊழிக்கடல் நீர் விலகிச் செல்ல மலை தோன்றியது. மண் உருவாகாமல் குறிஞ்சி நிலமாக உலகம் இருந்த காலத்தில் வாளைக் கையில் பிடித்து வீரத்துடன் போர் புரிந்த மறவர் குடி, தமிழ்க்குடி என்று பெருமையுடன் நம் குடியின் வரலாற்றை உலகிற்கு எடுத்துச் சொல்லும் பாடல் இது.

பண்டைக்கால போர் ஆயுதங்கள் இரண்டு வகை. 
1. கைவிடு படை - வேல், வில் போன்றவை
2. கைவிடாப் படை - வாள்
கைவிடு படை பயன்படுத்துவோர், இராமர் வாலியைக் கொன்றது போல் ஒளித்திருந்து அம்பெய்தும் கொல்ல முடியும். அதற்கு பெரிய வீரனாக இருக்கத் தேவை இல்லை. ஆனால் கைவிடாப் படையாகிய வாள் வைத்திருப்பவன் எதிரியுடன் நேருக்கு நேர் நின்று போர் புரிந்து தனது வாளாண்மையால் வெற்றியை நிலை நாட்ட வேண்டும். அத்தகைய வாளாண்மை மிக்க குடி, நம்குடி என மார் தட்டும் பாடல் இது.
இருநிலம்

பூமியானது மலையும் கடலுமாக இருந்த காலத்தில் தமிழர் அதனை 'இருநிலம்' என அழைத்தனர். இன்றும் இருநிலம் என்ற பெயரால் இவ்வுலகை அழைக்கிறோம் தானே! அருணகிரினாதரும்
“அகரமுமாகி அதிபனுமாகி அதிகமுமாகி அகமாகி
          அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி அவர்மேலாய்
இகரமுமாகி எவைகளுமாகி இனிமையுமாகி வருவோனே
          இருநிலமீதில் எளியனும்வாழ எனதுமுனோடி வரவேணும்”
எனத் திருப்புகழில் பூமியை இருநிலம் என்று பாடி இருப்பதை இத்திருப்புகழ் காட்டுகின்றது அல்லவா! இவ்வுலகின் ஆதிக்குடியாய் இருந்த தமிழன் கடலையும் மலையையும் ‘இருநிலம்’ என அழைத்ததில்  வியப்பு இருக்கிறதா?  உலகைக் குறிக்கும் இது போன்ற சொல் உலகமொழிகளில் எத்தனை மொழிகளில் இருக்கிறது?

கள்ளிவேர்கள் மலையை உடைக்கின்றன

பண்டைக்காலத்தே இருநிலமாய் - கடலும் மலையுமாய் இந்தப் பூமி இருந்தது. கடல் அரிப்பாலும் காற்றாலும் மழையாலும் பனியாலும் இடியாலும் அருவி நீராலும் மரவேர்களாலும் மலையாய் இருந்த குறிஞ்சி நிலம் மெல்ல மெல்ல மண்ணாக மாறியது. அதனால் முல்லை நிலமும், மருத நிலமும் நெய்தல் நிலமும் தோன்றின. ஆதலால் தமிழர் 'நானிலம்' எனவும் பூமியை அழைத்தனர். தமிழில் இருக்கும் இச்சொற்களே தமிழ்க்குடி தொன்மையான குடி என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லும். இன்றைய அறிவியல் ஆய்வாளரான Dr Yoav Bashan என்பவர் கள்ளி மரவேர்கள் மலையை மண்ணாக மாற்றுவதை படம் எடுத்துக் காட்டியுள்ளார். 

குறிஞ்சி நிலத் தலைவன் மண்தோன்ற முன் தன்குடி தோன்றியது என்று உலகின் தோற்றத்துடன் தமிழ்க்குடியின் வரலாற்றை அறிவியல் கருத்துடன் கூறுவதாக அமைந்துள்ள ஓர் அற்புதமான வெண்பாவிற்கு நாம் பிழைபடக் கருத்துக் கூறி “தமிழன் என்ன காற்றாகவா இருந்தான்..!” என்று கேள்வி எழுப்புதல் நம்மை நாமே இழிவு படுத்துதல் ஆகாதா!!

இனியாயினும் நம்மவர்கள் பாடல்களின் முழுவடிவையும் பார்த்துக் கருத்துச் சொல்லுங்கள் என மிகுந்த தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நம்குடி, உயர்ந்த அறிவியல் கருத்துக்களை உலகிற்கு எடுத்துச் சொல்லி உலக நாகரிகத்திற்கு வித்திட்ட தமிழ்க்குடி என்பதை மறவாதிருப்போம்.

கல்லும் மண்ணும் தோன்றமுன் தமிழன் தோன்றினானா? எனக் கேட்போருக்கு “கல் தோன்றி மண் தோன்ற முன் தமிழன் தோன்றிவிட்டான்” என்று உரக்கச் சொல்வோம்.
இனிதே,
தமிழரசி.

Friday 29 January 2016

ஏறே சொல்வாய்!



கந்தன் என்றும் கடம்பன் என்றும்
        கதறுவோர் தம்மை நீத்தும்
எந்தை என்றும் ஏழை என்றும்
        ஏங்குவோர் தம்மைப் பார்த்தும்
பந்தம் என்றும் பாசம் என்றும்
        பதறுவோர் தம்மைக் ஏய்த்தும்
உந்தன் உள்ளம் உவப்ப தேனோ
        உமையவள் ஏறே சொல்வாய்
இனிதே,
தமிழரசி.

Wednesday 27 January 2016

தாவியேற நின்ற மரம் பாரீர்!


சின்ன மரம் பெரிய மரம் எந்த மரம் என்ன
சிறுவர் நாம் கூடியேற சிறந்த மரம் என்ன
இன்ன மரம் நல்ல மரம் இந்த மரம் என்று
இங்கு மங்கும் ஓடியாடி தேடு மரம் என்ன
உன்ன நல்ல ஒதிய மரம் உந்த மரம் என்று
ஓங்கி வளர் காட்டினிடை பார்த்த மரம் என்ன
வன்ன மரம் வளையு மரம் அந்த மரம் என்று
வடிவாகத் தாவியேற நின்ற மரம் பாரீர்!
                                                                       - சிட்டு எழுதும் சீட்டு  108

Saturday 23 January 2016

குறள் அமுது - (110)


குறள்: சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
          வறம்கூர்ந் தனையது உடைத்து               -1010

பொருள்: மாட்சிமையுடைய செல்வர்களுக்கு வரும் சிறிய வறுமை, மழைபெய்யாது உலக வளம் குறைந்தது போன்றதே.

விளக்கம்: இத்திருக்குறள் ‘நன்றிஇல் செல்வம்’ என்னும் அதிகாரத்தில் இருக்கிறது. இங்கே நன்றி என்பது நன்மையைக் குறிக்கிறது. நன்மையைக் கொடுக்காத செல்வத்தைப் பற்றி திருவள்ளுவர் இவ்வதிகாரத்தில் சொல்கிறார். பிறர் பொருளில் தொண்டு நிறுவனங்களை நடத்துவோரிடமிருக்கும் செல்வம் பற்றியோ அத்தகைய செல்வந்தர் பற்றியோ கூறவில்லை. தனிப்பட்ட மனிதர் பற்றியே இது பேசுகிறது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

சீர் என்பது பெருமை, மாட்சிமை, சிறப்பு, செல்வம், அழகு  குறிக்கும் சொல்லாக இன்று கருதப்படுகிறது. இவை யாவும் சேர்ந்த தன்மையையே  சீர் எனும் சொல் குறிக்கிறது எனலாம். பெருமை, மாட்சிமை என்பன தான் கற்ற கல்வியை மற்றோரும் அறிந்து கொள்ள எடுத்துச் சொல்லி கற்பிப்பதாலும், தான் வருந்தி உழைத்த பொருளை பிறருக்குக் கொடுப்பதாலும் கிடைப்பவையாகும். பிறரது பொருளை தன் பொருள் போல் கொடுப்பதால் கிடைப்பது சிறப்பே. அதனால் பெருமை கொள்ள ஏதுமில்லை. அப்படிப் பெருமை கொண்டாலும் அது தற்பெருமையே ஆகும்.

பிறர் பொருளைக் கொடுப்போரிடம் இருந்து தன் பொருளைக் கொடுப்போரை உயர்வாக வேறுபடுத்திக் காட்டவே ‘சீருடைச் செல்வர்’ எனப் போற்றுகிறார். ‘துனி’ என்றால் வறுமை. சிறுதுனி - சிறிய வறுமை. தான் உழைத்த பொருளை, தன் முன்னோர் உழைத்த பொருளை பிறருக்குக் கொடுப்போனுக்கு ஏதோ ஒருவகையில் சிறிய வறுமை வந்தால் அந்த வறுமை எப்படிப்பட்டது என்பதையே இக்குறள் எடுத்துச் சொல்கிறது.

மழைக் காலத்தை மாரிக்காலம் என்போம் அல்லவா! இங்கே மாரி என்பது மழையைக் குறிக்கின்றது. மழை பெய்யாது போவதை வறம் கூர்தல் என்கின்றார். தனக்கு உடைமையானவற்றை பிறர் நலன்கருதிக் கொடுக்கும் பெருமைமிக்க செல்வருக்கு உண்டாகும் சிறுவறுமை மழைவளம் குன்றியதைப் போன்றதே. ஏனெனில் மழையின்றி வாடும் உயிர்கள் மீண்டும் மழை பொழிய செழிப்பு அடையும். அதுபோல சிறுவறுமை வந்த சீருடைச் செல்வர்க்கு மீண்டும் பொருள் சேரும் அவர்கள் அப்போதும் முன்போல அள்ளி வழங்குவர்.

Thursday 21 January 2016

அடிசில் 92

பாற்கட்டி [பன்னீர்] 
- நீரா -      

தேவையான பொருட்கள்: 
பால்  -  2 லீற்றர்
எலுமிச்சம் சாறு  -  ¼ கப்
உப்பு  -  ¼ தேக்கரண்டி

செய்முறை:
1.  ஒரு பாத்திரத்துள் பாலைவிட்டு அளவான நெருப்பில் சூடாக்கவும்.
2. அடிப்பிடியாதிருக்க அடிக்கடி துழாவிக்கொள்ளவும். 
3. பால் தடித்து கொதிக்க விரைவாக ஆவி வரும் போது பாலை அடுப்பில் இருந்து இறக்கி, துழாவிய படி எலுமிச்சம் சாற்றை விட்டுத் துழாவவும்.
4. பால் திரையத் தொடங்கும். பால் திரையாவிட்டால் மேலும் கொஞ்சம் எழுமிச்சம் சாறு விடவும். அப்படியே 10 - 15 நிமிட நேரம் வைக்க பாலில் உள்ள நீர் வேறாக, திரைந்த பால் அந்நீரில் மிதக்கும்.
5. ஒரு பாத்திரத்தில் வடிதட்டை வைத்து, அதன் மேல் சுத்தமான மெல்லிய வெள்ளைத்துணித் துண்டை [12” Cheesecloth] விரித்து அதனுள் திரைந்த பாலை கவனமாக ஊற்றி வடிக்கவும்.
6.  துணியின் நான்கு மூலையையும் பிடித்து, திரைந்த பால் வெளியே சிந்தாது பொட்டலமாகப் பிடித்து, மெதுவாகப் பிளிந்து நீர் முழுவதையும் அகற்றவும்.
7. துணியை விரித்து நீரற்ற பால் திரையலின் மேல் உப்பைத் தூவி கலந்து கொள்க.
8.  பாற்கட்டியோடு இருக்கும் அத்துணியை வாயகன்ற பாத்திரத்துள் வைத்து, இறுக்கமாய்  ¾” தடிப்பத்தில் சதுரமாகப் பரவி, அத்துணியால் மூடி அதன் மேல் இன்னொரு பாத்திரத்தை வைத்து அதற்கு பாரம் வைக்கவும். 
9. ஒரு மணி நேரம் சென்ற பின் எடுத்து சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.
10. வெட்டிய பாற்கட்டிகளை உடனடியாகவோ அல்லது இரண்டு நாட்களுக்கு குளிரூட்டிய பெட்டியில் வைத்தோ பயன்படுத்தலாம். 

Wednesday 20 January 2016

விடியல் விடியாத விதவைகள் வாழ்வு


நான் இலங்கை சென்றிருந்த போது என் நெஞ்சைக் கலங்க அடித்து, என்னைச் சிந்திக்க வைத்த இரு விதவைகள் பற்றிப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். எம்மவர் சிலரிடம் விதவைகள்! என்றாலே பாவிகள், மங்கல நிகழ்வுகளுக்கு வரக்கூடாதவர்கள் தீண்டத் தகாதவர்கள் என்ற நிலைப்பாடு இன்றும் இருக்கிறது. அதுபோல் அந்தப் விதவைப் பெண்களின்  வயதென்ன? எதனால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போ? விதவையாய்ப் போனார்கள் என்று எண்ணிப்பாராது அவர்களது மனதை நோகச் செய்வதில் வல்லவராயும் நாம் இருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விடயமாகும். 

அதிலும் மிக இளமையில் ஓர் அழகான பெண் விதவையானால் ஆண்களின் கழுகுப் பார்வைக்கு - காமப் பார்வைக்கு அவள் தப்பமுடியாது என்பது உலக நிலைப்பாடு. அதற்கு நம் நாடும் என்ன விதிவிலக்கா? 

நம் நாட்டில் இந்தியப்படை நிலைகொண்டிருந்த காலத்தில் விதவை ஆக்கப்பட்ட ஒரு விதவையவள். மலைநாட்டைச் சேர்ந்த வசதியான குடும்பத்தில் பிறந்தவள். பருவவயதில் யாழ்ப்பாணப் பையன் ஒருவனைக் காதலித்து திருமணம் செய்தாள். அவளது புகுந்த வீடும் பிறந்த வீடும் அவர்களுக்கு எதிரி ஆனார்கள். அதனால் மலையகத்திலும் யாழ்பாணத்திலும் வாழமுடியாது, வன்னியில் சென்று வாழ்ந்தனர். காதல் வாழ்வின் இனிமையை இளமைக் கனவுகளோடு சுவைத்து மகிழ்ந்தனர். காதலின் சுவையில் கிடைத்ததோ இரு  குழந்தைகள்.

அவள் இரண்டாவது குந்தையை வயிற்றில் சுமந்த காலத்தில் தொடர்ந்து அவசரகாலச்சட்டம் இருந்தது. ஒரு நாள் மூத்த குழந்தை பாலுக்கு அழ, அக்குழந்தைக்கு பால்மா வாங்கி வருவதாய்க் கூறிக் கணவன் சென்றான். கணவன் சென்ற சிறிது நேரத்தில் விமானம் குண்டுமழை பொழியத் தொடங்கியது. அதைக் கண்டு பயந்த அவளுக்கு பிரசவவேதனை தொடங்கியது. அடுத்த குடிசையில் இருந்த கிழவனும் கிழவியும் அவளுக்கு உதவினர். அந்த ஊரே குண்டுகளால் சிதறுண்டு ஓடியது.

கணவனுக்கு என்ன நடந்தது என்பதையும் அறியாது, அக்கணம் பிறந்த குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு, குழந்தைகளைக் காப்பதற்காக அந்த முதியோருடன் போனாள். போகும் வழியில் கணவன் குண்டடிபட்டு இறந்து கிடப்பதைப் பார்த்தாள். ஊரே மரணவீடாய் இருந்தது. முதியவர் சொன்னபடி அருகே இருந்த மரவள்ளி தோட்டத்தில் கணவனின் உடலைப் போட்டு, மண்ணால் மூடிச் சென்றாள். ‘அன்று வற்றிய கண்ணீர் இன்னும் வரவில்லை’ என்று கூறி விரக்தியாய்ச் சிரித்தாள்.

வன்னியில் நடந்த ஒரு மரணவீட்டின் ஆடம்பரத்தைக் கேட்டே அவள் எனக்குத் தன் கதையைக் கூறினாள். "நாம வளக்கும் ஆடு மாடு செத்தாக்கூட அன்பா புதைப்பம். என்னக் காதலிச்சி எனக்கா வாண்டவனை, குழிதோண்டி புதைக்காம, இரண்டு கையாலும் மண்ணைக் கிளறி போட்டு, மூடி எதுக்கு ஓடினேன்? என் உயிர் மேல் இருந்த ஆசையா? நான் பெற்றெடுத்த குழந்தைகள் மேல் இருந்த பாசமா??" என்றாள். 

இறந்த கணவனின் வயது இருபத்திமூன்று, அவளுக்குகோ இருபது வயதுகூட ஆகவில்லை. இரு குழந்தைகளுக்குத் தாயாய், பெற்றாரும் உற்றாரும் இன்றி தனிமரமாக நின்றாள். என்ன வேலையெல்லாம் செய்து, எப்படிக் குழந்தைகளைக் காப்பாற்றினாள் என்பதை அவளின் தமிழில் சொல்வதே மிகவும் நல்லது என நினைக்கிறேன்.

"என் முன் வீட்டு கிழடு இரண்டும் இல்லயென்னா நானும் பிள்ளைகளும் அண்டைக்கே செத்திருப்பம். அந்தக் கிழடு இரண்டும் தான் என் பிள்ளைகளைப் பாத்துது. நான் அதுகளப் பாத்தன். அஞ்சி சீவன்களின் வையித்த கழுவ நான் வன்னியில் நடக்காத இடமில்ல. மூனு மூனரைக்கு எழும்பி நடக்கத்துவங்கினா மாங்குளம், ஒட்டுசுட்டான், துணுக்காய், பாண்டியன்குளம், பூவரசங்குளம், வவுனிக்குளம் பூனரி, பெரிய முருகண்டி, குங்சுப்பரந்தன், முள்ளியவள எங்காச்சும் நாத்து நட, களபிடுங்க வேல கிடைக்கும். அந்த நேரம் தான் இராணுவமும் கொஞ்சம் அடங்கி இருக்கும். அரைத் தூக்கத்தில இருப்பானுக. நம்ம சனங்களவிட இந்திய ராணுவம் நல்லவனுக. தாலி கட்டினவங்கள, காலைமூடி உடுப்பு போடுற பெண்ணுகள அவனுக தூக்கயில்ல. முழகா[ல்] வரை உடுப்பு போடுறவள தூக்கினாங்க". 

"அவனுகளுக்கு நான் பொண்ணு என தெரியாம இருக்க தலப்பாகட்டி, சேட்டு போட்டு கிழடுகட்டையோடு போய்வருவன். இப்படி வேலைக்கு போய்வரச் சொல்லி கிழவி புத்திசொல்லி தந்திச்சி. வேல செஞ்சி களச்சி வீட்டவர  எட்டு, ஒம்பது மணியாயிடும். கூழோ, கஞ்சியோ; உப்பு இருக்கோ இல்லையோ அஞ்சி பேரும் சேந்து குடிச்சிட்டு படுப்பம்."

"இப்படி வன்னி எங்கும் வேலைக்கு அலைந்தால் கால் கை வலிக்காதா?" என்று கேட்டேன். 

அதற்கும் ஒரு சிரிப்பு. மனசும் உணர்ச்சியும் மரத்த கட்டைக்கு கால், கை ஏதாவது இருந்திச்சா? இல்ல எனக்கும் கொஞ்சம் உணர்ச்சி இருக்கு எண்டத நான் சொல்லப் போற ரெண்ணு வெசயம் எனக்கு சொல்லி தந்திச்சி. எப்பவும் களத்து வேல இருக்காது! வேற வேலை தேடி ஆகனுமே. உப்பளத்தில வேல இருக்கு எண்டானுக. அது இரவில உப்பள்ளுற வேல. பகலில பிள்ளைகளோடு இருக்கலாமே. உப்புத்தானே அள்ளீரலாம் என்னு அந்த வேலைக்கு போனன். ஒரு மூட்டை உப்பு வெட்டி அள்ளினா பத்து ரூபா தருவானுக. 


பனங்கருக்கு மட்டை தெரியுங்களா? கருக்குமட்ட  பனமரத்தை, இரண்டு கையாலும் கட்டிப்பிடிக்கிறமாதிரி பிடிச்சிருக்குமே, அந்தக் கருக்குமட்டையை எடுத்து அது கட்டிப்பிடிச்சிருக்கும் கைப்பிடிக்கு நடுவால பிளக்கோணும். இரண்டு கருக்கு பக்கம் உள்ளுக்கு வர கத்திரிக்கோல் போல வைச்சி கைப்பிடியில பிடிக்கணும். உப்பளத்தில உக்காந்து கொண்டு பளிங்குமாதிரி இருக்கிற உப்பை கருக்குக் கத்திரிக்கோலிட கருக்கால கை இரண்டையும் உள்ளேயும் வெளியேயும் ஆட்டி ஆட்டி வெட்டி எடுக்கனும். காலையில மூனுமணிக்கு லோறிவர முந்தி பத்து மூட்டை உப்பு கட்டினா நூறு ரூபா கிடைக்கும். 

உப்பு மேல இருந்து வேல செஞ்சபோ, தெரிஞ்சிச்சி எனக்கும் மலவாசல் சலவாசல் இருக்கு என்னு. நீங்க பொண்ணு தானே! உங்களுக்கு தெரியும் பிள்ளை பெத்தா, மல சல வாசல் வேதன எப்பிடி இருக்குமென்னு. அந்த நோ எல்லாம் கால் தூசு. மலசலவாசல் எரியிர எரிவில மலமும் போகாது. சலமும் போகாது. அந்த வேதனையைச் சொல்ல முடியாது. அநுபவிச்சா தெரியும்." 

அவள்பட்ட வேதனை அவளின் சொல்லிலும் உடலின் நடுக்கத்திலும் தெரிந்தது. ‘அந்த வேலைக்கு போகாது நின்றிருக்கலாமே’ என்றேன். 

"நான் வேலைக்கு போகாட்டி, என்னை வேலைக்கு கொண்டுபோன உப்பள குத்தகைக்காரனுக்கு யார் காசு கொடுப்பா? அவன் என்ன சும்மாவிடுவானா? அவனுக்கு நான் காசு கொடுக்கனுமே. எங்க வயித்தை கழுவனுமே. அப்ப வேற வேலயும் கிடைக்கல்ல".

"ஒவ்வொரு வீடு வீடாப் போய் வேலகிடைக்குமா என்னு கேட்டு, மாவிடிக்கிறத்தில இருந்து கொடுக்கிற எந்த வேலயையும் செஞ்சி என் குழந்தைகள வளத்தன். சில வீட்டுக் காரங்க வேல இல்ல என்று சொல்லாம நாய உசுப்பேத்தி கடிக்கவிடுவானுக. சில பேரு களவெடுக்க வந்ததா அடிக்க வருவானுக. ஒரு மகராசி ‘மாஇடிக்க வா’ என்னா. பத்து கிலோ அரிசி ஊறப்போட்டு இருந்தா. அத மாவா இடிச்சி, வறுத்துக்  கொண்டிருந்தன். அந்த மகராசி கிணத்தடிக்கு குளிக்க போனா. அப்ப வந்தானே பாரு அந்த மகராசி புருசன் - சண்டாளன். அவன் நின்ன நிலையை எப்படி சொல்ல. எனக்கும் உணர்ச்சி இருக்கு என்னு காட்டித்தந்தான். அவனோட மல்லுக்கட்டி, சுடச்சுட வறுத்த மாவ அவனுட கண்ணுல கொட்டிட்டு ஓடி வந்தவ. இப்பிடிச் சொல்ல எத்தனயோ இருக்கு’ என்றாள். 

இன்னொருத்தியின் கணவன் என்னிடம் கணிதம் படித்தவன். 2002ல் இலங்கை போனபோது மனைவியை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தான். 2009ல் அவன் இறந்தது எனக்குத் தெரியாது. என்னை கடைத்தெருவில் கண்டவளிடம் அவனைப்பற்றி  கேட்டேன். "அவர் என் கண்முன்னால் செல்லடிபட்டு சிதறிப் போனார். நானும் பிள்ளைகளும் இருக்கிறோம். வவுனியா முள் வேலிக்குள் இருந்ததை விட, வீட்டிற்கு வந்து பின்பே, நரக வேதனையை அநுபவிக்கத் தொடங்கினேன். பல பேரிடம் பிடுங்குப்பட்டு, என் குழந்தைகளின் முன்னிலையில் நான் நாளுக்கு நாள் சீரழிவதைவிட வயதான கிழமோ, கூனோ, குருடோ, முடமோ ஆண் என்று ஒருவன் என் வீட்டில் கிடந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்தேன். அவரின் உறவுகளும், எனது உறவுகளும் உலக நாடுகளில் இருந்து பணத்தைத் தரலாமே தவிர, சதைப்பிண்டத்திற்காக அலையும் நரிக்கூட்டத்திடம் இருந்து என்னையும் என் பெண் பிள்ளைகளையும் காப்பாற்ற  முடியுமா? அதனால் என் தந்தையை விட மூத்தவனை வீட்டோடு வைத்திருக்கிறேன்" என்றாள்.

இப்படி ஈழத்துப் போர் உருவாக்கிய விதவைகளின் துயரங்கள் பெண்ணினத்தின் மென்மையை, நாணத்தை படுகுழி தோண்டிப் புதைத்துவிட்டது. அன்பில்லாது வற்றல் மரமாய் மரத்துப் போன மனதோடு, ‘பிள்ளைகளுக்காக வாழ்கிறோம்’ என்ற ஒரே எண்ணத்தில் காலத்தை கடத்த நினைக்கிறார்கள். விடியல் விடியாத விதவைகளாய் வாழும் விதவைகளின் இந்த நிலைப்பாடு வளரும் தமிழ் இனத்துக்கு நல்லதல்ல.  
இனிதே,
தமிழரசி.

Tuesday 19 January 2016

கொடுத்தருள் பெரும் வள்ளலே!

அருள்மிகு திருக்கோணேஸ்வர நாதர்
வணக்கப் பாமலர்
- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் - [எனது தந்தை]

கோணை நாயகர்திருப் பாதமலர் தழுவியே
         குளிர்ந்து குழையும் மாவலி
கோடானு கோடி அலைக்கரங் கொண்டுனைக்
         கும்பிட்டு வாழ்த்தும் உததி
வேணுகானஞ் செய்து ஆடியும் பாடியும்
         விரும்பித் துதிப்பன புட்கள்
வேதாந்தி போல்நின்று கண்ணீர் சொரிந்தன்பு
         மலர் தூவுமே மரங்கள்
காணுமிவ் வுலகினைக் கட்டுமைம் பூதமும்
         கடன்மையைச் செய்து வக்கும்
கர்த்தனே உடுக்களும் மதியமும் இரவியும்
         கண்கொண்டு பார்க்கு மையா
கோணை நாயகயிந்த மானிடர்கள் அறிவென்ன
         கும்பிட நின்னருள் வேண்டுமாம்
கொடுத்தருள் சுதந்திரம் சுயமதி செல்வம்
         கொடுத்தருள் பெரும் வள்ளலே
இனிதே,
தமிழரசி.

Saturday 16 January 2016

புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம் - பகுதி 2


உலகெங்கும் புங்குடுதீவின் புகழ் மணத்தைப் பரப்பிய புங்கைமரம் எப்படி இருக்கும் என்பதை சங்கப் புலவர்களிடம் கேட்டுப் பார்ப்போமா? சங்கப்புலவர்கள் புங்கைமரத்தை புன்கு, புங்கு, புங்கம், புங்கை என்றெல்லாம் அழைத்ததை சங்க இலக்கிய நூல்கள் காட்டுகின்றன. புன்னை மரமும், புன்க மரமும் வெவ்வேறானவை. ஆனால் சிலர் ஒன்றெனக் கருதுகின்றனர். உடைந்த ஊர்க்குருவி முட்டை போல் புன்னைப்பூ இருக்கும் என்று கூறுகின்ற சங்க இலக்கியம், புங்கம் [புன்கம்] பூவை அரிசிப் பொரிபோல் இருக்கும் என்று கூறுகிறது. ஆதலால் அவை வெவ்வேறு மரங்கள் என்பதை அறியலாம். புன்னை எப்படி இருக்கும் என்பதை அறிய இவற்றைப்பார்கவும்.


புங்கமரத்தின் பூ பார்ப்பதற்கு நமது வேலிகளில் இருக்கும் சீமைக்கிளுவை போல இருக்கும். இவை இரண்டும் வெவ்வேறான மரங்களே. தாவரவியல் குடும்பத்தில் இரண்டும் Fabaceae என்ற குடும்பத்தைச் சேர்ந்தவை ஆதலால் அந்த ஒற்றுமையைக் காணலாம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை எனினும் இனத்தால் மாறுபடுகின்றன. புங்கைமரம் Pongamia இனத்தையும் சீமைக்கிளுவை மரம் Gliricidia இனத்தையும் சார்ந்தது. புங்கைமரம் 30 அடியிலிருந்து 70 அடி உயரம்வரை வளரும். புங்கைமர நெற்றுக்கள் [காய்ந்த விதைகள்] சீமைக்கிளுவை நெற்றுக்களைப் போல் தானாக வெடித்துச் சிதறாது. தாவரவியற் பெயரிலும் Ponga [புங்கை] எனத் தமிழ்ப்பெயரையே தாங்கி நிற்கிறது. இந்தக்குடும்பத்தில் பல இனங்கள் இருக்கின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த Julia F Morton என்பவர் புங்கம்மரம் பற்றி எழுதிய ஆய்வுக் கட்டுரையில் “The most commonly and widely used vernacular name, pongam, was taken directly from the Tamil language in India. The Tamilese may also refer to the tree as ponga or pongam.” என்று குறிப்பிட்டுள்ளார். 

அதுமட்டுமல்லாமல் அமெரிக்க விவசாயத் திணைக்களம் [US Department of Agriculture] ஓர் அரிய செய்தியைச் சொல்கிறது. புங்கைமர விதைகளை 1860ம் ஆண்டு Hawaiiக்கு அறிமுகப்படுத்திய ‘அமெரிக்க விவசாயத் திணைக்களம்’ அப்புங்கை விதைகளை இலங்கையிடம் இருந்து பெற்றுக் கொண்டது. இலங்கை கொடுத்த விதைகள் யாழ் தீவுப்பகுதியில் இருந்தும் பெறப்பட்டன. தமிழரின் சொத்தாய் தீவுப்பகுதியில் இருந்த புங்கைமரம் இன்று எப்படி இருக்கும் என தேடிப்பார்க்கும் நிலையில் நாம் இருக்கிறோம். இதைப் பார்க்கையில் நெஞ்சம் துவள்கிறது. என்னே! எங்கள் மரநேயம்!! எம் தமிழ் நேயம்!!!

சங்க இலக்கிய ஏட்டுச்சுவடிகளை தேடி எடுத்துப் பதிப்பித்து நூலாகத் தந்தவர் உ வே சுவாமிநாத ஐயர். அவருக்கு ‘ஐங்குறுநூறு’ என்ற ஏட்டுச்சுவடியை ஈழத்தச் சேர்ந்த ஜே எம் . வேலுப்பிள்ளை என்பவரே கொடுத்து உதவினார். ஈழத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை அவர்கள் ஐங்குறுநூற்று ஏட்டுச்சுவடியை உ வே சுவாமிநாத ஐயருக்கு கொடுக்காது இருந்தால் இன்று ஐங்குறுநூறு என்ற சங்க இலக்கிய நூலே எமக்குக் கிடைத்திராது. ஈழத்தமிழரிடம் சங்ககால ஏட்டுச்சுவடிகள் இருந்தன என்பதற்கு இஃது ஓர் ஆதாரமாகும். அத்துடன் ஐங்குறுநூற்றில் வரும் பல பாடல்கள் தீவுப்பகுதி மக்களின் வாழ்வியலைக் காட்டுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அவை ஈழத்துத் தீவுகளா என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாகும். 

ஐங்குறுநூறு, புங்கைமரப் பூக்கள் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லும் இடத்தில் அதன் தளிர்களைப் பெண்கள் மாலையாக அணிந்ததையும் சொல்கிறது. அது “அவர்தான் வரவில்லை, அழகுமிக்க இளமுலை பொலிவுற பொரி போன்ற பூவையுடைய புன்கின் தளிர்களை அணிகின்ற இளவேனிற்காலம் தான் வந்ததே” என்பதை
“அவரோ வாரார் தான் வந்தன்றே
எழில் தகை இளமுலை பொலிய
பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே”       - (ஐங்குறுநூறு: 347)
என்கிறது.

இப்பாடலைப் பாடிய சங்ககாலப் புலவரான ஓலாந்தையரே இன்னொரு பாடலில் பொரி போலும் பூவையுடைய புங்கைமர நிழலில் வேனிற்காலத்தில் இருப்பதும் இன்பம் என்கிறார்.
“எரிப்பூ இலவத்து ஊழ்கழி பன்மலர்
பொரிப்பூம் புங்கின் புகர்நிழல் வரிக்கும்
தண்பத வேனில் இன்பநுகர்ச்சி
எம்மொடு கொண்மோ, பெரும!….”           - (ஐங்குறுநூறு: 368: 1 - 4)
பாருங்கள்! ‘நெருப்புப் போன்ற இலவம் பூக்கள் உதிர்ந்து, புங்கைமர நிழலில் கோலம்போட்டு [வரிக்கும்] நிலத்தைக் குளிரவைக்க, புங்கைமரக் காற்று உடலை வருடிச் செல்ல காதலரோடு இருந்து இன்பங்கண்டிருக்கிறார்கள்'. இது இயற்கையின் கொடையல்லவா? இயற்கை கொடுத்த இந்த இன்பத்தை நாம் ஏன் தொலைத்தோம்? குளிரூட்டிய அறையில் [AC] வாழ்வதற்கா! நன்றாகக் குளிரூட்டிய அறையில் சிலமணி நேரம் இருந்த பின்னர் வெய்யிலில் சென்று வாருங்கள். தலையிடியும் தடிமலும் சொல்லாமலே வரும். பணம் பணம் என்று ஓடி பணத்தைக் கொட்டி ACயில் இருந்து பெறுவது இன்பமா? துன்பமா? எப்போ சிந்திக்கப் போகிறோம்?!!!
புங்கமலர்
புங்கமலர்கள் செந்நெற் பொரி போல் இருக்கும் என்பதை
“செந்நெல் வான்பொரி சிதறி அன்ன”            - (குறுந்தொகை: 53: 4)
என்று கோப்பெருஞ்சோழன் கூறியுள்ளான்.

எமது புங்குடுதீவு போன்ற கடலும் கடல்சூழ்ந்த நிலமுமான நெய்தல் நிலத்தில் ‘பசுமையான அரும்பும் பூவும் கொண்ட குரவ மரங்களும், பொரிபோன்ற பூவுள்ள புங்கை மரங்களும் நிறைந்த அழகான சோலையின் கிளைகள் கண்ணுக்கு இனிமையாக இருந்ததை' மிளைக்கிழான் நல்வேட்டனார் என்னும் சங்கப் புலவர்
“பல்வீ பட்ட பசுநனைக் குரவம்
பொரிப்பூம் புன்கொடு பொழில் அணிக் கொளாஅச்
சினை இனிது ஆகிய காலையும்”                - (குறுந்தொகை: 341: 1 - 3)
எனக் காட்டுகிறார்.


புங்கைமரச் சோலையில் குயில் இருந்து கூவியதை, திணைமொழி ஐம்பது என்ற சங்கம் மருவிய காலத்து நூல் காட்டுகிறது.
“புன்கு பொரிமலரும் பூந்தண் பொழிலெல்லாம்
செங்கண் குயில் அகவும் போழ்து”            - (திணைமொழி ஐம்பது: 14: 1 - 2)

கொற்றவை கோயிலின் முற்றத்திலே புங்கைமரம் இருந்ததை இளங்கோவடிகள் வேட்டுவ வரியில்
“பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கு இளந்
திங்கள் வாழ் சடையாள் திருமுன்றிலே”             - (சிலப்பதிகாரம்: 12)
எனச் சொல்கிறார். சிலப்பதிகார காலத்தில் கொற்றவை கோயிலின் முற்றத்தில் புங்கைமரம் இருந்தது போல கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் புங்குடுதீவின் கண்ணகி அம்மன் கோயில் முன்றிலிலும் புங்கைமரமும் புரசைமரமும் (முருக்கமரம்) பூவரசமரமும் நிறைந்தே இருந்தன என்பர்.

எமக்காகச் சங்கப் புலவர்களும், மருத்துவர்களும்  முன்னோர்களும் புங்கமரத்தை, தளிரை, பூவை புங்கஞ் சோலையை மிக நுட்பமாகக்  பாடியும் மருத்துவ வாகடங்களில் சொல்லியும் நாம் நம் அறியாமையால் மண்ணில் புதைத்துவிட்டோம். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக எம் தந்தையர் நாட்டின் முதுசமாய் இருந்த புங்கைமரத்தை மீண்டும் வளர்த்தெடுக்க வேண்டிய கடமை எமக்கு இருக்கிறது. 

இன்றைய காலச்சூழலில் கற்கள் நிறைந்த வரட்சியான கடற்கரை ஓரங்களிலும் நீர்ப்பாங்கான வயல் வெளிகளிலும் மட்டுமல்லாமல் பாலை நிலத்திலும், தெரு ஓரங்களிலும் புங்கைமரம் வளர்வதைக் காணலாம். புங்கைமரம் அனேகமாக கடல்சார்ந்த நிலத்தில் நன்கு வளரும். இதனை அழகுக்காக வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள். 

புங்கைமரத்தால் நாம் அடையக்கூடிய பயன்கள் என்ன?
1. புங்கைமர வேர்களில் வேர்முடிச்சுக்கள் [root nodules] இருப்பதால் காற்றில் உள்ள நைட்ரயனை உள்ளெடுத்து மண்ணை வளமாக்கும். இதனால் பயிர்கள் விளையாத வளம் இல்லா மண்ணும் வளம் பெறும்.
2. புங்கைமரம் சூரியஒளியில் இருந்து தனக்கான உணவை உண்டாக்கும் போது அதிக அளவு ஒட்சிசனை வெளிவிடுகின்றது. மூங்கில் மரத்துக்கு அடுத்தபடியாக அதிக ஒட்சிசனை வெளிவிடும் மரம் புங்கைமரம் என்பது விஞ்ஞானிகளின் முடிவாகும். எனவே நாம் சுவாசிக்கும் காற்றை புங்கைமரம் தூய்மை அடையச்செய்கிறது. அதாவது எம்மால் ஏற்படுத்தப்படும் காற்றின் மாசைக் சுத்தம் செய்கிறது.
3. இன்றைய மனிதர்களாகிய நாம் மரங்களை வெட்டியும், வாகனங்களை ஓட்டியும், பெருந்தொழிற் சாலைகளை இயக்கியும் காற்றின் மாசைக் கூட்டியதோடு வெப்பநிலையையும் கூட்டி காலநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கிறோம். அது உலக அழிவை ஏற்படுத்தும். அதனாலேயே உலக அரசியற் தலைவர்கள் ஒன்று கூடி ‘COP21’ மகாநாட்டை நடாத்தினார்கள். என்ன பயன் அடைந்தார்கள்?? ஏதும் உண்டா? புங்கைமர இலைகள் காற்றில் இருக்கும் வெப்பத்தை உள்ளெடுத்து காற்றின் ஈரத்தன்மையைக் கூட்டக்கூடியது. எனவே வெப்பநிலை மாற்றத்தைக் குறைத்து,  காலநிலை மாற்றத்தை தடுக்கும் சக்தியும் புங்கை மரத்திற்கு உண்டு. 
4. புங்கைமரம் மரம் பரந்து வளர்வதால் மண்ணுக்கு நிழலைக் கொடுத்து, சூரியவெப்பத்தால் நிலத்தடி நீர் ஆவியாகிப் போவதைத் தடுத்து, நிலத்தின் நீர்வளத்தைப் பெருக்குகிறது.
5.    கடலால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுக்கிறது. 
6.    புங்கைமரத்தின் கீழேயும் மரம், செடி, கொடிகளை நட்டு வளர்க்கலாம்.
புங்கம் காய்
7.     புங்கைமரத்தின், தளிர், இலை, பூ, காய், விதை, பட்டை, வேர், யாவுமே மருந்துக்கு பயன்படுகின்றது. 
8.   புங்கம் விதையில் இருந்து கிடைக்கும் எண்ணெய் எமது உடலின் நிறத்தை பொன்னிறம் ஆக்கும். 
9. இப்போது பெற்றோலுக்குப் பதிலாகப் பாவிக்கப்படுவதால் உலகசூழலை மாசுபடுத்தாத நல்ல எரிபொருளாய் இருக்கிறது.   
10. இலங்கையின் தேயிலைத் தோட்டங்களின் இடையே புங்கைமரங்களை நட்டு வீசும் காற்றை தடுத்தார்கள். அத்துடன் அவை பூச்சி கொள்ளிகளாக இருந்து தேயிலை மரங்களைக் காத்தன. அதுபோல் நம் தீவுப்பகுதிகளில் அதிக காற்றடிக்கும் கடற்கரை ஓரங்களில் புங்கையை நட்டு காற்று வேகத்தைக் குறைத்ததோடு பயிர்களை அழிக்கும் பூச்சிகளை கொல்லும் கிருமிகொல்லியாகவும் பயன்படுத்தினர்.
10.   நம்மவர்கள் வரகு, குரக்கன், தினை, நெல், சோளம் போன்ற தானியங்களை கோல்காலியின் மேல் அடுக்கியும் குதிருக்கு உள்ளே போட்டும் வைத்துப் பாதுகாத்தனர். கோற்காலியின் கால்களில் புங்கம் இலைகளைக் கட்டியும் தானியப்பெட்டகங்கள், குதிர் ஆகியவற்றுள் போட்டு வைத்து எலி, எறும்பு, பூச்சி போன்றவை தானியங்களை உண்பதைத் தடைசெய்தனர். 
   கோல்காலி: தானியங்களை, பெட்டகங்களை அடுக்கி வைத்த பல கால்களை உடையதாய் கட்டில் போன்று இருக்கும். கோல்களால் ஆன கால்களையுடைய ‘கோல்காலி’ என்பதே, இடத்துக்கு இடம் கோர்க்காலி - கோற்காலி - கோக்காலி என்றெலாம் அழைக்கப்பட்டது. கோல்காலி, பரண் இரண்டும் வெவ்வேறானவை. கோல்காலி 1’ - 2’ உயரமான  கால்களையுடையது. அதனை இடத்துக்கிடம் தூக்கி வைக்கலாம். பரண் 5’ மேற்றட்ட உயரமாய் இருக்கும். இடத்துக்கிடம் தூக்கி வைக்கமுடியாதது.

  குதிர்: தானியங்களைப் போட்டுவைத்து பாதுகாப்பதற்காக செய்யப்பட்ட மண்ணால் ஆன மூடியுள்ள மிகப்பெரிய கொள்கலம் அல்லது பாத்திரம். ஒருமனிதனின் உயரத்தைவிட, உயரமாகவும் அகலமாகவும்  செய்த பாத்திரத்தை, மண்ணுள் புதைத்து வைத்திருப்பர். அதனைக் குதிர் என்பர். 2011ம் ஆண்டு நடந்த தொல் பொருள் ஆய்வின் போது பழநியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குதிர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை தினமலர் செய்தியாக வெளியிட்டது. அது பத்தடி உயரமும் எட்டடி விட்டமும் கொண்டது. எனவே கிட்டத்தட்ட அதன் கொள்ளளவு 503 சதுர கன அடியாகும். [V = π × r² × h].
இரண்டாயிர வருடப்பழமையான குதிர்
      பெட்டகம்: அழகிய வேலைப்பாடு அமைந்த நான்கு கால்களுள்ள, கால்கள் இல்லாத மரத்தால் செய்த பெரிய பெட்டி என்று சொல்லலாம். கால்கள் இல்லாது இடத்துக்கிடம் தூக்கிச் செல்வதற்காக பெரிய வளையங்களால் ஆன கைப்பிடியுடனும் இருந்தன. அந்நாளில் அவற்றுள் ஏடுகள், வாள்கள், கேடயங்கள், உடுப்புக்கள், தானியங்கள் போன்றவற்றை வைத்துப் பூட்டி வைப்பர்.
பெட்டகம்

புங்கைமரத்தால் கிடைக்கக் கூடிய பொருளாதாரம்:
1.  அதிக அளவு புங்கைமரங்களை நட்டு வளர்த்தால் Carbon credit trading [கார்பன் கிரெடிட் ரேடிங்] மூலம் பணம் பெறலாம். 
2.  பூக்கள் நல்ல தேனுள்ளவை. பூக்களில் இருந்து தேன் கிடைக்கும். தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கலாம்.
3. பச்சை இலைகள் பூச்சிகளைக் கொல்லும். மரத்திலிருந்து காய்ந்து நிலத்தில் வீழும் இலைகளை நெல் வயல்களுக்கும் கரும்புத்தோட்டங்களுக்கும் உரமாகப் பாவிக்கலாம்.
4.  ஆலும் வேலும் மட்டுமல்ல புங்கைமரக் குச்சிகளும் பற்களையும் ஈறுகளையும் பாதுகாப்பதோடு வெண்மையாக வைத்திருக்கும். நல்ல பற்பசை தயாரிக்கலாம்.
புங்கமரத்தில் தொங்கும் நெற்றுக்கள்
5. புங்கம் விதைகள் 27 - 40% எண்ணெய் உடையவை. நம்மூதாதையர் புங்கம் எண்ணெயில் விளக்கு எரித்தனர். மண்ணெண்ணையை மேலை நாட்டினர் என்று எமக்கு அறிமுகம் செய்து வைத்து பணம் பண்ணத் தொடங்கினரோ அன்றே நாம் புங்கம் எண்ணையை மறந்தோம். இயந்திரங்களை, வாகனங்களை இயக்க மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்பதை இப்போது தான் நாம் அறியத்தொடங்கி உள்ளோம். 
6. புங்கம் எண்ணெயின் அடியில் வரும் எண்ணெய் ஈ, கரப்பத்தான் போன்ற பூச்சிகளை தடுக்கும்.
7.  வடிகட்டிய புங்கை எண்ணெய் உடலின் நிறத்தை பொன்னாக்கும்.
8. இந்த எண்ணெய்யில் இருந்து அழகு சாதனப் பொருட்கள், சவற்காரம், போன்றவை செய்யலாம். 
9. புங்கம் எண்ணை எடுக்கும் போது கிடைக்கும் புண்ணாக்கை உரமாக்கலாம். யூரியா போன்ற இரசாயன உரங்கள் போடுவதைத் தவிர்க்கலாம். 
10.  பட்டையில் இருந்து கிடைக்கும் நார்களால் கயிறு திரிக்கலாம். தும்புத்தடி, பெட்டி, கைப்பை, கூடை, தொப்பி, போன்றவற்றைச் செய்யலாம்.
11. புங்கைமரப் பலகையை பூச்சிகள் அரிக்காது. அத்துடன் வளைந்தும் கொடுக்கும். எனவே கதிரை, மேசை,கட்டில், போன்ற தளவாடங்கள் செய்யலாம். விறகாகவும் பயன்படுத்தலாம்.
12. புங்கைமரத்தின் தளிரில் இருந்து வேர்வரை யாவுமே சித்தமருத்துவத்திற்கு உதவுகிறது.

இவ்வளவு நன்மை தரக்கூடிய புங்கைமரம் தன் மணத்தால் புங்குடுதீவின் புகழை அந்நாளில் உலக்கில் மணக்கவைத்தது. கடந்த அறுபது எழுபது வருடத்துக்குள் புங்கைமரம் இருந்த இடமே தெரியாது அழித்த பெருமை எம்மையே சாரும். இந்தியாவில் Indian Institute of Science 1997ம் ஆண்டிலேயே புங்கம் எண்ணெய் பற்றிய ஆய்வைத் தொடங்கி, இந்த எண்ணெய்யால் நீர் இறைக்கும் இயந்திரங்களையும் [pumps], மின்சாரத்தை உண்டாக்கும் இயந்திரங்களையும் [generators] இயக்கலாம் என அறிந்து, அதனை ஆந்திராவுக்கும் கர்நாடகாவுக்கும் அறிமுகப்படுத்தியது. 2003ம் ஆண்டு The Himalayan Institute of Yoga Science and Philosophy என்ற தன்னார்வ அமைப்பு, கிராமப்புற மக்கள் புங்கம் எண்ணெயை biofuel ஆக பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வைத் தூண்டும் பிரசாரத்தைத் தொடங்கியது. இந்தத் தன்னார்வ அமைப்பு 20 மில்லியன் புங்கை மரங்களை 45,000 விவசயிகள் மூலம் நட்டிருக்கிறது. ஆனால் நாம் இவற்றையும் கண்டு கொள்ளாது இருப்பது ஏன்? காலம் கடந்துவிடவில்லை. நன்றே செய்வதாயின் இன்றே செய்யலாமே. 

புங்கைமரத்தை வளர்ப்பது எப்படி என்று பார்ப்போமா?
புங்கைமரம் வறண்ட இடங்களிலும் வளர்வதால் அதனை வளர்ப்பதற்கு உரமோ, நீரோ அதிகமாகத் தேவையதில்லை. எனவே உடல்வருந்தி பாடுபட வேண்டிவராது. பாத்திகளில் [நாற்றாங்காலில்] புங்கம் விதைகளை நட்டு வரும் மரக்கன்றுகளை அல்லது ஒட்டுமரக்கன்றுகளை நடலாம். ஒரு ஏக்கர் [16 பரப்பு] நிலத்தில் 4மீட்டர் இடைவெளியில் புங்கங்கன்றுகளை நட்டால் 250 கன்றுகளை நடலாம் என்று கூறுகின்றனர். இரண்டு சதுர அடிக் குழிக்குள்  [2 x 2 x 2] மண்ணும் எருவும் 3 : 1 என்ற வீதத்தில் கலந்து இட்டு ஒவ்வொரு கன்றையும் நடவேண்டும். மூன்றாம் ஆண்டில் இருந்து காய்க்கத் தொடங்கும். 
ஜீவரட்னம் அண்ணா வீட்டில் பதிவைதிருந்த புங்கங்கன்று 
முதலாம் ஆண்டு நிலத்தைப் பண்படுத்தல், புங்கை மரக்கன்று வாங்குதல், நடுதல், தண்ணீர் விடுதல் எனக் கொஞ்சம் செலவு இருக்கும். இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் அச்செலவின் கால் பகுதி செலவும் வராது. அதன் பின் பெரும்பாலும் செலவு இருக்காது. அது விவசாயிகளைப் பொருத்தது. முதல் மூன்று வருடத்திற்கு 25000 ஆயிரம் ரூபா செலவுகூட வராது. நான் இலங்கை சென்றிருந்த போது அண்ணன் வீட்டிற்குச் சென்றேன். அவர் மண்கும்பானில் வாங்கிய புங்கம் கன்றுகளை வீட்டில் வளர்த்து வருவதைப் பார்த்தேன். படம் எடுத்து வந்தேன். எனவே புங்கங்கன்றை  யாழ்ப்பாணத்தில் விலைக்கு வாங்கலாம். 

புங்கம் விதை
புங்கைமரம் ஐந்து, ஆறு வருடத்தில் முழுமையாகக் காய்க்கும். ஒருமரத்தில் இருந்து 90 கிலோகிராம் விதை கிடைக்கும் என்கிறார்கள். மூன்று வருட பராமரிப்பின் பின் ஐந்து வருடத்தில் இருந்து பணம் ஏதும் செலவு செய்யாமல் கிடைக்கக் கூடிய வருமானத்தைப் பார்ப்போம், 

ஒரு மரத்திற்கு 70 கிலோ கிடைத்தாலும் 250 மரத்திற்கு: 70 x 250 = 17,500 கி கி விதை வரும்.
4 கி கி விதையில் இருந்து 1 லீற்றர் எண்ணெய் எடுக்கலாம்.
எனவே 17,500 கி கி விதையில் இருந்து 4,375 லீற்றர் எண்ணெய் கிடைக்கும்.
லீற்றர் 40 ரூபாய்க்கு விற்றாலும் 4,375 லீற்றருக்கு: 40 x 4,375 = 175,000 ரூபா கிடைக்கும்.

இது எண்ணெயில் இருந்து மட்டும் கிடைக்கும் வருமானமாகும், இதைவிட எண்ணெய் பிழிந்த போது வரும் பிண்ணாக்கு, உதிரும்பூ, இலை, தேன் என பலவகை வருமானமும் புங்கை மரத்தால் கிடைக்கும். புங்கை மரத்திற்கு இடையே வேறு பயிர்களை, மரங்களை உண்டாக்கியும் வருமானத்தைப் பெருக்கலாம். அத்துடன் எம் நாட்டைவிட்டுச் சென்ற எத்தனையோ பறவைகள் புங்கை மரத்தில் குடியிருக்க வரும். குயில் கூவி எம்மை துயில் எழுப்பும். எனவே புங்குடுதீவின் புகழை மணக்கச் செய்த புங்கைமரத்தை மீண்டும் வளர்த்து குங்குமத்தீவாக மாற்றி புங்குடுதீவின் புகழை ஓங்கச் செய்வோமா?
இனிதே,
தமிழரசி.

Friday 15 January 2016

உழவர் திருநாள் விடுகதை


உழவர் திருநாளாம் தமிழர் திருநாளை உவகையோடு  கொண்டாடும் தமிழ் நெஞ்சங்களை தமிழின் சுவையெனெ இன்பங்களைச் சுவைத்து வாழ வாழ்த்துகிறேன்! உங்கள் மனம் மகிழும் இந்த வேளையில் நானும் உங்களுக்கு ஒரு விடுகதை சொல்லலாம் என நினைக்கிறேன். 

அதிகாலை நேரம் மலைப்பாங்காண குறிஞ்சி நிலப்பக்கமாக சுந்தர கவிராயர் நடந்து சென்றார். கிழக்குத் திசையைப் பார்த்தார். மருத நில வயல்வெளியாய்த் தெரிந்தது. மெல்லச் சூரியன் உதயமாகி வந்தான். அந்த சூரிய உதயத்தைப் பார்த்து மகிழ்ந்தார். தான் பார்த்து மகிழ்ந்த சூரிய உதயத்தைப் பற்றிப் பாட்டெழுத குனிந்து அரையில் இருந்த ஓலையையும் எழுத்தாணியையும் எடுத்தார். மீண்டும் சூரியனைப் பார்க்கக் நிமிர்ந்தவர் கண்ணில் ஓர் அற்புதம் தெரிந்தது. அவரது வாழ்நாளில் அப்படிப்பட்ட ஒன்றை அவர் கண்டதே இல்லை. “இது என்ன குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்ததா? மருத நிலத்தைச் சேர்ந்ததா?” என்று அவருக்குச் சந்தேகம் வந்தது. கண்களைக் கசக்கிக் கசக்கி அந்த அற்புதத்தை மீண்டும் மீண்டும்  விரும்பிப் பார்த்தார். ஒரே மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியில்  சூரிய உதயத்தை எழுத எடுத்த ஓலையின் மேல் தான் பார்த்த புதுமையை, எப்படித் தெரிந்ததோ அப்படியே பாடலாக எழுதினார். அவர் எழுதிய பாடல் இதோ:

“பத்துக்கால் மூன்றுதலை பார்க்கும் கண்ஆறு முகம்
இத்தரையில் ஆறு வாய் ஈரிரண்டாம் இத்தனையும்
ஓரிடத்தில் கண்டேன் உகந்தேன் களிகூர்ந்தேன்
பாரிடத்தில் கண்டே பகர்”

அதாவது “இப்பூமியில் பத்துக்கால், மூன்று தலை, ஆறு கண், ஆறு முகம், நான்கு [ஈரிரண்டு] வாய் இவ்வளவையும் ஓரிடத்தில் கண்டேன். விரும்பினேன். மகிழ்ந்தேன். அதனை இவ்வுலகத்தில் தேடிப் பார்த்துச் சொல்” என்கிறார். 

சுந்தர கவிராயர் கண்ட அற்புதம் என்ன என்று தெரிந்ததா? இந்த உலகத்தில் அதனைத் தேடப் புறப்பட்டு விட்டீர்களா? ஏனெனில் நம்மால் புறக்கணிக்கப்படும் ஒன்றுதான் அது. இப்படியே போனால் இன்னும் ஐம்பது வருடத்துக்குள் நாம் அதனை பொருட்காட்சிச் சாலையிலும், ஓவியத்திலும், சிற்பத்திலும் பார்க்கும் நிலைமை வரும். இன்று என்ன நாள்? உழவர் திருநாளில் வரும் மாட்டுப் பொங்கல் அல்லவா? அந்த அற்புதம் என்ன? தெரியவில்லையா? மேலே உள்ள படத்தைப் பாருங்கள். கண்டுபிடித்து விட்டீர்களா?

கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு - மேலே படத்தில் என்ன தெரிகிறது? உழும் எருதுகள் இரண்டு, கலப்பை ஒன்று, இவற்றைக் கொண்டு வயலை உழும் மனிதர். 
இரண்டு எருது + ஒரு மனிதர் = 8 + 2 = 10 பத்துக்கால்
இரண்டு எருது + ஒரு மனிதர் = 2 + 1 = 3 மூன்றுதலை
இரண்டு எருது + ஒரு மனிதர் = 4 + 2 = 6 ஆறுகண்
இரண்டு எருது + ஒரு மனிதர் + கலப்பையிலுள்ள கெழுமுகம் = 2 + 1 + 3 = ஆறுமுகம் [கெழுமுகம் - 3]
இரண்டு எருது + ஒரு மனிதர் + கலப்பை வாய் = 2 + 1 + 1 = நான்குவாய் [கெழுவாய் - 1]

இப்போ பாடலை வாசித்துப்பாருங்கள். சுந்தர கவிராயர் போல் இவ்வளவையும் ஓரிடத்தில் [மேலே உள்ள படத்தில்] பார்த்து நீங்களும் மகிழலாம். அதிகாலையில் மலையில் நின்று உழவுக்காட்சியைக் கண்டு மகிழ்ந்தே, சுந்தர கவிராயர் இப்பாடலை எழுதியுள்ளார். அதிலும் விடுகதையாக எழுதியால் எம்மையும் உழவரின் மாட்டுத் திருநாளாம் இன்று உழவுக்காட்சியைக் கண்டு களிக்கவைத்த  பாடல் இது.

குறிப்பு
ரண்டாயிரத்து ஐஞ்ஞூறு ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் விடுகதை போடுவதை தமிழ் இலக்கிய வரலாற்றால் அறியலாம். ஆனால் காலத்துக்குக் காலம் விடுகையின் பெயர் மாற்றம் அடைந்து வந்திருப்பதைக் காணலாம். விடுகையை தொல்காப்பியர் பிசி, நொடி என்று சொல்ல கம்பர் பிதிர் என்கிறார். கம்பர் சொன்ன ‘பிதிர்’ இன்று ‘புதிர்’ ஆக மாறி இருக்கிறது. என்ன புதிரா போடுகிறாய் என்று கேட்கும் வழக்கம் இருக்கிறதல்லவா? சில ஊர்களில் விடுகதை ‘வெடி’ என்றும் அழைக்கப்படும். 

ஒரு கருத்தை மறைத்து கேட்போர் புரிந்து கொள்ளாத வகையில் கற்பனையின் ஊற்றாகச் சொல்வதால் ‘பிசி’ என்றனர். [பிசிர் - ஊற்று நீர்; பிசின் - மரப்பிசின்; பிசி - பொய் (இவை யாவும் ஊற்றாய் வருபவை)] சொல்லும் விடயத்தில் மறைந்துள்ள கருத்தை கேட்பவர் உடனே புரிந்து கொள்ள முடியாதிருக்கச் சொல்லப்படுவதால் ‘புதிர்’ என்றனர். ஒரு கதையாகச் சொல்லப்படும் விடயத்தை விடை சொல்லி விடுவிப்பதால் ‘விடுகதை’ என்றனர். சொல்லப்படும் விடயத்தில் மறைந்துள்ள கருத்து எல்லோருக்கும் தெரிய வருவதால் ‘வெடி’ என்பர். 

[அந்த நாளில் பாவித்த கலப்பையால் உழும் படம் கிடைக்கவில்லை. எவரிடமாவது இருந்தால் தாருங்கள். மூன்று தலையும் ஆறுகண்னும் தெரிய, பழைய கலப்பையால் உழும் படம்.]
இனிதே,
தமிழரசி.

Wednesday 13 January 2016

முதுமையின் சாரம்


இலை உதிர் காலம் முதுமையின் கோலம்
கலகல என்று காற்றினி லசைந்து வீழும்
இலை சொல்லும் சேதியை மனமது ஆயும் 
இலை மெல்லப் பழுத்து சருகது ஆகும் 
நிலை தனைக் கண்டு மனமது நகைக்கும்  
தலை மயிர் நரைத்து தசைகளும் தளரும்
சிலை என இருந்த சித்திர மேனியும்
அலை அலை ஆக அடங்கி ஒடுங்கும்
தலை அது சாய்க்கத் தோளினை தேடும்
நிலை தடு மாறும் முதுமையின் சாரம்.                                                  
இனிதே 
தமிழரசி.