Wednesday 27 May 2015

குறள் அமுது - (107)

குறள்:
“நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாண்ஆள் பவர்”                             
                                               - 1017

பொருள்:
நாணத்தை ஆள்பவர், நாணத்தால் உயிரை விடுவாரே தவிர, உயிர்வாழ்வதற்காக நாணத்தை விடமாட்டார்.

விளக்கம்:
நாம் செய்யும் செயல்களை மனிதவாழ்க்கைக்கு தகுந்த செயல்கள், தகாத செயல்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். தகாத செயல்களைச் செய்ய நாணப்படுவதை திருவள்ளுவர் ‘நாண் உடைமை’ என்னும் அதிகாரத்தில் கூறியுள்ளார். அதில் நாணத்தை மதிப்பவர் எப்படிப்பட்டவராய் இருப்பார் என்பதை இக்குறளில் சொல்கிறார். 

நாணம் என்பது தனிமனிதப் பண்புகளிலே மிகமிக உயர்ந்த தனிச்சிறந்த பண்பாகும். நாணம்  என்னும் பண்பை எத்தகைய நிலையிலும் தனதாக வைத்திருப்பவரே நாண் ஆள்பவர் ஆவர். உடற்கூச்சத்தால் பெண்களுக்கு வரும் நாணம் வேறு, தகாத செயல்களைச் செய்ய மனம் கூசி, வெட்கிப் பின்வாங்கி நாணுவது வேறு. அத்துடன் தனக்கு தன்குடும்பத்துக்கு, தன் இனத்துக்கு நேர்ந்த பழியை, மாசை எண்ணி மனங்கூசி நாணுவதும் வேறு. இத்திருக்குறள் நாணம் என்று மனிதரின் மனக்கூச்சத்தையே குறிக்கிறது. சிலருக்கு தகாத செயல்களைச் செய்ய நாணப்படும் தன்மை இயல்பாகவே இருக்கும்.

இத்தகைய நாணம் உடையோர் உயிர்வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யத்தகாத செயல்களைச் செய்தும், மாற்றானிடம் கைகட்டி, வாய்பொத்தி நாணத்தை காற்றில் பறக்க  விட்டு உயிர் சுமந்து வாழமாட்டார்கள். அப்படி நாணத்தை ஆளும் பண்புடையோர், தாம் வாழும் வாழ்க்கைக்கும் நாணத்திற்கும் இடையே பெரும் சோதனை ஏற்படும் போது நாணம் எனும் உயர் பண்பை காப்பாற்றிக் கொள்வதற்காக தமது உயிரையே விட்டுவிடுவார்கள். 

நாணம் எனும் நற்பண்பை தன் உயர்பண்பாகக் கொண்ட பார்த்திபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபனும் தன் இனத்துக்கு வந்த துன்பத்தைக் கண்டு நாணி, அதைத் துடைத்து எறிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்து நாணத்தை ஆள்பவனாக திருவள்ளுவரின் இக்குறளுக்கு இலக்கியமானான்.

திருவள்ளுவர் இக்குறளில் நாணம் உடையோருக்கு அவரது உயிரைவிட நாணம் மிகப் பெரியது என்று மிக  நுட்பமாகச் சொல்கிறார். 

Monday 25 May 2015

அடிசில் 90

யாழ்பாணத்து மிளகாய்தூள்
- நீரா -


தேவையான பொருட்கள்:
மிளகாய்த் தூள் - 500 கிராம்
கொத்தமல்லித் தூள் - 500 கிராம்
மிளகு தூள் - 150 கிராம்
சீரகத் தூள் - 100 கிராம்
பெருஞ்சீரகத் தூள் - 100 கிராம்
கறிவேப்பிலைத் தூள் - 100 கிராம்
மஞ்சள் தூள் - 10 கிராம்

செய்முறை:
மேலே சொல்லி இருக்கும் எல்லாத்தூள்களையும் வாயகன்ற ஒரு பாத்திரத்தில் இட்டுக் கலந்து கொள்க.
 கலந்த மிளகாய்த்தூள் கலவையை அவணில் வைக்கக்கூடிய மூடியுள்ள பாத்திரத்தில் இட்டு மூடிக்கொள்க.
அதனை 175°C சூடாக்கிய அவணில் மிளகாய்த்தூள் மணம் வரும்வரை வைத்து இறக்கி, மூடியைத் திறந்து ஆறவிட்டு போத்தலில் போட்டு வைத்து பயன்படுத்தவும். 

Thursday 21 May 2015

ஏன் இந்த நிலை


ஏன் இந்த நிலை! பெண்களுக்கு! புங்குடுதீவுக்கு! மானுடர் யாவருக்கும் ஏன் இந்த நிலை? மானிடராய்ப் பிறந்தோர் செய்யக் கூடிய செயலா இது? மானுடப்பண்பு மாண்டு போனதோ! இந்த இழிநிலைக்கு காரணம் என்ன?

இக்கட்டுரையில் நான் எழுதுபவை சிலவேளை ஆண்களின் நெஞ்சங்களை நெருடக்கூடும். ஒட்டு மொத்த ஆண்களையும் நான் இதில் குறிப்பிடவில்லை. ஏனெனில் நானும் ஒரு தந்தைக்கு மகளாய் பிறந்து, ஒரு மகனுக்கு தாயாய் இருப்பவள் தான். தவறைத் தவறு என்று சுட்டிக் காட்டுவதில் தப்பில்லையே. கனிவு, கண்ணியம், கட்டுபாடு ஆகிய பண்புகள் நிறைந்த நல்ல ஆண்களுக்காக நான் எழுதுவதை தவிர்க்க முடியாது. தவிர்க்கவும் கூடாது. இது காலத்தின் தேவை. வன்னியில் பள்ளிக்குச் சென்ற சரண்யா, புங்குடுதீவில் பள்ளிக்குச் சென்ற வித்தியா ஆகிய இருவரும் கடந்த கால போரின் கொடுமைகளில் சிக்குண்டு பல துன்பங்களை அநுபவித்தவர்கள். எனினும் அவற்றை மறந்து கல்வி என்னும் அழியாச்செல்வத்தைப் பெற இளமைக்கனவுகளுடன் படிக்கச் சென்றவர்கள். அந்த இளமொட்டுக்களை துடிக்கத் துடிக்க பாலியல் வல்லுறவு செய்து கொடூரமாய்க் கொலை செய்தமையே இப்பதிவுக்குக் காரணம். 

நானும் எனது இளவயதில் வன்னியிலும் புங்குடுதீவிலும் துள்ளித் திரிந்திருக்கிறேன். என் காலத்தில் இதுபோன்ற காமுகக் கொலைஞர்கள் அங்கே வாழவில்லை. இருந்திருந்தால் என்போன்றோருக்கும் இது நடந்திருக்கலாம். அன்று அன்போடும் பண்போடும் இருந்த நம் வாழ்வு, காட்டு வாழ் நாகரிகத்தை விடக் கேடுகெட்டதாக மாறியது ஏன்? அந்நாளில் வன்னி என்றாலும் சரி, புங்குடுதீவு என்றாலும் சரி, அங்கு வாழ்ந்த தமிழ் சாதி ஒரு கூட்டுக் குடும்பம் என்ற ஒரு பிணைப்போடு வாழ்ந்தது. அதுமட்டுமல்ல அங்கு வாழ்ந்த அன்றைய ஆண்களிடம் ஓர் அழகிய பண்பு இருந்தது. பெண்கள் இருக்கும் இடத்தில் உடுத்திருக்கும் வேட்டியையோ சாரத்தையோ முழங்கால் வரை மடித்துக் கட்டமாட்டார்கள். கட்டி இருப்பினும் பெண்களைக் கண்டால் கட்டை அவிழ்த்து கணைக்கால் வரை மறைத்துக் கொள்வார்கள். அப்படி வாழ்ந்த இனத்தின் வாரிசுகளா இன்று பெண்களைச் சூரையாடப் புறப்பட்டது? நினைக்க மனம் அனலாகக் கொதிக்கிறது.

வன்னி, புங்குடுதீவு இரண்டும் எனது இரு கண்போன்றவை. ஒரு கண்ணைக் குத்தினாலே இரு கண்ணும் கண்ணீர் சிந்தும். எனது இரு கண்களும் குத்தப்பட்டு நெஞ்சக் குமுறலையும் சேர்த்து செந்நீராய்ச் சிந்துகின்றன. ஏனெனில் வன்னி நான் வாழ்ந்த இடம். புங்குடுதீவு எனது சொந்த ஊர். அதிலும் வல்லன் என் தாய்வழி மூதாதையர் வாழ்ந்த இடம். நூற்றைம்பது வருடங்களின் முன் வாழ்ந்த பத்தினி, மாதினி என்ற இரு சகோதரிகள் பெயரால் பத்தி, மாதி பகுதி என்பார்கள். அப்படிப் பெண்களை முதன்மைப்படுத்தி வாழ்ந்த வல்லன் பகுதிப் பெண் காமவெறி கொண்ட காமக்கொடூரரால் கொலையா? இது வல்லனுக்கோ புங்குடுதீவுக்கோ ஏற்பட்ட வசையல்ல மனிதகுலத்திற்கே ஏற்பட்ட வசையாகும்.

இதற்கு நம் இளம் சந்ததியினரிடையே விதைக்கப்படும் போதைப்பொருளும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதுவே காரணம் ஆகாது. குடிவெறியால் நடந்து இருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். குடிகாரர் எப்படிப்பட்ட வெறியிலும் தத்தமது வீட்டிற்கு வருகிறார்கள் தானே? அவர்கள் தம்மிலும் பார்க்க வலிமையானவரைக் கண்டால் கும்பிடுபோட்டு விலகிப்போவதும், வலிமை அற்றவரைக் கண்டால் கூப்பாடுபோட்டு சண்டைக்கு போவதும் எப்படி? இவற்றை மட்டும் எப்படி அவர்களால் சரியாகச் செய்ய முடிகிறது? சரி பிழை தெரியாமலா இவற்றைச் சரியாகச் செய்கிறார்கள்? 

உண்ணா நஞ்சு [நாம் எடுத்துக் குடிக்காத நஞ்சு] எம்மைக் கொல்லாது என்பார்கள். ஆனால் நஞ்சு உண்ணாமலேயே பெண்கள் நசுக்கப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். சரண்யா, வித்தியா இருவரும் கொல்லப்படட்டது ஏன்? இது போல் பாடசாலைகளில் படிக்கும் எத்தனை அப்பாவிச் சிறுமியர் காமுகர் கைகளால் சிதைக்கப்படுகிறார்கள் தெரியுமா?அதற்கு நம்மிடையே புரையோடிப்போய் இருக்கும் சாக்கடை அரசியலும் ஆணாதிக்கமும் ஒரு காரணமாகும். எத்தனையோ ஆண்கள் தமது காமப் பார்வையால் கூட அழகான பல பெண்களைக் கொல்லாமல் கொல்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

மனிதகுலப் பெண்ணாக, ஒரு தாய்க்கு மகளாக, ஒரு மகளுக்குத் தாயாக திருவள்ளுவரிடம் நான் ஒன்றைக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் உமது திருக்குறள் முழுவதையும் எனது ஏழு வயதிற்கு முன்பே பாடமாக்கி இருக்கிறேன். உமது ஆயிரத்து முந்நூற்றி முப்பது திருக்குறளுக்கும் கேள்வி கேட்டு, உமது திருக்குறளை விடையாகத் தந்து அவற்றுக்கு விளக்கமும் அளித்து ‘திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி’ என்ற நூலையும் எழுதி வெளியிட்டுள்ளேன். இப்போ நெஞ்சம் நெருடக்கேட்கிறேன்
“சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை”
என்று நீங்கள் எழுதியதற்குக் காரணம் என்ன? ஆண்கள் தங்கள் ஒழுக்கத்தைக் [நிறையை] காத்துக்கொள்ளமாட்டார்கள் என்று முடிவெடுத்திருந்தீர்களா? அதனாற்றான்  இருட்டறையில் பிணங்களையும் தழுவுவார்கள் [குறள்: 913] என்பதையும் எழுதினீர்களா?

உலக இயற்கை என்பது ஆணும் பெண்ணும் சேர்ந்த ஒரு கலவையே. அப்படி இருக்க பெண்களுக்கு மட்டும் ஒழுக்கத்தை கற்பித்து ஆண்களைத் தவிர்த்தது தகுமா? எந்த வீட்டில் களவு நடந்தாலும், எந்த ஊரில் கலவரம் நடந்தாலும், எந்த நாட்டில் போர் நடந்தாலும் எங்கேயும் எப்போதும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் பெண் என்பவள் போகப் பொருளாகக் கருதப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறாள். உலகில் பிறந்த ஒவ்வொரு ஆணையும் பெண்தானே பெற்றுத்தருகிறாள். ஒரு பெண்ணின் விருப்பமில்லாது பாலியல் வல்லுறவு கொள்ளும் ஆண்களுக்கு ‘தான் ஒரு தாயின் மகனல்லவா?’ என்ற எண்ணம் வராதா?

திருவள்ளுவரே நீங்கள்
“சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மானுடர்
நிறைகாக்கும் காப்பே தலை”
என்று எழுதியிருக்கலாம் என நினைக்கிறேன். அப்படி எழுதி இருந்தால் ஓநாய்கள் கூடி வேட்டையாடி உண்பது போல் காமுகர்கள் கூடி பெண்களை வேட்டையாடி சீரழித்துக் கொல்லும் நிலை தமிழ் இனத்தில் குறைந்திருக்கலாம். நாம் வளர்க்கும் ஆடு மாடுகள் ஏன் காட்டில் வாழும் கொடிய விலங்குகளான சிங்கம் புலி கரடி யானை எதுவாக இருந்தாலும் மற்ற ஆண் விலங்குகளையும் கூவி அழைத்து வந்து பெண்விலங்கைப் புணர்ந்து ஒன்று மாற ஒன்று இன்பம் காண்கின்றனவா? ஆறறிவு படைத்த மானிடராய் பிறந்தும் தவளைகளாய்ப் பிறந்த கூர்ப்பு நிலை மாறாது இருப்பவர்கள் இதனைச் செய்கிறார்களா?

உலகில் மனிதன் தோன்றிய காலந்தொட்டு இன்றுவரை மனிதன் தனது மனிதப்பண்பை போற்றி வாழ்ந்த வரலாற்றைக் காணமுடியவில்லை. இயற்கையை அழிப்பதிலும் சரி பெண்களை அழிப்பதிலும் சரி ஆண்களே முன்னிற்கின்றனர். ஏனோ சில ஆண்கள் தங்கள் தனி மனிதப்பண்பைப் பேணிக்கொள்ளத் தவறி விடுகின்றனர். அதனாலேயே சங்ககால ஔவையார்
“நாடாக ஒன்றோ காடாக ஒன்றோ
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ
எவ்வழி ஆடவர் நல்லவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!”                    - (புறம்: 187)
என்று கூறினார் போலும்.

அதாவது நாடாக இருந்தால் என்ன! காடாக இருந்தால் என்ன! பள்ளமாக இருந்தால் என்ன! மேடாக இருந்தால் என்ன! எந்த வழியில் ஆண்கள் நல்லவராய் இருக்கிறார்களோ அந்த வழியில் இந்த நில உலகமும் நல்லாய் இருக்கும் என்று தனது அநுபவத்தைச் சொன்னார் போலும். உலகவாழ்க்கை என்பது ஆண்களைப் பொறுத்தது என்பதே ஔவையாரின் முடிவாகும். ஔவையார் அப்படிக் கூறி இரண்டாயிர வருடங்கள் ஆகியும் ஆண்கள் மாறவில்லையே!

பாடசாலை மாணவிரயரைக் கொன்ற காமவெறியர்க்கு பள்ளிக்கூடச் சீருடை கூடவா கண்ணுக்குத் தெரியவில்லை? அப்படியென்றால் அவர்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கவில்லை என்றே கொள்ளவேண்டும். அதுவே உண்மையாக இருக்கக் கூடும். எனெனில் வன்னி மண்ணின் கல்வியை யுத்தம் சிதைத்தது போல் புங்குடுதீவில் 1991ல் 1996ல் நடந்த இடப்பெயர்வின் காரணமாக பாடசாலைகள் பல இடிந்து கால்நடைகள் வாழ்விடமாயும் மாறின. அவற்றில் ஒன்று வல்லனில் இருக்கும் சண்முகநாத மகாவித்தியாலயமாகும். அது 1925ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதனை 1972ம் ஆண்டு விஞ்ஞான ஆய்வு கூடத்துடன் கூடிய பெரிய கட்டிடமாகக் கட்டி, சண்முகநாத மாகாவித்தியாலயம் எனத் தரம் உயர்த்தினர் என நினைக்கிறேன். ஆனால் 17/10/1991 அன்று மக்கள் இடம்பெயர்ந்ததிலிருந்து இன்று வரை அது வெறிச்சோடிப்போய் கிடக்கிறது. அதில் படித்தோர் இன்று உலகமெங்கும் பெரும் செல்வர்களாக வாழ்கிறார்கள். அவர்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் தெரியாமல் எப்படி சண்முகநாத மகாவித்தியாலயம் மறைந்தது. போர் முடிந்து ஆண்டுகள் ஆறாகியும் இன்னும் செயலற்ற நிலையில் கிடப்பதை மேலே உள்ள படத்தில் பாருங்கள்.

ஆனால் வல்லனிலுள்ள அந்த சண்முநாத மகாவித்தியாலயத்திற்கு அருகே சிறிய கோயிலாக இருந்த புளியடி நாச்சிமார் கோயில், பத்துவருடங்களுக்கு முன்பே பெரிதாக - முருகன் கோயிலாய் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மீண்டும் கும்பாபிஷேகம் செய்யப் போகிறார்கள். அத்துடன் மிகச்சிறிதாக இருந்த ஆலடி வைரவர் கோயில், கும்பாபிஷேகம் செய்யப்பட்ட துர்க்கை அம்மன் கோயிலாக காட்சி தருகிறது. வல்லனில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எம் உறவுகளும் சேர்ந்தே அந்தக் கோயில் இரண்டையும் பெரிய கோயில்களாய் கட்டினார்கள். அவர்கள் கண்ணிலும் சண்முகநாத மகாவித்தியாலயமும், ‘கல்வியே கருந்தனம்’ என்று நம் முன்னோர் உரைத்த உரையும் தென்படவில்லை. 

நம் முன்னோர் சொன்னவற்றில் ஒன்றேயொன்று புலம் பெயர்ந்து வாழும் நம் எல்லோர் மூளையையும் சலவை செய்கிறது. ஔவையார் சொன்ன “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பதே அது. சலவை செய்யப்பட்ட எமது மூளையில் கோயில், பூசை, குருக்கள், கும்பாபிஷேகம், திருவிழாக்கள், மேளதாளம், பால்குடம், தீச்சட்டி, சுவாமிமார்கள் மட்டுமே தெரிகின்றன. அதனாலேயே புலம்பெயர் நாடுகளிலும் எம்மூரிலும் எத்தனை எத்தனை கோயில்களைக் கட்டி அழகு பார்க்கிறோம். அப்படிப் பார்க்கும் எமக்கு அறிவுக்கண்ணை திறப்பது கல்வி என்பது தெரியாமல் போய்விட்டதா? என்ன??

அன்னதானம் செய்யும் சத்திரங்கள் ஆயிரம் கட்டி, பதினாயிரம் கோயில்களைக் கட்டி, அவற்றிற்கும் மேலாகச் சொல்லப்படும் தருமங்களை எல்லாம் செய்து உங்கள் பெயரும் புகழும் தெரியச் செய்வதைவிட ஏழையொருவனைப் படிக்கவைப்பதால் புண்ணியம் கோடி கிடைக்கும் என்றார் பாரதியார்.

“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்க ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல்”    - (பாரதியார் பாடல்)

இதை மட்டுமா பாரதி சொன்னார்? “சரசுவதி தேவியின் புகழ்” என்பது பாரதியார் பாடிய பாடல்களின் தலைப்புகளில் ஒன்றாகும். அதிலே நம்மை ஒன்றாய்ச் சேர்ந்து சரசுவதியை [சேர்ந்து தேவை] வணங்க அழைக்கிறார். சரசுவதியை வணங்குவது மிக இலகுவான செயல் இல்லையாம் [எளிதன்று கண்டீர்]. ஏனென்றால் எல்லோருக்கும் விளங்காத மொழியில் மந்திரங்களைக்கூறி ஏடுகளை அடுக்கி அதற்குமேல் சந்தனமும் பூங்களையும் இட்டு வணங்குவோர் சொல்லும் சாத்திரம் சரசுவதிக்குச் செய்யும் பூசை இல்லையாம் [இவள் பூசனை அன்றாம்].

“செந்தமிழ் மணி நாட்டிடையுள்ளீர்
  சேர்ந்து தேவை வணங்குவம் வாரீர்
வந்தனம் இவட்கே செய்வதென்றால்
  வாழி அஃதிங்கு எளிதன்று கண்டீர்
மந்திரத்தை முணு முணுத்து ஏட்டை
  வரிசையாக அடுக்கி அதன் மேல்
சந்தனத்தை மலரை இடுவோர்
  சாத்திரம் இவள் பூசனை அன்றாம்”

அப்போ எது சரசுவதிக்கு செய்யும் பூசையாகும்? எப்படி சரசுவதியை வணங்குவது? அதனையும் பாரதியாரே சொல்கின்றார். என்ன சொல்கிறார் பாருங்கள்.

“வீடு தோறும் கலையின் விளக்கம்
  வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
  நகர்கள் எங்கும் பலபல பள்ளி
தேடு கல்வி இல்லாத ஓரூரைத்
  தீயினுக்கு இரை ஆக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதம் என்னன்னை
  கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்”

நாடு முழுவதிலுமுள்ள ஊர் வீடுகளில் எமது கலைகளைப் பற்றிய தெளிவு இருக்க வேண்டும். அவ்வூர்களில் உள்ள வீதிகளில் ஒன்று இரண்டு பாடசாலைகள் இருக்க வேண்டும். அந்த நாட்டின் நகரங்களில் கணக்கற்ற பாடசாலைகள் இருக்க வேண்டும். கல்வி கற்க வசதி இல்லாது ஓரூர் இருந்தாலும் அதனை தீயிட்டு அழிக்க வேண்டும். எமக்கு வரும் கேட்டைத் தீர்த்து வைக்கும் அமிழ்தம் போன்றவள் என் அன்னையாகிய சரசுவதி. அவளுடன் நட்புக் கொள்ள ஏற்றவழி இவைதான் தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்.

நாமெல்லோரும் வீடுகளிலும் கோவில்களிலும் நவராத்திரி காலங்களில் பாடும் பாடல்தான் பாரதியாரின் இந்த ‘சரசுவதி தேவியின் புகழ்’. மேலே உள்ள பாடல் இரண்டும் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஏனெனில் நாம் எல்லோரும் நுனிப்புல் மேய்பவர்கள் தானே. 
“வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
  வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்”
என்பது சரசுவதி தேவியின் புகழின் முதலாவது பாடலாகும். இதைப் பாடாது எந்த நவராத்திரி பூசையும் நடைபெறுவது உண்டா? பத்துப்பாடலையும் படித்திருந்தால் நாம் கோயில்கள் கட்டி கும்பாபிஷேகம் செய்வதை விடுத்து சண்முகநாத மகாவித்தியாலயத்தைப் புதுப்பித்திருபோம். அதுகேடு தீர்க்கும் அமிழ்தமாய் இருந்து இந்நிலை எமக்கு வராது பாதுகாத்திருக்கும். 

அது எப்படி என்று கேட்கிறீர்களா? விஞ்ஞான ஆய்வுகூடத்துடன் கூடிய சண்முகநாத மகாவித்தியாலயம் வல்லனில் இருந்திருந்தால் வித்தியா புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு சென்றிருக்க மாட்டாள். இந்த வன்செயலில் ஈடுபட்டவர்களில் சிலர் 1991ல் நடந்த இடப்பெயர்வின் பின்னரே பிறந்தவர்கள். இப்போது தான் அவர்களுக்கு 22, 23 வயது. அவர்களும் உண்மையான கல்வியைக் கற்றிருப்பர்கள். களவு, சூது, குடி, கற்பழிப்பு, கொலை போன்ற  செயல்களைக் கற்றிருக்க மாட்டார்கள். வல்லன் மக்களும் இப்போ இருப்பதை விட இன்னும் அதிகமாக அங்கே வாழ்ந்திருப்பார்கள். களவுகள் குறைந்திருக்கும். நல்லறிவு கிடைத்திருந்தால் இவை நடந்திருக்குமா? புங்குடுதீவு மக்களாய் மட்டுமல்ல மானுடராய் வருங்கால எம் இனத்துக்கு இந்நிலை வராது காக்க நாம் உடனே தொழிற்பட வேண்டும். கல்வியை மேம்படுத்துவதாலேயே அதனை நாம் செய்ய முடியும்.

வித்தை கற்கும் ஆலயமே வித்தியாலயமாகும். ஔவையார் காலத்திலும் கலைகள் கோயில்களில் கற்பிக்கப்பட்டன. அதனாலேயே ஔவையாரும் “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்றார். கோயில்கள் கல்வியைப் புகட்டியதற்கு நிறையவே கல்வெட்டு ஆதாரங்கள் கூட இருக்கின்றன. அதுமட்டுமல்ல சரசுவதி வாழும் கோயில்கள் கல்விக்கூடங்களே. வித்தையின் தாய் வித்தியா. அவளே சரசுவதி. எனவே வித்தியாவின் பெயரால் வித்தியா ஆலயங்களை - வித்தியாலயங்களைக் கட்டி எம் குழந்தைகளின் அறிவை தெளிந்த நல்லறிவாக்குவோம்.
இனிதே,
தமிழரசி.

Wednesday 20 May 2015

ஈழத்தமிழர் இலங்கையின் வந்தேறு குடிகளா?

ஆற்றிடைக்குறை [இது போன்றது இலங்கை]

ஈழத்தமிழர் இலங்கையின் வந்தேறு குடிகள் என்று பலரும் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். அது உண்மையா? என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போமா? உலக வரலாற்றைப்புரட்டிப் பார்த்தால் இலங்கையில் தொன்று தொட்டே தமிழர் வாழ்ந்து வருவதற்கான ஆதாரங்கள் நிறைய இருப்பதைக் காணலாம். நாம் அதனைக் கண்டுகொள்வதில்லை.

இலங்கை என்பது தமிழ்ச் சொல்லே. இலங்கை என்றால் என்ன என்பதற்கான சரியான விளக்கத்தை தமிழ்மொழி அல்லாத வேற்றுமொழிகளில் காணமுடியாது. ஓர் ஆற்றுக்கு இடையே இலங்கும் நிலத்தை இலங்கை என்று நம் தமிழ் முன்னோர் அழைத்தனர். அதாவது ‘ஆற்றிடைக்குறை’ இலங்கை எனப்படும். இந்தியாவும் கடல் கொண்ட தென் நாடும் ஒரே நிலப்பரப்பாக இருந்த காலத்தில் குமரி ஆற்றுக்கு இடையே இலங்கிய நிலமே இலங்கை.

இருக்குவேதம் இலங்கையில் புலத்திய முனிவர் வாழ்ந்தார் என்று இறந்த காலத்தில் சொல்கிறது. இருக்கு வேதம் தொகுக்கப்பட்ட காலம் கி மு 1500 - 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். [An introduction to Hinduism - Gavin D (1996)]. ஆதலால் இருக்கு வேதம் தொகுக்கப்பட்டு ஆயிர ஆண்டுகளின் பின்பே விஜயன் இலங்கைக்கு வந்தான். ஆனால் இருக்குவேதம் எழுதப்பட முன்பே இலங்கையில் புலத்திய முனிவர் வாழ்ந்திருக்கிறார். மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் வாழ்ந்த அந்தப் புலத்திய முனிவர் நாகர் இனத்தைச் சேர்ந்தவர். சங்கத்தமிழ் நூலான பரிபாடல் மதுரையை நாகநாடு என்றும் தமிழரை நாகர் என்றும் சொல்கின்றது. 

சிலப்பதிகாரமும் 
“நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு”
என மதுரையை நாகர்களின் நாடாகச் சொல்வதைக் காணலாம். ஆதலால் இன்றைக்கு 3200 வருடங்களுக்கு முன்பிருந்தே - அதாவது இருக்கு வேத காலத்திற்கும் முன்பிருந்தே இலங்கையில் தமிழர் வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறியலாம். 

அதுமட்டுமல்ல மூவாயிர வருடங்களுக்கு முன்பு king Solomon காலத்தில் [கி மு 931] இலங்கையில் கிடைத்த மாணிக்கக் கற்களை கிரேக்கர்களும், உரோமர்களும் அரேபியர்களும் சீனர்களும் பெரிதும் விரும்பி வாங்கினார்கள். அதனாலேயே அகில், தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி போன்ற பல தமிழ்ச்சொற்கள் அவர்கள் மொழியில் கலந்தன. அப்போது உலகின் தலைசிறந்த மாணிக்கக் கற்களை இலங்கையிலிருந்து அரேபியர்கள் பெற்றார்கள் என்பதை பண்டைய இலங்கையின் இரத்தினக் கற்களின் வரலாறு சொல்கிறது. அந்நாளில் அரேபியர்களால் இலங்கை சேரன் தீவு [Serendib] என்றே அழைக்கப்பட்டது என்பது வரலாறு காட்டும் உண்மையாகும். சேர அரசர்கள் தமிழ் அரசர்கள் தானே? மூவாயிர வருடங்களுக்கு முன்பே சேரர்கள் இலங்கையை ஆண்டார்கள். அப்படியிருக்க எப்படி ஈழத்தமிழர் இலங்கையின் வந்தேறு குடிகள் ஆவர். சிங்களவர்களுடைய நாடாகும்?

எனவே இலங்கைக்கு விஜயன் வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். ஈழத்தமிழர்களாகிய நாம் செய்த செய்யும் வரலாற்றுப் புறக்கணிப்பே, நாடற்று வாழும் இன்றைய நிலைக்குக் காரணமாகும். அதனாலேயே The Times வெளியிட்ட 'Complete History of the World' என்னும் புத்தகத்தின் 16ம் பக்கத்தில் கி மு 500ல் சிங்கள ஆரிய மக்கள் இலங்கை வந்ததாக எழுதி இருக்கின்றது. இது எவ்வளவு பெரிய வரலாற்றுத் தவறு தெரியுமா? 

இலங்கையைப் போல் சிங்களம் என்பதும் தமிழ்ச் சொல்லேயாகும். தமிழரின் ஆடற்கூத்து வகைகளில் ஒன்று சிங்களம். பண்டைத் தமிழரின் ஆடற்கூத்துகளில் சாந்திக்கூத்து என்பது ஒருவகை. அது சொக்கம், மெய், அவிநயம், நாடகம் என நான்கு பிரிவாகும். அதனை
“சாந்திக் கூத்தே தலைவனின் இன்பம்
ஏந்தி நின்றாடிய ஈரிரு நடமவை
சொக்கம் மெய்யே அவிநய நாடகம்
என்றிப் பாற்படூஉம் என்மனார் புலவர்”
என்று தனிப்பாடல் ஒன்று சொல்கிறது. சாந்திக்கூத்தின் ஒரு பிரிவான மெய்க்கூத்து தேசி, வடுகு, சிங்களம் என மூன்று வகையாகும். இந்த மெய்க்கூத்துப்பற்றிக் கூறும் அறிவனார் எழுதிய ‘பஞ்ச மரபு’ என்னும் நூல் தேசி, வடுகு, சிங்களம் ஆகிய மூன்று மெய்க்கூத்துக்களின் கால் தொழில் பற்றியும் சொல்கிறது. 

இக்கூத்துக்களைத் தேவரடியார்கள் ஆடியதை சோழர்கால கல்வெட்டுகளும் சொல்கின்றன. 13ம் நூற்றாண்டில் இலங்கையின் ஒருபகுதியை தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்த மாறவர்மன் குலசேகரன் காலத்தில் மல்லத்தில் இருந்து [மல்லம் - இப்போது ஆந்திராவிற்குள் இருக்கும் இடம்] சிங்களக் கூத்தாடுவோரை நரசிம்மன் [சிதம்பரத்தின் கிழக்குக் கோபுரத்தை 108 நாட்டியக் கரணங்களோடு கட்டிய கோப்பெருஞ்சிங்கனின் பேரன்] இலங்கைக்கு அழைத்துச் சென்றதை வீரமாதேவி தனது நாட்குறிப்பில் சொல்கிறாள். இந்த வீரமாதேவி புங்குடுதீவில் கோட்டைகட்டி வாழ்ந்தவள். அதன் பின்பே, தமிழரின் மெய்க்கூத்தில் ஒன்றான சிங்களக்கூத்து மெல்ல மெல்ல இன்றைய கண்டியன் நடனமாக மாறியது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட சிங்களவர்களால் பேய் நடனம் என்றே கண்டியன் நடனம் அழைக்கப்பட்டது. அதனை 1900 - 1910 எடுக்கப்பட்ட கீழே உள்ள படங்களே எடுத்துச்சொல்வதைப் பாருங்கள். இப்பொழுதும் கண்டியன் நடனம் ஆடுபவர்களுக்கு தமிழரின் சிங்களக்கூத்தின் சரியான நுணுக்கங்கள் தெரியாது. அவை கொஞ்சம் கடுந்தமிழ்ப் பாடல்களாக இருப்பதே அதற்குக் காரணம் என நினைக்கிறேன்.

தமிழரின் மெய்க்கூத்தில் ஒன்றான சிங்களக்கூத்து 


மனிதஇனங்கள் பெரும்பாலும் பேசும் மொழியாலேயே இனங்காணப்படுகின்றனர். கி பி 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகேந்திரவர்ம பல்லவன் உருவாக்கிய வட்டெழுத்தில் இருந்து பிறந்த மொழிகளில் ஒன்றே சிங்களம். சிங்கள மொழிக்கு முதன்முதல் எழுதப்பட்ட சிங்கள இலக்கண நூல் - ‘ஸிதத் ஸங்கராவ’ [Sidath Sangarawa] - கி பி 13ம் நூற்றாண்டிலேயே எழுதப்பட்டது. அதுவும் தமிழ்மொழி இலக்கண நூலான[தமிழ் சமஸ்கிருத - மணிப்பிரவாள  நடைக்கான]  வீரசோழியத்தைப் படித்தே எழுதப்பட்டுள்ளது. அப்படியிருக்க சிங்கள மொழி உண்டாகி, சிங்களவர் தோன்ற 1200 வருடங்களுக்கு முன் சிங்கள ஆரியர் இலங்கை வந்ததாக  The Times ஆல் எப்படி எழுதமுடிந்தது? தமிழர்களாகிய நாம் இத்தகைய வரலாற்றுத் தவறை தட்டிக் கேட்பதில்லை. வருங்காலத்தில் இதனையே உண்மையான வரலாறாக உலகம் சொல்லப் போகிறது. இது வரலாற்றுத் தவறு என்பதையும் இலங்கை காலங்காலமாக தமிழரின் சொந்த நாடு என்பதையும் சிங்களவர் நம் நாட்டில் வந்து குடியேறியவர்கள் என்பதையும் நாம் உலகுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். வாய்மூடி மௌனித்து இருப்பது அழகல்ல.

ஆயிர வருடங்களுக்கு முன் பாடப்பட்ட ஒரு தனிப் பாடல் ஒன்று பதினேழு நாடுகளை தமிழ் நாடாகச் சொல்கிறது.
“சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளு கடகம்
கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கு கலிங்கம் வங்கம்
கங்கம் மதகம் கவுடம் கடாரம் கடுங் குசலம்
தங்கும் புகழ்த் தமிழ்சூழ் பதினேழ் புவி தாமிவையே

பண்டைத் தமிழர் வாழ்ந்த இந்த பதினேழு நாடும் இப்போது எங்கே போயிற்று?   இதிலிருந்து என்ன தெரிகிறது? பதினேழு நாட்டிலும் அதன் அதன் இனமாக, மொழியாக தமிழரும் தமிழும் மாறியது தெரிகிறது. அந்த வரலாற்று மாற்றத்தை தக்க ஆதாரத்துடன் இந்த உலகுக்கு எடுத்துச் சொல்ல நாம் கடமைப் பட்டிருக்கிறோம். இப்பாடலில் மலையாளம் குறிப்பிடப்படவில்லை. மலையாளமொழி தேன்றமுன்னர் எழுதப்பட்ட பாடல் என்பதை அது காட்டுகிறது.

அதிகம் வேண்டாம் 1925ம் ஆண்டிற்கும் 1950ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இன்றைய இலங்கையின் கரையோரப் பகுதியில் வாழ்ந்த மக்களின் பிறப்புச் சான்றிதழ்களை எடுத்து ஆய்வு செய்தால் நூற்றுக்கு 65 வீதமானவர்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இருப்பதைப் பார்ப்பீர்கள். இன்று சிங்களவர் என்று வாழ்வோரில் பெரும்பாலானோர் தமிழர்களே. அதுவே உண்மை.
இனிதே,
தமிழரசி.

Saturday 16 May 2015

புலம்பிடுமோ புங்குடுதீவு எனும் பழம்பதியே!



கண்ணழகு கவிதை சொல்ல
      காவியமாய் நின்ற கன்னிதனை
புண்ணழகு நெஞ்சப் புலையர்கூடி
      புணர்ந்தனரே வன்புணர்ச்சி என்று
எண்ணும் போதே உள்ளம்
      எரிதழலில் வேகின்றதையோ
மண்ணுலகு உள்ளவரை
      மாளாவசை எமக்கு ஈந்தமைந்தர்!

பெண்மையென்னும் புதுமலரை
       பருவவயதில் பொசிக்கியவர் யார்?
ஆண்மையற்ற ஈனர்களாய்
      ஆறறிவு படைத்த மானிடராய்
பெண்மைதனைச் சீரழித்தோரையும்
      பெற்றதும் புங்குடுதீவு எனும் 
உண்மை நிலைகண்டு நாம்
      உளம் குமைந்து நாணுகிறோம்

சித்திரைத் தேரென திரிந்த
      சிங்காரச் செல்வியை மகா
வித்தியாலயம் சென்ற வித்தியாவை
      வலிந்து புணர்ந்து கொன்ற
எத்தரைப் பெற்றதுவும் நானே
      என்று எண்ணி எண்ணி
பித்துக்கொண்டு புலம்பிடுமோ
      புங்குடுதீவு எனும் பழம்பதியே! 
இனிதே,
தமிழரசி

Friday 15 May 2015

எனது 'ஆசைக்கவிதைகள்' பெறும் இலக்கியப்பரிசு

2014 ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான 
இலக்கியப் பரிசுகளை 
கவிதை உறவு வழங்குகிறது 
'ஆசைக்கவிதைகள்' 
 புதுக்கவிதைக்கான முதலாவது பரிசைப் பெறுகிறது


மனித உள்ளம் என்னும் பாறையில் ஊற்றெடுத்து பாயும் அருவியே கவிதை எனலாம். நாட்டார் பாடல், நாட்டுப்புறப் பாடல், பாமரர் பாடல் என்றெல்லாம் கூறி இலக்கிய அறிஞர்களால் புறக்கணிக்கப்படுவது நாட்டுப்பாடல்கள். ஆனால் என் தந்தை பண்டிதர் ஆறுமுகன் அவர்களால் 1936 ஆம் ஆண்டில் இருந்து சேகரிக்கப்பட்ட நாட்டுப்பாடல்களுக்கு நான் விளக்கம் அளித்து 2014 ஆம் ஆண்டு வெளியிட்டேன். அந்த நாட்டார் பாடல்களுக்கு [ஆசைக்கவிதைகள்] புதுக்கவிதைகளுக்கான இலக்கியப் பரிசு கிடைப்பது இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை என நினைக்கிறேன். 

கவிதை உறவு புதுக்கவிதைக்கான முதலாவது பரிசை நாட்டுப் பாடல்களுக்கு வழங்கி இலக்கிய உறவை விரிவாக்கி இருக்கிறது. அதற்காக ‘கவிதை உறவு’ ஏர்வாடி எஸ் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசைக்கவிதைகள் நூலை சிறந்த புதுக்கவிதை நூலாகத் தெரிவு செய்த தெரிவுக்குழுவினருக்கும் எனது வாழ்த்து உரித்தாகுக.

இந்த நூலை வெளியிடுவதற்கு எனக்கு உறுதுணையாய் இருந்த  திரு திருமதி முருகானந்தா அவர்கட்கும் உறவினர்க்கும் நண்பர்க்கும், இந்நூலில் உள்ள படங்களைக் கீறித்தந்த என் அருமை மகள் [தங்கை மகள்] பிரதீபாவுக்கும், முன் அட்டைப் படத்தை தந்துதவிய இளங்கீரனுக்கும் இந்நூலை அச்சிட்டதோடு தெரிவுக் குழுவுக்கு அனுப்பியுதவிய ‘சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷ்ன்ஸ்’ கார்த்திகேயனுக்கும் எனது இனிய வாழ்த்தைக் கூறி மகிழ்கிறேன்.

கவிதை உறவு உலகெங்கும் ஓங்கி வளரட்டும்!

Monday 11 May 2015

இன்பப் பாமாலை தந்தான்!

கருவின் உயிராய் அன்று 
    கழலிணையை தொழுதேன்
முருகு என்ற சொல்லை
    முப்போதும் கேட்டேன்
உருகும் மன எண்ண
    உணர்வினில் கரைந்தேன்
பருகு என்று இன்பப்
    பாமாலை தந்தான்!

Sunday 10 May 2015

சித்திரக் கவிதை - 3


சித்திரக்கவிதையில் மிக இலகுவான கவிதைக்கு ‘பத்திரம்’ என்னும் வகையையும் ‘கோமுந்திரி’ என்னும் வகையையும் சொல்லலாம். பத்திரம் என்றால் அழகு. அதாவது அழகான கவிதை என்பதையே பத்திரம் என்னும் சொல் குறிக்கின்றது. கோண பத்திர சித்திரக் கவிதையின் முதலாவது சொல்லாக வரும் ஓரெழுத்துச் சொல் அல்லது ஈரெழுத்துச் சொல் எல்லாப் பக்கமும் சூழ நின்று இச்சித்திரக் கவிதைகளை பத்திரமாகக் காப்பதால் கோணபத்திரம் என்றும் அழைத்திருக்கலாம்.

ஈழத்தில் “ஓம் அர ஹர நம சிவ ஓம்” என்று பாடுவோமே அதுவும் இந்த கோணபத்திர சித்திரக் கவிதை வடிவைச் சேர்ந்ததேயாகும். அது ஈரெழுத்து சொல்லால் ஆனது. அதன் சித்திர வடிவைப் பாருங்கள்.
ஓம்
ஓம் ஓம்
ஓம் சிவ ஓம்
ஓம் நம சிவ ஓம் 
ஓம் ஹர நம சிவ ஓம்
ஓம் அர ஹர நம சிவ ஓம்
ஓம் ஹர நம சிவ ஓம்
ஓம் நம சிவ ஓம்
ஓம் சிவ ஓம்
ஓம் ஓம்
ஓம் 

கோணபத்திரம் என்னும் சித்திரக் கவிதை வகையில் இரண்டு சித்திரக் கவிதைகளை இதில் எழுதி இருக்கிறேன். 

முதலாவது வகை:
கோணபத்திர கவிதையில் ‘வேலவா’ எனும் பெயர்ச் சொல்லை வைத்தே சித்திரக் கவிதையை நான் புனைந்திருக்கிறேன். 

இந்த வகைச் சித்திரக்கவிதையை நீங்கள் எழுதுவதானால் எடுத்துக்கொள்ளும் பெயர்ச்சொல்லுக்கு முன்னே அப்பெயர்ச் சொல்லின் உரிச்சொல்லைச் சேர்த்து அழகுபடுத்த வேண்டும். கவிதைக்கு ஏற்றார்ப்போல் பெயர்ச்சொல்லும் உரிச்சொல்லும் கலந்து கவிதைக்கு மெருகூட்டலாம். பெயர்ச் சொல்லின் முன்னே வரும் உரிச்சொல்லை பெயரடை [Adjectives] என்றும் சொல்வர்.

எனது முதலாவது பாடலின் மூன்றாவது அடியில் இருக்கும் ‘வேலவா’ என்ற சொல்லின் முன்னே நான்காவது அடியில் ‘வடி’ என்ற உரிச்சொல்லைச் சேர்த்திருக்கிறேன். வடி என்றால் கூர்மை. கூர்மையான வேலை உடையவன் வடிவேலன். ஐந்தாவது வரியில் ஆனந்தம், இப்படி ஒவ்வொரு வரியாக ஒவ்வொரு சொல்லைக் கூட்டிச் செல்லவேண்டும். கவிதை முடிந்ததும், அந்த வரிக்கு மேலே நீங்கள் எழுதிய கவிதை வரிகளை கீழிருந்து மேலாக எழுதி முடிக்க வேண்டும்.
வா
வா வா
வா வேல வா
வா வடி வேல வா
வா ஆனந்த வடி வேல வா
வா பர மானந்த வடி வேல வா
வா சிவ பர மானந்த வடி வேல வா
வா அருட் சிவ பர மானந்த வடி வேல வா
வா மன அருட் சிவ பர மானந்த வடி வேல வா
வா என் மன அருட் சிவ பர மானந்த வடி வேல வா
வா மன அருட் சிவ பர மானந்த வடி வேல வா
வா அருட் சிவ பர மானந்த வடி வேல வா
வா சிவ பர மானந்த வடி வேல வா
வா பர மானந்த வடி வேல வா
வா ஆனந்த வடி வேல வா
வா வடி வேல வா
வா வேல வா
வா வா
வா
இது ஒரு வகை கோணபத்திர சித்திரக் கவிதையாகும்.

இரண்டாவது வகை: 
கவிதையை எழுதத் தொடங்கும் முதல் எழுத்தை தொடக்கமாகக் கொண்டே கவிதையின் ஒவ்வொரு சொல்லும் வர வேண்டும். ஓரெழுத்துச் சொல்லில் கவிதை தொடங்க வேண்டும். ஒவ்வொரு வரியும் கருத்துள்ளதாக இருக்க வேண்டும். கீழேயுள்ள கவிதையில் தகர வரிசையில் ‘தா’ என்ற சொல்லை முதற்சொல்லாகக் கொண்டே கவிதை புனைந்திருக்கிறேன்.

தா
தா தா
தா தாதா தா
தா தாதா தாதையே தா
தா தாதா தாதையே தாளிணை தா
தா தாதா தாதையே தாளிணை தாங்க தா
தா தாதா தாதையே தாளிணை தாங்க தாதா தா
தா தாதா தாதையே தாளினை தாங்க தாதா தாரகம் தா 
தா தாதா தாதையே தாளிணை தாங்க தாதா தா
தா தாதா தாதையே தாளிணை தாங்க தா
தா தாதா தாதையே தாளிணை தா
தா தாதா தாதையே தா
தா தாதா தா
தா தா
தா

“தா தாதா தாதையே தாளிணை தாங்க தாதா தாரகம் தா”
“தா தாதா [பிரமனே] தாதையே [ தந்தையே] தாளினை தாங்க தாதா [கேட்கும் வரங்களை அளிப்பவனே] தாரகம் [தாரக மந்திரத்தை] தா”

அதாவது பிரமனே! உயிர்களைப் படைக்கும் தந்தையே! நின் பாதங்களைத் தாங்க, கேட்கும் வரங்களை அளிப்பவனே! பிரணவ மந்திரத்தைத் தா!! என்பதே இப்பாடலின் கருத்தாகும்.
இனிதே,
தமிழரசி.

Saturday 9 May 2015

குறள் அமுது - (106)



  குறள்:
"கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
  கோடி உண்டாயினும் இல்"                                            - 1005

பொருள்:
பிறருக்குக் கொடுத்தும் தான் அநுபவித்தும் வாழாதவர்க்கு அடுக்கடுக்காகப் பல கோடி பொருள் இருந்தாலும் இல்லாததேயாகும்.

விளக்கம்:
பல கோடி செல்வத்தை அடுக்கி வைத்திருப்போர்  அவற்றில் எதனையும் மற்றவர்கட்குக் கொடுக்காது தானும் அநுபவிக்காது இருப்போராயின் யாவும் இருந்தும் இல்லாதோரே. அதனைத் திருவள்ளுவர் நன்றிஇல் செல்வம் என்னும் அதிகாரத்தில் சொல்கிறார். செல்வத்தைக் குவித்து வைத்திருப்போருக்கு அச்செல்வத்தால் எதுவித நன்மையையும் இல்லாது இருக்கும். அத்தகைய செல்வத்தை திருவள்ளுவர் நன்றிஇல் செல்வம் என்கிறார்.

ஒருவரிடம் கோடி கோடியாய்ப் பணமும் பொருளும் மாட மாளிகைகளும் விதவிதமாய் வாகனங்களும் வேலையாட்களும் எனப் பலவகைகளில் அடுக்கடுக்காய் உலக நாடுகள் எங்கும் கொட்டிக் கிடக்கிறது என வைத்துக் கொள்வோம். அவ்வளவு பணமிருந்தும் அவர் தான் சிறு வயதில் பட்ட வறுமையை நினைத்தோ அல்லது கஞ்சத்தனத்தாலோ உண்ணாது உறங்காது நல்ல ஆடை  அணியாது நல்ல வீட்டில் வாழாது தனது பணத்தைப் பொருளை எடுத்துச் செலவு செய்யாது பிறருக்கும் கொடாது வாழ்வர். இப்படித் தம்மிடம் இருக்கும் பொருளை பூதம் காப்பது போல் காப்போரிடம் உள்ள பொருள் இருந்தும் இல்லாததே என்பது வள்ளுவன் முடிவாகும்.

"கொடையும் தயையும் பிறவிக்குணம்" என்பது பழமொழி. தன்னிடம் உள்ளதைப் பிறருக்குக் கொடுப்பதும் பிறரது துன்பம் கண்டு மனம் இரங்குவதும் பரம்பரைக் காரணி என இப்பழமொழி சொல்கிறது. தயையாகிய மனஇரக்கம் உள்ளோரே தம்மிடம் இருப்பதை தேவைப்படுவோருக்குக் கொடுப்பர். பிறரது தேவை கருதிக் கொடுத்தலே கொடையாகும். அதனையே கொடுப்பதூஉம் என்று வள்ளுவர் இக்குறளில் கூறுகிறார். பிறர்  நிலை கண்டு இரங்குவது போல நம் தேவை என்ன என்பதையும் நாம் அறிந்து அவற்றை அநுபவிக்க வேண்டும். அப்படி அநுபவித்தலே துய்த்தலாகும். தாம் உழைத்த பொருட்களைத் தாமே அநுபவிக்காது சேர்த்து வைப்பதால் அப்பொருட்களுக்கும் அவற்றைச் சேர்த்தோர்க்கும் என்ன நன்மை உண்டாகப் போகிறது? அதனால் நன்மையைத் தராத செல்வம் கருத்தில் நன்மையில் செல்வம் என்றார்.

தம் பொருளைத் தாமே அநுபவியாதோர் எப்படி பிறருக்குக் கொடுப்பர்?  தம்மிடம் உள்ளதை தேவையானோருக்குக் கொடுத்து தாமும் அநுபவித்து வாழவேண்டும். அப்படி வாழமுடியாதோரிடம் பல கோடிப்பொருள் அடுக்கிக் கிடப்பினும் அவற்றால் ஏதும் நன்மை உண்டாகப் போவதில்லை.