Tuesday 28 April 2015

ஆழி சூழ் கோணாசலம்

அருள்மிகு திருக்கோணேஸ்வர நாதர்
வணக்கப் பாமலர்
 இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் - [எனது தந்தை]

கைலாச மலையமர்ந் துமைபாக மருவவே
       கருதுலகு காக்கு மையர்
காளத்தி யப்பனார் கண்ணப்பனார் செயும்
       கனபூசை ஏற்றுவ கைதந்தார்
பயிலாக மங்கூறு பக்திமுறை வழிநின்று
       பரவு சிவ கோசரிக்கு
பாதிநிசி கனவினில் திண்ணனார் இட்டவூன்
       பசிதீர்த்த தென்ற வமுதர்
மயிலான தேறியிவ் வுலகேழு வலமாயும்
       மாங்கனி பெறாது நொந்த
மைந்தனைப் பழநீ யெனக்கூறி யன்புடன்
       மார்போ டணைத்த எந்தை
அயிலான ஓங்கார விசைபாடி யடிபரவும்
       ஆழி சூழ் கோணாசலம்
அமர்ந்தருளி யிராவணற் கருள்பூத்த பரமசிவம்
அடியெமைக் காத்தருள் கவே!
இனிதே,
தமிழரசி.

Monday 27 April 2015

தமிழின் அருமை

இனிமை என்றால் என்ன? இனிமையே தமிழ். ஏனெனில் அமிழ்து அமிழ்து அமிழ்து என்று சொல்லிப்பாருங்கள் அது தமிழ் ஆவது காண்பீர்கள். இனிமையானவற்றில் மிகவும் இனிமையானது அமிழ்தல்லவா? எனவே தமிழைவிட இனிமையானது வேறு ஏதேனும் கிடைக்குமா? அமிழ்தே தமிழாதலால் இன்றும் கன்னித் தமிழாய் இருந்தபடி அழிவில்லாது இருக்கிறது. 
உதாரணத்திற்கு சொல்வதானால் நானூறு ஆண்டுகளுக்கு முன் Shakespeare எழுதிய ஆங்கில நாடகங்களை வாசித்து விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் இன்றைய ஆங்கிலம் உள்ளது. ஆனால் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத் தமிழை புலம் பெயர் நாட்டில் பிறந்து வாழும் சிறு பிள்ளைகளும் வாசித்து விளங்கிக் கொள்ளலாம். இதைவிடத் தமிழின் அருமைக்கு வேறு எடுத்துக் காட்டும் வேண்டுமா?

உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இருப்பினும் ஆறு மொழிகளே செம்மொழிகள் என்ற தகுதியைப் பெற்றுள்ளன. ஒரு மொழியானது செம்மொழி என்னும் தகுதியைப் பெறுவதற்கு 
  1. மிகத்தொன்மையான மொழியாக இருக்க வேண்டும்.
  2. பிறமொழியின் துணையின்றி தானே தனித்து இயங்கக் கூடிய மொழியாக இருக்க வேண்டும்.
  3. இலக்கியவளம் நிறைந்த மொழியாய் இருக்கவேண்டும்.
  4. அந்த இலக்கியங்கள்
  5. அம்மொழி தாய் மொழியாய் பிறமொழிகளை உண்டாக்கி இருக்கவேண்டும். 
இத்தகுதிகளை கிரீக், இலத்தின், சீனம், எபிரேயம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய ஆறு மொழிகளே பெற்றிருக்கின்றன. 

அவற்றுள் கிரீக், இலத்தின், சமஸ்கிருதம் மூன்றும் இறந்து போய்விட்டன. எனினும் இலக்கியங்களில் வாழ்கின்றன. பேச்சுவழக்கற்றுப் போன எபிரேயமொழிக்கு 19ம் நூற்றாண்டில் உயிர் கொடுத்ததால் இன்று இஸ்ரேலின் ஆட்சிமொழியாக இருக்கிறது. சீனமொழியும் தமிழ்மொழியுமே அழியாது தொடர்ந்து வாழ்ந்து வருகின்றன. 

இன்றும் சீனமொழியை பட எழுத்தாகவே எழுதுகின்றனர். ஆனால் தமிழ்மொழி தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே படஎழுத்து, கருத்தெழுத்து, அசையெழுத்து ஆகிய மூன்று நிலைகளைக் கடந்து இன்று நாம் எழுதும் வரியெழுத்து நிலைக்கு வந்து விட்டது. எனவே இன்று இருக்கும் உலக மொழிகளில் எம்தாய்மொழியாம் தமிழ்மொழியே இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு மேலாக வாழ்கின்றது. ஆதலால் உலகின் சிறந்த ஆறு செம்மொழிகளிலே உயர்தனிச் செம்மொழி தமிழ் ஒன்றே என்பதை தமிழராகிய நாம்  உணர்ந்து கொள்ள வேண்டும். 

கட்டுமரம் என்ற தமிழ்ச்சொல் ஒன்றே போதும் தமிழின் அருமையை உலகிற்குக் காட்ட. கட்டுமரத்தைக் கட்டி கடலோடிய தமிழன் நாடுவிட்டு நாடு சென்று அரசியல், வணிகம், கலை, பண்பாடு, பொருளாதாரம் யாவற்றுக்கும் உலகிற்கு வழிகாட்டினான். ‘நாவாய்’ என்னும் ஒரு தமிழ்ச் சொல்லில் இருந்தே நவல் [Naval], நவார் [navar], நவிகேட் [navigate], நவிகேசன், நேவி என எத்தனை நூறு சொற்களை ஆங்கிலம் உண்டாக்கி இருக்கிறது? இப்படி உலகெங்கும் உள்ள மொழிகளில் இருக்கும் தமிழ்ச்சொற்கள், உலகின் நாகரிக வளர்ச்சிக்கு தமிழ் கொடுத்தது எவை என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன அல்லவா! 

மொழி இலக்கணதிற்கு தொல்காப்பியம், வீரத்திற்கு புறநானூறு, காதலுக்கு அகநானூறு, தமிழின் கலை பண்பாட்டிற்கு சிலப்பதிகாரம், கட்டிடக்கலைக்கு மயமதம், சிற்பக்கலைக்கு சிற்பச்செந்நூல். கணிதத்திற்கு கணக்கதிகாரம். பக்திக்கு, இசைக்கு, இசை அமைப்புக்கு பரிபாடல், இவை யாவற்றிற்கும் மேலாக உழவு, உணவு, மருத்துவம், அரசியல், பொருளாதாரம், காதல் என மனித வாழ்வியலுக்கு ஒரு திருக்குறள் போதும். தமிழின் அருமையை சொல்ல வேறென்ன வேண்டும்?
இனிதே, 
தமிழரசி

Friday 24 April 2015

ஆனந்த நித்திரையே!


பண்ணிறைந்த பாடல் பாடுவார் யாருமின்றி
கண்ணிறைந்த நித்திரை செய்ய வழியுமின்றி
எண்ணிமனம் நொந்து ஏங்கி அழுதலின்றி
அண்ணனவன் தோளில் ஆனந்த நித்திரையே!

                                                                            - சிட்டு எழுதும் சீட்டு 101

Thursday 23 April 2015

பின்னையேன் பிறக்க வைத்தாய்!

என்னையே எண்ணி நிதம்
    ஏங்கியழும் வாழ்க்கையிலே
உன்னையே எண்ணுதற்கு ஏது
    உளம் ஈங்குள்ளது
முன்னையே நினைத்திலேன் உன்
    மேன்மையும் அறிந்திலேன்
பின்னையேன் பிறக்க வைத்தாய்
    பிறப்பறுப்பது நின்கடனே!

Tuesday 21 April 2015

சித்திரக் கவிதை - 2



சித்திரக் கவிதைகள் யாவும் சித்திரங்களுக்குள் அடங்கி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. சித்திரத்துக்குள் அடக்கி வைக்காத சித்திரக் கவிதைகள் சொல்லாடலை, இசையைச் சித்திரமாய்க் கொண்டிருக்கும். அவற்றின் யதிகளும் தாளங்களும் மனதைச் சித்திரமாய்க் கவரும். இத்தகைய சித்திரக் கவிதை வடிவங்கள் சிலவற்றை பன்னிரு திருமுறையிலும் காணலாம்.  செய்யுள் இலக்கண நூலான முத்துவீரியம் சொல்லும் ‘எழுகூற்றிருக்கை’ என்னும் சித்திரக் கவிதை வகையை பதினோராந் திருமுறையில் காணலாம். அதனை நக்கீரர் ‘திருஎழு கூற்றிருக்கை’ என்ற பெயரிலேயே பாடியிருக்கிறார்.

அந்த திருஎழு கூற்றிருக்கையில் இராவணனுக்கு இறைவன் அருள்புரிந்ததை
“பொருந்தினை
லையளி பொருந்தினை 
கேட்டவன் தலையளி பொருந்தினை 
தாழ்வாய்க்  கேட்டவன் தலையளி பொருந்தினை 
பாடத் தாழ்வாய்க்  கேட்டவன் தலையளி பொருந்தினை 
இராவணன் பாடத் தாழ்வாய்க்  கேட்டவன் தலையளி பொருந்தினை 
ஏழின்ஓசை இராவணன் பாடத் தாழ்வாய்க்  கேட்டவன் தலையளி பொருந்தினை”
- (ப.திமுறை:11 :5-4 :42 - 43)  

என சித்திரக் கவிதையாக நக்கீரர் தந்திருக்கிறார்.

இதுபோல் திருநாவுக்கரசு நாயனார் பாடிய தேவாரத்தில் இருக்கும் சித்திரக் கவிதை வடிவைப் பார்ப்போம்.

இராவணனுக்கு இறைவன் திருவருள் புரிந்ததை
“கொடுத்தானை
இனிதுகேட்டு கொடுத்தானை
இசைபாடல் இனிதுகேட்டு கொடுத்தானை
எழு நரம்பின் இசைபாடல் இனிதுகேட்டு கொடுத்தானை”
- (ப.திமுறை:6 :69:10)

என்று கூறும் திருநாவுக்கரசர், அருச்சுனனுக்கு அருள் செய்ததையும்
“கொடுத்தானை
பதம் கொடுத்தானை
பாசு பதம் கொடுத்தானை
அருச்சுனர்க்கு பாசு பதம் கொடுத்தானை”
- (ப.திமுறை:4 :07 :10)

என சித்திரக் கவிதையாகத் தேவாரத்தை பாடுவதற்கு ஏற்றாற்போல் ஆறாம் திருமுறையில் பாடியிருக்கிறார். இப்படி வாசிப்பதை ‘கொண்டு கூட்டி’ வாசித்தல் என்பர். சித்திரக் கவிதை முறையில் கொண்டு கூட்டிப் பாடுவதால் கேட்போர் மனதில் பாடலும் அதன் கருத்தும் நன்கு பதியும். திருத்தாண்டகமாகப் பாடுவதால் சித்திரக் கவிதையின் சுவையை நாம் அறிவதில்லை.

சிவனை நினைந்து நான் எழுதிய ஒரு சித்திரக்கவிதையை கீழே தந்திருக்கிறேன்.
தருவாயோ
கரம்  தருவாயோ
இரு கரம் தருவாயோ
நின் இரு கரம் தருவாயோ
 வருவாயோ நின் இரு கரம் தருவாயோ
உடனே வருவாயோ நின் இரு கரம் தருவாயோ
உமையாள் உடனே வருவாயோ நின் இரு கரம் தருவாயோ
 
இனிதே,
தமிழரசி.

Monday 20 April 2015

குறள் அமுது - (105)


குறள்:
“அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு”                               
                                             - (குறள்: 513)

பொருள்:
தொழிலில் பற்றும், தொழில் பற்றிய அறிவும், அதனைச் செய்து முடிக்கும் துணிவும், பிறர்பொருளில் ஆசை இன்மையும் ஆகிய நான்கு பண்பும் இருப்பவனை தொழிலுக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

விளக்கம்:
'தெரிந்து வினையாடல்' என்னும் அதிகாரத்தில் இத்திருக்குறள் இருக்கிறது. வினை என்பது செய்யும் தொழிலைக் குறிக்கும். தொழில் செய்ய ஒருவரைத் தெரிந்தெடுப்பதற்கு  நாம் என்ன செய்யவேண்டும் என்பதை இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுகிறார். 

மனித மனம் எதனை விரும்புகின்றதோ அதனை மிகவும் ஆவலுடன் மீண்டும் மீண்டும் செய்ய விழையும். தாம் செய்யும் தொழில் மேல் பற்று உள்ளவரே அத்தொழிலைத் திறமையுடன் செய்வர். தொழில் மேல் அன்பில்லாவிட்டால் தொழிலின் நுணுக்கங்களை நன்கு அறிந்து ஆர்வத்துடன் எவராலும் செய்யமுடியாது. எனவே அந்த வேலையில் அன்பு உள்ளவனாகப் பார்த்து வேலைக்கு எடுக்க வேண்டும் என்பதை முதலில் சொல்கிறார்.

வேலை செய்ய வருபவருக்கு அந்த தொழில் பற்றிய முன்னநுபவம் இருக்கிறாதா? அத்தொழில் பற்றி ஏதாவது படித்திருக்கின்றாரா? என்பவற்றை ஆராய்ந்து பார்த்தே ஒருவரை வேலைக்குத் தெரிவு செய்ய வேண்டும். அப்படி இல்லாதவருக்கு அந்த வேலையைக் கற்றுக் கொடுப்பதற்கும் தொழில் பற்றிய அறிவு இருக்கிறதா என்ற சோதனை தேவைப்படும். 

தேற்றம் என்பது இங்கு மனங்கலங்காத் தன்மையைக் குறிக்கிறது. ‘பதறிய காரியம் சிதறும்’ என்பார்கள். ஒருவருக்கு ஏற்படும் மனக்கலக்கமே செய்யும் காரியம் சிதறக் காரணமாகும். அதனால் கொடுத்த வேலையை துணிவுடன் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரா என்பதைப் பார்த்தே வேலைக்கு எடுக்க வேண்டும். 

ஆசைப்படாத தன்மையே அவாஇன்மை ஆகும். ஆசையே களவெடுப்பதற்கும் கொள்ளையடிப்பதற்கும் வழி வகுக்கின்றது. ஆதலால் தொழில் செய்யும் இடத்திலிருக்கும் பொருட்களின் மேல், பணத்தில் மேல் ஆசை இல்லாதவரை வேலைக்குத் தேர்வு செய்ய வேண்டும்.

அத்துடன் ‘இந்நான்கு உடையான் கட்டே தெளிவு’ என்று ஏகாரம் போட்டு கூறுகிறார். அதாவது இந்த நான்கு பண்பும் உள்ளவரையே வேலைக்கு எடுக்க வேண்டும். இந்நான்கு பண்பில் ஒன்று குறைந்தாலும் தொழில் செய்யத் தகுதி இல்லாதவரே என்பது திருவள்ளுவர் முடிவாகும்.

Saturday 11 April 2015

மகனே! சிந்தை செய்திடுவாய்!!


குந்த நிலமுமின்றி மகனே - குடிக்க
கூழுக்கும் வழியுமின்றி
கந்தல் உடையுமின்றி மகனே - உடுக்க
கோவணம் கூடஇன்றி
காயும் வயிற்றுடனே மகனே - நடக்க
காலும் தானுமின்றி
சேயும் தானுமாய் மகனே - வாழ்வதை
சிந்தை செய்திடுவாய்!
                                            - சிட்டு எழுதும் சீட்டு 100

Friday 10 April 2015

அதிகாரி புலமேவு சிங்கார இள வழகனே!

புங்குடுதீவு மடத்துவெளி பாலமுருகன் வணக்கப் பாமலர்
- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -

சங்கத் திருந்துதென் தமிழாய்ந்த புலவனே
  தமிழர்தொழு குல தெய்வமே
சகலகலை அறுபத்து நான்கும் சமைத்திட்ட
  சண்முகத் தொரு முதல்வனே
பொங்கு செல்வங்கண்டு பூரித்து சிவதொண்டு
  புரிகின்ற புண்ணியர் பதியாம்
பொன்கைநகர் வடபால் மடத்துவெளி நன்னி
  பக்தர்வாழ அருள் பெருமான்
அங்கத் திருந்திடும் அருநோய்கள் தீர்த்தெம்மை
  ஆண்டருள வேண்டி நின்றோம்
ஆறுபடை வீடமர்ந் தருள்புரியு திருவுருவொடு
  அடியரைக் காக்க வருவாய்
செங்கை வனவேடனாய் வள்ளிமலர் கண்டு
  சொக்கி மரமாகி நின்றாய்
செந்நெல் பொலியு மதிகாரி புலமேவு
          சிங்கார இள வழகனே!

Monday 6 April 2015

தெய்வ அருளும் வரும் தரும்

- எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன் - 


“எத்தனை தான் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத் தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவை போல்
மெய்த் துயர் வீட்டாவிடினும் வித்துவக் கோட்டமா என்
சித்தமிக உன்பாலே வைப்பன் அடியேனே”

இது நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம். பெரியாழ்வார் முதலாய ஆழ்வார்கள் செய்த பக்திப்பாடல்களின் திரட்டில் ஒன்று, குலசேகர ஆழ்வார் பாடியது.

வான் [முகில்] - ஆகுபெயர். வான் - மழை - வானிலிருந்து வழங்கப்படுவது. வான்மழை, எத்தனை தான் மறந்தாலும் - எவ்வளவு காலம் பெய்யாது வைத்து மறந்து போயினும் பயிர்களோ மொய்த்து [பைங்கூழ்களோ மைத்து] மாமுகில் வரும் - வரும் - பெய்யும் -பெய்யும் - வாழ்வோம் - வாழ்வோம்  என்று எப்போதும் வானத்தைப் பார்த்து நிற்பினுமாம். பைங்கூழ்கள் - பசியபயிர்கள். 

ஆண்டவனுடைய அருள் கிட்டாவிடினும் கிட்டும் - கிட்டும் - கிடைக்கும் - கிடைக்கும் என உயிர்கள், பயிர்கள் மழைபார்த்திருப்பது போல் இறைவனையே நினைத்துப் பார்த்துப் பார்த்து இருப்பினுமாம்.

“எத்தனை தான் வான் மறந்த காலத்தும்” என்ற தொடர் எவ்வளவு ஆற்றல் வாய்ந்தது. வான்மழை நீண்ட காலத்திற்கு மறந்து போனாலும் வானால் - வான்மழையால் கிடைக்கும் பயனப்பெறும் பைங்கூழ்கள் சலிப்பதில்லையாம். “பார்த்திருக்கும்” பெய்யும் பெய்யும், துளிவிழும் துளிவிழும் என்று பார்த்திருப்பினுமாம். அவற்றின் நம்பிக்கை வீண்போவதில்லை. வான் ஒருநாள் அவற்றை வாழ்விக்க இரைந்து கொண்டு, விரைந்து கொண்டு ஓடிவந்து  விடுமாம்.

தெய்வ அருளும் அப்படியே வரும் தரும். பயமேன்! வான்மழையாம் தெய்வ அருளுக்குக் காத்துக்கிடந்து, அவ்வருளைப் பெற்ற அருளாளர்கள் எத்தனையோ கோடியுளர். 

இராமாயனத்தில் கம்பன் பல நூற்றுக்கணக்கான இடங்களில் சிவபெருமானை எடுத்து ஆண்டிருக்கின்றான். தனது வலிமை என நினைத்து கைலையங்கிரியை  இராவணன் தூக்கவில்லையாம். எனது அப்பன் எனக்கு எவ்வளவு இலேசாக இருப்பார் என எண்ணி, எடுக்க, அந்தமலை அண்டமுகட்டில் முட்டும் அளவுக்கு உயர்ந்ததாம். தன் கைகளால் அந்த அளவுக்கு உயர்த்தினானாம். மெத்த இலேசாக உயர்த்தினான் என்கின்றார் கம்பர். அதற்குக் காரணம் சிவன். அவனது மந்திர சக்தியினால் அவன் நினைத்த அனைத்தையும் செய்ய உதவியாய் இருந்திருக்கிறார். சிவன் அருளாலேயே அவன் மலை எடுத்தான்.

அகத்தியர் இராவணனிலும் பக்தியில் உபாசனையில் கூடியவர் ஆதலால் அவரை இராவணனால் வெல்ல இயலவில்லை. இவ்வாறே வாலியாரும் சிவ உபாசனையில் இராவணனிலும் முன்னுக்கு இருந்தபடியால் வாலியாரையும் இராவணனால் வெல்ல முடியவில்லை. அவனது சகலவெற்றிக்கும் பெருமைக்கும் சிவ வழிபாடே காரணமாய் இருந்தது.

இராவணனைக் கொன்று அயோத்தி செல்ல நேர்ந்த போது ‘வீரகத்தி’ தோஷம் இராமனைத் தொடர்ந்தது. அதனை எவ்வாறு நீக்கலாம் என இராமேஸ்வர அந்தணர்களுடன் ஆலோசனை செய்த போது ‘ஒரு சிவன் கோவில் கட்டி, சிவலிங்கப் பிரதிட்டை செய்து ‘வீரகத்தியை’ அடக்கம் செய்ய வேண்டும்” என்றார்கள். அவர்கள் சொன்ன படியே இராமன், இராமேஸ்வரத்தில் சிவன் கோவில் கட்டி, வீரகத்தியையும் ஒரு கிணற்றில் அடக்கம் செய்தான். ஒரு சிறு கிணற்றின் வாய்ப்புறம் இன்றும் அடைத்து மூடப்பட்டுள்ளது. இராமனும் சிவபக்கனாக இருக்கலாம். ஆதலால் தான் இராவணனைக் கொன்றான். இது இராமாயணம் சொல்லும் கதை.