Sunday 30 November 2014

அன்பெனும் இழை!


அன்பெனும் இழையில் கட்டுண்டோம்
ஆருயிர் ஒன்றென ஒட்டுண்டோம்
துன்மதிக் கோபத்தை விட்டிட்டோம்
தூயநல் உள்ளத்தை பெற்றிட்டோம்

நண்பெனும் நாணில் கட்டுண்டோம்
நற்றமிழ் அறிவினில் ஒட்டுண்டோம்
பண்பெனும் பான்மையை பெற்றிட்டோம்
பழந்தமிழ் மேன்மையை கற்றிட்டோம்
                                                                       - சிட்டு எழுதும் சீட்டு 94

Friday 28 November 2014

ஆசைக்கவிதைகள் - 98


நித்தம் நித்தம் நாத்து நட்டு
நட்டகூலி தாவே யென்ன
சத்தம் கித்தம் போடாதே யென்னு
சண்டித்தனம் பண்ணுறானே!

பெத்தபுள்ள கஞ்சி கேட்டு
புரண்டு இங்க அழுகிறானே!
பெத்தவயிறு எரியு தையோ
புரண்டு படுத்தும் தூக்கமில்ல

பொறுக்கி வைத்த நாலுகாசை
பரணின் மேலே காணவில்ல
சீனக்காரன் கூவி வித்த
சீனிமிட்டாய் ஆகிப்போச்சோ!
- நாட்டுப்பாடல் (ஈழம்)
                                                       (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

Tuesday 25 November 2014

குறள் அமுது - (98)


குறள்:
“இறல்ஈனும் எண்ணாது வெஃகின்     
                                            விறல்ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு”                  
                                                  - 180

பொருள்:
கேடுவரும் என்று எண்ணாது பிறர் பொருளை அடைய விரும்பினால், அது அழிவைக் கொடுக்கும். பிறர் பொருளை விரும்பாது இருக்கும் பெருமிதம் வெற்றியைக் கொடுக்கும்.

விளக்கம்:
இத்திருக்குறள் வெஃகாமை என்னும் அதிகாரத்தில் வருகின்றது. வெஃகுதல் என்றால் பிறருடைய பொருளை தமதாக்கிக் கொள்ள ஆசைப்படுதலாகும். பிறரது பொருளை விரும்பி எடுக்க நினையாதிருத்தல் வெஃகாமையாகும். ஆசையே பொய்பேசுதல், களவுஎடுத்தல், மதுஅருந்துதல், பிறரது பெண்களை விரும்புதல், கொலைசெய்தல் ஆகிய ஐம்பெரும் கேடுகளுக்கு வழி வகுக்கின்றது. 

அத்துடன் உலகில் நடைபெறும் பொருளாதாரச் சீர்கேடுகளுக்கும், இனம் என்றும் மதம்  என்றும் கூறி, நடைபெறும் போர்களுக்கும், அரசில் சூதுகளுக்கும் பிறர் பொருளை அடையவிரும்புதலே காரணமாகும். வறுமையோடு நாட்டுப்புறங்களில் வாழ்பவர்களை விட நகரங்களில் வாழ்வோரே பிறர் பொருளை அடைய ஆசைப்பட்டு எதையும் துணிந்து செய்கிறார்கள். அவர்களில் அரசியல்வாதிகளும், அறிவுடையவர்களும், சுவாமி வேடம் போடும் அருளார்களும் ஆசைவார்த்தைகளைக் கூறி பிறர் பொருளை எந்தக் கவலையும் இன்றி எடுக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்தத் திருக்குறளைத் திருவள்ளுவர் எழுதினார் போலும். 

ஏனெனில் படிக்காத அறிவில்லாதோர் பிறருடைய பொருளுக்கு ஆசைபடுவதால் அழிவுவரும் என்பதை எப்படி அறிந்திருப்பர்? அவர்களால் இறல்ஈனும் என்று நினைக்க முடியுமா? ஆதலால் அறிவுள்ளோரே இறல்ஈனும் அதாவது  அழிவுவரும் என்று எண்ணாது ஆசைப்படுகின்றனர். உலக ஆசைகளைத் துறந்து எமக்கு எதுவும் தேவையில்லையென வேண்டாமை என்ற செருக்கோடு இருக்க வேண்டியவர்கள் அருளாளர்களாகிய சுவாமிமார்கள். பாருங்கள் இன்றும் பிறருடைய பொருட்களுக்கு ஆசைப்பட்டு சிறைக்குச் செல்வோர் யார்? அறிவுடையோரும், அறிவுடையோராய் மக்களால் மதிக்கப்படும் அரசியல்வாதிகளும், கள்ளச்சுவாமிமார்களும் தானே!

ஆதலால் நீங்கள் அறிவுடையோராயின் பின்னால் வரப்போகும் அழிவை நினைத்துப் பார்த்து, பிறருக்கு உரியதை விரும்பாதிருக்கும் செருக்கோடு வாழ்ந்தால் வாழ்வில் வெற்றி அடையலாம் என்பதையே இத்திருக்குறள் சொல்கிறது.

Monday 24 November 2014

விடுகதை - 1

1.எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுத்து 
வட்டக்குடை பிடித்து வாராராம் வன்னியனார், 
அவர் யார்?

2. எப்படித் தேடினாலும் கிடைக்காத கல்
யாரும் வாங்கவோ விற்கவோ முடியாத கல், 
அது என்ன கல்?

3. விரலும் நகமும் இல்லாக் கை
எல்லோருக்கும் வேண்டிய கை, 
அது என்ன கை?

4. பூப்பூத்து காய் காய்த்தும் பழம் பழுக்கா மரம், 
அது என்ன மரம்?

5. பொச்சுக் குடிசைக்குள்ளே ஓட்டு வீடு கட்டி அதனுள்ளே
வெண்பளிங்கு மாளிகை இட்டு தடாகத்தோடிருப்பேன், 
நான் யார்?

6. சாம்பல் ஆண்டியும் சந்தைக்குப் போனான், 
அவன் யார்?

7. ஆழக்குழிவெட்டி அதிலே ஒரு முட்டை இட்டு
அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை, 
அது என்ன?

8. இலை இருக்கு கிளை இல்லை
பட்டை இருக்கு கட்டை இல்லை
கன்று இருக்கு பசு இல்லை, 
அது என்ன?

9. கால் இருக்கு விரல் இல்லை
வாய் இருக்கு நாக்கு இல்லை, 
அது என்ன?

10. கிணற்றிலே அள்ளாத நீர்
கேணியிலே காணாத நீர்
சுவையிலே குறையாத நீர், 
அது என்ன?

[இவற்றின் விடைகளை அடுத்த விடுகதையில் பார்க்கலாம்]


இனிதே, 
தமிழரசி

Saturday 1 November 2014

தமிழரின் பெருமையும் பேரழிவும்

[Photo Source: NASA]

இயற்கையும் அழகும் அறிவும் ஆற்றலும் மனிதர்களாகிய எமக்கு இன்பத்தை அள்ளி வழங்கும் அமுதசுரபிகளாக இருக்கின்றன. ஆனால் அவையே துன்பத்தையும் கொட்டித் தருகின்றன என்பதே மிகக்கசப்பான உண்மையாகும். இந்த இன்ப துன்ப தராசுத் தட்டுகளிடையே துலாக்கோலின் நாக்குப்போல் இருப்பவன் ஞானியாகின்றான். மற்றவர்களில் பலர் இன்பத்திற்காக ஏங்கி ஏங்கி துன்பப்பட்டு அழிந்து ஒழிந்து போக, சிலரோ இன்பத்தில் திளைத்தும் துன்பத்தில் துவண்டும் போகின்றனர். இவர்கள் இன்பமெனச் சில பொழுதையும் துன்பமெனச் சில பொழுதையும் கழிக்கின்றனர்.

இந்த இன்ப துன்பங்களின் வரைவிலக்கணம் தான் என்ன? மாங்காயைக் கடித்த ஒருவன் அதன் புளிப்பால் நாக்கூச முகத்தைச் சுழித்து காறி உமிழ்கின்றான். அதே மாங்காயைக் கடித்த மற்றவனோ ரசித்து ருசித்து மகிழ்ந்து உண்கின்றான். ஒரே மாங்காய் ஒருவனுக்கு இன்பத்தையும் மற்றவனுக்குத் துன்பதையும் கொடுத்தது ஏன்? அது மாங்காயின் குறையா? இல்லையே! அவர்களின் உணர்வுகளின் வெளிப்பாட்டையே இன்பதுன்ப அநுபவங்களாகக் காண்கின்றோம். எனவே மன உணர்வுகளின் வெளிப்பாடான மனக்கிளர்ச்சியையும் மனச்சோர்வையும் இன்பம் என்றும் துன்பம் என்றும் சொல்கின்றோம்.

திருவள்ளுவரும் இன்ப துன்பங்களுக்கு வரைவிலக்கணம் கூறாது ‘நன்மை வரும் பொழுது நல்லவை என்று பார்த்து மகிழ்ந்தவர்கள் தீமை வரும் பொழுது துன்பப்படுவது ஏன்? எனக் கேள்வி எழுப்புவதன் மூலமாக ஊழே [விதியே] அதற்கான காரணம் என்கிறார்.
“நன்றுஆங்கால் நல்லவாக் காண்பவர் அன்றுஆங்கால்
அல்லற் படுவது எவன்”                                         - (குறள்: 379)

திருவள்ளுவரின் இக்கூற்றுப்படி ஆக்கமும் அழிவும் கூட மனித இன்ப துன்பங்களுக்குக் காரணமாக அமைகின்றன. ஆக்கமும் அழிவும் மாறி மாறி சுழலும் சக்கரமாக இருப்பதை பல வழிகளில் கண்கூடாகப் பார்க்கிறோம். ஒன்றின் ஆக்கதிற்காக இன்னொன்று முற்றாக அழிக்கப்படுகிறது. அதாவது ஒன்றை அழித்தே இன்னொன்றை உருவாக்கிக் கொள்கிறோம்.

இயற்கையாக செழித்து வளர்ந்த மரத்திலிருந்து வீடு, கட்டில், தொட்டில், மேசை, நாற்காலி என எத்தனை பொருட்களை விதவிதமாக மனிதன் உண்டாக்கிக் கொள்கிறான்! ஏன் நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்தத் தாள் கூட மரத்தை அழித்து ஆக்கியது தானே! மனிதர்களின் ஆடம்பரவாழ்வுக்காக காடுகள் அழிக்கப்பட்டு உலகம் நகரமயமாக மாற்றப்படுகிறது. இதனால் இயற்கையில் ஏற்படும் காலநிலை மாற்றம் மாபெரும் அனர்த்தங்களை, பேரழிவுகளை உலகிற்குத் தரவிருக்கிறது.

எரிமலை, நிலநடுக்கம், சூறாவளி, சுனாமி, பனி, உருகுபனி, இடி, மின்னல், மழை, வெள்ளப் பெருக்கு, தொற்றுநோய்கள் என இயற்கையால் ஏற்படும் பேரழிவுகள் எத்தனை? எத்தனை? இந்தப் பேரழிவுகளை எல்லாம் தடுப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்பதை உலகோருக்குக் காட்டவென்றே வருடத்தில் ஒரு தினம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அத்தினம் எப்போது வருகின்றது என்பது எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ‘காதலர் தினம்’ எப்போ வருமென்றால் உடனே ‘பெப்ரவரி 14’ என்று சொல்லத் தெரிந்த எமக்கு, ‘உலகப் பேரழிவுத் தடுப்பு தினம்’ ‘ஒக்டோபர் 13’ என்பது தெரியாது.

விஞ்ஞான அறிவில் இயற்கையையும் விஞ்சிவிட்டோம் என இன்றைய மனிதர்களாகிய எம்மால் சொல்ல முடியுமா? முடியாது. ஏனெனில் நாம் இயற்கையின் வட்டத்திற்குள் இருந்து விலகி வெகுதூரம் வந்துவிட்டோம். ஆனால் அன்றைய மனிதர் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். ஈழத்தின் பேராற்றங்கரையில் நின்று “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என முழங்கிய மணிபூங்குன்றனாரே மரம் செத்துப் போகும்படி மரத்திலிருந்து மருந்துக்குத் தேவையான பகுதிகளை எடுக்காதவர்களே மனிதர் என்பதை
“மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்”
                                                          - (நற்றிணை: 226: 1)
எனக் கூறியுள்ளார். தம்மைப்போல மரங்களையும் தமிழர் நேசித்ததை இந்த நற்றிணைப் பாடல் வரி எமக்கு எடுத்துக்காட்டுகிறது. எம் மூதாதையரிடம் இருந்த அந்த இயற்கை நேயம் எம்மைவிட்டு எங்கே போயிற்று? நம் முன்னோரின் இன்னும் எத்தனை? எத்தனை? கண்டுபிடிப்புகள் மாற்றார் வீட்டுப் பெட்டகங்களில் உறங்கிப் புதுப்பொலிவுடன் புத்தாடை உடுத்து, அன்னநடை நடந்து மாற்றாரின் கண்டுபிடிப்புகளாக எம்முன்னே வலம் வருகின்றன.

கி மு 200 முன் வாழ்ந்த சோழர்களை முற்காலச் சோழர்கள் என்று கூறுவர். முற்காலச் சோழர்களில் ஒருவனான நலங்கிள்ளியைப் பாடும் இடத்தில் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்னும் சங்ககாலப் புலவர்

“செஞ்ஞாயிற்றுச் செலவும் 
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் 
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரி தரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்று இவை
சென்று அளந்து அறிந்தார் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே                  
                                                   - (புறம்: 30: 1 - 7)
எனப் புறநானூற்றில் கூறியுள்ளார். செஞ்ஞாயிறு என்று சிவந்த சூரியனைச் சொல்கிறார். செல்லும் பாதை [path] - வழி - வீதி செலவு எனப்படும். இவ்வளவு நேரத்தில் இவ்வளவு தூரம் செல்லும் என்னும் வேகத்தை - இயக்கத்தை பரிப்பு என்றார். மண்டிலம் என்பது வட்டமாகும். கிரகங்கள் நட்சத்திரங்கள் செல்லும் வட்டச்சுற்றை மண்டிலம் என்று குறித்துள்ளார். காற்றை வளி என்பர். எது வித ஆதாரமும் இன்றி நிற்கும் ஆகாயத்தை வறிது நிலையிய காயம் என்று கூறுகிறார்.

அதாவது ‘செந்நிறச் சூரியன் செல்லும் வீதியும், அந்தச் சூரியனின் இயக்கமும், அவ்வியக்கத்தால் சூழப்பட்ட புவிமண்டிலமும் காற்று போய் வருகின்ற திசையும், ஒருவித ஆதாரமும் இன்றி தானே நிற்கும் ஆகாயமும் என்று சொல்லப்படுகின்ற இவற்றை எல்லாம் சென்று அளந்து அறிந்தவர் போல எப்பொழுதும் இது இது இப்படிப்பட்ட அளவுடையன என்று சொல்லும் அறிவுடையோரும் இருகின்றனரே’ என்று குறிப்பிடுகின்றார். 

ஆனால் நாமோ தமிழனுக்கு விஞ்ஞானம் தெரியுமா? வானசாஸ்திரம் தெரியுமா? அவற்றைத்  தமிழில் எழுதமுடியுமா? எனக் கேள்வி எழுப்புகிறோம். மேலை நாட்டு இத்தாலிய விஞ்ஞானியான கலிலியோ கலிலி கி பி 16ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுழல்கின்றன [சூரிய மையக் கொள்கை] என்னும் அறிவியல் உண்மையைச் சொன்னதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சங்கப் புலவர், எவ்வளவு அழகு தமிழில் பால்மய வெளியில் சூரியனும் இயங்குவதைச் சொல்லிச் சென்றுள்ளார். எங்கே போயிற்று நம் முன்னோரின் இந்த வானியல் அறிவு?

தமிழரின் அறுவகை நிலப்பண்புகளுக்கு அமைய மலையிலும் காட்டிலும் வயலிலும் கடலிலும் பாலைவனத்திலும் அந்தந்த மக்களின் பண்பாய் ஒலித்த குறிஞ்சிப்பண், முல்லைப்பண், மருதப்பண், நெய்தற்பண், பாலைப்பண் யாவும் எங்கே? குறிஞ்சியாழ், முல்லையாழ், மருதயாழ்,  பாலையாழ், முல்லைக்குழல், ஆம்பற்குழல் என இருந்த யாழ்களும் குழல்களும் எப்படி அழிந்தன?

சங்ககால ஆடல் அரங்கொன்றில் யாழிசையும் பாட்டிசையும் ஒன்றாய்ச் சேர்வதற்கு ஆதார சுருதியாக குழலிசை இருக்க முழவு ஆர்ப்பரிக்க  பெருமைமிக்க மகளிர் ஆடத் தொடங்கியதை 

“புரிநரம்பு இன்கொளப் புகல்பாலை ஏழும்
எழுப்புணர் யாழும் இசையும் கூடக்
குழல் அளந்து நிற்ப முழவெழுந்து ஆர்ப்ப
மன்மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க”
                                                           - (பரிபாடல்: 7: 77 - 80)
எனப்பரிபாடல் காட்டுகிறது. அந்த ஆடல் வடிவத்துக்கு என்ன நடந்தது? தமிழரின் ஓவியக் கலையும் சிற்பக்கலையும் எங்கே ஓடி ஒளித்தன? சித்த மருத்துவமும் யோகமும் சிதைந்து போனது ஏன்? இறந்தவனையே தமிழர் எழுப்பினர் என்கின்றது இருக்கு வேதம். அப்படி இருக்க எப்படி எமக்கு முதல் நூல்கள் ஆயின இந்த வேதங்கள்? ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று வாழ்ந்த தமிழர் மத்தியில் சாதிவேறுபாடும் சமயவேறுபாடும் எங்கிருந்து வந்து புகுந்தன? நிறைமொழி மாந்தராய் வாழ்ந்த தமிழர் பிறமொழி மந்திரத்தில் மயங்கியது எப்படி? 

இயற்கையும் பெரும் போர்ப் படைகளும் இரசாயன, உயிரியற் குண்டுகளும் செய்யமுடியாத மாபெரும் கலாச்சாரப் பேரழிவை தமிழர்களாகிய நாமே நமக்குச் செய்கிறோம் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். ‘கூலிக்கு மாரடிக்கும் தற்குறிகள் இருக்கும் மட்டும் இதுபோல் பேரழிவுகள் தொடரும்’ எனச் சொல்லி தப்பிப்பது அழகல்ல. கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைபவர் நாம்.

டி வி நீலகண்ட சாஸ்திரி ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்” என்று சொன்னதைக் கேட்டு, கோபித்து மனங்குமுறிய மகாகவி சுப்பிரமணிய பாரதியார், நீலகண்ட சாஸ்திரியை பேதை என்று திட்டி எழுதிய பாடலை முழுவதும் படியாது பாரதியார் மெல்லத்தமிழ் இனிச்சாகும் எனச்சொன்னார் ஆனபடியால் தமிழ் சாகும் எனப் புலம்புவோர் நாம். அப்படிப் புலம்புவது சரியா?

"மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
          மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்”

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ
          இந்த வசைஎனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
          செல்வங்கள்யாவுங் கொணர்ந்திங்குசேர்ப்பீர்

தந்தை யருள் வலியாலும் - இன்று
          சார்ந்த புலவர் தவவலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
          ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்”

தமிழ்த்தாய், 'நீலகண்டசாஸ்திரி சொன்ன பெரும் பழி நீங்கி [தீரும்] தான் இந்த உலகில் [புவிமிசை] பெரும்புகழோடு [புகழ்ஏறி] என்றும் வாழ்வாள் [இருப்பேன்]' என்று தமிழருக்கு கூறுவதாகத் தானே பாரதியார் பாடியிருக்கிறார். அவர் சொல்லாததைச் சொன்னதென்றும் நடக்கமுடியாததை நடக்கும் என்றும் கூறுவதே எமது பண்பாய்ப் போய்விட்டது.

இன்று உலகில் 6600க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இந்த மொழிப்பட்டியலில் பேசுவோர் தொகையின் படி தமிழ் 17வது இடத்தில் இருக்கின்றது. 32வது இடத்தில் கன்னடமும் 34வது இடத்தில் மலையாளமும் 64வது இடத்தில் சிங்களமும் இருக்கின்றன. அம் மொழிபேசுவோர் எவரும் தம்மொழி அழிந்து போய்விடும் என்று சொல்வதில்லை. அவர்களது பிள்ளைகளும் வேற்று மொழி பேசுபவராயும் வேற்று இனத்தில் திருமணம் செய்பவராயும் இருக்கின்றனர். இது உலகவரலாற்றில் காலங்காலமாக நடந்துவரும் செயலே. மனித இனங்களுக்கு இடையே நடந்த போர்களில் எல்லாம் ஒரு நாட்டை, இனத்தை அழித்து இன்னொரு இனம் முதன்மை அடைய முயல்வதும் காலங்காலமாக நடந்து வரும் செயலே. 

கல்தோன்றி மண்தோன்றா நிலை

அந்த இன ஒடுக்கலை - அழித்தலைக் கண்டே
“பொய்அகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம்போர்த்த வயங்கு ஒலிநீர் - கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி”

எனத் தமிழ் குடியின் பெருமை பேசிய பாடல் ஒன்று புறப்பொருள் வெண்பா மாலையில் இருக்கிறது. புறப்பொருள் வெண்பாமாலை 9ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது எனினும் அதில் எடுத்துக்காட்டப்பட்ட இப்பாடல் மிகப் பழையது. பண்டைத் தமிழில் கல் என்பது மலையைக் குறிக்கும். இலங்கையில் உள்ள குருநாகல் என்னும் இடம் பண்டைத் தமிழர் வாழ்ந்த இடமாகும். குருநாகக்கல் [குரு + நாகம் + கல்] என்பதே குருநாகல் எனத்திரிந்துள்ளது. சிறிய யானை மலை என்பதே குருநாகல் என்பதன் கருத்தாகும். உலகம் மலைகளாகக் காட்சி தந்த காலத்தில் [கல்தோன்றி] - மண் உண்டாக முன் [மண் தோன்றா] - குறிஞ்சி நிலமாக உலகம் இருந்த காலத்தில் கையில் வாளுடன் போர்புரிந்த மூத்த குடி - தமிழ் குடி இதில் என்ன வியப்பிருக்கிறது? இல்லையே என்கிறது இப்பாடல்.

ஆனால் நாமோ எம்மொழி எம்பிள்ளைகளால் அழிந்து போய்விடும் என அங்கலாய்க்கின்றோம். 6600க்கும் மேற்பட்ட மொழிகளில் கடைசியிலிருக்கும் 577 மொழிகளே அழிவின் விளிம்பில் நிற்கின்றன. மிகுதியாக இருக்கும் 6000 மொழிகளும் அழிந்த பின்பே தமிழுக்கு அழிவு வர வேண்டும். அல்லது உலகில் வாழும் எல்லாத் தமிழரும் ஒரே பொழுதில் அழிந்தால் அந்நிலை வரலாம். அந்நிலை இந்த நூற்றாண்டிலோ அடுத்த நூற்றாண்டிலோ வந்துவிடப் போவதில்லை. 


உலக மொழிப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் ஆங்கிலம், அதாவது தற்கால ஆங்கிலம் கி பி 17ம் நூற்றாண்டிலேயே உருவானது. கி பி 11ம் நூற்றாண்டில் எழுதிய பழைய ஆங்கிலத்தை எம்மால் வாசிக்கவோ புரிந்து கொள்ளவோ முடியாது. ஆனால் 2200 ஆண்டுகளுக்கு முன் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் எழுதிய மேலேயுள்ள “செஞ்ஞாயிற்றுச் செலவும்..." புறநானூற்றுப் பாடலை தமிழ் தெரிந்தோரால் வாசிக்கவும் அதன் கருத்தை ஓரளவு புரிந்து கொள்ளவும் முடியும். தமிழ் தன் வாழ்நாளில் எத்தனையோ மொழிக்கு தாயாய் தாய்மொழியாய் இருக்கிறது என்பதையும் உணராது தமிழ் அழியும் அழியும் என அரற்றுதல் நியாயமா? இன்னும் பல மொழிகளை தமிழ் உலகிற்குத் தரக்கூடும். 

எமது பெருமை எமக்குத் தெரியாது. வேற்று மொழிக்காரர் தமிழைப் படித்து அதனை அவர்களது மொழியில் எழுதிய பின்னர், நாம் அந்த மொழிபெயர்ப்பைப் படித்து ‘அவர் எப்படி எல்லாம் எழுதியிருக்கிறார் தெரியுமா? எனக் கேட்போம். யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டது போல தமிழர்களாகிய நாமே தமிழைப் படிக்காது பேசாது புறக்கணித்து  பேரழிவை உண்டாக்கிக் கொண்டோம்.

தமிழா! எத்தகைய பேரழிவு வந்தாலும் பன்னெடுங்காலமாக உலகெலாம் பரந்து விரிந்து நிற்கின்ற நின் பெருமை என்பது கெடுமோ? தமிழன் என்று சொல்லி துணிந்து நில். தமிழ் தமிழாய் வாழ விரைந்து செயற்படு. 
இனிதே, 
தமிழரசி.
(2007ம் ஆண்டு எழுதியது)